இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

பயணம்!

கிழக்கும் மேற்கும் - 1

ஆசி கந்தராஜா

ஆசி கந்தராஜாElection Poster for the Socialist Unity Party of Germany (SED) (1948)நண்பன் ஒருவன் தன்னை ‘கம்யூனிஸ்ற்’ எனச் சொல்லித் திரிந்தான். அது அவன் வாலிப முறுக்கோடு திரிந்த காலம். பின்பு குடும்பம், பிள்ளைகள், பணம் என்று வசதிகள் வந்தபின், ஒப்புக்கு வெளியே பொதுவுடமை வாதம் பேசித் திரிந்தாலும், வீட்டில் அவன் சைவப்பழம். கம்யூனிச கொள்கைகளின் கேள்வி ஞானத்தில், பொதுவுடமை சித்தாந்தம் பற்றி முழுதாக ஒரு புத்தகத்தை தானும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்துகொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதைக் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவிதத்தன’த்தை அடையாளப்படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என நான் நினைப்பதும் உண்டு.

சோசலிஷ நாடொன்றில் நான் கல்வி கற்ற காலங்களில், மாற்றுக் கருத்துடன் அங்கே வாழ்ந்த கிழக்கு ஜேர்மன் பேரா சிரியர் அடிக்கடி
சொல்லும் வாக்கியம் ஒன்று, அந்த நண்பனைக் காணும் நேரங்களில் ஞாபகத்துக்கு வரும்.

‘சோசலிஷம், கம்யூனிசம் பேசும் பலருக்கு பணத்தையும் பதவியையும் கொடுத்துப்பாருங்கள், மறுகணமே அவர்கள் முதலாளித்துவம் பேசத்துவங்கி விடுவார்கள்.’ பொதுவுடமை ஒரு சிந்தனாவாதம் மட்டும்தான்; நடைமுறைக்கு உதவாது என்பது பேராசிரியரின் நம்பிக்கை. ‘ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது’ என்கிற நம்மவர் பழமொழியை அவர் அநுசரித்துப் பேசுவார்.

சோசலிஷம் பேசிய நாடுகள் பல இன்று சின்ன பின்னப் பட்டுப் போனதுக்கும், முதலாளித்துவ முறைகளைப் பின்பற்றி இப்போது அவை வீறுநடை போடுவதற்கும் காரணம் என்ன? நடைமுறையில் அவை தோற்றுப்போனதற்கு பேராசிரியர் சொன்னது மட்டுமே
காரணமாகுமா? சித்தாந்தங்களிலும் பார்க்கச் சிக்கலானவை நடைமுறைகள் என்பதை நான் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் அநுபவ வாயிலாக அறிந்து கொண்டேன்

எனது இளமைப்பருவத்தில் ஏழு வருடங்கள் சோசலிஷ நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட கிழக்கு ஜேர்மனியிலும், பின்பு
ஆறுவருடங்கள் ஜனநாயக நாடாக உரிமை பாராட்டிக் கொண்டு, முதலாளித்துவ பொருளா தாரத்தைப் பயின்ற மேற்கு ஜேர்மனியிலும் படித்திருக்கிறேன்; அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் ஜேர்மனி பிளவு பட்டதால் தோன்றிய இரு நாடுகளும், ஒன்றுக் கொன்று பரமவிரோதம் பாராட்டிய காலம் அது!

மார்ச் மாதம் 15ம் திகதி 1939ம் ஆண்டு. செக்கோ சிலவாக்கியா மீதும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாந் திகதி போலந்து மீதும்
அடொல்வ் ஹிட்லர் படை யெடுத்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலக யுத்தம் துவங்கியது. ஆறு வருடங்கள் நடந்த கொடூர யுத்தம் அது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரூஷ்யா ஆகிய நான்கு நேச நாடுகள், ஜேர்மனி மீது நடாத்திய படையெடுப்பால் 1945ம் ஆண்டு
யுத்தம் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது. ஹிட்லரின் படை தோல்வியைத் தழுவ, நான்கு நாடுகளும் பொட்ஸ்டம் என்ற இடத்தில் கூடி, உடன்படிக்கையொன்றின் மூலம் ஜேர்மனியை நான்காக பங்கு போட்டுக் கொண்டன.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பினை முன் னெடுத்து வாழும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளால் கம்யூனிச
சித்தாந்தங்களில் ஊறிய ரூஷியாவுடன் ஒத்துப்போக முடியவில்லை. இதனால் தமது பகுதிகளை ஒன்று சேர்த்து மே மாதம் 1949ம்
ஆண்டு ஜேர்மன் ‘சமஷ்டிக் குடியரசு’ என்ற பெயரில் மேற்கு ஜேர்மனி என்னும் நாட்டை உருவாக்கினார்கள். நம்மூர் பாஷையில்
செல்வதானால் மேற்கு ஜேர்மனி, மூன்று பங்காளிகளுக்குச் சொந்தமான சொரியல் காணியாக இருந்தது. இருப்பினும், அமெரிக்க -
பிரித்தானிய - பிரான்ஸ் அரசுகள் தங்கள் எல்லைகளை தெளிவாகவும் கச்சிதமாகவும் வரைந்து உறுதி எழுதிக் கொண்டார்கள். ஏட்டிக்குபோட்டியாக சோவித் ரூஷ்யாவும் அதே ஆண்டு ஏழாம் திகதி ஒக்டோபர் மாதம் தனது கால் பங்கு பிரதேசத்தை ‘ஜேர்மன் ஜனநாயகக் குடியர’சாக பிரகடனப்படுத்திக் கொண்டது. இதுதான் கிழக்கு ஜேர்மனி என மேற்குலகால் அழைக்கப்பட்ட பிரதேசமாகும். ஜேர்மனியின் தலைநகரம் பேர்ளின். அதுவே அடொல்வ் ஹிட்லரின் காலத்தில் மட்டுமல்ல, பன்னெடுங்காலமாக ஜேர்மன் நாட்டின் தலைநகராக பெருமை பெற்றிருந்தது.

