எண்ணாமல் துணிக
- அ.முத்துலிங்கம -
என்னுடைய
நண்பர் ஒருவர் சொல்வார். ஆயிரம் கால் அட்டை எந்தக் காலை முதலில் வைப்பது என்று
யோசிப்பதில்லை. யோசித்தால் அதனால் நகரவே முடியாது. இன்னொரு எழுத்தாள நண்பரோ
'எண்ணித் துணிக' என்பது எழுத்தாளருக்கு பொருந்தாது என்று சொல்கிறார். அது
தொழிலதிபர்களுக்கு சொல்லப்பட்டது. ஓர் உந்துதல் வரும்போது எழுத்தாளர்
எழுதிவிடவேண்டும். எண்ணித் திட்டமிட்டு எழுதுவது சிருட்டியாகாது என்பது அவர்
கருத்து.
என்னுடைய வாழ்க்கையில் பல காரியங்களை நான் திட்டமிடாமல்தான் செய்கிறேன். கடந்த இரு
வருடங்களாக ஏ.கே. ராமானுஜனின் Poems of Love and War நூலை வாங்கி நண்பர்களுக்கு
இலவசமாக அனுப்பி வருகிறேன். இவர்களில் பலர் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்கள். தமிழ்
மொழியைப் பற்றி அவர்கள் கேட்கும்போது அதற்கு தகுந்த விளக்கம் கொடுக்க என்னால்
முடியவில்லை. அதன் தொன்மை பற்றியோ, செவ்விலக்கியங்கள் பற்றியோ நீண்ட
உரையாற்றுவதற்கும் எனக்கு தகுதி காணாது. என்னால் இயன்றது ஒரு மாதிரி நூலை
அனுப்பிவைப்பதுதான். படித்து அவர்களே தெளிந்துகொள்வார்கள்.
ஏ.கே ராமானுஜன் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை என்று பாடல்களை தெரிவுசெய்து
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அந்தப் புத்தகம் 1985 ல் வெளியானது. தமிழ்
மொழியின் சிறப்பை சுருக்கமாக இந்த நூல் சொல்கிறது என்று எனக்கு படுகிறது. மூல நூலை
பக்கத்தில் வைத்துக்கொண்டு அவருடைய மொழிபெயர்ப்பை படித்து அனுபவித்திருக்கிறேன்.
இரண்டிலும் எனக்கு கிடைக்கும் இன்பம் சரிசமமாக இருக்கிறது.
சில எழுத்தாள நண்பர்கள் புத்தகத்திற்கு நன்றி சொல்வார்கள். சிலர் தங்கள் கையிலே
தூக்கிவைத்து கீழே இறக்காமல் படித்து முடித்ததாக எழுதுவார்கள். சிலர் இவ்வளவு
செழிப்பான இலக்கியம் தமிழில் இருக்கிறதா என்று வியந்துபோவார்கள். சிலர் பதிலே
போடுவதில்லை.
பேராசிரியர் George L Hart ம் அப்படியே. சுவை கெடாமல் எங்கள் பழைய இலக்கியங்களை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
அவருடைய புறநானூறு மொழிபெயர்ப்பில் மூல நூலில் கிடைக்காத சில சுவையான தகவல்களை
தருகிறார். David Dean Shulman என்ற பேராசிரியர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய
பதிகங்களை Songs of the Harsh Devotee என்ற தலைப்பில் மொழிபெயர்த்து நூலாக
வெளியிட்டிருக்கிறார். 633 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1990ல் வெளியானது. நான் அதை
படிக்கவில்லை, ஆனால் படித்தவர்கள் சிறந்த மொழிபெயர்ப்பு என்று கூறுகிறார்கள்.
ஆனால் இவையெல்லாம் பரவலாக அறியப்படவில்லை. பெரிதாக விற்பனையும் இல்லை. புத்தகம்
முடிந்தால் இரண்டாம் பதிப்பு
கொண்டுவரும் நோக்கமும் கிடையாது. தமிழில் இருந்து வரும் ஆங்கில மொழிபெயர்ப்புகள்
என்றால் அப்படித்தான். மொழிபெயர்ப்பு நூல்களுக்கும், பெயர்ப்பாளர்களுக்கும் உரிய
மரியாதை கிடைப்பதில்லை. நூல்கள் வெளிவந்தமாதிரியே மறைந்தும் விடுகின்றன.
