- அ.முத்துலிங்கம் -
எங்கள் ஐயாவும் இப்படித்தான். அவர் எங்களை கைநீட்டி அடித்தது கிடையாது ஆனால் நாங்கள் அவருக்கு பிடிக்காதது எதையாவது செய்தால் தன் கையால் தன் தலையிலேயே அடித்துக்கொள்வார். எங்கள் குடும்பத்தில் நாங்கள் எல்லோருமாக, ஐயா அம்மா உட்பட, பத்துப்பேர் இருந்தோம். ஒரே உணவைச் சாப்பிட்டு, ஒரே பாயில் படுத்து, ஒரே பேன்சீப்பால் தலை இழுத்தோம். இருந்தும் எங்கள் வீட்டில் இருவர் மட்டுமே வாசிப்பில் ஆர்வம் காட்டினோம். ஒன்று அக்கா, அடுத்தது நான். அக்காவுக்கு நாவல்கள் பிடிக்கும். நான் எங்கேயெல்லாமோ அலைந்து திரிந்து யாரிடமிருந்தாவது நாவல் இரவல் வாங்கி வருவேன். அக்கா படிப்பார், ஆனால் இது ஐயாவுக்கு பிடிக்காது. பஞ்சமாபாதகங்களில் நாவல் படிப்பதும் ஒன்று என்று அவர் நம்பினார். சீக்கிரத்தில் கெட்டுப் போய் விடுவோம் என்று பயப்பட்டார். நானோ அக்காவோ பிடிபட்டுவிட்டால் தன் தலையில் தானாகவே அடித்துக்கொள்வார். நாங்கள் தளர்ந்துபோகாமல் சதித்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தி நாவல்களை அரிசிப்பானை, ஆர்மோனியப்பெட்டி, சுற்றிவைத்த பாய் போன்றஆவற்றுக்குள் ஒளித்து வைக்கவும் பின்பு தேடி எடுக்கவும் பழகிக்கொண்டோம்.
அலை ஓசை முதல் அத்தியாயம் மறக்க முடியாதது. தபால் சாவடி என்பது
தலைப்பு. பெரிய மாளிகைக்குள் நுழைவதற்கு கட்டிய சிறிய வாசல்போல அந்த
அத்தியாயம் அமைந்திருந்தது. ராஜம்பேட்டை என்ற சின்னக் கிராமத்தின்
வர்ணனையுடன் ஆரம்பித்து, ஜனவரி மாதம் வந்தால் ஜனவரி வசூலிக்கவேண்டும்
என்ற சிலேடையுடன் அத்தியாயம் முடிவுக்கு வரும்.
பல வாரங்கள் சுமுகமாக ஓடின. ஒரு முறை வழக்கம்போல கல்கி இரவல் வாங்கப்
போனபோது கல்வீட்டில் ஒருவரும் இல்லை. தபால்காரன் போட்டுவிட்டுப் போன
கல்கிப் பத்திரிகை விறாந்தையில் கேட்பாரின்றிக் கிடந்தது. ஒரு
நிமிடம் கூட யோசிக்காமல் அதை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு
புறப்பட்டேன். தொடர் விறுவிறுப்பாக மாறியிருந்தது. தாரிணி கதையினுள்
பிரவேசித்திருந்தாள். சூரியாவுக்கும் ராகவனுக்கும் இஆடையில் முறுகல்
நிலை. நானும் அக்காவும் போட்டிபோட்டுப் படித்த பிறகு பத்திரிகையை
திருப்பிக் கொடுக்க விரைந்தேன். கல்வீட்டுக் கேட்டைக் கொஞ்சம்
தூக்கித்தான் திறக்கவேண்டும். அப்படித் திறந்த நான்
ஸ்தம்பித்துப்போய் நின்றேன்.
கல்வீட்டுக்காரர்கள் எல்லோரும் கூடி நின்றார்கள். பக்கத்து
வீட்டுக்காரர் ஒருவரும் வந்திருந்தார். இரண்டு வேலைக்காரர்கள். அந்த
நேரம் பார்த்து சுருட்டிப் பிடித்த பத்திரிகையுடன் நான் உள்ளே
நுழைந்தேன். ஏதோ கொலைகாரப் பாவியை பார்ப்பதுபோல என்னைப்
பார்த்தார்கள். என் ரத்தம் எல்லாம் எதிர் திசையில் ஓட ஆரம்பித்தது.
