டாக்டர் க.இந்திரகுமார்:
எழுத்துலகின் இழப்பு
- நவஜோதி ஜோகரட்னம் -
இலங்கையிலும்
லண்டனிலும் ஆற்றல் மிகுந்த தமிழ் ஆங்கில எழுத்தாளராகவும்இ நூல் ஆசிரியராகவும்இ
பத்திரிகையாளராகவும்இ நடிகராகவும் பன்முக ஆற்றல் கொண்ட டாக்டர் க. இந்திரகுமாரின்
மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகும். 1970 இன் இறுதிக்காலங்களில் இலங்கைக்
கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான பி. இராமநாதன் அவர்களின் இல்லத்தில் நான் சந்தித்த
நாளிலிருந்து என் அன்புத் தந்தை அகஸ்தியருடன் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்
அடிக்கடி வந்து கலந்துரையாடிய காலங்கள் வரை அவரின் இடதுசாரி சிந்தனையை நன்கு
உணர்ந்திருந்தேன்.
யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இந்திரகுமார்
தன் மருத்துவ படிப்பை முடித்தபின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட மருத்துவ
பீடத்தில் விரிவுரையாளராகப் பணி புரிந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் மிகுந்த ஈடுபாடு
கொண்டவராகத் திகழ்ந்தார். இக்காலகட்டத்தில் தீமிதிப்புப் பற்றிய விஞ்ஞான பூர்வமான
கருத்துக்களை முன்வைத்து ‘Fire Walking – The Burning Facts’ என்ற அவரது ஆங்கில
நூல் அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நூலாகும். இதே காலகட்டத்தில்
மருத்துவத் துறை சாந்தவராக இருந்தாலும் விண்வெளித்துறையில் இவர் காட்டிய ஆர்வம்
அறிவுபூர்வமானதாகும். ‘யூரி கஹாரின் விண்வெளி ஆய்வு மையம்’ என்ற பெயரில் அவர்
குறிதத தகவல் மையம் ஒன்றைச் செயற்படுத்தி வந்தார்.
‘மண்ணில்
இருந்து விண்ணுக்கு’ என்ற தொடரில் விண்வெளி யாத்திரை குறித்து வீரகேசரியில்
தொடராக வெளிவந்துகொண்டிருந்த தொடர்கட்டுரை
நூலாக வெளிவந்து, இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினைப் பெற்றுக்; கொண்டது.
சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் தபால்தந்தி அமைச்சர் செல்லையா
குமாரசூரியருடன் மிக நெருக்கமான உறவு கொண்டவராக டாக்டர் இந்திரகுமார்
செயலாற்றினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய
செயற்பாட்டாளராகவும் டாக்டர் இந்திரகுமார் பணியாற்றியிருக்கிறார். தமிழில்
விண்வெளித்துறை பற்றிய ஆய்வுத்துறைக்கு முன்னோடியாக நின்று இவர் ஆக்கியுள்ள
படைப்புகள் மிக முக்கியமானவை. ‘விண்வெளியில் வீரகாவியங்கள்: பூர்வீகமுமம்
முன்னோடிகளும்’ என்ற தலைப்பில் விண்வெளிப் பயணங்களும் அது தொடர்பான முன்னோடி
நடவடிக்கைளும் பற்றிய சுவையான விஞ்ஞானக் குறிப்புக்கள், விளக்கப் படங்களுடன் இலகு
தமிழில் இவர் எழுதிய நூல் தமிழக அரசின் விருதினையும் பெற்றுக் கொண்டது
குறிப்பிடத்தக்கதாகும். முதல்வர் மு.கருணாநிதி இப்பரிசினை சென்னையில் வழங்கி
கௌரவித்திருந்தார்.
1978
இல் செங்கை ஆழியானின் ‘வாடைக்காற்று’ என்ற படத்தில் பிரதம கதாநாயகன்
பாத்திரத்தை ஏற்று மிகச்சிறப்பாக நடித்து தனது நடிப்பாற்றலையும் அவர்
வெளிப்படுத்தியிருக்கிறார். இயக்குநர் பிறேம்நாத் மொறாயஸின் நெறியாள்கையில் 1978
ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் மரியதாஸ் என்ற பாத்திரத்தை ஏற்று டாக்டர்
இந்திரகுமார் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
சிறந்த மேடைப்பேச்சாளராவும் திகழ்ந்த டாக்டர் இந்திரகுமார் லண்டன் இயக்குநர் என்.
ராதாவின் தொலைக்காட்சி தொடர் நாடகத்திலும் ‘டாக்டர்’ பாத்திரம் ஏற்று
நடித்திருக்கிறார்.
இலங்கையை விட்டு லண்டனுக்குப் புலம்பெயாந்த பின்னரும் அவரது எழுத்து தொடர்ந்த
வண்ணமே இருந்தது. ‘மேகம்’ என்ற சஞ்சிகையை லண்டனிலிருந்து தொடர்ந்து நடத்தினார்.