Naguib Mahfouz என்ற எகிப்திய எழுத்தாளர் பற்றி பலரும் அறிவார்கள். அரபு
இலக்கியத்தின் முன்னோடி. சல்மான் ருஷ்டியின் எழுத்து சுதந்திரத்துக்காக குரல்
கொடுத்தவர். அவருடைய மூன்று தொடர் நூல்கள் மிகவும் பிரபலமானவை. 1988 ல் இவருக்கு
இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் அது கிடைப்பதற்கு மூன்று
வருடங்களுக்கு முன்னரேயே American University Cairo Press அவருடன் ஓர் ஒப்பந்தம்
செய்துகொண்டது. அவருடைய எல்லா நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் உரிமை.
அதன் பிரகாரம் அவருடைய
நூல்களை அவர்கள் மொழிபெயர்த்தார்கள். இதில் அனுகூலம் என்னவென்றால் அது உடனுக்குடன்
மற்ற மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பட்டுவிடும். இன்று அவருடைய படைப்புகள் 40 மொழிகளில், 500 பதிப்புகள்
கண்டுவிட்டன. அவருக்கு நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: 'என்னுடைய நாவல்கள் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்ட காரணத்தினாலேயே அவை மற்றைய மொழிகளிலும் ஆக்கம் பெறும் வாய்ப்பை
பெற்றன. இன்று எனக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கு மேலான காரணம் இதுவென்றே
நினைக்கிறேன்.'
அரபு இலக்கியம் வரைக்கும் போகத் தேவையில்லை. பக்கத்து நாடான வங்காள தேசத்தில் என்ன
நடக்கிறது என்று பார்க்கலாம். இன்று தஸ்லிமா நஸ்ரின் உலக இலக்கியத்தில் ஓர் ஆளுமை.
அவருடைய முதல் நாவலான 'லஜ்ஜா' வங்காள மொழியில் 1993ம் ஆண்டு வெளியானது. 76 பக்க
நாவலை அவர் ஏழு நாளில் எழுதி முடித்ததாகக் கூறியிருக்கிறார். வெளியான சில
மாதங்களிலேயே அது 60,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டது. அதன் பின்னர்
அரசாங்கம் அந்த புத்தகத்தை தடைசெய்தது. அதே நாவலை விரித்து 216 பக்க நாவலாக எழுதி
அது ஆங்கிலத்திலும் வெளியானது. அதுவே எனக்கு படிக்கக் கிடைத்தது. ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்ட காரணத்தால் அது இன்னும் பல மொழிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு
லட்சக்கணக்கான பிரதிகள் விற்றன.
நாவல் என்றால் மிகச் சாதாரணமானதுதான். சில இடங்களில் விவரணக் கட்டுரைபோலவே
காணப்படும். 1992 டிசெம்பரில் பாபர் மசூதி அழிக்கப்பட்டதை தொடர்ந்து வங்காள
தேசத்தில் பலமான ஆர்ப்பாட்டம் கிளம்பியது, இனப் படுகொலைகளும் நடந்தன. ஓர் இந்துக்
குடும்பம் தாக்கப்பட்டதையும், அதன் அவலத்தையும் சொல்லும் கதை. சுடுநீர் கலந்து
சாம்பாரை பெருக்கியதுபோல, நீட்டிக்கப்பட்ட நாவல் சுவை குறைந்தே காணப்பட்டாலும் அது
சொன்ன விசயம் அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு பெண் துணிச்சலாக, விளைவுகளைப் பற்றி
யோசியாமல், எழுதியது இன்னொரு காரணம். அதன் வெற்றியைத் தொடர்ந்து இன்னும் பல நூல்கள்
எழுதினார். அதிலே பிரபலமானது 'மேய்பெலா' என்பது, ஆங்கிலத்தில் Girlhood என்று
மொழிபெயர்க்கப்பட்ட சுயசரிதை நூல். அவருடைய 14 வயதுவரைக்கும் நடந்த சம்பவங்களை
ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக விவரித்த நூல். வங்காள தேசத்தில் அவர் அனுபவித்த
பெண்ணடிமைத்தனத்தை கடுமையான வார்த்தைகளில் சாடுகிறார். இன்று அவருடைய நூல்கள் 22
உலக மொழிகளில் மொழிபெயர்க்கபட்டிருக்கின்றன. அடுத்த நூல் தலைப்பை அவர் அறிவித்தால்
அதை வெளியிட பல பதிப்பகங்கள் காத்திருக்கின்றன. இத்தனைக்கும் அவர் எழுதுவது வங்காள
மொழியில்தான்.
