- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் விருந்தோம்பல் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பதற்கு தமிழ் தமிழ் அகர முதலி புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் போற்றுதல் என்று பொருள் உரைக்கிறது.கௌரா தமிழ் அகராதி வேளாண்மை,புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை.

சென்னை பல்கலைக் கழகத் தமிழ் ஆங்கில அகராதி புதிதாக வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை;( welcoming and entertaining guest) என்று பொருள் கூறுகிறது.
இத்தகைய விருந்தோம்பல் சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட பேரறமாக விளங்கியது.எந்நாட்டவராயினும்,எம்மொழியினராயினும் நட்புக் கொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடு தேடி வருவார்களாயின் அவர்களை வரவேற்று புதியவராக கொண்டனர்.தொல்காப்பியர் இதனை,

“விருந்தே தானும் புகுவது கிளந்த யாப்பின் மேற்றே”

என்ற நூற்பாவால் குறிப்பிடுகிறார்.மேலும் அக்கால மக்கள் விருந்தோம்பலைக் கடமையாக கொண்டனர் என்பதை,

“ விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவும் அன்ன”


என்ற நூற்பா அடிகள் குறிப்பிடுகின்றன.

‘விருந்தினரைப் புறம் தருதல்’ என்று பரிமேலழகரும’;உண்ணும் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டும்’என்று மணக்குடவரும்,தம் புதல்வரிடத்து வைக்கும் அன்பைப் போலப் பிறரிடத்தும் அன்பு வைத்து ஒம்பல் என்று பரிதியும் விளக்குவர்.க.ப அறவாணன் தமது நூலொன்றில் புதியவராய் வருவர்க்கு உணவளித்து உபசரித்தல் எனும் கோட்பாடு அக்காலத்து,எங்கோ சில இடங்களில் சத்திரம் சாவடிகள் இருந்தன.ஊர் விட்டு வேறு ஊர்ப் பயணம் மேற்கொள்ளுவோர்,கால் நடையாகவும்,சிறு வண்டியிலும் பயணம் மேற்கொண்டனர்.நாள்தோறும் வேளை தோறும் பசித்தோர்க்கு உணவு அளித்தலே விருந்தோம்பலின் நோக்கமாக அக்காலத்துக் கருத்து வளர்த்தெடுக்கப்பட்டிருத்தல் வேண்டும் என ஈகைக் கோட்பாடு வளர்க்கப் பெற்றுது போல விருந்தோம்பல் கோட்பாடும் வளர்க்கப் பெற்றது போலும்.சங்க இலக்கிய ஆற்றுப்படை இலக்கியங்களும் அரசனைக் காணச் செல்லும் பாணர்,முதலானோர்க்கும் இன்ன பிறருக்கும் அறிமுகம் இல்லாமலே உணவு அறித்து உபசரித்தலும் இப்பின்னணியிலேயே ஊக்கப்படுத்தப் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

வள்ளுவர் வள்ளுவர் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தலே இல்வாழ்க்கையின் நோக்கம் (81) என்றும் விருந்தினன் ஒருவன் இல்லின் புறத்ததாக அமையத் தான் ஒரு பொருளை விரும்புதல் சாவா மருந்தெனினும் வேண்டாம் (82) என்றும் விருந்தோம்பலின் மேன்மையை உரைக்கிறார்.

மேலும் விருந்தோம்பலால் பெறும் பயன்களாக விருந்தோம்பவனுக்கு நல்குரவு இல்லை ( 83),அவன் வீட்டில் திருமகள் இருப்பாள் (84),அவர் நிலம் தானே விளையும் (88),வானோர்க்கு நல்விருந்தாவான் (86) போன்ற வள்ளுவர் மொழிகின்றார்.

