மீள்பிரசுரம்: பேசும் தாரகை வலைப்பதிவு!
ஆங் சாங் சூகி விடயத்தில் தடைகளைக் கண்டு மியன்மார்
இறங்கி வருமா?
[தனியொரு பெண்ணாகவிருந்து பர்மாவின் இராணுவ
ஆட்சிக்கெதிராகப் போராடிவரும் ஆங் சாங் சூகியின் போராட்டமானது சர்வதேசரீதியில்
மிகுந்த தாக்கத்தைக் கொண்டுவருமொன்று. தனது மக்களுக்காக மனவுறுதியுடன்
போராடிவரும் அவரது அர்ப்பணிப்புடன் கூடிய போராட்டமானது போற்றுதற்குரியது. -
பதிவுகள்-].
மியன்மாரின்
ஆங் சாங்சூகி மீதான விசாரணையின் முடிவில் அந்நாட்டின் நீதிமன்றம்
வழங்கியிருக்கும் தீர்ப்புக் கெதிராக உலகத் தலைவர்கள் கடும் கண்டனத்தை
வெளியிட்டிருக்கின்றனர். அத்துடன் ஆங் சாங் சூகியை நிபந்தனையின்றி விடுதலை செய்
யுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியன கடும் அழுத் தம்
கொடுத்துள்ளன. மியன்மாரின் இந்த நடவடிக்கைகளினால் அந்நாடு மீது புதிய பொருளாதாரத்
தடைகள், அழுத்தங்களைக் கொண்டு வர ஐ. நா., ஐரோப்பிய யூனியன் என்பன ஆலோசித்து
வருகின்றன.
ஜனநாயகக் கட்சியின் தலைவி ஆங் சாங் சூகி மீது நீதிமன்றம் அவருக்கு வழங்கியிருந்த
சிறைத்தண்டனையை மேலும் 18 மாதங்கள் நீடித்திருக்கிறது. இத் தீர்ப்பை அநீதியானதொரு
செயற்பாடு எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவரை உடனடியாக எவ்
வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
64 வயதுடைய ஆங் சாங் சூகி தடுப்புக் காவலில் இருந்த வேளை அவரது வீட்டுக்குள்
அமெரிக்கர் ஒருவரை தங்க வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டி அதற்காகவே இந்தப்
புதிய தீர்ப்பை மியன்மார் நீதிமன்றம் வழங்கியுள்ளது. தனது இருபது வருட அரசியல்
வாழ்க்கையில் 14 வருடங்களை சிறையிலும், வீட்டுக் காவலிலும் கடத்தி வருகின்ற
நிலையில் இந்தப் புதிய தீர்ப்பு அந்தக்காலத்தை இன்னமும் நீடித்து
வைத்திருக்கிறது. 2010 ஆம் ஆண்டு மியன்மாரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆங்
சாங் சூகி போட்டியிடுவார் என்ற அச்சத்திலேயே இந்த தீர்ப்பினை மியன்மார் இராணுவ
அரசு விதித்துள்ளதாக உலக நாடுகள் விமர்சித்திருக்கின்றன.
மியன்மார் மீதான உலக நாடுகளின் கண்டனங்கள் அதிகரித்துள்ள போதும் அதனை அந்நாடு
அசட்டை செய்த வண்ணமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை
வழங்கப்பட்ட இந்தத் தீõப்பு குறித்து அமெரிக்கா விசேட கவனம் செலுத்தியுள்ளதாக
தெரிகிறது. ஆங் சாங் சூகியின் வழக்குத் தீர்ப்பில் அமெரிக்கா கடும் அக்கறை
காட்டுவதற்கு ஏழு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்கர் காரணமாக
இருக்கிறார்.
மியன்மார் இராணுவ அரசின் மிலேச்சத்தனமான இந் நடவடிக்கைகளை உலக நாடுகளின்
தலைவர்கள் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில் ஐ. நா. வின் செயலாளர்
நாயகம் பான் கீ மூன் நீதிமன்றத் தீர்ப்பை நீக்குமாறு கோரியிருக்கிறார்.
