உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் வீரர்களைப் போற்றும் வழக்கம் இருந்துள்ளது. எல்லா நாடுகளிலும் வீரர்களுக்குத் தனிச்சிறப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் நாட்டில் வீரர்களுக்குத் தனிச்சிறப்பு இருந்ததைச் சங்ககாலப் புற இலக்கிய நூல்கள் மூலம் அறியமுடிகிறது. பழந்தமிழர் போர்புரிவதற்கென்று தனியொரு இலக்கணம் கண்டனர். தமிழ்மொழியில் போரைப் பற்றிய  தமிழ் இலக்கியங்கள் பல  இருக்கின்றன.  அவர்கள் அவற்றிற்குப் புறப்பொருள் என்று பெயரிட்டிருந்தனர். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இலக்கண நூல்கள் புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தமிழர்களின் வீரத்தைப் பற்றியும் வீரத்தைப்போற்றுவது பற்றியும் தெளிவாக எடுத் துரைக்கின்றன. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாமல் திறலோடு போர்செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து பாராட்டினார்கள்; திறலோடு போர்செய்து களத்தில் வீழ்ந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு நினைவுச்சின்னம் அமைத்தனர். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிச் சங்க நூல்கள் விரிவாக விவரிக்கின்றன. பண்டைக்காலத்தில் போர்க்களத்தில் பெருவீரங்காட்டிப் போர்புரிந்து வீரமரணம் அடைந்த வீரனுக்கு அவன் வீழ்ந்த இடத்தில் நடுகல்நட்டு வழிபடும் வழக்கம் இருந்தது. இதனைச் சங்ககால மக்கள் வீரக்கல் அல்லது நினைவுக்கல் என வழங்கினர். வெட்சிப்போர், கரந்தைப்போர், உழிஞைபோர், நொச்சிப்போர், தும்பைப்போர், வாகைப்போர் என்று போர் முறைகளைத் தமிழர் ஏழு வகைகளாகப் பிரித்திருந்தார்கள்; ஏழு வகையான போர்களிலே எந்தப் போரிலானாலும் ஒரு வீரன் திறலாகப் போர்செய்து உயிர் விட்டால் அந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார்கள்; சிறப்புச் செய்தார்கள். தமிழகத்தில் வீரக்கல் நடுகிற வழக்கம் மிகப் பழங்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் நடப்பட்ட ஆயிரக்கணக்கான நடுகற்கள் தமிழ்நாட்டிலே பல இடங்களில் காணக்கிடக்கின்றன. வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் திருக்குறள் இவ்வாறாக எடுத்துரைக்கிறது.

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.(குறள்.771).

இலக்கியத்தில் நடுகல்: வீரத்தைப் பாராட்டி நடப்படுவதனால் நடுகல்லுக்கு வீரக்கல் என்றும் பெயர் உண்டு.  காட்சி என்பது நடவேண்டிய கல்லை மலையில் கண்டு தேர்ந்தெடுப்பது. கால்கோல் என்பது தேர்ந்தெடுத்த கல்லைக் கொண்டு வருவது. நீர்ப்படை என்பது கொண்டுவந்த கல்லில் இறந்த வீரனுடைய பெயரையும் அவனுடைய சிறப்பையும் பொறித்து நீராட்டுவது. நடுதல் என்பது அந்த வீரக்கல்லை நடவேண்டிய இடத்தில் நட்டு அதற்கு மயிற்பீலிகளையும் மாலைகளையும் சூட்டிச் சிறப்புச் செய்வது. வாழ்த்து என்பது யாருக்காகக் கல் நடப்பட்டதோ அந்த வீரனுடைய திறனையும் புகழையும் வாழ்த்திப்பாடுவது. கல்நாட்டு விழாவுக்கு ஊரார் மட்டும் அல்லாமல் சிறப்பான விரர்களும் வந்து சிறப்புச் செய்வார்கள். தொல்காப்பியம் முதலாகப் பிற்கால இலக்கண நூலான நேமிநாதம் முடியவும் உள்ள இலக்கண நூல்களில் நடுகல் எடுத்தலுக்குரிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று நடுகல்லுக்குத் துறைகளை அளிக்கிறார். அவற்றுள் பெரும்படையும் வாழ்த்துதலும் நடுகல் வழிபாட்டைக் காட்டுவன. வீரரின் பெயரும் பீடும் எழுதப்பட்டு, விளங்கிய நடுகற்கள் வழிபடப்பட்டு வந்தமையைச் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு; எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன. பண்டைத்தமிழர்கள் நடுகல்லைத் தெய்வமாக வழிபட்டனர். போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனுடைய வீரத்தைப் போற்றினார்கள். அதற்குரிய கல்லை மலைக்குச் சென்று தேர்ந்தெடுத்து அதைக் கொண்டுவந்து நீரில் இட்டு நீர்ப்படை செய்து பிறகு அந்த வீரனுடைய பெயரையும் புகழையும் அக்கல்லில் எழுதி அதை நடவேண்டிய இடத்தில் நட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்புச் செய்து வாழ்த்துவார்கள். நடுகற்கோவில்களைப் போன்று அரசனைப் புதைத்த இடத்தில் சமாதிக் கோயில்கள் உருவாயின. இக்கோவில்கள் பள்ளிப்படைக் கோவில்கள் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பெறுகின்றன. வடக்கிருந்து (பட்டினி கிடந்து) உயிர் விட்டவருக்கும் கண்ணகி போன்ற வீரபத்தினிக்கும் நடுகல் நட்டுச் சிறப்புச் செய்வதும் உண்டு. கணவனோடு தீயில் விழுந்து உடன்கட்டை ஏறின மகளிர்க்கும் நடுகல் நடுவது உண்டு. இது மஸ்திக்கல் (மாசதிக்கல்) என்று பெயர் பெறும் (வேங்கடசாமி,2001:256).