ஜேர்மனியை தமக்குள் பங்கு போடும்போது, பேர்ளின் நகரம் ரூஷ்ய ஆதிக்கத்துக்கு விடப்பட்ட கிழக்குப் பகுதிக்குள் வந்துவிட்டது.
பழைமை வாய்ந்த அந்த பேர்ளின் நகரை சோவியத் ஆதிக்கத்துக்கு விட்டுவிட பங்காளிகள் விரும்பவில்லை. தலைநகராக இருந்த
பேர்ளின் நகரமும் நான்காகப் பிரிக்க வேண்டுமென பங்காளிகள் மூவரும் வாதாடிப் பெற்றுக் கொண்டார்கள். பேர்ளின் நகரின் முக்கால்
பங்கு மேற்கு பேர்ளினாக பிரகடனப்படுத்தப்பட, சோவியத் ரூஷ்யாவின் கால்பங்கு கிழக்கு பேர்ளினாகி ‘பேர்ளின்’ என்ற பெயரில் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (கிழக்கு ஜேர்மனி) தலைநகராகியது. கிழக்கு பேர்ளின் என்றில்லாமல் ‘பேர்ளின்’ என்ற பெயரில், அது கிழக்கு ஜேர்மனியின் தலைநகராகத் தொடருதல் சோவியத் ரூஷ்யாவின் பெருமைக்கு உகந்தது என சோவியத் ஆட்சியாளர் கருதினார்கள். கிழக்கு ஜேர்மனியில் சோவியத் ரூஷ்யாவின் நண்பனாய் ஆட்சியில் அமர்ந்த சோசலிஷ ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கும் முதல்படியாக ‘மேற்கு பேர்ளின்’ நகரத்தில் ஆடம்பர கார்களும், கவர்ச்சிகரமான நுகர் பொருள்களும் குவிக்கப்பட்டன.

சோசலிஷ ஆட்சியில் ஆடம்பரத்துக்கு இடமில்லை. ஒவ்வொருவரின் தேவைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற ஊதியம் என்பதும், எல்லாமே
எல்லோருக்கும் சொந்தமானது என்பதும் சோசலிஷம் பற்றிய பாமரத் தனமான விளக்கம். ‘சோறும் சேலையும் குறையாமல் இருந்தால்
ஒரு மனிதனுக்கு வேறு என்ன வேணும்...?’ என்று நம்மூர் தம்பித்துரை அண்ணர் சோசலிஷத்தை இலகுவாக விளக்குவார். ஆனால் மனித மனம் இயல்பாக ஆடம்பரப் பொருள்களுக்கு அங்கலாய்க்கும் என சரியாகவே மேற்குலக முதலாளிகள் புரிந்து வைத்திருந்தார்கள். வசதியான வாழ்வு தேடிய மக்கள் கிழக்கு ஜேர்மனியில் இருந்து மேற்கு பேர்ளின் நகரத்துக்கு தப்பியோடத் துவங்கினார்கள்.

‘இது நம் ஆட்சிக்கு சரிப்பட்டுவராது’ என்று எண்ணிய ரூஷ்ய சார்பு கிழக்கு ஜேர்மன் அரசு, 13ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1961ம் ஆண்டு
இரவோடிரவாக மேற்கு பேர்ளின் நகரத்தைச் சுற்றி உயர்ந்த மதில் சுவரை எழுப்பியது. அத்துடன் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளின்
எல்லைகளுக்கும் கடுங்காவல் போட்டது. கட்டுக் காவலையும் மீறி பாய்ந்தோடிய கிழக்கு ஜேர்மன் மக்களை குருவி சுடுவது போல
கிழக்கு ஜேர்மனியின் காவல் படைகள் சுட்டு வீழ்த்துவதாய் பங்காளிகள் மூவரும் பிரசாரம் செய்தார்கள். இது கிழக்கு ஜேர்மனியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த உதவியது.

இலங்கையில் 1983ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்பின், தமிழர்கள் பெருமளவில் மேற்கு ஐரோப்பாவை நோக்கி வரத் துவங்கினார்கள்.
இதற்கு வசதியாக அமைந்தது உலக அகதிகள் இறங்குதுறையாக அக்காலத்தில் செயற்பட்ட கிழக்கு பேர்ளின் நகரம். கிழக்கு ஜேர்மனியின் பொருளாதாரத்திலும், மக்களின் ஆடம்பர மோகத்திலும் மேற்கு ஜேர்மனி புகுந்து விளையாடி நெருக்கடி கொடுக்க, வந்திறங்கும் உலக அகதிகள் மூலம் மேற்கு ஜேர்மனிக்கு தொல்லை கொடுத்து, கணக்கை சரிசெய்யும் முயற்சியில் கிழக்கு ஜேர்மனி ஈடுபடலாயிற்று. இதற்கு பிளவு பட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்பும், பேர்ளின் நகரம் குறித்த பொட்ஸ்டம் உடன்படிக்கை விதிகளும், வசதியையும் வாய்ப் பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

