மீள்பிரசுரம்: சங்கமம்.காம்!
ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார் - ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு 8 விருதுகள்!
Monday, 23 February 2009 - அகடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட் அண்ட் சயின்சஸ் என்ற
அமைப்பின் மூலமாக திரைத்துறையில் உலக அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும்
ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. 1929-ம் ஆண்டு முதல் திரைத் துறையில் பல்வேறு
பிரிவுகளுக்கும் வழங்கப்படும் இந்த விருது இந்தியாவில் உருவாக்கப்பட்ட "ஸ்லம்டாக்
மில்லியனர்" படத்துக்கு 8 விருதுகளை வழங்கியுள்ளது.
இந்த படத்தின் மூலம் சிறந்த இசைஅமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் (ஜெய்
ஹோ) இந்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன. சிறந்த
படம், சிறந்த இயக்கம் (டேனி பாய்ல்), ஒளிப்பதிவு (அந்தோணி டாட் மேன்டில்), தழுவல்
திரைக்கதை (சைமன் பீபோய்), சவுண்ட் மிக்ஸிங் (ரசூல் பூக்குட்டி), எடிட்டிங் (கிறிஸ்
டிக்கன்ஸ்) என மொத்தம் 8 விருதுகளை ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு வழங்கப்பட்டது.
விழாவில் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதும் பார்வையாளர்கள் வரிசையில்
இருந்த அவரை ஸ்லம்டாக் படத்தின் சக நடிகர், நடிகைகள், இயக்குனர் டேனி பாய்ல்
உள்ளிட்டவர்கள் கட்டியணைத்து வாழ்த்தினர். விருதுகளை பெற்றுக் கொண்டதும் "எல்லா
புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் ரஹ்மான் பேசினார்.
மும்பை குடிசை பகுதியில் வசிக்கும் இளைஞனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்
"ஸ்லம்டாக் மில்லியனர்". ஆங்கிலப்படமான இதை இங்கிலாந்தை சேர்ந்த டேனி பாய்ல்
இயக்கியுள்ளார். இதில் தேவ்படேல், பிரெய்டா பின்டோ, அனில்கபூர், இர்பான்கான் உள்பட
பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
அமெரிக்காவின் "கோல்டன் குளோப் "விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை
பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றார். இங்கிலாந்து திரைத்துறையின்
உயரிய விருதான "பாஃப்டா" வுக்கும் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது. 11 பிரிவுகளில்
பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படத்துக்கு 7 விருதுகள் கிடைத்தன. சிறந்த இசைக்காக
ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த இயக்குனருக்காக டேனி பாய்ல், சிறந்த சவுண்ட்
எடிட்டிங்கிற்காக ரசூல் பூக்குட்டி உள்பட 7 விருதுகளை இந்தப் படம் வென்றது. ஆஸ்கர்
விருதுகளுக்கு 10 பிரிவுகளில் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது. அதில் தற்போது 8
பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
மேலும் இந்தியாவில் இருந்து சென்ற "ஸ்மைல் பிங்கி" என்ற ஆவணப்படத்துக்கு ஆஸ்கர்
விருது கிடைத்துள்ளது. இது உதடு பிளவுபட்ட பெண் குழந்தை சமூகத்தால் பாதிக்கப்படுவது
பற்றியும் அவள் சந்திக்கும் சமூக சேவகரின் முயற்சியில் அவள் வாழ்க்கை எவ்வாறு
மாறுகிறது என்பதையும் மையமாக வைத்து இந்தக் குறும்படம் இயக்கப்பட்டுள்ளது. மேகன்
மைலன் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
பிரபல இயக்குனர் சத்யஜித்ரேவுக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது, "காந்தி"
படத்துக்காக ஆடை வடிவமைப்பு கலைஞர் பானு அத்தய்யா ஆகியோருக்கு ஆஸ்கர் விருது
ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. ஸ்லம்டாக் படத்தின் மூலம் 2 இந்தியர்கள் ஆஸ்கர்
விருது பெற்று சாதனை படைத்துள்ளனர். இசை, பாட்டு என 2 விருதுகளை வென்ற முதல்
இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.
ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றது குறித்து திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம
நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது தமிழருக்கும் தமிழ் திரையுலகுக்கும்
கிடைத்த அங்கீகாரம், பெருமை. உலக தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம். ஆஸ்கர்
விழாவில், எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசி இருப்பது
பாராட்டுக்குரியது. அவர் மேலும் புகழ்களை பெற தமிழ் திரையுலகம் சார்பில்
வாழ்த்துகிறோம்" என்று கூறியுள்ளார்.
