- அ.முத்துலிங்கம் -
அந்த இளைஞனுக்கு வயது 19. அவன் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு பெரும் கனவுகளோடு வருகிறான். அவனே சொல்கிறான்,' என் ட்ரங்குப் பெட்டியில் ஒன்றுமில்லை. உடம்பில் ஒன்றுமில்லை. மூளையிலும் ஒன்றுமில்லை. அப்படி இங்கே வந்து இறங்கினேன்.' உண்மையில் அவனுடைய ட்ரங்குப் பெட்டியில் அவன் அயர்லாந்தில் தந்திசேவகனாக வேலை செய்தபோது கிடைத்த சம்பளத்தில் பாதியை கொடுத்து வாங்கிய
பழைய சேக்ஸ்பியர் நூல் ஒன்று இருந்தது.
அமெரிக்காவில் கூலி வேலைசெய்து காசு சம்பாதிக்கிறான். எப்படியும் படிக்கவேண்டும் என்பதுதான் லட்சியம். பல சிரமங்களுக்கு மத்தியில் நியூயோர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்கும்போது ஒரு சம்பவம் நடக்கிறது. விரிவுரையாளர், அவர்கள் வீட்டிலே உள்ள ஒரு பொருள் பற்றி சிறு கட்டுரை எழுதிவரும்படி பணிக்கிறார். மற்ற மாணவர்கள் டிவி, பேஸ்போல் மட்டை, கையுறை, கார் என்ற தலைப்புகளில் எழுதியபோது
இவனால் ஒரேயொரு பொருளைப் பற்றித்தான் சிந்திக்க முடிந்தது.
கட்டில்!
நான் சிறுவனாய் இருந்தபோது என்னுடைய அம்மா, நானும் என்னுடைய மூன்று தம்பிகளும் படுத்து உறங்குவதற்கு ஒரு கட்டில் வேண்டும் என்று தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு விண்ணப்பம் செய்தார். அவர்கள் பழைய கட்டில் ஒன்றைத் தருவதாகச் சொன்னார்கள். என் அம்மா புதுக் கட்டில்
கிடையாதா என்றார். அவர்கள் இல்லை என்றார்கள். ஏதாவது வியாதி தொற்றிவிடும் என்று அம்மா பயந்தார் போலும். விடாப்பிடியாக இந்தக் கட்டிலில் ஒருவரும் சாகவில்லை என்று உறுதி கூறமுடியுமா என்று கேட்டார். தொண்டு நிறுவனக்காரருக்கு கோபம் வந்துவிட்டது. 'அம்மா, உங்களுக்கு வேண்டாமென்றால் தள்ளி நில்லுங்கோ. மற்றவர்களைக் கவனிக்கவேண்டும்.'
அம்மா சரி சரி என்று வீட்டுக்குப் போய் அவசர அவசரமாக கடைசித் தம்பியின் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்தார். எங்களுக்கு தந்த மெத்தையில் குதிரை மயிர் நீட்டிக்கொண்டு நின்றது; கட்டிலும் மூன்று பாகங்களாக பிரிந்து கிடந்தது. வண்டியில் வைத்து கட்டில் துண்டுகளை வீதி
வழியாக தள்ளி வருவதற்கு அம்மாவுக்கு வெட்கம். இரவிலே வரமுடியுமா என்று கேட்டார். தொண்டு நிறுவனக்காரர் மறுத்துவிட்டார்.
மூன்று தடவை மேலும் கீழுமாக அலைந்தோம். உடைந்த தள்ளுவண்டி வீதிகளில் கோணலாய்ப் போய் சிரமம் கொடுத்தது. அதை இன்னும் மோசமாக்கியது மெத்தைக்கு கீழே இருந்து வந்த தம்பியின் அழுகை. வீடு வந்ததும் மெத்தையை மேலே இழுத்துப் போக அப்பா உதவி செய்தார். ஆனால் அவர் இரண்டு மைல் தூரத்தில் இருந்த தொண்டு நிறுவனத்துக்கு வர மறுத்துவிட்டார். அவர் வடக்கு அயர்லாந்துக்காரர்; அவருக்கு கூச்சமாக இருக்கும். அவருடைய ஊரில் கட்டில் கொண்டு வருவதற்கு வேறு வழிவகைகள் இருக்கலாம்.