யாருக்கு நடுகல்: போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மட்டுமன்றி வடக்கிருந்து உயிர்துறந்தவர்களுக்கும் உடன்கட்டை ஏறிய உத்தமமாதர்களுக்கும் கோவில் கட்டியவர்களுக்கும் கால்வாய் வெட்டியவர்களுக்கும் நரபலியாக வெட்டுண்டவர்களுக்கும் நற்காரியத்தின் பொருட்டுத் தற்கொலை செய்து கொண்டவருக்கும் நிரைகவர்தல் நிரைமீட்டல் ஆகிய போர்களில் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. அப்படி இறந்த வீரர்களின் பீடும் பெயரும் பொறிக்கப்பட்ட வீரக்கல் நிலைநாட்டப்பட்டது. விலங்கினங்களிடமிருந்து ஊர்மக்களைக் காக்கும் பொருட்டு விலங்குகளுடன் போரிட்டு மரணம் அடைந்த வீரர்களுக்கும் நடுகல் எடுக்கப்பட்டது. புலியுடன் போரிட்டுமாண்ட வின்றன் வடுகன் என்னும் வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் மோத்தக்கல் என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு இதற்குச் சான்றாகத் திகழ்கிறது. மனிதர்களுக்கு மட்டுமன்றிச் செயற்கரிய செயல் செய்த விலங்குகளுக்கும் நடுகல் எடுக்கப்பட்டது. கோவிவன் என்ற நாய்க்கு எடுக்கப்பட்டுள்ள எடுத்தனூர் நடுகல் இதற்குச் சான்றாக உள்ளது. சங்க காலத்திய நடுகற்கள் இதுகாறும் கிடைக்கவில்லை. கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சார்ந்த நடுகற்கள் பல தொல்பொருள் துறையின் முயற்சியால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அமைப்பும் உருவமும் எழுத்தும் பலவகைப்பட்டன. நடுகற்களைக் குலதெய்வமாகவும் சிறுதெய்வமாகவும் கருதி மக்கள் வழிபடுகின்றனர். நடுகல் தெய்வங்களையன்றிப் பிறதெய்வங்களை வழிபடமாட்டோம் என்று மறக்குடி மகளிர் கூறியதாகப் புறநானூறு (335 : 9 – 12) கூறுகிறது. பழந்தமிழரின் வீரவழிபாட்டு அடிப்படையில் நடுகல் தெய்வங்கள் தோன்றின. இந்நடுகல் வழிபாடே பிற்காலத்தில் சிறுதெய்வ வழிபாடு தோன்றக் காரணமாக அமைந்தது எனும் ஒரு கருத்து அறிஞர்களிடையே நிலவுகிறது. இந்நடுகற்கள் உள்ள இடங்கள் வேட்டுவன்கோவில், வேடியப்பன்கோவில், பட்டான்கோவில், ஐயனாரப்பன்கோவில், மீனாரப்பன்கோவில் எனப் பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகின்றன.
நடுகற்களின் வகைகள்: கற்புடைய பெண்களுக்கு நாட்டப்படும் கல் மகாசதிக்கல், மாசுதிக்கல் (மாஸ்திக்கல்), சதிக்கல் என்று வழங்கப்பட்டது. கருநாடகமாநிலத்தில் மாசதிக்கல் மிகுதியாகக் காணப்படுகின்றது. கணவன் இறந்தபோது, மனைவி உடன்கட்டையேறிய நினைவாகச் சதிக்கற்கள் எடுக்கப்பட்டன. இவை கருநாடக மாநிலத்தில் மகாசதிக்கல் என்றும் உறாசன தோளுகல்லு என்றும் சொல்லப்படுகின்றன. இவை கேரள மாநிலத்தில் புலச்சிக்கல் என்றும் குசராத்துப் பகுதிகளில் பாலியா என்றும் வழங்கப்படுகின்றன. இக்காலத்திலும் இவை வீரமார்த்தி கோவில் என்றும் வீரமரணர்த்திக் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன. சமணப்பெரியார்கள் சல்லேகனை விரதம் இருந்து உயிர்விட்டால் அவர்கட்கு நிசீதிகைக்கல் என்ற நினைவுக்கல் நாட்டுவது வழக்கம். இளகீரனார் சங்ககால நடுகல் நெடுநிலை நடுகல் ஆக இருந்ததாகவும் ஐயனாரிதனார் ஓங்கிய கல் ஆக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்கும் தன் தாயாருக்கும் கல் நட்டதனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. வடக்கிருந்து இறந்தபோது கோப்பெருஞ்சோழனுக்கு நடப்பட்ட கல் பற்றிப் புறநானூறு குறிப்பிடுகின்றது.