மியன்மார் இராணுவ அரசு தொடர்ந்தும் ஜனநாயக விரோதச் செயல்களை முன்னெடுப்பதைத்
தடுக்கும் வகையில் உலக நாடுகள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது
தெரியாத விடயமாகவே இருக்கிறது. இந்த நிலையில் சீனா மியன்மாருக்கு ஆதரவாகச்
செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்காவல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ஆங் சாங் சூகிக்கு எதிராக
தொடரப்பட்ட வழக்குக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட
போதும் 3 வருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இருப்பினும் தீர்ப்பு
வெளியாகி சிறிது நேரத்தில் நீதிமன்றக் கட்டடத்தினுள் திடீரென நுழைந்த மியன்மாரின்
உள்துறை அமைச்சர் இராணுவ ஆட்சியாளர் தான் ஸ்வே அந்தத் தீர்ப்பினை 18 மாதகால
வீட்டுக்காவலாக குறைத்தார்.
பிரிட்டனிடமிருந்து தமது நாடு சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய மதிப்புக்குரிய
ஆங் சானின் மகள் என்ற காரணத்தினாலும் நாட்டின் அமைதியைக் கருத்திற் கொண்டும்
தண்டனை குறைக்கப்பட்டதாக தான் ஸ்வே தெரிவித்தார்.
ஆங்
சாங் சூகி அடுத்த வருடம் நடைபெறவுள்ள மியன்மாரின் பொதுத் தேர்தலில் பங்கேற்காமல்
இருப்பதற்காகப் புனையப்பட்ட நாடகம் ஒன்றாகவே இது உலகளவில் வர்ணிக்கப்பட்டு வருகிற
நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆங் சாங் சூகி மேன் முறையீடு
செய்யவுள்ளார். தங்களுகெதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அநீதியானதெனத்
தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி மற்றும் அமெரிக்கப் பிரஜை
ஆகியோர் இத் தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யவுள்ளனர் என சூகியின்
சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் ஆங் சாங் சூகி மீதான விசாரணை உள்நாட்டு விவகாரம் வெளிநாடுகள் எதுவும்
அதில் தலையிடக்கூடாது என அந்நாட்டு அரசு இவ் விவகாரத்தில் ஏனைய நாடுகள் தலையிடத்
தேவையில்லையெனவும் கூறியிருக்கிறது. ஜூன் மாத ஆரம்பத்தில் மியன்மார்
தெரிவித்திருந்தது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் மற்றும்
சர்வதேச பாதுகாப்புக்கான பிரிட்டிஷ் அமைச்சர் ஆன் டெய்லர் ஆகியோரும் சூகியை
உடனடியாக விடுதலை செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்தக் கருத்து
வெளியிடப்பட்டிருந்தது.
ஜூன் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் மியன்மாரின்
விவகாரம் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. இதற்கிடையில் ஆங் சாங் சூகியின்
விடுதலைக்காக மியன்மாரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த
ஆர்ப்பாட்டங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் அதில்
ஈடுபட்டவர்களைத் தாக்கியதுடன் பலர் கைதும் செய்யப்பட்டனர்.
கடந்த 19 ஆண்டுகளாக எதிர்க் கட்சித் தலைவர் ஆங் சாங் சூகி வீட்டுக்காவலில்
வைக்கப்பட்டுள்ளார். மியன்மார் இராணுவ அரசு இவரை அரசியல் நோக்கங்களுக்காகப்
பழிவாங்குவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளதுடன் ஆங் காங் சூகியை விடுதலை
செய்யும்படியும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இருப்பினும் அதற்குப் பயன் எதுவும்
கிடைத்ததாக இல்லை.
மியன்மாரில் ஜனநாயக ஆட்சி ஏற்பட பாடுபட்டு வரும் ஆங் சாங் சூகி மியன்மாரின்
இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களை வழிநடத்தி வருவதாகக் குற்றம்சாட்டி அவரை
தடுப்புக் காவலில் வைத்து வருகிறது மியன் மார் அரசு. அதனை மீண்டும் நீடிப்பதற்கு
ஒரு வழியாக அமெரிக்கர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார் என்று குற்றம் சாட்டி
தீர்ப்பும் வழங்கியிருக்கிறது.