மேற்கு பேர்ளின் நகரம் கிழக்கு ஜேர்மனிக்குள் இருந்தாலும், அது மேற்கு ஜேர்மனியின் ஆளுகைக்கு உட்பட்டதால், மேற்கு பேர்ளினுக்குள் வந்து சேர்ந்துவிட்டால், மேற்கு ஜேர்மனியில் வசிப்பதற்கான அகதி அந்தஸ்துக் கோருதல் சாத்தியமாக அமைந்துவிடும். பின்னர் அங்கிருந்து வேறு பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், தரை எல்லையை கடந்து சென்றடைதல் அப்போது சாத்தியமாக இருந்தது. 1980ம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த ஐரோப்பிய நாடுகளின் குடிவரவு விதிகளில், தற்போது புகுத்தப்பட்டுள்ள கெடுபிடிகள் இருக்கவில்லை. எனவே அகதிகள் பிரான்ஸ், சுவிஸ், ஒல்லாந்து, டென்மார்க் நோர்வே என்றும், பின்னர் அங்கு தமது வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக் கொண்டு பிரித்தானியா, கனடா என ஆங்கிலம் பயிலும் நாடுகளுக்கும் இடம் பெயர்தல் சாத்தியமாயிற்று. பிளவுபட்ட ஜேர்மனிகள் 1990ம் ஆண்டு இணையும்வரை பூமிப்பந்தெங்கும் தமிழன் புலம்பெயர்வதற்கு நுழைவாயிலாக அமைந்தது, கிழக்கு பேர்ளினும், அதனுடன் இணைந்த மேற்கு பேர்ளினின் பூகோள அமைப்புமே என்பது இதுவரை பதிவு செய்யப்படாத உண்மையாக
உள்ளது.

சோவியத்யூனியனும் கிழக்கு ஜேர்மனியும் அகதிகள் விடயத்தில் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்ததை’ ஊன்றிக்
கவனித்தவர்களுக்கு நன்கு விளங்கும். பெருந்தொகை அகதிகள் ரூஷ்ய விமானத்தில் பறந்ததின்மூலமும், ஒருநாள் கடவை விசாவுக்கு கிழக்கு ஜேர்மன் அரச நிர்வாகம் பணம் அறவிட்டதின் மூலமும் பெருந்தொகையான வருமானம் பெற்றார்கள். கிழக்கு ஜேர்மனிக்குள் இருக்கும் ‘குப்பைத் தொட்டியாக’ மேற்கு பேர்ளினைப் பார்த்து பல்லாயிரக்கணக்கான உலக அகதிகளை வகை தொகையின்றி மேற்கு பேர்ளினுக்குள் தள்ளித் தொல்லை கொடுத்தார்கள். இதனால் எண்பதாம் ஆண்டுகளில்; சுற்றிவர மதில் சுவரால் தனிமைப்படுத்தப்பட்ட மேற்கு பேர்ளின் நகரம் அகதிகளால் நிரம்பி வழிந்தது. அகதிகளின் இத்தகைய படையெடுப்பு மேற்கு ஜேர்மன் அரசுக்கு பெரும்
தலையிடியைக் கொடுத்தது.

அகதிகளின் வருகையால் வெளிநாட்டவர் எல்லோரையுமே ஒருவித வெறுப்புணர்வுடன் ஜேர்மன் மக்கள் பார்க்கத் துவங்கினார்கள்.
பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சி முடித்து மேற்கு பேர்ளின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த எனக்கும் பல்கலைக்கழகத்துக்கு
வெளியே புதிய சூழல் சில அசௌகரியங்களை ஏற்படுத்தியது. அத்துடன் ஒரு தொழிலைச் செய்ய ஜேர்மன் பிரசை ஒருவர் அந்நாட்டில் இருப்பாரானால் அத்தொழில் மற்றவர்களுக்கு இல்லை என்ற சட்டம் இன்றும் ஜேர்மனியில் கடுமையாக அமல் படுத்தப்படுகிறது.

‘நமது பிள்ளைகள் இந்த நாட்டிலே வருங்காலத்தில் என்ன செய்யப் போகுதுகள்?’ என என் மனைவி நச்சரிக்கத் துவங்கினாள். நான்
கல்வி கற்ற உயிரியல் தொழில்நுட்ப துறைக்கு உலகமெங்கும் அப்போது ‘மவுசு’ இருந்தது. எனவே, பல்இன பல்கலாசாரத்தை மனதார ஏற்கும் ஆஸ்திரேலியாவுக்கு 1987ம் ஆண்டு குடும்பத்துடன் புலம்பெயர்ந்தேன்.

நான் ஜேர்மனியில் வாழ்ந்த பதின்மூன்று வருடங்களும் அநுபவபூர்வமாக மகிழ்ந்து வாழ்ந்த காலங்கள். இருப்பினும் பல்இன
கலாசாரத்தை ஏற்காது ‘ஜேர்மனி ஜேர்மன் மக்களுக்கே’ என்ற கொள்கை வைத்திருக்கும் ஒரு நாட்டில் எனது சந்ததி தொடர்ந்து வாழ மனைவி விரும்பாததற்கு நிறையவே காரணங்கள் இருந்தன.

கிழக்கு ஜேர்மனி, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட, 1989ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் சோவியத் தலைவர் கொபச்சோவ் கிழக்கு பேர்ளின் வந்ததும், காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும்படி கிழக்கு ஜேர்மன் அரசை வற்புறுத்தியதும், அதற்கு SED கட்சி தயக்கம் காட்டியதும் நான்
அவுஸ்திரேலியாவிலே இருந்த பொழுது அறிந்த சமாச்சாரங்கள். ஆனால் இரு துருவங்களாக திகழ்ந்த இருநாடுகள் இவ்வளவு விரைவில் ஒன்றிணையும் என்பது யாருமே எதிர்பார்க்காத சடுதியிலே நிகழ்ந்த சம்பவமாகும்.

ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி 1990ம் ஆண்டு ஜேர்மன் நாட்டின் அதிபராக இருந்த ஹேல்மூட் கோல் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு
என்ற கிழக்கு ஜேர்மனியின் பெயர் இனிச் செல்லாது என அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த
ஜேர்மனியாகியது. பொருளாதாரப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாத சோவியத் யூனியன், மிகப் பெருந்தொகைப் பணத்தை மேற்கு
ஜேர்மனியிடம் பெற்றுக் கொண்டதன் பின்னரே இரு நாடுகளின் ஒன்றிணைப்பை அனுமதித்தார்கள் என்று அப்போது பேசிக் கொண்டார்கள் இரு ஜேர்மனிகளும் இணைந்த பின்பு, 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேர்ளின் சுவர் முற்றாக இடித்து அகற்றப் பட்டது. இடிக்கப்பட்ட பேர்ளின் சுவரின் சிறிய கொங்கிறீற் துண்டுகள் ஞாபகச் சின்னங்களாக 1990ம் ஆண்டுகளில் விற்கப்பட்டன. அதில் ஒரு துண்டு, சிட்னியில் எமது வீட்டின் வரவேற்பறையில் நான் முன்பு படித்த கொம்மியூனிச புத்தகங் களுடன், எனது கடந்தகால ஜேர்மன் வாழ்க்கையை இன்றும் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.

கிழக்கிலும் மேற்கிலுமாக, சோசலிஸ-; முதலாளித்துவ அமைப்பின் கீழ், ஜேர்மனியில் பலகாலம் வாழ்ந்து அனுபவித்தவன் என்ற
உணர்வின் உந்துதலினால், ஒன்றிணைந்த ஜேர்மனியின் நிலவரத்தை நேரில் காண ஆசைப்பட்டேன். பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி, நான் கல்வி கற்ற ஜேர்மன் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், விஞ்ஞான மகாநாட்டுக்கு சிறப்பு பேச்சாளராக என்னை அழைத் திருந்தது. இப்பல்கலைக்கழகம் முன்னர் மேற்கு ஜேர்மன் ஆட்சிக் குட்பட்ட மேற்கு பேர்ளின் பிரதேசத்தில்
அமைந்திருந்தது.

பிறந்த மண்ணில் இருபத்திமூன்று ஆண்டுகள் வாழ்ந்தேன். அதில் முதல் பத்து ஆண்டுகளையும் அறியாத குழந்தைப் பருவம் எனக்
கழித்துவிடலாம். மீதி பதின்மூன்று ஆண்டுகளை குதியன் குத்திய விடலைப் பருவம் என அடையாளப்படுத்துதல் பொருந்தும் என
நினைக்கின்றேன்.

உலக வாழ்வின் இயல்புகளை இனங்கண்டு, தீதும் நன்றும் பகுத்தறியும் பதின்மூன்று முத்தான வாலிபப் பருவத்து ஆண்டுகளை நான் ஜேர்மண்ணிலே தான் ஆண்டு அநுபவித்தேன். என் வாழ்க்கையின் அர்த்தங்களைக் கற்பித்த மண். என் வாழ்க்கைக்கும் உழைப்புக்கும் ஏற்ற கல்வியை எனக்களித்து என்னை மனிதனாய் நிமிர்த்து நிற்கச் செய்த மண்.

என் இரண்டாவது தந்தை மண்ணைத் தரிசிக்கும் ஒரு மனோபாவத்துடன், நான் விமானத்தில் ஏறினேன். ஜேர்மனி நோக்கிய பறப்புத் துவங்கிற்று !


கிழக்கும் மேற்கும் - 2

விஞ்ஞான மாநாடு முடிந்தது!

Election Poster for the Socialist Unity Party of Germany (SED) (1948)மறுநாள் கிழக்கு ஜேர்மனியில் என்னுடன் ஒன்றாகப் படித்த நண்பன் எரிக்கிடம் சென்றேன். அவன் இப்போதும் அங்கேதான் குடும்பத்துடன்
வாழ்கிறான். படிக்கும் போது அவன் பொதுவுடமைத் தத்துவங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்தவன். உருக்குத் தொழிற்
சாலையொன்றிலே வேலை செய்த சாதாரணத் தொழிலாளியின் மகனாக அவன் பிறந்தான். அன்றைய சோசலிஷ ஆட்சி அமைப்பு
இல்லையேல், அவன் உயர்கல்வி கற்கும் வாய்ப்பையே பெற்றிருக்கமாட்டான்.

எரிக்கும் மனைவி மேரியும் என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். சோசலிஷ ஆட்சியின்போது அவர்கள் அரசு கொடுத்த,
ஒப்பீட்டளவில் வசதியான இரண்டு அறை தொடர் மாடிக் குடியிருப்பில் குறைந்த வாடகையில் குடியிருந்தார்கள். நான் சென்றபோது அவர்கள் வாழ்ந்த வீடு முன்புபோல் வசதியானது என்று சொல்வதற்கில்லை. கிழக்கும் மேற்கும் இணைந்த பின்பும் கிழக்குப் பகுதியில் பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கும் பௌதீக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை என்னால் அவதானிக்க முடியவில்லை.
மேரி கோப்பி தயாரித்துக் கொண்டிருந்தாள். எரிக்குடன் பலதையும் பேசிக் கொண்டிருந்த நான் ‘ஒன்றிணைந்த ஜேர்மனியில்
உன்வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன?’ என நட்புரிமை பாராட்டிக் கேட்டேன். வரவேற்பறையை ஒட்டிய சமையல்
அறையில் நின்ற மேரி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். எரிக் மௌனம் காத்தான்.

‘எனது கேள்வி தவறென்றால் மன்னித்துக் கொள்’ என்றேன்.

‘இதில் தவறெதுவுமில்லை’ என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டவன், வார்த்தைகளைக் கவனமாக தெரிந் தெடுத்து பேசத்
துவங்கினான்.

‘வயிறார உணவும், வசிப்பதற்கு வீடும், வருமானத்திற்கு ஒரு தொழிலும் இருந்துவிட்டால் மனித மனம் ஆடம்பரத்தை நாடும். அன்றைய சோசலிஷ ஆட்சியில் கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த நாம், மேற்கு ஜேர்மனியில் முதலாளித்துவ அமைப்பின் கீழ் பாலும் தேனும் வீதிகளில் வழிந்தோடுவதாக நினைத்தோம். ஆனால் இப்போது அது மாயை எனத் தெரிந்தது மட்டுமல்லாமல், அடிப்படை வசதிக்கே எலியோட்டத்தில் ஈடுபடும் அவதி வந்துவிட்டதை உணர்கிறோம்.’