இந்தக் கட்டுரை அவருடைய வாழ்க்கையை திசை திருப்பி விடுகிறது. விரிவுரையாளர் கட்டுரையை வகுப்பிலே வாசித்துக் காட்டி சிலாகித்து பேசுகிறார். மாணவனுக்கு தன் தரித்திரத்தை பகிரங்கப் படுத்தியதில் வெட்கம் இருந்தாலும் பெருமை பிடிபடவில்லை. முதல் முறையாக அமெரிக்காவில் அவனுக்குள் நம்பிக்கை முளைக்கிறது.
பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து, இறுதியில் ஆசிரியப் பணியை ஒப்புக் கொள்கிறார். இதுதான் முதல் பள்ளிக்கூடம்; இதுதான் முதல் வகுப்பு. இங்கே மாணவர்கள் மிக மோசமாக நடந்துகொள்வார்கள் என்று மட்டும் அவர் எச்சரிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் கண்ட காட்சிக்கு அவர் தயாராக இருக்கவில்லை. வகுப்பிலே ஒருவராவது தன் ஆசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. இவரையும் ஒருவரும் பொருட்படுத்தவில்லை. பெரும் சண்டை அங்கே நடந்துகொண்டிருந்தது. கூரை உயரத்தில் பல பொருட்கள் பறந்தன. பயிற்சிபெற்ற ஆசிரியரான இவர் வாயிலிருந்து வெளிப்பட்ட முதல் ஆசிரிய சத்தம் 'ஏய், ஏய்' என்பதுதான். ஆனால் சண்டை நிற்கவில்லை. மேலும் உக்கிரமாகிறது. பறந்த பல பொருட்களில் ஒன்று இவர் முன்னே வந்து விழுகிறது. சாண்ட்விச். இவர் சாவதானமாக அதைப் பிரித்து சாப்பிடுகிறார். உடனேயே சத்தம் அடங்கியது. எல்லோரும் திகைத்துப்போய் இவர் சாப்பிடுவதைப் பார்க்கிறார்கள். சாண்ட்விச்சுக்கு சொந்தக்காரனுடைய வாயும் திறந்திருக்கிறது. அந்த திறந்த வாய்க்குள் போகவேண்டிய சாண்ட்விச் இவருடைய வாய்க்குள் போய் முடிகிறது.
சாண்ட்விச்சை சாப்பிட்டபோது தான் படித்த கிராமத்துப் பள்ளிக்கூடத்தை நினைத்துக் கொண்டார். அங்கே அவருடைய ஆசிரியர் தோடம்பழத்தைக் கொண்டுவந்து வகுப்பறையில் தோல் உரித்து சாப்பிடுவார். மிக நல்ல மாணவனுக்கு அன்று அந்த தோல் பரிசாகக் கிடைக்கும். மாணவர்களுக்கிடையில் தினம் சண்டை நடக்கும், அந்த தோலை சாப்பிடுவதற்கு. அந்த தோலிலும் பார்க்க இந்த சாண்ட்விச் ருசியாகவே இருந்தது.
தலைமையாசிரியர் முன்பு இவர் நிற்கிறார். குற்றம், காலை ஒன்பது மணிக்கு வகுப்பில் மதிய உணவை சாப்பிட்டது. அன்று முதல் நாள் என்றபடியால் இவர் மன்னிக்கப்படுகிறார்.
இரண்டாவது நாள். மாணவர்கள், பாடத்தை எப்படியாவது கடத்த வேண்டும் என்று இவரிடம் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள்.
- நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?
- அயர்லாந்து.
- அங்கே என்ன இருக்கும்?
- ஆடுகள்.
- அயர்லாந்தில் அழகான பெண்கள் இல்லையா?
- இருக்கிறார்கள்.
- அங்கே பெண்களுடன் நீங்கள் வெளியே போவீர்களா?
- இல்லை, ஆடுகளுடன்.
இரண்டாம் நாளும் தலைமையாசிரியர் முன் நிற்கிறார். 'எனக்கு முறைப்பாடு வந்திருக்கிறது, நீங்கள் ஆடுகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசுகிறீர்கள் என்று.'
இரண்டு நாட்களில் இரண்டு மன்னிப்புகள். இப்படி ஆரம்பித்த இவருடைய ஆசிரிய வாழ்க்கை நியூயோர்க்கில் 30 வருடங்கள் தொடர்கிறது. நாலு பள்ளிக்கூடங்களிலும், ஒரு கல்லூரியிலும் கடமையாற்றிய தன் அனுபவத்தை ஒளிவு மறைவின்றி வாசகருடன் பகிர்ந்து கொள்கிறார். இவர் எழுதிய புத்தகத்தின் பெயர் Teacher Man; ஆசிரியருடைய பெயர் Frank McCourt.
அவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தபோது அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. சமுதாய அடுக்கில் ஆகக் கீழ்மட்டத்தில் இருந்தார். அவருக்கு கிடைத்த கட்டளை மாணவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும். பயத்தைப் பரப்ப வேண்டும். பரீட்சை வைக்க வேண்டும். விடைத்தாள்களை திருத்த வேண்டும். பாரங்களை நிரப்பவேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள், நாளுக்கு ஐந்து பாடங்கள். முப்பது வருடங்கள். 12,000 மாணவர்கள்;
33,000 வகுப்புகள்.
ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற எட்டு வருடத்தில் அவர் Angela's Ashes என்ற புத்தகத்தை எழுதுகிறார். அப்போது அவருக்கு வயது 66. அதுவே அவருடைய முதல் புத்தகம். அது புலிட்சர் பரிசை வென்றது. National Book Award ஐயும் பெற்றது. அதைத் தொடர்ந்து 'Tis என்ற புத்தகத்தை எழுதுகிறார். இரண்டுமே சுயசரிதைப் புத்தகங்கள். திடீரென்று அவருக்கு உலகப் புகழ் கிடைக்கிறது. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியை சந்திக்கிறார். போப்பாண்டவரை சந்திக்கிறார். ரேடியோ, பத்திரிகைகள், இலக்கிய இதழ்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரைப் பேட்டி காணுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கும், நடிக நடிகையருக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொலைக்காட்சி இவரைப் பேட்டி காண்கிறது. பள்ளிக்கூடப் பாடத்திட்டம் பற்றி இவரிடம் அபிப்பிராயம் கேட்கிறார்கள். நம்பமுடிகிறதா? கேவலம், ஒரு பள்ளி ஆசிரியரிடம் கேட்கிறார்கள்.
ஒரு முறை பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த கோமாட்டி Sarah Ferguson இவருடைய செவ்வியை பதிவு செய்தார்.
-'நீங்கள்தான் நான் பேட்டிகாணும் முதல் எழுத்தாளர்.'
-'நீங்கள்தான் என்னுடைய முதல் கோமாட்டி.'
நியூயோர்க் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கடமையாற்றும்போது இவர் அனுபவித்த வறுமை சிறுவயதில் அயர்லாந்தில் அனுபவித்ததைவிட மோசமானதாக இருக்கிறது. அவர் இருந்த அறையில் ஆகக்குறைந்த அடிப்படை வசதிகளே இருந்தன. சுடு தண்ணீர் கூடக் கிடையாது. கட்டணம் செலுத்தாததால் ஒரு முறை மின்சாரத்தை வெட்டிவிடுகிறார்கள். குளிரில் விறைத்து இறந்து போய்விடுவார் என்று பட்டது. இவரிடத்தில் மின்சாரத்தில் வேலை செய்யும் போர்வை இருந்தது. கீழ்வீட்டு நண்பரிடம் கெஞ்சி, அவருடைய மின்சார இணைப்பில் போர்வையை சூடாக்கி அதற்குள் படுத்துக் கொள்கிறார். பல மாதங்கள் அப்படியே காலம் தள்ளிய பிறகுதான் மின்சாரக் கட்டணம் கட்டுகிறார்.
இன்னொரு முறை இவரிடம் கையில் 48 சதம்தான் இருக்கிறது. சாப்பிட்டால் ரயிலுக்கு காசு போதாது; ரயில் கட்டணம் கொடுத்தால் பட்டினி கிடக்கவேண்டும். (புதுமைப் பித்தனுடைய 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' கதையிலும் இப்படி ஓர் இடம் வரும்.) இவர் மூளையிலே ஓர் எண்ணம் தோன்றுகிறது. மாணவர்களிடம் அவர்கள் படிக்கவேண்டிய புத்தகம் ஒன்றை வாங்குவதற்காக பணம் சேகரித்து அந்தக் காசை ரயில் செலவுக்கும், உணவுக்கும் பயன்படுத்துகிறார். ஒரு வாரமாக இப்படி சமாளிக்கிறார். பிறகு சம்பளம் கிடைத்ததும் மாணவர்களுக்கு புத்தகத்தை வாங்கிக் கொடுக்கிறார்.
