ஆய்வு: ‘சாயத்திரை’ நாவல் காட்டும் சாய நகரம் திருப்பூர்பண்டைய மனிதன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களைப் பாகுபடுத்தி இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்தான். அக்காலத்தில் பாலைவனம் என்பது குறிஞ்சி, முல்லை நிலங்களில் ஏற்படும் வறட்சியின் காரணமாக உருவாகும் நில அமைப்பின் மாற்றமாகும். இது அரிதாகவே காணப்பட்டது. இன்று பாலையைத் தவிர மற்ற நிலங்களைக் காண்பது அரிதாக உள்ளது. தொழிற்புரட்சியின் விளைவு இயற்கை, செயற்கையாக மாறியது. எனவே ஓசோனில் ஓட்டை விழும் அளவிற்கு சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இன்று பல ஆறுகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. சுப்ரபாரதிமணியன் 'சாயத்திரை" புதினத்தில் திருப்பூர் நகரத்தின் தொழில் வளர்ச்சியையும், விளைவையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் எடுத்துரைக்கின்றார்.

திருப்பூர்

இந்தியாவின் 'டாலர்சிட்டி", 'பனியன் நகரம்", 'குட்டி ஜப்பான்", என்று பலவாறு அழைக்கப்படும் நகரம் திருப்பூர் ஆகும். இவ்வாறு அழைக்கப்படுவதற்கானக் காரணம் ஆயத்த ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிப்பதே ஆகும். அன்றைய நாட்களில் 100-க்கும் குறைவான தொழிற்சாலைகளே இருந்தன காலமாற்றத்தின் காரணமாக '1914-ல் 22 பின்னலாடைத் தொழிற்சாலைகள் இருந்தன. 1991-ல் கணக்கெடுப்பின்படி 2800 ஆக உயர்ந்துள்ளது". (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன்இ ப.5) தற்போது இதன் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உள்ளது. '1940-களில் திருப்பூரில் சாயப்பட்டறை இல்லை. தற்போது 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் உள்ளன". (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன,; ப.5) இந்நகரம் தொழில் வளர்ச்சியின் காரணமாகப் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுத்தாலும் சுகாதாரத்தில் அளவுக்கு அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. 'திருப்பூர் நகரத்திலிருந்து மட்டும் பின்னலாடைத் தொழிற்சாலைகளின் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1985-ல் ரூ.19 கோடியாக இருந்தது. 1996-ல் இது ரூ.2,000 கோடியைத் தாண்டியது (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன் , ப.5) இதனால் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பூரை நோக்கி வருகின்றனர். மக்கள் நெருக்கடி உள்ள நகரமாகவும் மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நகரமாக திருப்பூர் உள்ளது.

சாயம்

சாயம் என்றால் கலர், நிறம் என்று கூறுவர். சாயம் என்பது பொதுவாக நிறமேற்றப்பட்ட பொருளாக அறியப்படுகிறது. இது எந்த பொருளோடு பயன்படுத்தப்படுகிறதோ அதனோடு ஒன்று கலந்துவிடும் இயல்பை உடையது. இது ஓர் நீர்ம கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இழையில் சாயத்தின் விரைவுத் தன்மையை மேம்படுத்த அதற்கு அரிகாரம் தேவைப்படக் கூடும். சாயங்கள் மற்றும் நிறமிகள் இரண்டுமே நிறமேற்றப்படுபவை ஆகும். ஒரு வண்ண நிறமிகளைத் தயாரிக்க எதிர்வினைப் புரியாத உப்புடன் சில சாயங்கள் கரைக்கப்படுகின்றன. அந்த உப்பின் அடிப்படையில் அவை அலுமினிய வண்ணமாகவோ, கால்சியம் வண்ணமாகவோ அல்லது பேரியம் வண்ண நிறமியாகவோ இருக்கும்.