இதைச் சொன்னபின் எரிக் பெருமூச்சொன்றை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

‘சோசலிஷ அமைப்பின்கீழ் வேலை நிரந்தரம் என்ற நிலைமை மாறி, வருடாவருடம் வேலை ஒப்பந்தம் நீடிக்கப் படவேண்டும் என்கிற
நிர்ப்பந்தம் இப்பொழுது எழுந்துள்ளது. ‘அமெரிக்க hire and fire கொள்கைதான் இங்கும்’ எனத் தன் கருத்தைக் கூறியபடி மேரியும்
எங்களுடைய உரையாடலிலே கலந்து கொண்டாள்.

ஜேர்மனியில் பலவகையான ருசிமிக்க கேக் வகைகளைச் செய்வார்கள். ‘Torte’ எனப்படும் ஒருவகையை நான் விரும்பிச் சுவைப்பேன். கேக் மாவின் மேலே பலவகை பழத்துண்டுகளைப் போட்டு அதன்மேல் ஜெலி ஊற்றி அந்த கேக்கை சுவை யுள்ளதாக்குவார்கள். அன்று மேரி வாழைப்பழ ‘Torte’ ’ செய்திருந்தாள். வாழைப் பழத்தைப் பார்த்ததும் புன்னகைத்தேன். எனது புன்னகையின் அர்த்தத்தை சரியாக ஊகித்தவள், ‘உண்மைதான், சோசலிஷ ஆட்சியில், அன்று வாழைப்பழம் எமக்கெல்லாம் ஆடம்பரப் பொருள். வாழைப்பழ இறக்குமதி அப்போது இல்லை. ஆனால் ஒன்றிணைந்த ஜேர்மனியில் இப்போது வாழைப்பழம் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், ஆடம்பரப் பொருள்களைக் காட்டி மேற்கு ஜேர்மன் நிறுவனங்கள் எம்மை ஏமாளியாக்கியது சுவாரஸ்யமான சோகக்கதை’ எனச் சொன்னாள் மேரி.

‘ஆடம்பரம்’ என்ற சொல் மேரியை எரிச்சலடைய வைத்ததை அவளின் பேச்சிலிருந்து உணர்ந்து கொண்டேன். எதையும் ஒளிவு
மறைவின்றிப் பேசுதல் அவள் சுபாவம். அவளிடமிருந்து கதை பிடுங்கும் ‘யாழ்ப்பாணக் குணம்’ என்னுள் புகுந்து கொள்ளவும், ‘அது
என்ன ஏமாளியாக்கிய கதை?’ எனத் தூண்டிலை அவளை நோக்கி வீசினேன்.

‘கிழக்கும் மேற்கும் தொண்ணூறாம் ஆண்டு ஒன்றிணைந்த புதிதில், முதலாளித்துவ நிறுவனங்கள் கிழக்கு ஜேர்மனியை புதிய சந்தையாக
நினைத்து படையெடுத்தது...’ எனக் கதையை துவக்கிய மேரியை இடைமறித்து, ‘மக்களிடம் வாங்குவதற்கு பணமிருந்ததா?’ என என்
ஊகங்களுக்குத் தெளிவு பெறுவதற் காகக் கேட்டேன்.

பென்ஸ் கார் ஒன்றை வாங்கி எரிக் கடனாளியாக இருப்ப தையும், அதற்கு பெற்றோல் ஊற்றுவதற்கே கஷ்டப் படுவதையும் மேரி
விரிவாகவே விளக்கினாள்.

‘கார் விற்க வந்தவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிறுவனங்களையும் கூடவே அழைத்து வந்தார்கள். சுவர்க்க வாசல் திறந்ததாகவே நினைத்து விலை உயர்ந்த கார்களையும் ஆடம்பரப் பொருட்களையும், கடன் பத்திரத்தில் கையெழுத்து வைத்து கணக்கு வழக்கின்றி மக்கள் வாங்கினார்கள். இந்தப் போக்கிலே அள்ளுண்ட எரிக்கும் ஒரு பென்ஸ் கார் வாங்கினான். அதுவரை சோசலிஷ பொருளாதாரம் மட்டும் தெரிந்த கிழக்கு ஜேர்மன் மக்கள் முதலாளித்துவ தில்லு முல்லுகளின் ஆழ அகலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதன் காரணமாகப் பலர் இன்று, கடனாளியாக இருக்கிறார்கள். அத்துடன் அதிவேக கார்களுக்கு பளக்கப்படாத பலர் விபத்துக்களைச் சந்தித்ததும் உண்டு. நாம் வாங்கிய பென்ஸ் காரின் பெறுமதி ஒருவருடத்தில் கால்பங்கு குறைந்துவிட்டது. ஐந்து வருடத்தில் அதன் பெறுமதி பூஜ்ஜியமாகிவிட்டது; இதற்காக வாங்கிய கடனோ இப்போது பலமடங்காகி விட்டது .’

தனது வாழ்க்கை நிலையைக் கூச்சப்படாமல் கூறினாள் மேரி.

சோசலிஷ ஆட்சியின்போது கிழக்கு ஜேர்மனியில் இரண்டு வகைக் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

இரண்டு சிலிண்டர், இரண்டு stroke என்ஜின் பூட்டிய ‘Traband’ கார். மிகவும் வேகம் குறைந்த 700ஸ்ரீஸ்ரீ என்ஜினைக் கொண்டது. இக்கார்
1955ம் ஆண்டு உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தன. உலகத்திலே முதலில் உற்பத்தி செய்யப் பட்ட பிளாஸ்ரிக் (Plastic body) கார் இதுவே.
பார்ப்பதற்கு நெருப்புப் பெட்டி போல் இருக்கும். இக்காரை வாங்குவதற்கு பதிவு செய்த பின் சோசலிஷ ஆட்சியின் கீழ் ஆறு
வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.