ஆயிரம் விருதுகள் குவியட்டும் - கருணாநிதி வாழ்த்து
ஆஸ்கர் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் கருணாநிதி
வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
'இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து,
மலர்ந்து புகழ் பெருக்கி இன்று சிகரத்திற்கே சென்று - சிரித்த முகத்தோடு நம்முடைய
வாழ்த்துகளைப் பெறுகிற - சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர். ரஹ்மான். இவருக்கு
கிடைத்துள்ள ஆஸ்கர் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது. சிறுபான்மை
சமுதாயத்தை சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி
வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார். குறிப்பாகவும்
சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்கு கிடைத்த
மிகப் பெரிய கீர்த்தி - சிறப்பு - பெருமை. ரஹ்மான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கர்
பதித்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை கருதுகிறேன். தமிழ்நாடும்,
தமிழ்நாடு அரசும், அதற்கு தலைமைப் பொறுப்பேற்று இருக்கிற நானும் தமிழ்நாட்டின் ஆறு
கோடி மக்களும் ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும் உலகக் கலைஞர்களும்
மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியை தெரிவித்து - மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து -
தாயாக நின்று வாழ்த்துகிறபோது - அந்த வாழ்த்துகளில் என் வாழ்த்துகளும் இணைகிறது.
வாழ்க ரஹ்மான்! ஆஸ்கர் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் விருதுகள் பெற
வாழ்த்துகிறேன்'
சட்டசபையில் பாராட்டு
ரஹ்மானுக்கு சட்டசபையிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. "ஒரு தமிழன், தமிழ்
திரையுலகையே உலக அரங்கில் தலைநிமிர வைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும்
வகையில் இரு ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்திருக்கிறார். முதல்வர் சார்பாகவும்
பேரவையின் உறுப்பினர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துகளையும்
பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல்வேறு விருதுகளை பெற
வாழ்த்துகிறேன்" என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தனது வாழ்த்துச் செய்தியில்
தெரிவித்தார்.
எல்லா புகழும் இறைவனுக்கே - விருது விழாவில் தமிழில் பேசி அசத்தினார் ஏ.ஆர்.
ரஹ்மான்
ஆஸ்கர் விருது பெற்றதும் விழா மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என தமிழில் பேசி
அசத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் கலைஞர்கள் குழுமியிருந்த அரங்கத்தில் அவர்
தமிழில் பேசியதும் மொழி புரியாதவர்களும் கரவொலி எழுப்பி, ரஹ்மானுக்கு பாராட்டுகளை
தெரிவித்தனர்.
"ஸ்லம்டாக் மில்லியனர்" படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்றதும்
ரஹ்மான் பேசியதாவது:
இது மிக சந்தோஷமான தருணம். இந்த தருணத்தில் இயக்குனர் டேனி பாய்ல் உள்பட
படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். சென்னை மற்றும்
மும்பையிலுள்ள எனது இசைக் குழுவினருக்கும் நன்றி கூறுகிறேன். "தீவார்"இந்தி
படத்தில் ஒரு வசனம் வரும். அதில் உன்னிடம் என¢ன இருக்க¤றது? என ஹீரோவிடம்
கேட்கும்போது, "என்னிடம் தாய் இருக்கிறாள்" என்பார் ஹீரோ. அது போல என்னிடம் தாய்
இருக்கிறார். அவரது ஆசி உள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே. அதையே இங்கு சொல்ல
விரும்புகிறேன். கடவுள் மிகவும் உயர்வானவர். இவ்வாறு ரஹ்மான் பேசினார்.
மீள்பிரசுரம்: சங்கமம்.காம்!
இசைப்புயலின் சாதனை பயணம்
Monday, 23 February 2009 சர்வதேச அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக விளங்கும்
ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதையும் வென்று இந்தியாவுக்கும், தமிழகத் திற்கும் பெருமை
தேடித் தந்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தனது இசையால் வசீகரித்து
இசைப்புயலாக உருவான ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனை பயணம் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின்
மூலம் ஆரம்பமானது.
இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக
1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய
ஏ.ஆர்.ரஹ்மான்.ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால்
குடும்பம் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. வீட்டில் இருந்த இசைப்
பொருட்களையெல்லாம் விற்றும், வாடகைக்கு விட்டும் ஜீவனம் நடத்த வேண்டிய துர்பாக்கிய
நிலை.
இதனையடுத்து ரஹ்மான் தனது தாயோடு சென்னையில் வசித்து வந்தார். 1989 ஆம் ஆண்டு அவர்
இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரையும் அல்லா ராக்கா ரஹ்மான் என மாற்றிக்
கொண்டார். ரஹ்மானுக்கு இயல்பாகவே இசை ஆர்வம் இருந்தது. அவர் கீ போர்டு வாசிப்பவராக
இசைஞானி இளையராஜாவிடம் பணியாற்றி வந்தார். தனது நண்பர்கள் சிவமணி, ஜான் அந்தோணி
ஆகியோரோடு சேர்ந்து ரூட்ஸ் எனும் பெயரில் இசைக்குழு ஒன்றையும் நடத்தி வந்தார்.
மாஸ்டர் தன்ராஜ் என்பவர் கீழ் அவர் இசைப்பயிற்சி பெற்று வந்தார். 11-வது வயதில்
இசையமைப்பாளர் இளையராஜாவின் குழுவில் கீபோர்டு வாசிப்பவராக சேர்ந்தார்.
எம்.எஸ்.விசுவநாதன் இசைக் குழுவிலும் அவர் பணியாற்றி இருக்கிறார்.
பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன்,
குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார்.
எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து
பங்காற்றினார்.
இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார்.
மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.
1992ம் ஆண்டு ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல் கல். தனியாக சொந்தமாக இசைப்
பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை தொடங்கினார் ரஹ்மான். தனது வீட்டுக்குப்
பின்னால் இந்த ஸ்டுடியோவைத் தொடங்கினார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப்
பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன்
விளங்குகிறது.
இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் தொடங்கிய பின்னர் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி
நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை
ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.
ரஹ்மானுக்கு 1992 ஆம் ஆண்டு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. பிரபல இயக்குனர்
மணிரத்னம் தன்னுடைய ரோஜா திரைப்படத்திற்காக அவரை இசையமைக்க அழைத்தார்.
‘சின்ன சின்ன ஆசை" என்று ரோஜாவில் தமிழ் இதயங்களை மயங்க வைத்த ரஹ்மான் அந்த
ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்று சாதனை படைத்தார். முதல்
படத்திலேயே விருதை வென்று முத்திரை பதித்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களின் நெஞ்சில்
சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.
இந்த திரைப்படம் தேசிய அளவிலும் வெற்றி பெற்று ரஹ்மானுக்கு நாடு தழுவிய அளவில்
ரசிகர்களை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து அவர் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், இந்திரா,
கன்னத்தில் முத்தமிட்டால், பம்பாய், அலைபாயுதே, டூயட், கிழக்கு சீமையிலே உள்ளிட்ட
பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வெற்றிக் கொடி நாட்டினார்.
மேலும் தில்சே, லகான், கஜினி உள்ளிட்ட இந்தி திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்து
தேசிய அளவில் புகழ் பெற்றார்.
இதனிடையே சர்வதேச அளவிலும் ரஹ்மானின் புகழ் பரவியது. ஆன்டி வெப்பரோடு பாம்பே
டிரிம்ஸ் என்னும் இசை நாடகம் ஒன்றில் பங்கேற்று அவர் உலகளவில் தனது திறமையை
நிரூபித்தார்.
4 முறை தேசிய விருது, பல முறை பிலிம்பேர் விருது மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு
விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் ஆஸ்கர்
விருதையும் வென்று புதிய சிகரத்தை தொட்டிருக்கிறார்.
மேற்கத்திய இசை மற்றும் ஹிந்தி பாடல்களை ரசித்துக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை
தனது இசையின் மூலம் இழுத்து அவர்களின் மனதில் ஏ.ஆர்.ரஹ்மான் சிம்மாசனமிட்டு
அமர்ந்தார் என்றால் அது மிகையல்ல
நன்றி: சங்கமம் (இணையத்தளம்)
http://sangamamlive.in
மீள்பிரசுரம்: எழுத்தாளர் ஜெயமோகனின்
வலைப்பதிவு!