அவருடைய மாணவர்கள் வாய் திறந்தால் உலகத்து மூடத்தனத்தின் கூட்டுத் தொகை ஒரு படி கூடும் என்று சொல்கிறார். அவர்களைச் சமாளிப்பதற்கு சிறப்பான பயிற்சி தேவை. சக ஆசிரியர்களுக்கு இப்படி ஆலோசனை வழங்குவார். 'வகுப்பிலே நீங்கள் படிப்பிக்கும்போது உங்களுக்கு உதவி செய்ய ஒருவருமில்லை. ஒரு சக்திக்கு எதிராக வகுப்பிலே 125 சக்திகள். அவை எந்த நேரத்திலும் வெடிக்க தயாராக இருக்கும் குண்டுகள். அவர்கள் இளையவர்கள். அவர்களுடைய வேலை பெரியவர்களை இந்த பூமியில் இருந்து தள்ளிவிடுவது. உங்கள் வேலை பூமியில் இருந்து விழாமல் தப்புவது.'
மக்கோர்ட் ஒரு பள்ளிக்கூடத்திலும் நிலைப்பதில்லை. அடிக்கடி வேலையிலிருந்து நீக்கப்படுவார். வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க அவருக்கு தெரியாது. அதிகாரிகளைக் கண்டாலும் பிடிக்காது. பள்ளிக்கூடத்து விதிகளை உடைத்தபடியே இருப்பார். சீவார்ட் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கும்போது அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். ஆகவே வேலை போய்விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக செயல்படுகிறார்.
இருந்தும் ஒருநாள் தலைமையாசிரியருடன் மோதல் ஏற்படுகிறது.
'ஆ, மக்கோர்ட். உங்கள் மனைவி கர்ப்பம் என்று அறிகிறேன்.'
'ஆமாம், கர்ப்பம்தான்.'
'ஆண் குழந்தையா, பெண் குழந்தையா
பிடிக்கும்?'
'எதுவாயிருந்தாலும் பரவாயில்லை.'
'பரவாயில்லையா? இரண்டுக்கும் இடையில் வந்தால் என்ன செய்வீர்?'
'ஒன்றும் செய்யமாட்டேன். அதை வளர்த்து தலைமையாசிரியர் ஆக்குவேன்.'
சொல்லவே தேவையில்லை. வெகு சீக்கிரத்தில் மக்கோர்ட்டின் வேலை
பறிபோய்விடுகிறது.
ஸ்டூவ்சென்ற் உயர்நிலைப் பள்ளியில் படிப்பித்தபோதுதான் இவர் மிகவும்
பிரபலமாகிறார். ஏனென்றால் இவர் படிப்பிக்கும் முறையில் சித்திரவதை
கிடையாது. மாணவர்கள் சுயமாக சிந்திப்பதை ஊக்குவித்தபடியே இருப்பார்.
வீட்டு வேலைகளோ, பரீட்சைகளோ எப்போதாவது ஒன்று இருக்கும். இங்கே
இவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். இவருடைய வகுப்பிலே
சேர மாணவர்களிடம் ஒரே போட்டி. அவர்கள் தொகை நூற்றுக்கு மேலே
போய்விடும். ஆசனங்கள் இல்லை. சிலர் ஜன்னல் விளிம்பில்
உட்கார்ந்துகொண்டு படிப்பார்கள்.
கற்பிக்கும்போது அலுப்பு தரக்கூடாது என்று மக்கோர்ட் எப்போதும் புதிய
வழிகளை புகுத்தியபடியே இருப்பார். ஒரு நாள் மாணவர்களிடம் அவர்கள்
வீட்டு சமையல் குறிப்புகளை கொண்டுவரச் சொன்னார். சமையல்
குறிப்புக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்? இவர் சமையல்
குறிப்புகளில்
இருந்து புனைவு இலக்கியம் கற்றுக் கொடுத்தார்.
இன்னொரு நாள் தனக்கு வந்த மன்னிப்பு கடிதங்களை எல்லாம் சேகரித்தார்.
'பதினாறு சக்கர ட்ரக் வண்டி எங்கள் வீட்டுக் கூரையில் ஏறிவிட்டது.'
'மேல் வீட்டுக்காரரின் பைப் உடைந்து கீழ் வீடு நிரம்பிவிட்டது.'
'ஆங்கில நோட்டுப் புத்தகம் ரயில் வண்டியில் நூறு மைல் தூரம்
போய்விட்டது.' மன்னிப்புக் கடிதம் எழுதுவதில் மாணவர்களின்
கற்பனையை எட்டாத உயரத்துக்கு தூக்கிவிடுவார். சோதனைக்கு அவர் தரும்
தலைப்பு 'ஆதாம் மன்னிப்புக் கேட்டு கடவுளுக்கு எழுதிய கடிதம்.'