பின் ‘விடுதலை’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து செயற்பட்டார். ‘காலைக்கதிர்’
என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணி புரிந்திருக்கிறார். பின்னாளில் தீவிர
தமிழ்தேசிய ஆதரவாளராகத் திகழ்ந்த டாக்டர் இந்திரகுமார் தமிழகத்தில் பழநெடுமாறன்
போன்ற தமிழ்த்தேசிய தலைவர்களுடன் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தார். உலகத்
தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளராக இந்திரகுமார்
இயங்கியிருக்கிறார்.
இறுதி நாட்களில் மறைந்தேபோன லெமுறியாக் கண்டம் பற்றிய அகழாய்வில் அவர் தீவிரமான
அக்கறை காட்டி லெமுறியா கண்டம் பற்றிய விஞ்ஞான பூர்வமாக எழுதுவதற்கு பெரிதும்
உழைத்து வந்திருக்கிறார். இதற்குப் பெருமளவு ரஷ்ய நூல்களை ஆராய்ந்து பெரும் ஆய்வுப்
பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். லண்டனில் இருந்த காலத்தில் டயானா குறித்து ‘டயானா
வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?’என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் சுவார்சியமான
நூலாக பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
‘மக்கள் வெள்ளம் படிப்படியாக அதிகரித்து ஜே.ஜே. என்ற அலைமோதத் தொடங்கிவிட்டது.
மூன்று அரண்மனைகள் மூன்னாலும் மக்கள் வெள்ளம் அலைமோதுவதற்கு தொலைக்காட்சி ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வெற்றி கண்டது. ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில்
பங்காற்றுகிறோம் என்ற உணர்வு அவர்களை ஆட்கொண்டது. வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த
ஒரு கடமையில் ஈடுபட்டுள்ளோம். இன்றைய நாளினை எமது வாழ்க்கையில் மறக்க முடியாது.
இதைப்பற்றி எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் பெருமையுடன் சொல்லப்போகிறோம் என்ற
பெருமை அவர்கள் உணர்வுகளில் நிறைந்தது.
நமது நாட்டில் பொங்கல், தீபாவளி, சுதந்திர தினம் போன்ற வைபவங்கள் மக்கள் கலந்து
கொண்டாடும் வைபங்களாக உள்ளன. தெருக்களில் ஜே.ஜே என்று மக்கள் அலைமோதி ஒரே
அமர்க்களமாக இருக்கும் இத்தகைய மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் வைபவங்கள்
பிரிட்டனில் இல்லை. நத்தார் பண்டிகை, புதுவருடப் பண்டிகையின் போது கூட, தெருக்கள்
ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிப்போய்க் காணப்படும். தத்தமது வீடுகளின் நான்கு
சுவர்களுக்குள்ளேதான் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாட்டங்கள்
நடைபெறும்;.
கோயில்களில்கூட திருவிழா, ஊர்வலம், கலைநிகழ்ச்சிகள் என்று மக்கள் வெள்ளம் அலைமோதி
நமது நாட்டில் அமர்களப்படுத்துகிறோம். பிரிட்டனில் இவை எதுவுமே இல்லை. மக்கள்
தேவாலயங்களக்குப் போவதே குறைவு. வயதானவர்கள் யாராவது போனால் சரி. மக்கள்
வரவின்மையால் தேவாலயங்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. அவற்றின் கட்டிடங்கள்
விற்கப்பட்டு வருகின்றன. (லண்டனில் ஒரு தேவலாலயக் கட்டிடம் பாரதீய வித்யா பவனாக
செயல்படுகிறது. இன்னொரு தேவாலயக் கட்டிடத்தில் முருகன் கோவில் அமைந்துவிட்டது)
இத்தகைய நாட்டில் டயானாவின் மரணம் மக்கள் தேசிய ரீதியில் ஒன்றுகூட அரிய ஒரு
வாய்ப்பபை ஏற்படுத்தியது. அவர்களது அன்றாட வாழ்க்கையில் உள்ள ஒரு பெரிய வெற்றிடத்தை
அது நிரப்பியது’ என்று டாக்டர் இந்திரகுமார் டயானா பற்றிய நூலில் மிக லாவகமாக
சித்தரிக்கும் பாங்கு மனங்கொள்ளத்தக்கது. சுவையாகவும், எழுமையாகவும் எழுதவல்ல தனது
ஆற்றலை டாக்டர் இந்திரகுமார் தனது நூல்களிலே நிறுவியிருக்கிறார்.
‘புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு அறைகூவல்’ என்ற தலைப்பில் லண்டனிலிருந்து
மாதமிருமுறை இதழாக வெளிவந்த ‘மேகம்’ பல்சுவைச் சஞ்சிகையில் வெளிவந்த தனது ஆசிரியத்
தலையங்கங்களின் தொகுப்பாக வெளியிட்டிருந்தார்.