மியன்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரான ஆங் சாங் சூகி ஜூன் 19,
1945 இல் பிறந்தார். நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி
வந்தமையினால் மியன்மாரின் இராணுவ ஆட்சியின் கீழ் வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டுள்ளார்.
இவரது தந்தை ஆங் சாங் பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தார்.
பிரித்தானியராலேயே 1947 இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். லண்டனில் கல்வி கற்ற
ஆங் சாங் சூகி அங்கேயே திருமணம் செய்து மியன்மார் நிலைமையை அறிந்து நாட்டுக்கு
வந்தார். மியன்மார் மக்களின் வேண்டுகோள்களுக்குத் தலைசாய்த்து போராட்டம், கட்சி
என்று கடந்த 20 வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
1990ஆம் ஆண்டு மியன்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இவரது கட்சி
பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொண்டது. இருப்பினும் இவர் சிறையில்
அடைக்கப்பட்டார். பிரதமராகும் வாய்ப்பு இராணுவத்தினரால் இல்லாமல் போனது முதல்
தடுப்புக்காவலிலேயே இருந்து வருகிறார்.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஆளுமை சூகி. புரட்சி என்னும் சொல்
கொச்சைப்படுத்தப்பட்டு விட்ட இந்தக் காலத்தில், சூகியின் ஆவேசமும் துடிப்பும்
கொண்ட வாழ்க்கை, அதன் அர்த்தத்தை மீட்டெடுத்துத் தருகிறது. இருந்தாலும் இந்த
அளவுக்கு மண்பற்று இருப்பதில் என்ன கிடைக்கிறது என்று கவலை மட்டுமே கொள்ள
முடிகிறது.
பர்மாவின் புரட்சியாளர், தேசியவாதி, இராணுவ மேஜர், மற்றும் அரசியல்வாதியான ஜெனரல்
ஆங் சாங் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26, 1942 இல் உருவாக்கினார்.
பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவரான தனது தந்தையைப் போலவே
மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் ஆங் சாங் சூகிக்கு கிடைத்திருக்கும்
மிகப்பெரிய தண்டனை யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதே உலகத்தின் ஜனநாயக
விரும்பிகள் அனைவரதும் பிரார்த்தனையாகும்.
ஜனநாயகம் தோற்றுப்போன ஒரு சில நாடுகள் பட்டியலில் மியன்மாரும் இருக்கிறது. சில
பட்டியல்கள் இன்னமும் வெளியில் தெரியாமல் இருக்கின்றன. ஒரு நாட்டின் இறைமை என்ற
விடயத்துக்குள் யாரும் தலையிட மாட்டார்கள் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு போடும்
ஆட்டங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றால் பெரியளவான புரட்சி வெடித்தாக வேண்டும்.
1989ஆம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியன்மார் என்று மாற்றினார்கள் தலைநகரான
ரங்கூன், யாங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1962ஆம் ஆண்டு முதல் இராணுவ
ஆட்சியின் கீழ் இருக்கும் மியன்மாரில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்கான
முயற்சிகளில் யாரும் ஈடுபட முடியாத நிலையில் இருக் கிறது.
இப்போது ஆங் சாங் சூகி விடயத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கரால் ஏதாவது
ஒரு வகையில் பலமானதொரு சாதகமான தீர்ப்பு ஒன்று வந்து விடலாம் என்று மாத்திரம்
நம்பமுடிகிறது. வெறும் பொருளாதார மற்றும் ஏனைய தடைகளால் மியன்மாரின் திமிரை
அடக்கி விடமுடியுமா என்பது கேள்வி மாத்திரமே தவிர முடிவல்ல என்பது எப்போதும்
ஞாபகத்தில் இருக்க வேண்டியதே.
13.08.09
நன்றி:
பேசும் தாரகை
வலைப்பதிவு:
From wikipedia :
Aung
San Suu kyi: |