அந்த வாரம் படித்த தொடரில் சூரியா தாஜ்மகால் பொம்மையை அடித்து
உடைப்பான். அதிலே ஒரு துண்டு தெறித்து தாரிணியின் நெற்றியில் பட்டு
ரத்தம் கசியும். இந்த நல்ல மனிதர்களைக் காயப்படுத்திவிட்டோமே என்று
உணர்ந்த என் நெஞ்சமும் அப்போது மெல்லக் கசிந்தது.
சில
வருடங்களுக்கு எனக்கு கல்கிதான் கடவுளாக இருந்தார். வேறு எவர்
எழுத்தையும் படிக்க நான் தயாராக இல்லை. மகுடபதி என்று ஒரு நாவல்.
அதைப் படித்துவிட்டு கல்கிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு அவர்
ஒரு தபால் அட்டையில் பதில் எழுதினார். அந்த அட்டையை பல வருடங்கள்
பாதுகாத்து வைத்திருந்தேன். பிறகு எப்படியோ அது தொலைந்து போனது. ஒரு
முறை கல்கி நான் படித்த கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு வந்து
பேசினார். இதைவிடப் பெரிய அதிர்ஷ்டம் யாருக்கு கிட்டும். இலங்கையின்
அத்தனை கிராமங்களிலும் உள்ள அத்தனை பள்ளிக்கூடங்களிலும் கல்கி
எப்படியோ நான் படித்த பள்ளிக்கூடத்தையே தெரிவு செய்தார். இதை
அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது. மேடையில் கல்கி
இருந்த அத்தனை நிமிடங்களும் நான் வேறு எவரையும் பார்க்கவில்லை.
அவரைப் பார்த்தபடியே இருந்தேன்.
ஒருநாள் க.கைலாசபதி ( அப்பொழுது அவர் பேராசிரியர் அல்ல) ஒரு
புத்தகத்தை தந்து படித்துப் பார்க்கச் சொன்னார். அது புதுமைப்பித்தன்
என்று ஒருவர் எழுதிய புத்தகம். அன்று நான் படிக்கவேண்டிய பாடங்களைத்
தள்ளிவைத்துவிட்டு இந்தப் புத்தகத்தை இரவிரவாகப் படித்து முடித்தேன்.
என்னால் நம்பமுடியவில்லை. இப்படிக்கூட புத்தகங்கள் இருக்கின்றனவா?
உடனேயே தீர்மானித்தேன். இனிமேல் புதுமைப்பித்தன்போல எழுதவேண்டும்
என்று. இன்னும் சிறிது காலம் கழித்து க.கைலாசபதி இன்னொரு புத்தகம்
தந்தார். அது ஒரு ஆங்கிலப் புத்தகம். ஜேம்ஸ் ஜோய்ஸ் என்பவர் எழுதிய
Dubliners. அதைப் படித்து முடித்த பிறகு இரண்டு நாள் ஒன்றும் ஓடாமல்
அலைந்தேன். மீண்டும் தீர்மானித்தேன். இனிமேல் எழுத்தாளனாகி ஜேம்ஸ்
ஜோய்ஸ்போல எழுதவேண்டும்.
இதுவே என் வாழ்க்கையின் முக்கியமான கட்டம். கொலம்பஸ் புதுப்பூமியை
தேடி அலைந்ததுபோல நானும் தினம் தினம் புது எழுத்தாளர்களைக்
கண்டுபிடித்தேன். ஆனால் திருப்தி கிட்டவில்லை. இன்னும் புதியவர்களைத்
தேடினேன். இதிலே முக்கியமான ஒரு செய்தி உண்டு. நான் புதுமைப்பித்தனை
அக்காவிடம் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னபோது அவரால் ஒரு
பக்கத்தைக்கூட தாண்ட முடியவில்லை. அவரோ மு.வரதராசனையும்,
காண்டேகரையும், லட்சுமியையும் தொடர்ந்து படித்து தன்னை முன்னேற்றி
இப்பொழுது ரமணிச்சந்திரனில் வந்து நிற்கிறார். அப்போது பிரிந்த
எங்கள் பாதை மறுபடி ஒன்றுசேரவில்லை. இது எப்படி நடந்தது, ஏன் நடந்தது
என்பதற்கு என்னிடம் விளக்கமும் இஆல்லை.