குழந்தைகள் பாடலையும் விட்டு வைக்கவில்லை. கவிதை ரசனை என்பதை
அங்கேயிருந்து ஆரம்பித்தார். Little Bo Peep தன்னுடைய ஆட்டைத்
தொலைத்துவிட்டாள். பரவாயில்லை, ஆடுகளை சும்மா விடுங்கள், அவை தானாகவே
வீட்டுக்கு வரும். அவருடைய மாணவர்களுக்கும் அது பொருந்தும்.
மாணவர்களை தொந்திரவு செய்யாதீர்கள். நெருக்காதீர்கள். போதிய அவகாசம்
கொடுத்தால், அவர்கள் தானாகவே சிந்தனையை வளர்த்துக்கொள்வார்கள்.
ஒரு நாள் ஒரு மாணவியின் தாயார் இவரைப் பார்க்க வருகிறார். 'என் மகள்
உங்கள் வகுப்பில் படிக்க ஆசைப்படுகிறாள். நான் விதவை. அவளுக்காக
என்னவும் செய்வேன். தயவு செய்து ஓர் இடம் கொடுங்கள். வேண்டுமானால்
ஓர் இரவு உங்களுடன் கழிக்க எனக்கு சம்மதம்.' இப்படி பல சம்பவங்களை
புத்தகம் முழுக்க சுவையுடன் சொல்லிக்கொண்டே போகிறார்.
ஒரு பள்ளிக்கூட ஆசிரியரின் முப்பது வருட வாழ்க்கையில் என்ன
சுவாரஸ்யம் இருக்க முடியும்? இருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால்
மக்கோர்ட்டால் சாதாரணமாக ஒரு வசனம் எழுதமுடியாது. தேய் வழக்குகள்,
தேய்ந்த வார்த்தைகள் வராது. என்ன சொன்னாலும் அதை புதுவிதமாக, மனதில்
தைக்கும்படி சொல்லிவிடுகிறார்.
இன்னொரு காரணம் அவர் பெயரிலேயே இருந்தது. Frank. எதையும்
வெளிப்படையாகவே சொல்கிறார். ஒளிவு மறைவே கிடையாது. சுயசரிதை
எழுத்துக்கு இது மிகவும் முக்கியம். அவருடைய உள்வாழ்க்கைக்கு எங்களை
அழைத்துச் செல்லும்போது ஆரம்பத்திலேயே ஒருவித அந்நியோன்யத்தன்மை
கிடைத்து, அவர் சொல்லும் அனைத்தையும் நம்புகிறோம்.
அவரிடம் காணப்படும் நகைச்சுவை; கூர்த்தமதி. உடனுக்குடன் அவர்
கொடுக்கும் பதிலடிகள் நூல் முழுக்க விரவியிருக்கும். எழுத்தில்
எளிமை. இவருடைய மாணவர் ஒருவர் பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம்
புகுத்தி கட்டுரை எழுதுவார். இவர் குறுக்காக வெட்டி 'எளிமை' என்று
எழுதுவார். மாணவருக்கு கோபம் வரும். எத்தனை அகராதிகள் பார்த்து,
எத்தனை பெரிய வார்த்தைகளை அவர் இணைத்திருக்கிறார். அகராதியில் ஒரு
பெரிய வார்த்தை இருந்தால் அதை எப்படியும் அந்த மாணவர் தூக்கி
வசனத்தில் போட்டுவிடுவார்.
'எளிமையாக எழுது. ஒரு பெரிய வார்த்தை இருந்தால் அது தன்பாட்டுக்கு
இருந்துவிட்டு போகட்டும். உன் எழுத்துக்கு பெரும் எதிரி
செயற்கைத்தன்மை' என்று அவரை வழிப்படுத்துவார்.
மக்கோர்ட் இயற்கையாகவே நல்ல கதை சொல்லி. எதைச் சொல்லவேண்டும், எந்த
ஒழுங்கில் சொல்லவேண்டும் என்பது அவருக்கு கைவந்தது. அவர் விவரிக்கும்
சம்பவங்கள் சிரிக்கவைக்கும் அதே சமயத்தில் ஏதோ ஒரு விதத்தில் உங்கள்
அடிமனதைப் போய் தொட்டுவிடும்.