அடுத்த வகை கார் மூன்று சிலிண்டர் ‘Wartburg’ என்னும் கார். இதுவும் இரண்டு stroke என்ஜின் பொருத்தியது. ஒப்பீட்டளவில் Traband
காரிலும் ஆடம்பரமானது. முன்னதிலும் பார்க்க இது வேகமாக ஓடக்கூடியது.

Autobahn எனப்படும் நெடுஞ்சாலைகளில் மேற்கு ஜேர்மனியின் அதிவேக ஆடம்பரக் கார்களைப் பார்த்தவர் களுக்கு தாமும் அப்படி ஒரு ஆடம்பர காரில் செல்ல வேண்டு மென விரும்பியதில் வியப்பேதுமில்லை. இருப்பினும் விரலுக்கேற்ற வீக்கம் வேண்டுமென்பதை ஆடம்பர மோகத்தை நாடிய வேகத்தில் மறந்து போனது அவர்களைச் சிக்கலில் மாட்டி விட்டது.

எரிக்கின் தந்தை பணிபுரிந்த உருக்குத் தொழிற்சாலையில் நானும் பல்கலைக்கழக விடுமுறைகளின்போது பணி புரிந்திருக்கிறேன். எரிக்கின் தந்தையே எனக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தார். அவரின் ஞாபகம் வரவே அவரின் சுக நலம் விசாரித்தேன்.

‘உனக்குத்தான் தெரியுமே, சோசலிஷ ஆட்சியின்கீழ் இங்கிருந்த தொழிற்சாலைகளெல்லாம் அரசுக்கு சொந்தமானவை என்பது.
இரவோடிரவாக ஜேர்மனி ஒன்றிணைந்தபின், சோசலிஷ ஆட்சியின் கீழ் அரசுடமையாக்கப்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம் தனியார்
மயப்படுத்தப்பட்டன. எரிக்கின் தந்தை பணிபுரிந்த உருக்கு ஆலையை, மேற்கு ஜேர்மனியில் கொடிகட்டி பறந்து, பெரும் லாபம் ஈட்டிய
தனியார் உருக்கு ஆலையொன்று, ‘அடையாளமாக’ (Symbolic) ஒரு ஜேர்மன் மார்க் பணம் கொடுத்து அரசிடம் வாங்கியது.
தொழிற்சாலையை நிர்வகிக்கவும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தவும் ஒன்றிணைந்த ஜேர்மன் அரசு பெருந்தொகை பணம் கொடுத்தது.

இந்த வகையில்தான் கிழக்கு ஜேர்மன் நிறுவனங்கள் எல்லாம் நவீன மயப்படுத்தப்படும் எனக்கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் இந்த
நவீன மயப்படுத்தல் மூடுவிழாக்களுக்கான துவக்கமாகவே இúந்தது. அரசிடம் இருந்து கிடைத்த பணத்தை மேற்கு ஜேர்மனியில் உள்ள
தமது ஆலைகளுக்குச் செலவு செய்த முதலாளித்துவ நிறுவனங்கள், திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் இரண்டு மூன்று வருடங்கள்,
கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆலைகளை நட்டத்தில் இயங்கவிட்டன. இறுதியில் அந்த ஆலைகளிலே வேலை செய்த திறமைமிக்க
ஊழியர் சிலரையும் நல்ல நிலையிலுள்ள இயந்திரங்களையும் மேற்கு ஜேர்மன் ஆலைக்கு எடுத்துச் சென்றபின், இங்குள்ள ஆலையை
மூடிவிட்டார்கள். இதனால் கிழக்குஜேர்மனியிலே வாழ்ந்த தொழிலாளர்களிலே அநேகர் வேலையற்றோராக நடுத்தெருவில் விடப் பட்டார்கள்.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்கிற கதையே தான்! சோசலிஷ ஆட்சியின் கீழ் கிடைத்த, அடிப்படை வசதிகளுக்கான
உத்திரவாதத்தைப் பின்னர்தான் கிழக்கு ஜேர்மன் மக்கள் நினைத்துப் பார்க்கத் துவங்கினார்கள்...’ என மேரி விபரம் சொன்னாள்.
இந்த அவல நிலை குறித்து ஒரு சோக உணர்வு என்னுள் படர்ந்தது. நான் மௌனித்தேன். என் உடலின் பாஷையை மேரி புரிந்திருக்க
வேண்டும்.

‘அந்த கதைகளை விடு. வாழைப்பழ Torte சாப்பிடு. இது உனக்காகவே செய்யப்பட்டது. முன்னரென்றால் இவ்வளவு தாராளமாகச்
செயற்பட்டிருக்கமாட்டேன். இப்போது ஆடம்பர முதலாளித்துவ அமைப்பில் வாழ்கிறேனல்லவா...?’ எனக்கூறிச் சிரித்தாள்.
சோகத்திலும் வெடித்த அந்த நகைச்சுவைக்குறிப்பிலே நானும் கலந்து சிரித்தேன்.

‘நீங்கள் முன்பு இருந்த அரச தொடர்மாடியும் தனியார் மயமாகிவிட்டதா?’ மேரி தந்த வாழைப்பழ கேக்கைச் சாப்பிட்டபடி, கேட்டேன். ‘சும்மா விட்டு வைப்பார்களா? இரண்டாம் உலக மகாயுத்தத்தின்முன் கட்டப்பட்ட கட்டிடங்களை தமதென பலர் ஆட்சி உரிமை கோரி பழைய காணி உறுதிகளுடன் வந்தார்கள். பொதுவுடமை சொத்தாக சோசலிஷ ஆட்சியின் கீழ் இருந்த கட்டிடங்கள் மீண்டும் தனியார் கைவசம் போனவுடன் வாடகை கூடியது.