இந்தக் காலகட்டத்தில் என் ஐயாவைப்போல நானும் தலையில் அடிக்கும்
வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். ஒரு நல்ல நாவலைப் படிக்கும்போது
அதிலே ஒரு நல்ல வசனம் வந்தால் அல்லது அபூர்வமான சொற்றொடர் ஒன்று
காணப்பட்டால் புத்தகத்தை அப்படியே மூடிக் கீழே வைத்துவிட்டு, கண்களை
மூடி, அந்த வசன அடுக்கை இன்னொருமுறை சொல்லிப் பார்ப்பேன். பிறகு என்
தலையில் நானே அடித்துக் கொள்வேன். அட, என்ன அமைப்பு. என்ன நுட்பம்.
இது எனக்கு தோன்றாமல் போய்விட்டதே என்று என்னை நொந்துகொள்வேன்.
ஆரம்பத்தில் ஒரு நாவலைப் படித்து முடிந்ததும் அதைத்
தூக்கிப்போட்டுவிட்டு இன்னொன்றை ஆரம்பிப்பேன். சில நாவல்களை
இன்னொருமுறை படிக்கும் ஆசை ஏற்பட்டது. நாவலின் கதைதான்
தெரிந்துவிட்டதே எதற்காக இரண்டாவது தடவை படிக்கவேண்டும் என்று
தோன்றும். அப்பொழுது புரிந்தது இந்த நாவலில் வேறு ஒன்றும் இருக்கிறது
என்று. அதன் கட்டமைப்பு, சொல் முறை, நடை, வார்த்தைத் தேர்வு இவை
எல்லாமே முக்கியம். இந்த அம்சத்தை ரசிக்கத் தொடங்கியதும் நாவலை வேறு
ஒரு பரிமாணத்தில் பார்க்க ஆரம்பித்தேன். இன்னும் நாட்செல்ல மர்மம்,
விறுவிறுப்பு, திருப்பங்கள் என்று வந்தால் அது பிடிக்காமல் போனது.
பக்கம் திருப்பிகள், அடுத்து என்ன நடக்கும் என்று அறியும் ஆவலை
தூண்டும் கதைகள் எனக்கு உவப்பானதாயில்லை. வேகம், ஆழ்ந்த ரசனைக்கு
எதிரியாக இருந்தது.
நாவலில் துவங்கிய வாசிப்பு அனுபவம் சிறுகச் சிறுக கவிதை, சிறுகதை,
கட்டுரை ஆஇலக்கியம் என்று விரிந்தது. இது எல்லாவற்றுக்கும் பொதுவாக
ஒன்று இருந்தது. அதுவே வார்த்தை. வார்த்தைகளின் அடிப்படையிலேயே
அனைத்து இலக்கிய வடிவங்களும் எழும்பின. மிகப் பொருத்தமான வார்த்தையை
தேர்வு செய்வதுதான் ஒரு படைப்பின் சவால் என்றார்கள். ஓர் எழுத்தாளர்
சரியான வார்த்தை ஒன்று கிடைப்பதற்காக பல நாட்கள் காத்திருந்ததாகச்
சொன்னார். முதலாவது திருத்தத்தில் வெட்டிய வார்த்தையை ஏழாவது
திருத்தத்தில் மறுபடியும் சேர்த்துக்கொண்டதாக இன்னொருவர் கூறினார்.
எழுத்தை மட்டுமல்ல எழுத்தாரையும் அறியவேண்டும் என்று பின்னாளில்
தோன்றியது. அவர்களில் பலர் தங்கள் காலுறைகளுக்குள் ஒரு சின்ன
குறிப்பு புத்தகத்தை வைத்திருந்தார்கள். திடீரென்று தோன்றும் ஒரு
வார்த்தையை அல்லது சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தைக் குறித்துவைத்துக்
கொள்கிறார்கள். சிலர் ஓய்வாக இருக்கும் சமயத்தில் அகராதியைப்
படிக்கிறார்கள். வேறு சிலர் பழைய நாட்குறிப்புகளைப் படிக்கிறார்கள்.