இதிலே ஆச்சரியம் என்னவென்றால் அறுபது லட்சம் மக்கள் மட்டுமே பேசும் ·பின்னிஷ்
மொழியிலும் அவருடைய நாவலை
மொழிபெயர்த்திருக்கிறார்கள். சரி, அதுதான் போகட்டும். ஐஸ்லாண்டிக் மொழியிலும்
வந்திருக்கிறது. இந்த மொழி பேசுபவர்கள் உலகத்தில் 3 லட்சம் பேர்தான். அங்கேகூட
இந்தப் புத்தகம் விற்பனையாகிறது. எட்டுக் கோடி தமிழ் பேசும் மக்கள் உலகத்தில்
வாழ்ந்தாலும் 1000 பிரதிகள் விற்பது சாதனை என்று நாம் கருதும்போது இது எப்படி
சாத்தியமானது என்பது சிந்திக்க வேண்டியது.
துருக்கி நாட்டவரான ஒர்ஹான் பாமுக் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர். இவருக்கு
இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2006 ல் கிடைத்தது. ஒரு துருக்கியருக்கு கிடைத்த
முதல் நோபல் பரிசு. ஆதியிலிருந்து அரபு எழுத்துருவையே துருக்கியில் பயன்படுத்தி
வந்தார்கள். ஆனால் 1928 ல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்து ரோமன்
எழுத்துருவுக்கு அவர்கள் மாறினார்கள். அவர்கள் மொழியிலிருந்த அரபு, பாரசீக
வார்த்தைகளும் அகற்றப்பட்டன. பழைய நூல்கள் புதிய எழுத்துருவில் மாற்றப்பட்டபோது
தொன்மையான இலக்கியங்கள் பல
அழிந்துவிட்டன. இந்த நிலையில் 1952 ல் பிறந்த பாமுக், துருக்கி இலக்கியங்களை புது
எழுத்துருவிலேயே பள்ளிக்கூடத்தில் படித்து
வளர்ந்தார். ஆனால் ஓர் அதிர்ஷ்டமும் அவருடன் படித்தது அவருக்கு தெரியாது.
இவருடைய இன்றைய புகழுக்கு காரணம் ஒரு பெண்தான். அவருடைய பெயர் Maureen Freely. அவர்
பாமுக்குடன் அதே பள்ளியில் படித்த ஓர் அமெரிக்கப் பெண். பின்னாளில் பிரபலமான
பத்திரிகையாளராக/நாவலாசிரியையாக இங்கிலாந்தில் பணியாற்றினார். துருக்கிக்கு வெளியே
பாமுக்கை ஒருவருக்கும் தெரியாது. பாமுக்கின் இலக்கியங்களுக்கு மோரீன் ஆங்கில வடிவம்
கொடுத்தார். உடனேயே மற்ற மொழிகளிலும் அவரை மொழிபெயர்த்தார்கள். அவருக்கு நோபல்
பரிசு கிடைத்தபோது முதன்முதலாக தொலைபேசியில் அழைத்து தன் நன்றியை தெரிவித்தது
மோரீனுக்குத்தான். ஒரு மோரீன் இருந்திருக்காவிட்டால் இன்று பாமுக் என்று ஒருவர்
இருப்பது
உலகத்துக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
பாமுக்கின் இரண்டு நூல்களை நான் படித்திருக்கிறேன். அவரைப்போல எழுதும் தமிழ்
எழுத்தாளர்கள் நிறைய இருக்கிறார்கள். அவரை விஞ்சியவர்களும் உண்டு. ஆனாலும்
பாமுக்கின் இலக்கியம் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சமகால தமிழ்
இலக்கியங்கள் அயல் மொழிகளில்கூட பெரிதாக மொழிபெயர்க்கப்படுவதில்லை. இந்த நிலையில்
தமிழ் இலக்கியத்தைப் பற்றி அந்நிய நாடுகள்
அறிவதற்கு எங்கே வாய்ப்பிருக்கிறது?