‘அத்துடன் போட்டியும் அதிகரித்தது. சோசலிஷ ஆட்சியில், குடும்ப நபர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே வீடு கொடுக்கப்பட்டது.
தேவைக்கேற்ற விசாலம். ஆனால் இப்போது இரண்டு பேர் உள்ள குடும்பத்தினர் பணமிருந்தால் அதிக அறைகளுள்ள பெரிய வீட்டிலே
வாழமுடிகிறது. இதனால் பணமற்ற பலர் தங்கள் குடியிருப்பு வசதிகளை இழந்தார்கள். நாம் இப்போதிருக்கும் இந்த வீட்டை வாடகைக்கு எடுக்கப்பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல...’ என விவரித்தாள் மேரி.

‘முன்பு கம்யூனிசம் போதித்த பேராசிரியர்களும், நிறுவனங்களில் பணிபுரிந்த கம்யூனிச சார்பு SED கட்சி செயலாளர்களும் இப்போது என்ன செய்கிறார்கள்?’ எனக் கேட்டேன். இவர்களே சோசலிச ஆட்சியின்கீழ் தனிக்காட்டு ராஜாக்களாக சுகபோக வாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்கள் நிலை என்ன என்பதை அறிவதில் இயல்பாகவே எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

எரிக் அப்போது பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் SED கட்சி செயலாளராகவிருந்து பொதுவுடமைத் தத்துவங்களை உசாராகப்
பேசியவன்.

எனது கேள்வி அவனது உணர்வுகளை உசுப்பியிருக்கவேண்டும். இதை அவனது முகபாவம் காட்டிக் கொடுத்தது. இருப்பினும்
அமைதியாகப் பேசத்துவங்கினான். ஜேர்மனியர்களின் சுபாவமே அதுதான். மலையே போனாலும் பதட்டப்படாது மிக அமைதியாக
இருப்பார்கள்.

‘அவர்களில் பலர் பச்சோந்திகளாக மாறி முதலாளித்துவம் பேசத்துவங்கிவிட்டார்கள். கம்யூனிசம் நடைமுறையில் தோற்ற தற்கு
இவர்களைப் போன்ற பச்சோந்திகளும் ஒரு காரணம்’ என்று நொந்து பேசிய எரிக்கை இடைமறித்து, ‘அவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்’
என்று அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தாள் மேரி.

நாளை சிட்னி நோக்கிய எனது பறப்பு!

பெட்டியில் இருந்த பொருள்கள் அனைத்தையும் கீழே கொட்டித் தேடினேன். வரும்போது அணிந்து வந்த கால்சட்டை, சேட், கோட்
பொக்கற்றுக்குள்ளும் கைவிட்டுப் பார்த்தேன். அந்தப் பட்டியலோ அகப்படவில்லை.

நான் வெளிநாடு போகும் போதெல்லாம் என் மனைவி எதைத்தான் மறந்தாலும், வீட்டுக்கு வாங்கிவர வேண்டிய சாமான்கள் பட்டியலைத்
தர மறப்பதில்லை. அதை எங்கோ தொலைத்துவிட்டு இரண்டு நாள்களாகத் தேடிக் கொண்டி ருக்கிறேன். தான் சொல்ல மறந்த மேலும் சில சாமான்களை, நேற்று மின் அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தாள். இனித் தாமதிக்க நேரமில்லை. முடிந்த வரை மூளையை கசக்கி நினைவுபடுத்தி மனைவி சொன்ன சாமான்களைக் குறித்துக் கொண்டு கடைத் தெருவுக்குப் புறப்பட்டேன்.

வணிக வளாகத்தில் ஒரு எதிர்பாராத சந்திப்பு. பல்கலைக் கழகத்தில் எனக்கு சோசலிஷ பொருளாதாரம் கற்பித்த ஜேர்மன் பேராசிரியர்
புதிய கோலத்தில் வந்திருந்தார். இலகுவில் என்னை இனம் கண்டவர், ‘எப்படி இருக்கிறாய்? எப்போது வந்தாய்?’ எனக் குசலம்
விசாரித்தார். அவர் அணிந்திருந்த ஆடை எனக்கு வியப்பைக் கொடுத்தது. தொழிலாளர்கள் அணியும் நீலநிற அங்கி அணிந்து, தச்சு
வேலைகள் செய்வதற்கான ஆயுதங்கள் அடங்கிய பையொன்றை வைத்திருந்தார்.

நான் இலங்கைக்குச் செல்லாதது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரது பேச்சில் புரிந்து கொண்டேன். சோசலிஷ அமைப்பின்கீழ் சோசலிஷ நாட்டின் புலமைப்பரிசில் பெற்று கல்விகற்ற மாணாக்கர்கள், தமது சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்று அங்கு பணிபுரியவேண்டுமென்பது எதிர்பார்ப்பு. ஆனால் நானோ, கிழக்கு ஜேர்மனியில் இருந்து, அவர்களின் பரம வைரிகளாக கருதப்பட்ட மேற்கு ஜேர்மனிக்குச் சென்று தொடர்ந்து கல்வி கற்று, தற்போது ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வது பேராசிரியரைப் பொறுத்த மட்டில் ஏற்க முடியாததொன்று.

இலங்கையில் நிலவிய நிர்ப்பந்த புலப்பெயர்வுக்கான காரணிகளை விளக்கிச் சொன்னதும் சமாதானமடைந்தார். உரையாடலை வேறு
கோணத்தில் திசை திருப்ப விரும்பி, ‘இதுவென்ன புதுக்கோலம்?’ என பேராசிரியரைக் கேட்டேன்.