ஏ.ஆர்.ரஹ்மான்,ரஸூல் பூக்குட்டி
February 24, 2009 – சில வருடங்களுக்கு முன் நண்பர் வசந்த் இயக்கிய ‘ரிதம்’ என்ற
படத்தைப் பார்க்கச் சென்றோம். அது ஒரு இசைபப்டம். ஏ.ஆர்.ரஹ்மானின் மிகச்சிறந்த
பாடல்கள் பல கொண்டது. படம் முடிந்து திரும்பும்போது நான் அருண்மொழியிடம் கேட்டேன்
”இதிலே எந்தப்பாட்டு சூப்பர் ஹிட் ஆகும்?” ”காற்றே என் வாசல் வந்தாய்…தான் ஏன்?”
என்றாள். நான் ”அது உடனே ஹிட் ஆகும். ஏன் என்றால் அதில் தெளிவான உச்சரிப்பு இனிய
குரல் நல்ல பாடல்வரிகள் மென்மையான மெட்டு எல்லாம் இருக்கிறது. ஆனால் அதைவிட
‘சலசலவென ஓடும்…என்ற பாட்டுதான் நுட்பமானது. அந்த மெட்டு கேட்கக் கேட்க
பெரிதாகியபடியே செல்லும். அதுதான் ஹிட் ஆகும்” என்றேன்.
அதைப்போலவே அந்தப்பாட்டுதான் இப்போது அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதுதான்
ரஹ்மானின் இசை. கேட்கும்தோறும் அவர் பாடல்களுக்குள் பொறித்திருக்கும் நுட்பங்கள்
வெளிப்பட்டபடியே இருக்கும். இதில் என்ன இருக்கிறது என்று தோன்றி மெல்லமெல்ல நம்
மனதில் அழியாமல் பதிந்த பல ரஹ்மான் பாடல்கள் உண்டு.
ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஷாஜி சொல்லும்போது அவரது இசையமைக்கும் முறையைப் பற்றிச்
சொன்னார். பாடகர்களிடம் அவர்கள் சொந்தக் கற்பனையை உபயோகித்துப் பாடச்சொல்கிறார் .
இசைக்கலைஞர்கள் தங்கள் கற்பனைப்படி வாசிக்கிறார்கள். சிறந்ததைப் பொறுக்கி பொருத்தி
அவர் பாடல்களை உருவாக்குகிறார். நா.முத்துக்குமாரும் அதைச் சொல்லியிருக்கிறார்.
ரஹ்மான் பல்லவி சரணம் என்று மெட்டு கொடுப்பதில்லை. அரைமணிநேரம் அந்த மெட்டை
வாசித்தோ பாடியோ கொடுத்து விடுகிறார். அதற்கு எழுதப்படும் பலநூறு வரிகளில் இருந்து
சிறந்ததை எடுத்துக் கொள்கிறார்
இது ஒரு பின்நவீனத்துவ இயல்பு. நவீனத்துவ இசை அந்த ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின்
வெளிப்பாடு. ரஹ்மானுக்கென உறுதியான சட்டகம் ஏதுமில்லை. அவரது ஆளுமைக்குப் பதிலாக
ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க
உயர்தொழிநுட்பம் உதவுகிறது. தமிழ் சினிமா நவீனத்துவத்துக்கே வராமலிருந்த காலத்தில்
இசையை பின்நவீனத்துவ காலகட்டத்துக்குக் கொண்டு சென்றதே ரஹ்மானின் சாதனை.
ரஹ்மானின் சையைப்பற்றி விரிவாகப்பேச நான் தேர்ந்த இசை ரசிகன் அல்ல.
ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கார் விருது அந்தத் திறனுக்கான சர்வ தேச
அங்கீகாரம். அவருடன் விருது பெற்றுள்ள ரசூல் பூக்குட்டி விருது பெற்றிருப்பது
இந்திய திரைத்தொழ்ல்நுட்பம் தனிநபர்களின் ஆற்றலால் குறைவான வசதிகளிலேயே
சர்வதேசத்தரத்தை தொட்டிருப்பதன் ஆதாரம்.
ஆஸ்கார் விருது பெற்ற குறும்படம் மற்றும் அதை எடுத்தவர்கள் குறித்து எனக்கு ஒன்றும்
தெரியவில்லை. அவர்களுக்கும் ரஹ்மான், ரசூல் பூக்குட்டி ஆகிய இருவருக்கும் என்
வாழ்த்துக்கள்
http://jeyamohan.in/?p=1894
|