வருந்தோம்பலின் இன்றியமையாப் பண்பு முகம் திரியாமை என்பதை,

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகம்திரிந்து
நல்விருந்து ஒம்புவான் இல்  (84)
மோக்கக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்க குழையும் விருந்து   (90)


என்ற குறள்களில் கூறி இன்முகம் காட்டுதலின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.நாலடியார் விருந்தோம்பலுக்கென்று தனி அதிகாரம் ஒதுக்கப்படவில்லை.ஆனால் சுற்றம் தழால் (பா.10) நட்பு ஆராய்தல் பா.7) தாளாண்மை (பா.3) போன்ற அதிகாரங்கள் விருந்தோம்பல் செய்தியை வலியுறுத்துகின்றன.இங்கு விருந்து பகைவரிடமிருந்து கிடைக்குமாயின் வேண்டாம் எனவும்,சுற்றத்தாரிடமிடமிருந்து பெறும் உணவு கூழ் போன்று இருந்தாலும் உண்ணுதற்கினியது எனவும் கூறப்படுகின்றன.பகைவபிடமிருந்து பெறும் உணவு வேம்புக்கு நிகராகும் (206,207,210).எனவே விருந்து பகைவரிடமிருந்து பெறலாகாது என்பது இங்கு சுட்டப்படுகின்றன.மேலும் நட்பு ஆராய்தலின் ஏழாம் பாடல் உணவின் சுவை உணவுக்கு உள்ளே இருப்பதைக் காட்டிலும்,உணவை வழங்குவோர் உள்ளத்தின் உள்ளே இருக்கிறது என்பதை கூறுகிறது.

பழமொழி நானூறில் விருந்தோம்பல் என்ற தலைப்பு இடம்பெறவில்லை.ஆனால் இல்வாழ்க்கை என்ற தலைப்பில் விருந்தோம்பல் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.ஏழை வீட்டு விருந்திற்கு செல்வந்தர் செல்லக் கூடாது என்ற கருத்தை 338 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,

நல்கூர்ந்தவர்க்கு நனி பெரியர் ஆயினர்
செல்விருந்து ஆகிச் செலல் வேண்டா –ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம் -குருவி
குறுங்கு அறுப்பச் சோரும் குடர்


என்ற பாடலாது ஏழை வீட்டிற்கு செல்வந்தர் விருந்திற்கு செல்லக் கூடாது ஏழை செல்வந்தர் நிலைக் கருதித் தன் எல்லை கடந்து விருந்து ஓம்புதால் துன்புறுவார்.இதன் மூலம் தம் தகுதியுடையோர் வீட்டிற்கே விருந்திற்கு செல்ல வேண்டும் என்பதும் தம் தகுதிக்கு ஏற்றவாறு விருந்திற்கு அழைக்க வேண்டும் என்றக் கருத்துப் பெறப்படுகிறது.மற்றொரு பாடல் (331) குறிப்பறிந்து விருந்தோம்ப வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

நான்மணிக்கடிகை அன்பில்லாதவர் மனையில் உணவு உண்ணக் கூடாது என்கிறது இதனை,

குற்றம் தமர் அல்லார் கையத்து ஊண்    (நான்.94.3-4)

என்ற பாடலடி புலப்படுகிறது.இக்கருத்து நாலடியார் 210 ஆம் பாடலுடன் ஒப்புநோக்கத்தக்கது.

சென்ற விருந்தும் விருப்பு இல்லார் முன் சாம்  (நான்.47:1-2)

என்ற பாடலடி விருப்பமில்லாமல் பெறும் விருந்தோம்பல் நல்ல தல்ல என்ற கூறுகின்றது.கலங்களை முறையாகப் பரப்பி உபசரித்தலால் விருந்து அளிப்பதால் விருந்தினர் மகிழ்வர் என்பதை,

‘……………….கலம் பரப்பி
நன்றூட்ட நந்தும் விருந்து   (நான்.63:3-4)