நடுகல்லின் சிற்ப அமைதி: நடுகற்களில் வீரனது உருவம் போர்செய்யும் நிலையில் செதுக்கப்பட்டிருக்கும். வீரனின் இடையில் நீண்ட துணி சுற்றப்பட்டிருக்கும். தலையில் முடியலங்காரம் அல்லது கவசம் இருக்கும். மிடுக்காகத் தோற்றமளிக்கும் வீரனின் இடக்கையில் கேடயமும் சில சமயங்களில் வில்லும் காணப்படும். வலக்கையில் வாளும் அல்லது குறுவாளும் இருக்கும். இவை மங்கலப்பொருள்களாகக் கருதப்பட்டன. இறந்தவீரனின் உருவத்திற்குக் கீழே அல்லது மேலே கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும். பலவற்றில் கல்வெட்டுகள் காணப்படவில்லை.

காணப்படும் இடங்கள்: தென்னிந்தியாவில் கருநாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடுகற்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், புதுச்சேரி, தருமபுரி, சேலம் ஆகிய இடங்களில் மிகுதியான நடுகற்கள் காணப்படுகின்றன. இருப்பினும், இவைகள் கருநாடகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன (பாலுசாமி, 2009:189-190).

சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு மிகுதியாகக் காணப்படுகிறது. மக்கள் இவ்நடுகல் வழிபாட்டைத் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகக் கடைப்பிடித்துள்ளனர். சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் எனும் நூல் தொண்டைமண்டலத்திற்குரிய நூலாகக் கருதப்படுகிறது. அந்நூல் தொண்டைமண்டல மக்களின் வாழ்வியல் கூறுகளை மிகத் தெளிவுபடக் கூறுகிறது. அந்நூலில் நடுகல் வழிபாடு குறித்த செய்தி காணக்கிடக்கிறது. தொண்டைமண்டல மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களில் நடுகல் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

மணிகள் ஒலிக்கும் வேலினை உடைய மழவர்கள் பகைப்புலத்தில் இருந்து பசுக்களைக் கவர்ந்து வர மறவராகிய கரந்தை வீரர்கள் அவர்களை எதிர்த்துப் பசுக்களைக் கொள்ள, அதனால் இறந்து பட்டோர்க்கு நடுகல் எடுத்து மயிலிறகு சூட்டித் துடி கொட்டி அரிசியிலிருந்து தயாரித்த கள்ளோடு செம்மறியாட்டுக் குட்டியைப் பலிக்கொடுப்பர்; வழிபறிக் கள்வரால் இறந்து பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பெற்ற இடத்தில் நடப்பெற்ற நடுகற்கள் கரந்தை வீரர்கள் வெட்சி வீரர்கள் கொண்டுசென்ற ஆநிரைகளை மீட்டுச்சென்று நடத்திய போரில் இறந்த கரந்தை வீரர்களுக்கு அவர்களின் பெயர்கள் எழுதி நடப்பெற்ற நடுகற்கள் மயில்தோகை சூட்டப்பெற்றும்  வேல் கேடயத்தையும்  ஊன்றி கிடுகுப்பலகை வைக்கப்பெற்றும் வழிபடுவர்; காட்டில் உள்ள நடுகற்களில் இறந்தோரின் பெயரும் பெருமையும் எழுதி வைத்துள்ள எழுத்துக்களைப் பொறுமையாகப் பார்க்கக்கூட மனமின்றிப் பயத்தால் விரைவாகச் சென்றுள்ளனர். அவைகளில் அணியப்பெற்ற மாலைவாடியும் புதுநீரில் நீராட்டப்பெறாதும் உளி கொண்டு செதுக்கப்பெற்ற எழுத்துக்கள் அழிந்தும் புதியவர்களுக்கு அது வேறுபொருள் படும் நிலையில் காணப்படும். நடுகல் நட்டு அதற்கு மயிற்பீலியும் சூட்டி அலங்க்கரிக்கப்பட்ட சிறிய கலத்தில் மதுவையும் படைத்தனர்; நடுகல் வழிபாடு பொதுவாகத் தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டுக் கூறாக இருந்தாலும் வட மாவட்டங்களான தொண்டைமண்டலப் பகுதிகளில் பரவலாக இன்றும் காணப்படுகின்றன. அவ்வழிபாடு வழிவழியாகப் பின்பற்றப்படும் ஒரு வழிபாடாகக் காணப்படுகிறது. இப்பகுதிகளில் இவ்வழிபாடுகள் பல்வேறுகோணங்களில் மாற்றம்பெற்றுப் புதுத்தன்மை கலந்த விழாக்களாக நடைபெறுகின்றன. அவர்கள் நடுகல் எடுத்தல், அரிசியில் தயாரித்த கள்ளோடு செம்மறியாட்டுக் குட்டியைப் பலிக்கொடுத்தல், வேல் கேடயத்தை ஊன்றி கிடுகுப்பலகை வைத்துவழிபடுதல் மதுவைப் படைத்தல் போன்ற வழிபாடுகள் மாற்றம் அடைந்து திருவிழாக்கள் எனும் தலைப்பில் எடுத்துக்கொண்டாடிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகைவருடைய (மாற்றாருடைய) ஊரில்போய் அங்குள்ள தொறுக்களைக் (எருமை, பசு மந்தைகளை) கவர்ந்து கொண்டு வருவது பழந்தமிழகத்தில் அடிக்கடி நடந்த சாதாரண நிகழ்ச்சியாகும். இது களவுக் குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த வெட்சிப் போரைச் சிற்றரசர்களும் வீரத்தில் சிறந்த மறவர்களும் அரசர்களும்கூடச் செய்தார்கள். முள்ளூர் மன்னன் (மலையமான் திருமுடிக்காரி) இரவில் குதிரை மேல் சென்று அயலூரிலிருந்த ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு வருவது வழக்கம். இதைக் கபிலர் தமது பாடலில் பின்வருமாறு கூறுகிறார்

மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து
எல்லித் தழீஇய இனநிரை (நற்.291: 7 – 8).

செங்குட்டுவனுடைய தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணிய நாட்டில் (விந்திய மலைப்பிரதேசத்தில்) சென்று பகைவருடைய பசுக்களைக் கவர்ந்து கொண்டு சேரநாட்டுத் தொண்டிப்பட்டினத்தில் கொண்டு வந்து பலருக்குக் கொடுத்தான் என்று பதிற்றுப்பத்தில் 6-ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது.

பகைவர் கொண்டு போன ஆனிரைகளை மீட்பதற்காக நடந்த கரந்தைப் போரில் ஒரு வீரன் போர் செய்து ஆனிரைகளை மீட்டான். ஆனால், அவன் வெற்றியடைந்த போதிலும் அவன் பகைவரின் அம்புகளினால் பட்ட காயத்தால் இறந்து போனான். இதை ஓக்கூர் மாசாத்தியார் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதில் மகளிர் ஆதல் தகுமே
மேனாளுற்ற செருவிற்கு இவள் தன்ஐ
யானை யெறிந்து களத் தொழிந்தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப் பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித் துடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய்நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே (புறம்.279).

கரந்தைப்போரில் இறந்துபோன ஒரு வீரனுக்கு நடுகல் நட்டதை ஆவூர் மூலங்கிழார் தம்முடைய பாடலில் பின்வருமாறு எடுத்துக்காட்டியுள்ளார்:

நிரை இவண்தந்து நடுகல் ஆகிய (புறம்.261: 15).

புலவர் உறையூர் இளம்பொன் வாணிகனார் கரந்தைப்போரில் வீரமரணம் அடைந்து ஒரு வீரக்கல் நட்டபோது அவன்மீது கையறுநிலை பாடினார். அந்த நடுகல்லின்மேல் அவனுடைய பெயரைப் பொறித்து மாலைகளாலும் மயிற்பீலிகளாலும் அழகு படுத்தியிருந்ததை அவர் தமது பாடலில் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயில் பீலி சூட்டி பெயர் பொறித்து
இனிநட் டனரே கல்லும் கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வரும்கொல் பாணரது கடும்பே? (புறம்.264).   

கோவலர் (ஆயர்) வளர்த்து வந்த பசுமந்தைகளைப் பகையரசனுடைய வீரர்கள் ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். இதனையறிந்த அவ்வூர் வீரன் அவர்களைத் தொடர்ந்து சென்று வில்லை வளைத்து அம்புமாரி பொழிந்து பகைவரை ஓட்டித் தன்னூர்ப் பசுக்களை மீட்டுக்கொண்டான். ஆனால், வெற்றிபெற்ற அவன் பகைவீரர்கள் எய்த அம்புகளினால் புண்பட்டு மாண்டுபோனான். திறலுடன் போர்செய்து மாண்டுபோன அவ்வீரனுக்கு அவ்வூர் கோவலர்கள் நடுகல் நட்டார்கள். அந்த நடுகல்லுக்கு வேங்கைமரத்துப் பூக்களினாலும் பனங்குருத்துகளாலும் மாலைகள் கட்டிச்சூட்டி சிறப்புச் செய்தார்கள். இந்தச் செய்தியைச் சோணாட்டு முகையலூர் சிறு கருத்தும்பியார் தம்முடைய பாடலில் பின்வருமாறு கூறியுள்ளார்:

ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை ஒள்இணர் நறுவீப்
போந்தையந் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல்ஆர் கோவலர் படலை சூட்ட
கல்ஆயினையே கடுமான் தோன்றல் (புறம்.265).

இன்னொரு ஊரில் பகைவர்கள் வந்து அவ்வூர்ப் பசுமந்தைகளைக் கவர்ந்து கொண்டு போனார்கள். அப்போது அவ்வூர் வீரன் அவர்களைத் தொடர்ந்து சென்று போராடி மந்தைகளை மீட்டுக்கொண்டான். ஆனால், பகைவர் எய்த அம்புகள் உடம்பில் பாய்ந்தபடியால் அவன் இறந்து போனான். அவனுக்காக நட்ட வீரக்கல்லில் அவனுடைய பெயரைப்பொறித்து மயிற்பீலிகளினால் அக்கல்லை அழகுசெய்து போற்றினார்கள் என்று மருதன் இளநாகனார் என்னும் புலவர் கீழ்க்கண்டவாறு  பாடுகிறார்:

பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம். 131 : 11).
தன் ஊர்ப்பசுக்களைப் பகைவர் கவர்ந்து கொண்டு போனபோது அவ்வூர் வீரன் அப்பகைவரிடமிருந்து பசுக்களை மீட்டான். ஆனால், பகைவரின் அம்புகளினால் புண்பட்ட அவன் இறந்து போனான். அவ்வூரார் அவ்வீரனின் நினைவுக்காக வீரக்கல் நட்டுப் போற்றினார்கள். அந்தக் கல்லின்மேலே அவ்வீரனுடைய பெயரை எழுதினார்கள். மாலைகளையும் பீலிகளையும் சூட்டினார்கள்; நடுகல்லின் மேலே சித்திரப் படத்தினால் (சித்திரம் எழுதப்பட்ட துணி) பந்தல் அமைத்துச் சிறப்புச் செய்தார்கள். இந்நிகழ்ச்சியை வடமோதங்கிழார் பின்வருமாறு கூறியுள்ளார்:

உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடம்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழி
படம்செய் பந்தர்க் கல்மிசை யதுவே (புறம்.260).

ஒரு ஊரிலிருந்த பசுமந்தைகளை சில வீரர்கள் வந்து பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். அதையறிந்த அவ்வூர் வீரர்கள் சிலர் அவர்களைத் தொடர்ந்து சென்று பசுக்களை மீட்பதற்காகப் போர் செய்தார்கள். பகைவரும் எதிர் நின்று போர்செய்தனர். பகைவீரர்களின் அம்புகள் அவர்களுடைய உடம்பில் தைத்து அவர்கள் அக்களத்திலே இறந்து போனார்கள். ஒரு வீரன் மட்டும் புறங்கொடாமல் நின்று போர்செய்தான். பகைவீரர்களின் அம்புகள் அவனுடைய உடம்பில் தைத்து அவன் அக்களத்திலே இறந்துபோனான். அவ்வூரார் அவ்விறல் வீரனுக்கு நடுகல் நட்டுப் போற்றினார்கள் என்பதைப் பின்வரும் பாடலடிகள் காட்டுகின்றன:

பல்ஆத் திரள்நரை பெயர்த்ரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்உமிழ் கடுங்கணை மூழ்க
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே (புறம்.263).

ஆண்டுதோறும் வீரக்கல்லுக்கு அவ்வீரனுடைய உறவினர் பூசை செய்தார்கள்; அந்நாளில் அந்நடுகல்லை நீராட்டி எண்ணெய் பூசி மலர் மாலைகளைச் சூட்டி நறுமணப் புகையைப் புகைத்தார்கள். அந்தப் புகையின் மணம் ஊரெங்கும் கமழ்ந்தது. அவர்கள் வீட்டில் தயாரித்த மதுவை இறந்த வீரனுக்குப் பலியாகக் கொடுத்தனர். இந்தச் செய்தியை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் தம்முடைய செய்யுளில் பின்வருமாறு கூறுகிறார்:

இல்அடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி ஊட்டி
நல்நீராட்டி நெய்ந்நறைக் கொளீஇய (புறம்.329).

சங்ககாலத்துத் தமிழகத்திலே அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன. ஆகையினால் நாடெங்கும் பல நடுகற்கள் காணப்பட்டன என்பதைக் கீழ்க்காணும் பாடல் காட்டுகிறது:

நல்லமர்க் கடந்த நலனுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம்.67: 8 – 10)

புலவர் நோய்பாடியார் கூறியது போன்று ஊர்களிலும் ஊர்களுக்குச் செல்லும் வழிகளிலும் நடுகற்கள் இருந்தன.     நடுகற்கள் பலகை போன்று அமைந்த கருங்கற்களினால் ஆனவைகளாகும். அவை நீண்டதாக இருந்தன. இதனை ‘நெடுநிலை நடுகல்’ என்று ஒரு புலவர் கூறுகிறார். பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் இருந்தன. பழமையான நடுகற்களின் மேலே செடி கொடிகளும் படர்ந்திருந்தன. நடுகல்லில் இறந்த வீரனுடைய பெயரும் பீடும் எழுதப்பட்டிருந்தபடியால் ‘எழுத்துடை நடுகல்’ என்று இது கூறப்பட்டது. வழிப்போக்கர் வழியில் உள்ள நடுகற்களண்டை நின்று அக்கற்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படிப்பது வழக்கம். சில எழுத்து மழுங்கி மறைந்துபோய் சில எழுத்துகளே எஞ்சியிருக்கும். அவ்வெழுத்துகளைப் படிப்போருக்கு அதன்பொருள் விளங்காமலிருக்கும்.