ஏழு கோடி மக்கள் பேசும் துருக்கி மொழி 1200 வருடங்கள் பழமையானது. தமிழ் மொழியோ 2000
வருடங்களுக்கு மேலான தொன்மை வாய்ந்தது. 80 கோடி மக்கள் இன்று உலகத்தில் தமிழ்
மொழியை பேசுகிறார்கள். ஆனால் இன்றுவரை சமகால இலக்கியப் படைப்பு ஒன்று ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு, அதற்குரிய மரியாதையையோ உலகளாவிய வாசகர்களையோ பெறவில்லை.
இதுதான் எங்களுடைய பெரிய சோகம்.
ஏனைய மொழிகளில் முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது வெளிவரும்
இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆங்கிலத்தில்
இருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு தானாகவே நடக்கும். நாங்கள் தமிழில் படித்த
ரஸ்ய இலக்கியங்கள் எல்லாம் ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. ரஸ்ய
இலக்கியங்களை
வேகத்தோடும், ஈடுபாட்டுடனும் மொழிபெயர்த்தவர் ஒரு பெண்மணி. பெயர் Constance
Garnett. எழுபதுக்கு மேற்பட்ட ரஸ்ய நூல்களை இவர் தன் வாழ்நாளில் மொழிபெயர்த்து
தள்ளினார். ரோல்ஸ்ரோய், டோஸ்ரோவ்ஸ்கி, செக்கோவ், துர்கனேவ் என்று எவரையும் விட்டு
வைக்கவில்லை. தட்டச்சு மெசின் முன்னே உட்கார்ந்தால் அவர் சகலதையும் மறந்துவிடுவார்.
ஒரு தாள் முடிந்ததும் அதை உருவிக் கீழே போட்டுவிட்டு அடுத்த தாளை சொருகும்போதுகூட
நிமிர்ந்து பார்க்கமாட்டார். ஆச்சரிப் படவைக்கும் வேகத்தில் மொழிபெயர்ப்பார்.
அடித்து முடிந்த தாள்கள் முழங்கால் வரைக்கும் உயர்ந்திருக்கும் என்று அவரைப்
பார்க்கச் சென்ற டி.எச். லோரன்ஸ் அதை வர்ணிப்பார்.
ரஸ்ய இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய அரிய சேவையை யாரும் என்றைக்கும் மறக்க முடியாது.
குந்தர் கிராஸ் என்ற ஜேர்மனிய எழுத்தாளர் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். இவர்
புத்தகம் எழுதி அது வெளிவந்ததும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுவிடும். உடனேயே
இன்னும் பல மொழிகளில் மொழிபெயர்க்கத் தொடங்கிவிடுவார்கள். குந்தர் கிராஸ் எல்லா
மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்து ஒரு கூட்டத்தை நடத்துவார். அவருடைய புத்தகம் அங்கே
விவாதிக்கப்படும். பல மொழி விற்பன்னர்களும் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி
செய்துகொள்வார்கள். நாவலைப் பற்றியும், பாத்திரங்களின் தன்மை பற்றியும் ஆசிரியர்
விளக்கமளிப்பார். அதன் பிறகுதான் மொழிபெயர்ப்பு தொடங்கும். இதை ஏன் செய்கிறார்
என்றால் அவரால் ஒவ்வொரு
மொழிபெயர்ப்பாளரையும் தனித் தனியாக சந்திக்க முடியாது. நேரமும் விரயமாகும்.