ஈழவர் திரைக்கலமன்றத்தின் முக்கிய நிர்வாக உறுப்பினராக டாக்டர் இந்திரகுமார்
பணியாற்றியிருக்கின்றார். ஈழத்து அரசியலில் ஜி.ஜி. பொன்னம்பலத்திலிருந்து ,...
பீற்றர்கெனமன் போன்ற அரசியல் தலைவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவராகவும், இலங்கை
அரசியலின் முக்கிய காலகட்டங்களின் சாட்சியமாகவும் அவர் இருந்திருக்கிறார். பல்வேறு
துறைகளிலும் தனது ஆற்றலைப் பொறித்த டாக்டர் இந்திரகுமாரின் மறைவு அசாதாரணமானது.
navajothybaylon@hotmail.co.uk
24.12. 2008.
புலம்பெயர்ந்த பறவை ஒன்றின் நீள்மௌனம!
- முல்லைஅமுதன் -
இடியாய்
வந்து விழுந்தது. காறு;றும் வீச மறந்திருக்கலாம். மழையும், குளிரும் நம்மை அயர
வைத்திருக்கலாம். எனி நம்மை ஆசுவாசப்படுத்திக் கொன்டிருந்த ஒரு பொழுதில் இன்னொரு
அதிர்ச்;சியும் எம்மை அதிர வைத்தது. அது தான் மனநல வைத்தியர் க. இந்திரகுமார்
அவாகளின் மரண செய்தி. (21-12-2008) காலைக்கதிர் ஆசிரியரிடம் இருந்து கிடைத்தது.
யாழ்ப்பாணம் கதிரவேலு-சிவபாக்கியம் தம்பதிகளுக்கு மகனாக 1945ல் பிறந்த இவர் மனநல
வைத்தியராகவும், அறிவியல் நூல்களுடன் பிற நல்லறிஞர்களின் நூல்களை வெளியிடும்
பதிப்பாளராகவும் மிளிர்ந்தார். இவர் பிரதம ஆசிரியராக இருந்து மேகம் மாத இதழை
தொடந்து ஓராண்டுக்கு மேல்லாக தொடர்ந்து நடாத்தி வந்தார்.
இலங்கையில் இருந்த காலத்தில் அறிவியல், மருத்துவ கட்டுரைகளை
அனைத்துப்பத்திரிகைகளிலும் எழுதி வந்திருந்தார். இவர் எழுதிய மண்ணில் இருந்து
விண்ணுக்கு எனும் நூலுக்கு 1973 ல் இலங்கையரசின் சாகித்தியமண்டலப்பரிசு கிடைத்தது
குறிப்பிடத்தக்கது. செங்கையாழியான் எழுதிய வாடைக்காற்று நாவல் திரைப்படமானபோது கே.
எம் வாசகரின் இயக்கத்தில் அமரர் இந்திரகுமார் கதாநாயகனாக நடித்ததுடன் இலங்கை
வானொலியில் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுமுள்ளாh. இவர் எழுதிய ‘விண்வெளியில்
வீரகாவியங்கள்’ எனும் நூலுக்கு தமிழக அரசின் பரிசு (1996) கிடைத்தது.
இவர் நடனக்கலைஞர் விஐயாம்பிகை அவர்களை வாழ்கைத்துணைவியாக்கிக் கொண்டார்.
இவர்களுக்கு விநோதினி என்ற மகளும் உண்டு. ஈழத்துத் தமிழர் வரலற்றை நூலாக எழுதி
வெளியிட இருந்தவரின் கனவு நனவாகவில்லை என்பது கவலைக்குரியது. சிலகாலம் விடுதலை,
காலைக்கதிர் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார். இலங்கையில்
விண்வெளிக்கழத்தின் ஸ்தாகராக இருந்த இவர் உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி
எழுத்தாளர் அமரர் ஆதர் சி. கிளார்க்கின் நண்பருமாவார். இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், அக்கட்சியின் அமரர் பீற்றர்கெனமன் அவர்களுக்கு
தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைவிற்பன்னரான இவரின் மரணம் இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பாகும்.
இவர் எழுதிய நூல்கள்
1. FIRE WALKING THE BURNING FACTS (ENGLISH)
2. மண்ணில் இருந்து விண்ணுக்கு
3. புதுயுகம் கண்டேன்
4. விண்வெளியில் வீரகாவியங்கள்
5. டயானா – வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?
6. வயாக்ராவும் ஏனைய சிகிசிசை முறைகளும்.
7. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அறைகூவல்
இவர் பதிப்பித்த நூல்கள்
1. இலங்கேஸ்வரன் (நாடகம்) – ஆர். எஸ். மனோகர்
2. யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி (நாடகம்) – கௌதம நீலாம்பரன்
3. திருக்கோணேஸ்வரம் தான் தெட்சணகயிலாயம் (தொல்லியல்) – பண்டிதர் வடிவேலு
4. The Marathan Crusade for ‘FIFTY. FIFTY’
(SPEECH) G.G.PONNAMBALAM
mullaiamuthan_03@hotmail.co.uk
|