சில வீரர்கள் தங்களுடைய அம்புகளை நடுகற்களின் மேல் தேய்த்துக் கூராக்குவர். அம்பு முனையைத் தேய்க்கும்போது நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் சில மாய்ந்துபோகும். எஞ்சியுள்ள எழுத்துகளைப் படிப்போருக்கு அவ்வெழுத்தின் பொருள் விளங்காமற் போயிற்று. இச்செய்தியை மருதன் இளநாகனார் பின்வருமாறு கூறுகிறார்:

இருங்கவின் இல்லாப் பெரும்புல் தாடிக்
கடுங்கண் மறவர் பகழி மாய்த்த்தென
மருஞ்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகல்
பெயர்பயன் படரத் தோன்று குயிலெழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்
சூர்முதல் இருந்த ஓமையம் புறவு (அகம்.297: 5 - 11).

உப்பு வாணிகராகிய உமணர் உப்பு மூட்டைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர்ஊராகச் சென்று விற்பார்கள். செல்லும்போது வழியில் உள்ள நடுகற்களின்மேல் வண்டிச்சக்கரம் உராய்ந்து நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத் துகளில் ஒன்றிரண்டு எழுத்துகளைத் தேய்த்து விடுவதும் உண்டு. அவ்வாறு மறைந்துபோன எழுத்து இல்லாமல் மற்ற எழுத்துக்களைப் படிக்கிறவர்களுக்கு அதன் வாசகம் வேறு பொருளைத் தந்தது என்று மருதன் இளநாகனாரே மீண்டும் பின்வருமாறு கூறுகிறார்:

மரங்கோள் உமண்மகன் பேரும் பருதிப்
புன்றலை சிதைத்த வன்றலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தால்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்குங்
கண்பொரி கவலைய கானகம் (அகம்.343: 4 – 9).
சங்க இலக்கியங்களில் நடுகல் வழிபாட்டைக் குறிக்கும் பாடலடிகளைப் பின்வருமாறு காணலாம்:
நடுகல் பீலிசூட்டி துடிப்படுத்து
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் (அகம்.35 : 8 – 9).
எழுத்துடை நடுகல் இன்நிழல் வதியும் (அகம். 53 : 11).
பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம். 67 : 10).
பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம். 67 : 10).
நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் (அகம். 289 : 3).
மருங்கல் நுணுகிய பேஎம்முதிர் நடுகல் (அகம். 297: 7).
புந்தலை சிதைத்த வந்தலை நடுகல் (அகம். 343 : 5).
அடுத்த நடுகல் ஆள்என உதைத்த (அகம். 365 : 4).
நிரைநிலை நடுகல் பொருந்தி இமையாது (அகம். 387 : 15).

நடுகல் ஆயினன் புரவலன் எனவே (புறம்.221:13).
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும் (புறம்.223 : 3).
நடுகல் பீலிசூட்டி நார்அரி (புறம்.232. 3).
நடுகல் கை தொழுது பரவும் ஒடியாது (புறம்.306 : 4).
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப் (புறம்.314 : 3).
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி (புறம்.315 : 2).

தொண்டைமண்டலப் பகுதி மக்களைப் பற்றிக் குறிக்கும் நூலாகிய மலைபடுகடாம் எனும் நூலில் நடுகல் வழிபாடு குறித்த செய்திகள் காணக்கிடக்கின்றன. மனம்பொருந்தாத பகைவர் தாம் தோற்றவிடத்து, வெற்றியால் ஆரவாரம் செய்தபோது அதற்கு வெட்கப்பட்டவீரர், மறுபடியும் போர்புரிந்து தம் உயிரைக் கொடுத்துப் புகழைப்பெற்று, நற்பெயரோடு நடுகல்லாய் நின்றோர் பலர். அக்கற்கள் முதுகிட்டுப்போனவரை இகழ்தல் போன்று தோன்றும். நடுகற்கள் உள்ள பிரிவுவழிகள் பல இன்பம் மிகுகின்ற தாளத்தையுடைய பாட்டு நடுகல்தெய்வத்திற்கு விருப்பமாகும் வகையில் பழமையான மரபுடன் நும் யாழை இயக்கிப் பாடி விரைந்துசெல்லுங்கள், நீங்கள் வழி தெரியாமல் தவித்துத் திரும்பவும் அவ்விடத்திற்கும் வருவது போன்று புதிதாகச் செல்வோர் துன்பப்படாதிருக்கச் சந்திகளில் புல்லைக் கையால் துடைத்து முடிபோட்டு வையுங்கள் என்ற கருத்துக்களில் நடுகல்வழிபாடு குறித்த செய்திகள் காட்டுகின்றன. இதனைப் பின்வரும் பாடலடிகளில் காணலாம்:

தளிபொழி கானம் தலைதவப் பலவே;
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
சொல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்ஏசு கவலை எண்ணுமிகப் பலவே;
இன்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத்
தொன்றுஒழுகு மரபின்நும் மருப்புஇகுத்துத்துனைமின்
பண்டுநற்கு அறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புல்முடிந்து இடுமின் (மலை.386 – 393).

நீங்கள் போகும் இடங்களில் வீரனின் பெயர் தெரியுமாறு கல்லை அகழ்ந்து எழுதிய தெய்வத்தன்மை பொருந்திய நடுகற்கள் மரத்தினடியில் இல்லாத காடுகள் இகழும் தன்மையுடைய வழிகள் உள்ளன. நன்னனோடு பொருந்தாது நீங்கிய அவன் ஏவலுக்குப் பணியாத பகைவர் வாழும் நினைத்தாலே நடுக்கம் தரும் காட்டு வழிகளும் பல் தேன் பிலிற்றுகின்ற கண்ணியையும் தேரைத்தருகின்ற கலிந்த கையையுடைய தனக்கென ஒன்றையும் கொள்ளாத நன்னனை நாடிச் செல்லுகின்றோம் என்று சொன்னால், மேலான செல்வமுடைய அவன் பழைய ஊர்களைப் போன்றே இப்பகைவர் ஊர்களும் நமக்கு, அதனால் தங்கவேண்டிய இடத்தில் தங்கி அச்சமில்லாமல் செல்லுங்கள் என்பதைப் பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன:
செல்லும் தேஎத்துப் பெயர்மருங்கு அறிமார்

கல்லெறிந்து எழுதிய நல்லரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடுஏசு கவலை
ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம்தவப் பலவே;
தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே
மேம்பட வெறுத்தஅவன் தொல்திணை மூதூர்
ஆங்கனம் அற்றே நம்ம னோர்க்கே,
அசைவுழி அசைஇ அஞ்சாது கழியின் (மலை.394 – 403).

சில நடுகற்களிலே கீழ்ப்பகுதி, மேல்பகுதிகளாக இரண்டு சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதி சிற்பம் போர்வீரன் போர் செய்வது போன்று காணப்படுகிறது. அந்தச் சிற்பத்துக்கு மேலேயுள்ள சிற்பம் அந்த வீரன் போரில் இறந்த பிறகு வீரசுவர்க்கம் சென்று, அங்கு அரமங்கையரோடு இருப்பதைக் குறிக்கிறது. இது  வீரமரணம் அடைந்த வீரன் வீரசுவர்க்கம் சென்று இன்பம் அனுபவிக்கிறான் என்னும் கருத்தைப் புலப்படுத்துகிறது. தமிழ் இலக்கியங்களில் நடுகற்களைப் பற்றிப் பல குறிப்புகள் காணப்படுகின்றன. அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் தாம் பாடிய திருவாரூர் மும்மணிக்கோவையில் பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டக்கல்லும் என்று நடுகல்லைக் கூறுகிறார் (வேங்கடசாமி, 2001 : 261).

நடுகற்கள் பலவித உயரங்களில் அமைக்கப்பட்டன. மூன்று அடி உயரமுள்ள நடுகற்களும் பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் உண்டு. இதுவரையில் கடைச்சங்க காலத்து (கி.மு.300 முதல் கி.பி.250 வரையில்) நடுகற்களைப் பற்றி ஆராய்ந்தோம். அக்காலத்து நடுகற்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சங்க காலத்துக்குப் பிறகு கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்நாட்டிலும் கன்னடநாட்டிலும் வீரர்களுக்கு நடுகல் நடுகி்ற வழக்கம் இருந்துவந்தது. பிற்காலத்து வீரக்கற்களில் பல நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தப் பிற்காலத்து நடுகற்களில் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. வட்டெழுத்து வழங்குவதற்கு முன்பு பிராஃமி எழுத்து சங்ககாலத்தில் வழங்கி வந்தது என்பதை இப்போது அறிகிறோம். மலைக்குகைகளிலே பாறைக்கற்களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள பிராஃமி எழுத்துகளிலிருந்து வட்டெழுத்துக்கு முன்பு பிராஃமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கி வந்தது என்பதை அறிகிறோம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத தேசத்தை அரசாண்ட அசோகச்சக்கரவர்த்தி காலத்தில் பிராஃமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கிற பிராஃமி எழுத்துகள் தமிழ்நாட்டுப் பெளத்தர், சமணர் காலத்துக்கு முன்பு அதாவது பிராஃமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் எந்தவகையான எழுத்து வழக்கில் இருந்தது? தமிழர்களுக்கு வேறு எழுத்து இல்லை என்றும் பிராஃமி எழுத்தைத்தான் தமிழர்களும் கைக்கொண்டார்கள் என்றும் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு முதலிய சங்க நூல்கள் எல்லாம் பிராஃமி எழுத்தில் எழுதப்பட்டவை என்றும் ஒருசாரார் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகிறவர்கள் (பிராஃமி எழுத்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு) தொல்காப்பியம் முதலிய சங்ககாலத்து நூல்கள் வட்டெழுத்தினால் எழுதப்பட்டன என்று கூறிவந்தார்கள். இப்போது, பிராஃமி எழுத்து சங்ககாலத்தில் வழங்கி வந்தது என்பது தெரிந்த பிறகு தொல்காப்பியம் முதலிய சங்க நுல்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டவை என்று கூறுகிறார்கள்.

இன்னொரு சாரார் பிராஃமி எழுத்துக்கு முன்பு ஏதோ ஒரு வகையான எழுத்து சங்ககாலத்தில் வழங்கி வந்தது என்றும் பிராஃமி எழுத்து வந்த பிறகு அந்தப் பழைய எழுத்துமுறை மறைந்துவிட்டதென்றும் கூறுகிறார்கள். அந்தப் பழைய எழுத்துமுறை இத்தகைய உருவமுடையது என்பது தெரியவில்லை. பிராஃமி எழுத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் வேறு வகையான பழைய எழுத்து இருந்ததா?  இருந்தது என்று சொல்வதற்குச் சான்று இல்லை. இருக்கவில்லை என்று சொல்வதற்கும் சான்று இல்லை. பிராஃமி எழுத்துத்தான் முதன்முதல் தமிழர் அறிந்த எழுத்து. அதற்கு முன்பு எந்த எழுத்தும் தமிழில் இல்லை என்று கூறுவர், பிராஃமி எழுத்துக்கு முன்பு தமிழில் வேறு எழுத்து இருந்ததா இல்லையா என்னும் கேள்விக்குச் சரியான விடை கூறத் தகுந்தவை சங்ககாலத்து நடுகற்களேயாகும். சங்ககாலத்து நடுகற்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை மேலே சான்று காட்டிக் கூறினோம். அந்த வீரக்கற்கள் கிடைக்குமானால் அக்கற்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு அந்தக் காலத்தில் வழங்கி வந்த எழுத்தின் வரிவடிவத்தை அறியலாம். ஆனால், இதுவரையில் சங்ககாலத்து நடுகல் ஒன்றேனும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. பெளத்தர், சமணர் மட்டும் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டில் பிராஃமி எழுத்தை எழுதினார்கள் என்றால் அக்காலத்தில் பெளத்தர், சமணர் அல்லாத தமிழர் வேறு ஒரு வகையான எழுத்தை எழுதியிருக்க வேண்டும். அந்த எழுத்துகள் நிச்சயமாக அக்காலத்து நடுகற்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, கடைச்சங்க காலத்தில் பிராஃமி எழுத்து வழங்கி வந்ததா அல்லது வேறுவகையான எழுத்து வழங்கி வந்ததா என்பதை அறிவதற்கு அக்காலத்து நடுகற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட வீரக்கற்கள் நிலத்திலே ஆழ்ந்து புதைந்து கொண்டிருக்கும். பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்திலும் புதைந்து கிடக்கலாம். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து ஒன்றுசேர்ந்து இதில் முயல்வார்களானால் பயன் காணக்கூடும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் கோவில்களிலுள்ள கல்வெட்டெழுத்துக்களையும் தரைக்கு மேலே காணப்படுகிற கல்வெட்டெழுத்துக்களையும் மட்டும் கண்டுபிடித்துக் கொண்டிருப்பது போதாது. தரைக்குள் புதைந்து கிடக்கிற வீரக்கல் போன்றவற்றையும் அகழ்ந்தெடுத்து வெளிப்படுத்த வேண்டும் (வேங்கடசாமி, 2001 : 197 - 199).

துணைநூல் பட்டியல்
ஆரூர்தாஸ்., 2008, திருக்குறள் அகராதி மூலமும் சொல்லாக்கமும், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
காசிநாதன், நடன., 2010, காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சீதாராம் குருமூர்த்தி., 2008, காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு, சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை.
சுப்பிரமணியன், ச.வே., 2003, பத்துப்பாட்டு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.
சுப்பிரமணியன், ச.வே., 2006, சங்க இலக்கியம் (முழுவதும்), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி – 6, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 1, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 4, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி-3, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, சமயங்கள் வளர்த்த தமிழ், சென்னை:  எம். வெற்றியரசி.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 5, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2003, சமணமும் தமிழும், சென்னை: வசந்தா பதிப்பகம்.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2003, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 2, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2004, பெளத்தமும் தமிழும், சென்னை: நாம் தமிழர்  பதிப்பகம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.