என்ற பாடலடியால் அறியமுடிகிறது.ஆசாரக்கோவை உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெளிகளைப் பற்றி 11 பாடல்களில் (20,21,22,23,24,25,26,27,28,39,40) சொல்லப்படுகின்றன.இங்கு விருந்தோம்புவதற்கு உணவு இன்றியமையாமை என்பதால் நெறிகள் சொல்லப்படுகின்றன.உண்ணும் முன் நீராடிக் கால் கழுவி, வாயைத் துடைத்து,உண்ணும் கலத்தைச் சுற்றி நீர் தெளித்து உண்ண வேண்டும் (18) என்னும் உண்ணும் பொழுது கிழக்கு நோக்கி அமர்ந்து ஆடாமல் அசையாமல் நன்றாக அமர்ந்து வேறு எதையும் பார்க்காமல் பேசாமல் உணவைத் தொழுது சிந்தாமல் உண்ண வேண்டும் என்றும் ஆசாரக்கோவை கூறுகின்றது (20) இத்தகைய உணவில் கறிவகைகளை உண்ணும் பாங்கு மொழியப்படுகின்றன.

இனிப்புப் பண்டங்களை முதலிலும் கசப்பான உணவு வகைகளைகட கடைசியுpலும் எஞ்சிய பொருள்களை இடையிலும் முறைப்படி உண்ண வேண்டும் என்பதை,

கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் உண்  (ஆசா.25)


என்ற பாடல் செப்புகிறது.மேலும் பெரியோருடன் அமர்ந்து உண்ணும் போது அவர்களின் வலப்பக்கம் அமர்ந்து உண்ணுவது,அவர்களுடன் நெருங்கி அமர்ந்து அவர்கள் உண்ணுவதற்கு முன் உண்ணுவது அவர்களுக்கு முன் பந்தியை விட்டு எழுவது ஆகிய செயல்கள் செய்யக் கூடாது என்பதை உணர்த்துகிறது (ஆசாரக்.24) மேலும் உண்ட பின்னர் உண்கலங்களை முறையாக நீக்க வேண்டும்.எச்சில் நீங்கும் படி வாயையும் அடியையும் துடைத்து மூன்று நீர் குடிக்க வேண்டும்.(27)இக்கருத்திற்கு அரண் சேர்க்கும் வகையில் வாய்ச் சுத்த நெறியைச் சீவகசிந்தாமணி கூறுகிறது.

வாசநற் பொடியும் நீரும் காட்டிடக் கொண்டு வாய்ப்பப்
புசுறுத் தங்கை நீரை மும்முறைகுடித்து முக்கால்
காசறத் துடைத்த பின்றைக் கைவிரலுறுப்புத் தீட்டித்
தூசினா லங்கை நீவியிருந்தனன் தோற்ற மிக்கான்

என்ற பாடலால் அறியலாம்.மேலும் ஆசாரக்கோவையும் விருந்தினர்க்குக் கொடுத்த பின்  உண்ணுதல் (21) இன்முகத்துடன் வரவேற்றல்,இனியசொல் கூறுதல்,காலுக்கு நீர் அளித்தல்,மணை,பாய்,தங்க இடம் முதலியவற்றை கொடுத்தல் (54) விருந்தோம்பலின் சிறப்புகளாக கூறப்படுகின்றன.

மேலும் இவ்வுணவை எம்முறைகளில் எல்லாம் உண்ணக் கூடாது என்பதையும் எடுத்தோம்புகின்றன.படுத்துக் கொண்டு,நின்று கொண்டு,திறந்த வெளியில்,அதிகமாக ஆகிய முறைகளில் உணவை உட்கொள்ளக் கூடாது என்பதை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்(ஆசா.23).இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்ளக் கூடாது என்பதை ஆத்திசூடி நவில்கிறது.இதனை,

மீத்தூண் விரும்பேல்  (ஆத்தி.91)

என்ற பாடல் குறிப்பிடுகிறது.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று குறிப்பிடும் பழமொழியும் இங்கு நோக்கத்தக்கது. மேலும் புதிய சுற்றத்தார் விருந்து உண்டு கொண்டிருக்கும் பொழுது சான்றோர் உயர்ந்து பீடத்தின் மேல் அமராமலும்,வந்திருப்போர் தமக்கு எல்லையற்ற துன்பங்களைத் தந்தவராக இருப்பினும் அவர் மனம் நோகும்படி எதுவும் செய்யும் (40)இதன் மூலம் விருந்தினரை அனுச்சரிக்கும் இயல்புடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்து பெறப்படுகிறது.