மக்கோர்ட்டுக்கு இப்போது வயது 75. மூன்று புத்தகங்கள் எழுதிய
களைப்பில் ஓய்வாக இருக்கிறார். விரைவில் நாவல் ஒன்று எழுதப் போவதாக
அறிவித்திருக்கிறார். சமீபத்தில் நிருபர் ஒருவர் அவரைப் பேட்டி
கண்டபோது அவரிடம் வெளிப்பட்ட எள்ளலும், நகைச்சுவையும்
எப்பொழுதும்போல் இன்றைக்கும் கூராகவே இருக்கிறது.
'உங்களுக்கு, நீங்கள் எழுதிய Teacher Man புத்தகம்
பிடித்திருக்கிறதா?
'பிடிக்கவில்லை. சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் வெளியீட்டாளருக்கு
பிடித்திருக்கிறது. எடிட்டருக்கு பிடித்திருக்கிறது. வாசகருக்கும்
பிடித்திருக்கிறது.'
'உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்?
'சேக்ஸ்பியர், ஜேம்ஸ் ஜோய்ஸ், மார்க் ட்வெய்ன். ஆனால் நான் என்
படுக்கைக்கு பக்கத்தில் வைத்திருப்பது P.G.Wodehouse தான்.'
'உங்களுடைய Angela's Ashes புத்தகத்தை உயர்நிலைப்
பள்ளிக்கூடத்தில் பாடப் புத்தகமாக வைத்திருக்கிறார்கள், தெரியுமா?'
'நல்லது. தயவுசெய்து அவர்களிடம் சொல்லுங்கள் அதில் பரீட்சை
வைக்கவேண்டாம் என்று. அது ஒரு சித்திரவதை ஆயுதம் அல்ல;
மகிழ்ச்சியூட்டும்
புத்தகம்.'
'உங்கள் புத்தகத்தை மேலோட்டமாகப் படிக்கக்கூடாது. நீங்கள் என்ன
சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அடி ஆழத்தில் கண்டுபிடிக்கவேண்டும்.'
'அப்படியா! அதைக் கண்டுபிடித்ததும் எனக்கும் சொல்லுங்கள்?'
ஒரு
படைப்பு அதைப் படைத்தவரிலும் பார்க்க உயர்ந்ததாக இருக்கவேண்டும்
என்று சொல்வார்கள். எந்தவொரு படைப்பாளியைப் பார்க்கும்போதும் எனக்கு
அப்படியான உணர்வுதான் தோன்றும். அவருடைய படைப்பு அவரை மிஞ்சியதாகவே
இருக்கும். மிகச் சில படைப்பாளிகள் தங்கள் படைப்புகளிலும் பார்க்க
சிறந்த ஆளுமையுடன் காணப்படுவதும் உண்டு. ஆனால் •பிராங்க்
மக்கோர்ட்டைச் நான் சந்தித்த இரு தடவைகளும் அவர் இந்த விதிகளுக்குள்
அடங்கவில்லை. அபூர்வமான ஒருவராகவே காணப்பட்டார். அவருடைய பேச்சு,
அவர் எழுதிய புத்தகம் அளவுக்கு அதே சுவாரஸ்யத்துடன் இருந்தது.
கேள்விகளுக்கு பதில் அளித்தபோது சபை விழுந்து விழுந்து சிரித்தது.
பதில் நகைச்சுவையாக மட்டுமில்லை, அறிவை தூண்டிவிடுவதாகவும் இருந்தது.
அவரிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினேன். சேர்ந்து படம்
பிடித்துக் கொண்டேன். முற்றிலும் வேற்று ஆளாக இருந்தார். அவர்
புத்தகங்களில் காணப்பட்ட கனிவும், நேசமும் அவரிடம் இல்லை. முகத்தில்
வெறுப்பும், சலிப்பும் மட்டுமே எஞ்சி இருந்தன. நான் சந்தித்த மனிதர்,
அவருடைய புத்தகத்தை படிக்கும்போது என் மனதிலே நான் எழுப்பிய உருவம்
அல்ல.
பல சமயங்களில் எனக்குத் தோன்றும் ஒரு எழுத்தைப் படைத்தவரை
சந்திக்காமல் இருப்பதே உத்தமம் என்று. இனிமேல் மக்கோர்ட்டை எங்கே
கண்டாலும் அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் போவேன். இவர்
புத்தகத்தை எங்கே கண்டாலும் உடனேயே வாங்குவேன்.
amuttu@gmail.com