டேவிட் செடாரிஸ் என்ற எழுத்தாளர் கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த
புத்தகம் ஜொனாதன் •பிரான்ஸன் எழுதிய The
Corrections என்கிறார். அஸார்
நவிஸி Lolita வை படிக்கச் சொல்கிறார். •பிராங் மக்கோர்ட் தான்
படுக்கைக்கு போகும்போது P.G.Wodehouse ஐ படிப்பதாகச் சொல்கிறார்.
இந்தக் குறிப்புகள் எல்லாம் வாசிப்பை மேலெடுத்துப் போவதற்கு எனக்கு
உதவியாக இருந்தன.
இருபதாம் நூற்றாண்டின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு கட்டுரை இலக்கியம்.
Truman Capote, Norman Mailer
போன்றவர்கள் கட்டுரை இலக்கியத்தை புது உயரத்துக்கு தூக்கிச்
சென்றார்ககள். கட்டுரை என்றும் இல்லாமல், முழுப் புனைவு என்றும்
இல்லாமல் இரண்டுக்கும் உள்ள இடைவெளியில் படைத்தார்கள். The
Executioner's Song என்ற உண்மைக்கதை நாவலுக்கு முதல்முறையாக புனைவுப்
பிரிவில் புலிட்ஸர் பரிசு கிடைத்தது. இலக்கிய வாசகர்களுக்கு இது
முற்றிலும் புதுமையான விருந்து.
நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று ஒரு சுற்று வந்தாகிவிட்டது.
கடந்த பத்து வருடங்களில் தமிழ் இலக்கியத்தில் பெரும் பாய்ச்சல்
ஏற்படுவதைக் காண்கிறேன். புனைவு, கட்டுரை இலக்கியம், கவிதை என்று
மிகத் தரமான படைப்புகள். சில புதுப் படைப்பாளிகளின் எழுத்தைப்
படிக்கும்போது தலையிலே அடித்துக்கொள்கிறேன், அட எனக்கு இது
தோன்றவில்லையே என்று. இணையத்தில் அகப்படும் சில கட்டுரைகள் தேடிக்
கண்டுபிடித்த மாணிக்கக் கற்கள்போல ஒளிருகின்றன. இப்போது வரும் புத்தக
பதிப்புகள் கண்ணிலே ஒற்றிக் கொள்ளவேண்டும்போல இருக்கின்றன. நாலாவது
வாசிப்பில் ஒற்றைகள் பிய்ந்துபோய் பறப்பதில்லை; அடிக்கோடு இட்டால் மை
மற்றப் பக்கம் ஊறுவதில்லை.
தமிழ் விக்கிபீடியா வேகமாக வளர்கிறது. தற்போது 5800 கட்டுரைகள்
ஏறிவிட்டதாக அறிகிறேன். அவற்றை உலகத்தின் எந்தப் பாகத்தில் இருந்தும்
எவராலும் இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் வாசிக்க முடிகிறது. ஆனால்
இந்திய மொழிகளில் தெலுங்கு முதல் இடத்தில் 26,000 கட்டுரைகளுடன்
இருக்கிறது. நாலாவது இடத்தில் தமிழ் இருந்தாலும் ஹிந்தியை
முந்திவிட்டது. ஊர் ஊராக அலைந்து இரவல் பத்திரிகை படித்த எனக்கு இது
எத்தனை பெரிய கதவை திறந்துவிட்டிருக்கிறது.
மனிதன் அனுபவிக்கக் கிடைத்த எத்தனையோ இன்பங்களில் வாசிப்பு இன்பம்
மேலானது. எவ்வளவு வாசித்தாலும் தெவிட்டுவதில்லை. ஒன்றுக்கு பின்
ஒன்றாக பிரமிக்க வைக்கும் புத்தகங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
தோரோ என்ற ஒரு தத்துவவாதி, மேதை, எழுத்தாளர். காந்தியை மாற்றிய 13
புத்தகங்களில் இவருடையதும் ஒன்று. இத்தனை வருடங்களாகியும் கையில்
அகப்படாத புத்தகம் இப்போதுதான் கிடைத்தது. பெண் எழுத்தாளர்களின்
படைப்புகள் அதிகமாகியிருக்கின்றன. அவர்கள் காட்டுவது முற்றிலும்
பரிச்சயமில்லாத ஓர் உலகம். Brick Lane நாவலை எழுதியவர் மொனிகா அலி
என்ற பெண்மணி. நாவல் பங்களதேசத்திலும், லண்டனிலும் நடைபெறுகிறது.