சிறிது நேர மௌனத்தின் பின், தன்னிலை விளக்கம் கொடுக்கும் தோரணையில் பேராசிரியர் பேசத்துவங்கினார்.

‘சோசலிஷ சமுதாய அமைப்பில் அனைவரும் தொழிற் கல்வி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதை நீ அறிந்திருப்பாய். அந்த
வகையில் நான் தச்சுத் தொழில் கற்றவன். எனக்கு உயர்கல்வி வாய்ப்பைத் தந்தது மட்டுமல்லாது பேராசிரியராக உயர்வு தந்ததும்
சோசலிஷ கட்டமைப்பே. அதற்கு நான் என்றும் கடமைப்பட்டவன். பொதுவுடமை கொள்கையை நான் அன்றும் இன்றும் முழுதாக
நம்புகிறேன். பலரின் கண்களுக்கு அது தோற்றுப்போன சங்கதியாக இருக்கலாம். கம்யூனிசம் என்றும் தோற்றதில்லை. அதை
கடைப்பிடித்த முறைதான் தோற்றுப்போனது.

‘கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த பின் இரவோடு இரவாக என் கொள்கைகளை மாற்றிக் கொள்ள என்னால் முடியவில்லை. என்னையே ஏமாற்றிக் கொண்டு முதலாளித்துவ அமைப்பில் பச்சோந்தியாக வாழ என் மனம் என்றும் இடம் கொடாது. இதனால் என் பேராசிரியர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு எனக்குத் தெரிந்த கைத்தொழில் இறங்கிவிட்டேன். இப்போது எனக்கு நான்தான் ராஜா, தனிக்காட்டு ராஜா என வைத்துக் கொள்ளேன்’ எனக்கூறிச் சிரித்தார் பேராசிரியர்.

கிழக்கு ஜேர்மனியில் சோசலிஷ ஆட்சி நடைபெற்ற காலத்தில் நஉஈ என அழைக்கப்பட்ட பொதுவுடமை கட்சியில் சேராதவர்கள்
எந்தவொரு உயர் பதவியையும் வகிக்க முடியாது. இதற்குப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விதிவிலக்கல்ல. சந்தர்ப்பத்துக்கேற்ற
வகையில் பொதுவுடமைவாதம் பேசித்திரிந்த பல பேராசிரியர்களும், அரச சலுகை பெற்ற உயர் அதிகாரிகளும் இரவோடிரவாக
முதலாளித்துவ சிந்தனைவாதிகளாக மாறி பதவிகளைப் பாதுகாத்த சங்கதிகள் பல உண்டு. இருப்பினும், பேராசிரியரைப் போன்ற கொண்ட
கொள்கை மாறாத பொதுவுடமைவாதிகள் பலர் இன்னமும் கிழக்கு ஜேர்மனியில் வாழ்கிறார்கள் என்பது உண்மை.

மேற்கு ஜேர்மனியில் உள்ள அரச நிறுவனங்களில், கிழக்கு ஜேர்மன் மக்களை வேலைக்கமர்த்த வேண்டுமென்கிற நல்லெண்ணத்தில்
பலரை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். ஆனால் கிழக்கு ஜேர்மன் மக்களால் புதிய அமைப்பிலே இலகுவில் இரண்டறக் கலக்க
முடியவில்லை என்பதை, அவர்களின் நடத்தை மறைமுகமாகக் காட்டியது. பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாது என்கிற ரீதியிலே, தனித்தனிக் குழுக்களாகவே, வேலை செய்த இடங்களில் செயல்பட்டார்கள். கிழக்கு ஜேர்மன் மக்கள் மனதில் அப்போதிருந்த தாழ்வு மனப்பான்மையும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். முதலாளித்துவம் அளிக்கும் தனி நபர் முயற்சிகளின் வெற்றிகள்
கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை, அவர்கள் நான்கு சகாப்தங்களாக இழந்தமையே, இதற்கு காரணம் என மேற்கு ஜேர்மன் நண்பன்
ஒருவன் பிறிதொரு விளக்கம் சொன்னான்.

இருப்பினும், எல்லைகள் அறுந்து மதில் சுவர் வீழ்ந்த பின்பும் மேற்கு ஜேர்மன் மக்கள் மனதில், கிழக்கு ஜேர்மன் மக்களைவிட தாம்
எப்போதும், எதிலும் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் இன்னமும் இருக்கிறது.

அடொல்வ் ஹிட்லர், அகண்ட ஜேர்மனியைக் காணும் கனவுகளை ஜேர்மனிய மக்கள் மனதில் எழுப்பி ஆட்சியைக் கைப்பற்றினார். பதவி
ஏற்றதிலிருந்து அதனைச் செயல்படுத்தும் பல திட்டங்களை முடுக்கிச் செயல்பட்டார். இறுதியில் யுத்தத்தில் தோல்வியுற்றதால் நாடு
பிளவுற்றது. அரசியல் காரணங்களுக்காக ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களை இருநாடுகளாக்குவது நீண்ட நாள்களுக்கு நிலை பெற்றிருக்க
மாட்டாது என்பதற்கு உதாரணங்களுண்டு. அரசியல் சிந்தாந்த வேறுபாடுகளுக்காக, ஒரே இன மக்கள் வாழும் நாட்டினைக் கூறாக்கி,
இருவேறு நாடுகள் அமைத்தால், அதிக காலம் நீடிக்காது என்பதை ஜேர்மன் வரலாறு நிரூபித்தது. இதுவே பிறிதொரு வகையில்
வியட்நாமிலும் நடந்தது. கொரியப் பிரிவினை இன்னும் எத்தனை காலத்துக்கு நீடித்து நிற்கப் போகிறது என்று எதிர்காலம் ஆவலுடன்
காத்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!

a.kantharajah@uws.edu.au


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner