1983! மீண்டுமொருமுறை நினைவு கூர்வோம்!
1983!
ஈழத்தமிழர்களின் வரலாற்றில் திருப்பு முனையானதொரு வருடம். இலங்கையின் அரசியல்
வரலாற்றிலும்தான். தமிழ் மக்கள் மேல் அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின்
அமைச்சர்கள் பலரின் நேரடிப் பங்களிப்பில் திட்டமிட்டுப் படுகொலைகள்
கட்டவிழ்த்து விடப்பட்டன. வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை
செய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் சமூக விரோதக் கும்பல்களினால்
ஈவுஇரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், குழந்தைகளெனப்
பாகுபாடின்றி எத்தனை எத்தனை படுகொலைகள். தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில்
உடமைகளையிழந்து ஏதிலிகளாகத் தம் சொந்தத் தாயகம் நோக்கி, உலகின் பல பாகங்களையும்
நோக்கிப் ப்டையெடுத்தார்கள். பிராந்திய வல்லரசான இந்தியாவை நேரடியாகவே இலங்கைப்
பிரச்சினையில் 1983 தலையிட வைத்தது.
இன்று 23 ஆண்டுகள் கழிந்து விட்டன. எவ்வளவு
விரைவாகக் கழிந்நது விட்டன. இதற்கிடையில்தான் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.
வேதனை மிக்க சம்பவங்கள். இன்று மீண்டும் அதே 1983ற்கே நிலைமை
திரும்பியிருக்கிறதென்பதைத்தான் அண்மைய அப்பாவித் தமிழ் மக்கள்மீதான்
தாக்குதல்கள், படுகொலைகளெல்லாம் புலப்படுத்துகின்றன. மீண்டும் நூற்றுக்
கணக்கில் தமிழ் மக்கள் கைது செய்யப்படுகின்றார்கள். காணாமல் போகின்றார்கள்.
இதுவரையில் தன் கவனத்தைத் திருப்பாமலிருந்த இந்தியா மீண்டும் இலேசாகத் தன்
கண்களை ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் திருப்ப ஆரம்பித்துள்ளது.
இன்று
தமிழ் மக்களுக்குத் தேவை நிரந்தரத் தீர்வுடன் கூடியதொரு சமாதானம்.
தன்மானமிழக்காத சமாதானம். இவ்வளவு இழப்புகளுக்கும் பின்னால் ஒற்றையாட்சியில்
வலிந்து திணிக்கப்படும் தீர்வுகளெதுவும் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதில்லை.
தமிழ் மக்களின் பாரம்பர்யப் பிரதேசங்களை, தாயகப் பிரதேசங்களை அங்கீகரித்த,
சுயாட்சியுடன் கூடிய , நிரந்தரமான தீர்வே தேவையானது. தமிழர்கள் தங்களது
பொருளாதாரத்தைத் தாங்களே நிர்ணையிக்கக் கூடியதொரு வல்லமைமிக்க சக்தியாக இன்று
உருவாகியிருக்கின்றார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், காணி இவையெல்லாம்
தமிழ் மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் வகையிலான நிரந்தரமான ,
சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் உறுதி செய்யப்பட்ட தீர்வானது தற்போதுள்ள
ஈழத்தின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான முக்கியமானதொரு ஆரம்பப்
படிக்கட்டாகவிருக்கும். இந்தவருடமாவது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மீண்டுமொரு
திருப்புனையினை, சுபீட்சம் மிக்க எதிர்காலத்துக்கான நம்பிக்கையினை ஊட்டக்
கூடியதொரு திருப்புமுனையினை ஏற்படுத்துமொரு ஆண்டாகவிருக்கட்டும். 1983இனை
மீண்டுமொருமுறை நினைவு கூர்வோம். அதன்மூலம் பெற்ற அனுபவங்களின் மூலம் ஈழத்தின்
அனைத்து அரசியற் சக்திகளும் ஆக்கபூர்வமானதொரு எதிர்காலத்துக்கான சமாதான
நகர்வுகளை நோக்கிய, நிரந்தரத் தீர்வினை நாடிய அரசியற்செயற்பாடுகளை
மேலெடுக்கட்டும். தமிழ் மக்கள்மீதான படுகொலைகள் மூலம், பயமுறுத்தல்கள் மூலம்
தமிழ் மக்களை அடிபணிய வைத்துவிடலாமென்று ஸ்ரீலங்கா அரசு தப்புக்கணக்குப்
போடுவதன் மூலம் மீண்டும் இலங்கையில் தற்போடு ஆரம்பித்துள்ள இரத்தக்களரிகளுக்கு
முற்றுப் புள்ளி வைத்து விட்டு, சர்வதேச அனுசரணையுடன் குறிப்பாக பாரதத்தின்
ஆக்கபூர்வமான பங்களிப்புடன் விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புகளை
முன்னெடுக்க வேண்டும். தமிழ்ப் பகுதிகளில் சகல விதமான வன்முறைகளும்
நிறுத்தப்படும் வகையில் அனைத்து அரசியற் சக்திகளும் இதய சுத்தியுடன் பேச்சுக்களை
ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது முயல்வதற்காவது இந்த நாளில் சங்கற்பம் எடுக்க
வேண்டுமென்பதுதான் அனைவரினதும் அவா.
- நந்திவர்மன் -