அவருடைய நடை என்னை அடிமை கொண்டது என்றால் என்னை அசைத்துப்போட்ட
புத்தகம் White Teeth. இதை எழுதியவர் Zadie Smith என்ற இளம் பெண்.
இவருடைய 25வது வயது முடிவதற்கிடையில் இவர் இதை எழுதி முடித்தார்.
பதிப்பாளர்கள் புத்தகத்தை வெளியிடுவதற்கு போட்டியிட்டார்கள்.
உலகத்தில் வெளியான ஆகத்திறமான நூறு நூல்களின் பட்டியலில் White Teeth
இருக்கிறது. இந்தப் புத்தகத்தை படித்தபோது பல தடவைகள் தலையில்
அடித்துக்கொண்டேன். அப்போது திரும்பத் திரும்ப மனதில் தோன்றிய எண்ணம்
25 வயதுகூட நிரம்பாத பெண்ணுக்கு இது எப்படிச் சாத்தியமானது
என்பதுதான்.
அம்புலிமாமாவில் ஆரம்பித்த வாசிப்பு ஆர்வம் பல புத்தகங்களையும், பல
நாடுகளையும், பல வருடங்களையும் கடந்து இன்றும் தொடர்கிறது. நல்ல
வாசகர்கள் இருக்கும் வரை நல்ல புத்தகம் வரும். நல்ல புத்தகங்கள்
வரும்போது நல்ல வாசகர்களும் உருவாவார்கள். இதில் எது முதல்
என்பதுதான் தெரியவில்லை.
2007 புதுவருடம் அன்று எனக்கு பரிசாகக் கிடைத்த புத்தகம் மார்க்
பௌடன் எழுதிய கட்டுரை இலக்கியம். எல்லோராலும் ஆராய்ச்சி செய்ய ஏலாது;
அப்படிச் செய்தாலும் உண்மையை உருவி எடுக்கமுடியாது. அப்படி
எடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக, ஒரு கதை போலச் சொல்வது கடினம். மார்க்
பௌடன் இந்தக் கலையில் உச்சத்தை தொட்டவர். அவருடைய எழுத்தைப்
படிக்கும்போது அடிக்கடி தலையில் அடித்துகொள்ளத் தோன்றுகிறது. இந்த
புத்தகம் அரைவாசி படித்து முடித்த நிலையில் மனுஷ்யபுத்திரனிடம்
இருந்து கட்டுரை கேட்டு மின்னஞ்சல் வந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை
எழுதுவதற்காக வாசிப்பை பாதியில் நிறுத்தியிருக்கிறேன். மறுபடியும்
புத்தகத்தை எடுக்கும்போது மீண்டும் தலையில் அடித்துக்கொள்வதை
தொடரலாம்.
புத்தகத்தில் உண்மையான பற்று வைக்கும் ஒருவருக்கு வேறு பற்று
இருக்காது. ஆயிரம் புத்தகம் படித்தால் ஆயிரத்தியோராவது புத்தகத்தில்
வியப்பதற்கு விசயம் குறைந்து கொண்டே வரும். எனக்கோ வியப்பு
கூடிக்கொண்டு வருகிறது. இது பொது விதியாக இருக்க முடியாது, எனக்கு
மட்டும் சம்பவிக்கிறது என்றே நினைக்கிறேன். ஒருவேளை அனுபவம் கூடக்கூட
நல்ல புத்தகங்களை படிப்பதற்கு தெரிவு செய்யும் திறமை என்னிடம்
அதிகமாகியிருக்கலாம். முன்னெப்போதும் இல்லாதமாதிரி தரமான
புத்தகங்களின் வருகையும் அதிகமாகியிருக்கிறது. அவை தரும் வாசிப்பு
இன்பமும் கூடுகிறது. அருமையான சொற்றொடர்கள் வரும்போது என்னயறியாமல்
தலையில் அடிப்பதும் அதிகமாகிறது. என்னுடைய எஞ்சிய வாழ்நாள் மட்டும்
குறைந்துகொண்டே வருகிறது.
amuttu@gmail.com