இன்னா நாற்பது பகிர்ந்து விருந்தோம்புவார் வீட்டிற்கு சென்று உணவு உட்கொள்ளக் கூடாது என்ற நெறியை வலியுறுத்துகிறது.

பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா  (இன்.24.2)


என்ற பாடலடி புலப்படுகிறது. பிறர்க்குக் கொடுத்து வாழும் நெறியால் தான் இவ்வுலகம் நிலைபேறுடையதாய் இடையும் என்று கூறுகிறது.இதனை,

“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரா
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே”                (புறம்.182.1-3)


என்ற பாடலடிகள் விருந்தோம்பலின் சிறப்பை குறிப்பிடுகிறது. இக்கருத்தை அற இலக்கியங்களும் மொழிகின்றன. திரிகடுகம் விருந்தினர் இல்லாமல் தனித்து உண்ட பகற்பொழுது நோய் போன்றது (4) என விருந்தோம்பலின் சிறப்பைக் கூறுகின்றது.தனக்குக் கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு மகிழும் விருந்தினன் உயர்ந்தவன் என்று சிறப்பிக்கப்படுகிறான் என விருந்தினது தன்மையும் எடுத்துரைக்கின்றன.

ஏலாதி விருந்தோம்பும் முறையை விருந்தினருடன் இன்சொல் பேசி,கலந்துரையாடி அவர்களுக்கு இருக்கை கொடுத்து அறுசுவை உண்டி (உணவு) அளித்து கடுஞ்சொல் நீக்கி பணிவு கலந்த சொல்லைக் கூறும் இயல்புடையவனாய் இருக்க வேண்டும்.என்பதை,

“இன்சொல்,அளாவல்,இடம்,இனிது ஊண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல் -மென்சொல்
முருந்து எய்க்கும் முன்போல் ஏற்றினாய் - நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து”  (ஏலா.7)


என்ற பாடலால் அறியலாம்.உணவை நீராடிய பின்னே ஒருவர் உணவை உட்கொள்ள வேண்டும் என்ற கருத்தை திரிகடுகம் 27 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.
மேற்கூறபட்ட கருத்துக்களுக்கு அரண் சேர்க்கும் விதமாக பிற்கால நீதி இலக்கியமான கொன்றை வேந்தன்

“மருந்தே  ஆயினும் விருந்தோடு உண்”  (கொன்.70)
“விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்” (கொன்.83)


என்ற பாடல்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்றும்,விருந்தினரைச் சிறப்புற ஒம்பும் பண்பு இருக்க வேண்டும் என்று எடுத்துரைப்பது இங்கு  நோக்கத்தக்கது.

முடிவுரை
அற இலக்கியங்களின் வழி சொல்லப்பட்டுள்ளக் விருந்தோம்பலை இக்காலச் சமுதாயத்தினரும் உணர்ந்து செயலாற்றுவதே சாலச் சிறந்தது என்பது இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)        பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009.
3.மணிக்கவாசகன், ஞா                சிறுபஞ்சமூலம் உமா பதிப்பகம் சென்னை -600017 முதற்பதிப்பு -2009
4.மாணிக்கம், அ                    திருக்குறள் தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
5.நாராயண வேலுப்பிள்ளை,எம்        முதுமொழிக்காஞ்சி கலைஞன் பதிப்பகம் சென்னை -600017  பதிப்பு -1989
6.மாணிக்க வாசகன,; ஞா              நாலடியார்   உமா பதிப்பகம் சென்னை -600001 முதற்பதிப்பு -1993
7.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)       நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
8.முத்துராமன், ஆ                                                         வாழ்வியல் சிந்தனைகள் மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2006
9.அகராதிகள்                            கழக அகராதி தமிழ் -தமிழ் அகர முதலி  மதுரை தமிழ் அகராதி

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர்: - சு.ஜெனிபர் முனைவர் பட்ட    ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி  -24 -