மொழிபெயர்ப்பில் நேரும் வழக்கமான தவறுகளை தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு என்று
கூறுகிறார்.
இவ்வளவு முன்னெச்சரிக்கையுடனும், ஒழுங்குடனும் யாராவது நவீன படைப்புகளை
தமிழிலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்களா?
அபூர்வமாகக் கிடைக்கும் மொழிபெயர்ப்புகள்கூட ஆங்கில மொழி மரபுத்தொடரில்
பரிச்சயமில்லாதவர்களால் செய்யப்படுகின்றன. ஆகவே அவை எதிர்பார்த்த இலக்கிய உயரத்தை
எட்டுவதில்லை. பயிற்சி இல்லாதவர்களால் வார்த்தைக்கு வார்த்தை செய்யப்படும்
மொழிபெயர்ப்புகள் அப்படித்தான் இருக்கும். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு
கடக்கும்போது மூல மொழியில் பொதிந்துள்ள நுட்பம் இடையே எங்கேயோ தவறி
விழுந்துவிடுகிறது.
இந்தப் பிரச்சினையை யோசித்தோ என்னவோ தாகூர் தன்னுடைய கவிதைகளை தானே ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தார். கீதாஞ்சலியை அவர் வங்காள மொழியிலேயே படைத்திருந்தார். அதில் ஒரு
சிறிய பகுதியையும் வேறு சில கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
அதற்கு முன்னுரை எழுதியது W.B.Yeats என்ற புகழ் பெற்ற ஆங்கிலக் கவி. கவிதை
மொழிபெயர்ப்பை பார்த்த யீட்ஸ் பிரமித்துவிட்டார். அவர் இப்படி எழுதினார்: 'இந்தக்
கவிதைகள் என் ரத்தத்தை கலக்குகின்றன.' அந்த வருடம் தாகூருக்கு
நோபல் பரிசு கிடைத்தது. ஓர் இந்தியருக்கு கிடைத்த முதல் நோபல் பரிசு.
பாரதியாரின் கவிதைகள் தாகூரின் கவிதைகளிலும் பார்க்க தரத்தில் குறைந்தனவா? அவற்றை
மொழிபெயர்த்து யீட்ஸிடம்
கொடுத்திருந்தால் 'ரத்தம் உறைந்துவிட்டது' என்றுகூட சொல்லியிருப்பார். ஆனால் அதை
மொழிபெயர்க்க வேண்டும், உலகம் அதை படிக்கவேண்டும், தமிழின் புகழ் பரவவேண்டும் என்ற
எண்ணம் யாருக்கும் தோன்றவில்லை.
உமார் கயாம் ஒரு 11ம் நூற்றாண்டு பாரசீகக் கவி. அவருடைய கவிதைகள் எண்ணூறு
வருடங்களாக உலகம் அறியாமல் தூங்கின. 1857ல் கோவல் என்பவர் பாரசீக மொழியில்
எழுதப்பட்டிருந்த உமார் கயாமின் கவிதைகளை கல்கத்தா நூலகம் ஒன்றில் கண்டுபிடித்து
அப்போது புகழ் பெற்ற ஆங்கிலக் கவியான Edward FitzGerald க்கு அனுப்பிவைத்தார். அவர்
அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். திடீரென்று உமார் கயாமுக்கும், அதை
மொழிபெயர்த்த எட்வர்டுக்கும் உலகப் புகழ் கிட்டியது. கோவல் என்பவர் உமார் கயாமின்
கவிதைகளை கல்கத்தா நூலகத்தில் கண்டுபிடித்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்?
மேலும் ஒரு 800 ஆண்டுகள் அந்தக்
கவிதைகள் யாருமறியாமல் தூங்கியிருக்கக்கூடும்.
தமிழின் இன்றைய அவசர தேவை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள். உலக இலக்கிய தரத்தில் மேலான
படைப்புகள் தமிழில் இருக்கின்றன. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ப.சிங்காரம்,
அசோகமித்திரன், ஜெயமோகன், பிரமிள், மு.தளையசிங்கம், அம்பை, சல்மா என நிறைய
எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொல்லலாம். ஆனால் அவை வெளியுலகத்துக்கு தெரிய
வருவதில்லை. காரணம் அவற்றை மொழிபெயர்க்க ஆங்கில இலக்கியத்தில் தேர்ந்தவர்கள்
முன்வராததுதான். மொழிபெயர்ப்பாளர்களுக்கு அரசு ஆதரவு தேவை. உலகளாவி
இருக்கும் தமிழ் மன்றங்கள், இலக்கிய அமைப்புகள் அவர்களை ஊக்குவிப்பதற்கு நிதியுதவி
வழங்குவது பற்றி யோசிக்கலாம். பரிசுகள் அறிவிக்கலாம். ஒரு மாநிலம் அளவுக்கு
சனத்தொகை இல்லாத நாடுகள் கூட தங்கள் தங்கள் மொழி இலக்கியங்களை முதல் வேலையாக
ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்துவிடுகின்றன. இவ்வளவு பெரிய சனத்தொகை கொண்ட
தமிழ் சமூகம் ஏனோ இந்த விசயத்தில் அசட்டையாகவே இருக்கிறது.
மொழிபெயர்ப்பு என்று வரும்போது, எட்வர்ட் ·பிட்ஸ்ஜெரால்ட் போல ஏற்கனவே ஆங்கில
எழுத்துலகில் பிரபலமான ஒருத்தர்
மொழிபெயர்த்தால் நல்லாக இருக்கும். தமிழ் அறிந்தவராக, ஆங்கிலத்தில் சிந்தித்து
எழுதுபவராக, மரபுத்தொடர் கைவந்தவராக இருப்பது அவசியம். இது தவிர, மொழிபெயர்ப்பு
நூல்கள் பிரபலமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டால்தான் அவை போக வேண்டிய இடத்துக்கு
போய்ச் சேரும்.
ஆங்கிலத்தில் நவீன தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து
அனுபவம் பெற்ற ஒருவரிடம் மொழிபெயர்ப்புகள் வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என
கேட்டேன். அவர் சொன்னார். 'தமிழ் வார்த்தை அடுக்கு ஆங்கில வார்த்தை அடுக்குக்கு
எதிரானது. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதை தவிர்த்து அர்த்தத்துக்கு
முக்கியத்துவம் தரவேண்டும். ஆங்கில மரபுத்தொடரில் நல்ல பரிச்சயம் தேவை. எங்கள்
மொழிபெயர்ப்புகள் அங்கேதான் சறுக்குகின்றன.' நீங்கள் எந்த மொழியில் சிந்திப்பீர்கள்
என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டு,
'நான் ஆங்கிலத்தில் சிந்திப்பேன்; தமிழில் கனவுகள் காண்பேன்,' என்றார்.
இன்னொரு பேராசிரியர், 'ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது பரிச்சயமானதாகவும் அதே சமயம்
அந்நியமானதாகவும் இருக்கவேண்டும். உண்மையான மொழிபெயர்ப்பு என்பது கருத்தை மட்டும்
கடத்துவது அல்ல, ஒரு மொழியின் அழகையும் கடத்துவதுதான். மொழிபெயர்ப்பில், இலக்கு
மொழி உயிர்துடிப்புடன் வரவேண்டும் என்றால் மொழிபெயர்ப்பாளரிடம் ஆழ்ந்த ஆங்கிலப்
புலமையும், கற்பனையும் இருந்தாலே சாத்தியமாகும்' என்றார்.
சேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக உலகத்தில் கவிதைக்காக மதிக்கப்படுபவர் கலீல்
ஜிப்ரான். தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் பொஸ்டனுக்கு புலம்பெயர்ந்தவர், இளம்
வயதிலேயே அரபு மொழியில் கவிதைகள் படைக்க ஆரம்பித்தார். ஒன்பது கவிதை நூல்கள் அரபு
மொழியில் எழுதினார். அவருக்கு ஆங்கிலம் படிப்பித்த Mary Haskell என்ற பெண்மணிக்கு
அவரிலும் பார்க்க பத்து வயது அதிகம். அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. கலீல்
ஆங்கிலத்தில் கவிதை எழுத ஆரம்பித்தார். மேரி அவருடைய ஆங்கிலக் கவிதைகளை திருத்தி
பதிப்பிக்க உதவி புரிந்தார். தொடர்ந்து எட்டு கவிதை நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட
அவருடைய புகழ் உலகம் முழுக்க பரவியது.
இன்று எங்களுக்குத் தேவை ஒரு மேரி ஹஸ்கெல், மோரீன் ·பிரீலி, எட்வர்ட்
·பிட்ஸ்ஜெரால்ட், ஒரு கொன்ஸ்ரன்ஸ் கார்னெட். சமகால இலக்கிய மொழிபெயர்ப்பில்
பரிச்சயமும் அனுபவமும் பெற்ற லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், ஆனந்த சுந்தரேசன், செல்வா
கனகநாயகம், அனுசியா சிவநாராயணன் போன்றவர்கள் முழுநேர மொழிபெயர்ப்பாளர்களாக செயல்பட
முன்வரவேண்டும். இவர்களுடன் இன்னும் புதியவர்களும் சேர்ந்து தரமான தமிழ் நூல்களை
ஆங்கிலத்தில் அறிமுகம் செய்யலாம். இது தமிழுக்கு அவர்கள் செய்யும் சேவை. கடமையும்
கூட.
இலக்கியப் பேராசிரியர் அய்ஜஸ் அஹமட், 'உலக மொழிகளில் இன்று ஆங்கிலத்திலேயே அதிகமான
பிறமொழி இலக்கியங்கள்
தொகுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இந்திய இலக்கியம் பற்றிய அறிவு
ஆங்கிலத்தில் இருந்தே கிடைக்கும்' என்று கூறுகிறார். மொழிபெயர்ப்பின்
முக்கியத்துவத்தை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது.
சென்றுடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்று பாரதியார் சொன்னார். அவர்கூட எங்கள் செல்வங்களை வேறு நாடுகளுக்கு எடுத்துப்
போங்கள் என்று சொல்லவில்லை. அவர் சொல்ல மறந்ததை நாங்கள் செய்யலாம். மூன்று லட்சம்
மக்கள் தொகைகொண்ட ஐஸ்லாண்ட் நாட்டில்கூட உடனுக்குடன் மொழிபெயர்ப்பு
செய்துவிடுகிறார்கள். இன்று கனடாவில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான
தமிழர்கள் வாழ்கிறார்கள். உலகம் முழுக்க எட்டுக்கோடி தமிழ் பேசும் மக்கள். ஆனால்
மொழிபெயர்ப்பில் நாங்கள் பின் தங்கிவிட்டோம்.
பிற மொழி இலக்கியங்களைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. போர்த்துக்கீய
மொழியில் எழுதும் Paul Coelho இன்று உலகப் பிரபலம் பெற்றுவிட்டார். மொழிபெயர்ப்பின்
மகத்துவத்தை அவர் உணர்ந்தவர். அவருடைய நூல்கள் பத்து கோடி பிரதிகள், 66
மொழிகளில் 150 நாடுகளில் விற்றிருக்கின்றன. திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு
விற்பனை எண்ணிக்கை இன்றுவரை பத்தாயிரம்
பிரதிகளை தாண்டியிருக்குமா என்பது தெரியவில்லை.
நாங்கள் மொழிபெயர்ப்புகளுக்கு முயற்சிகூட செய்யாமல் 'ஒன்றும் விற்காது' என்று
கைவிட்டு விடுகிறோம். இடைவிடாது
திட்டமிடுகிறோம். லாப நட்டக் கணக்கு பார்க்கிறோம். நின்ற இடத்திலேயே நிற்கிறோம்.
அதிகம் எண்ணாமல் ஒரு காலை எடுத்து முன்னுக்கு வைக்கும் துணிவு பெறவேண்டும்.
Appadurai Muttulingam
amuttu@rogers.com |