பண்டைய சாயமேற்றும் முறை

இந்தியாவின் சாயமேற்றும் முறை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள்துறை கூறுகின்றது. விலங்குகள், காய்கறிகள் மற்றும் கனிம மூலங்களிலிருந்து சாயங்கள் பெறப்பட்டன. தாவரங்களின் வேர்கள் கொட்டைகள், இலைகள், பட்டைகள், மரக்கட்டைகள் சாயங்களின் ஆதாரமாக இருந்தன. அவுரிச் செடியிலிருந்து நீலநிறச் சாயம் உற்பத்தி செய்யப்பட்டது. 'இந்தியாவில் இருந்து இந்த நீலநிறத்தைத் தெரிந்து கொண்டதால் தான் இதற்கு 'இண்டியோ நீலம்" என்ற பெயர் உலக அளவில் ஏற்பட்டது". (தினமணி, 22.06.2011) சுண்ணாம்பு, சங்கு, முட்டை ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டும் நிறங்கள் தயாரிக்கப்பட்டன. செங்கல் மண்ணில் கிடைக்கும் கனிமங்களிலில் சிவப்பு சார்ந்த வண்ணங்கள் உருவாக்கப்பட்டன. மஞ்சளிலிருந்து மஞ்சள்நிறச் சாயம் உற்பத்தி செய்யப்பட்டது. பூக்களிலிருந்து கூட பல்வேறு வண்ணச் சாயங்கள் உருவாக்கப்பட்டன. இத்தகைய இயற்கைச் சாயங்கள் மூலமாக உருவாக்கப்பட்ட துணிகள் நீண்டகாலம் நிறம் மாறாமலும் மங்காமலும் இருந்தன.

செயற்கை சாயங்கள்

இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் வியாபாரத்திற்காக வருகை புரிந்தனர். தங்களது வியாபாரம் நடைபெற வேண்டுமெனில் உள்ள10ர் நெசவு நலிவடைய வேண்டும் என்பதற்காகச் செயற்கைச் சாயங்களைக் கொண்டு உற்பத்தி செய்து மலிவு விலைக்கு விற்றனர். எனவே இயற்கை மறைந்து செயற்கை நிலைத்து விட்டது. முதன் முதலில் செயற்கை சாயத்தை 1856 ஆம் ஆண்டு மாவெய்ன் வில்லியம் ஹென்றி பெர்சில் கண்டுபிடித்தார். (றறற.எiஉமலிநனயை.உழஅ) இந்தச் செயற்கைச் சாயங்களில் கரிமசாயங்கள், அமிலசாயங்கள், அடிப்படை சாயங்கள,; நேரடி  அல்லது தனிநிலை நிறமேற்றி சாயங்கள், வேட் சாயங்கள், எதிர்வினை புரியும் சாயங்கள் என பல வகைகள் உள்ளன.

சாயமேற்றும் முறை

70 லிட்டரிலிருந்து 700 லிட்டர் வரை கொள்ளவு உடைய செவ்வக வடிவ இரும்புத் தொட்டி மேல் கம்பி உருளைகள் அமைக்கப்பட்டு மின்சார மோட்டார் மற்ற உபகரணங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். துணிகள் ஏற்றப்பட்டு சுழன்று தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு சுற்றாக சுற்றி வந்து கொண்டிருக்கும். தண்ணீரில் மூழ்கிய துணி பஞ்சு போன்ற தேவையில்லாதவற்றை உதறித்தள்ளும். இதில் வெட்டிங் ஆயில் ஊற்றப்படும். ஒரு கிலோ துணியை விரும்பும் நிறத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்றால் 8 முதல் 10 லிட்டர் தண்ணீர் வேண்டும். ஒரு கிலோவில்  3 அல்லது 4 ஆடைகளை உருவாக்கலாம். வெட்டிங்ஆயில் தண்ணீர் துணிகளில் ஊடுருவியபின் வேதியல் கலவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சோர்க்க வேண்டும். துணியை இளக்க, இளக்கிய துணியைச்  சாயத்தோடு ஒட்ட வைக்க, ஒட்ட வைத்த சாயத்தை உறுதியாக்க, உறுதியான சாயத்துணியைத் தரமாக்க, வண்ணத்துணியை அதன் தராதரம் பார்க்க இறுதியில் சிறிய அளவிலான துண்டு வெட்டி சரிபார்த்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு 8 முறை அலசப்படுகிறது. ஒவ்வொரு முறையும் குழாய்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு சாக்கடை வழியாக நொய்யலில் கலக்கப்படுகிறது. (றறற.எiயெஎர.உழஅ)

சாயம் ஏற்றும் முறையை 'சாயத்திரை" பெரியண்ணன் மற்றும் வேலுச்சாமி ஆகிய பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. இந்த இருவரும் சாயப்பட்டறையில் வேலைபார்ப்பவர்கள். பெரியண்ணன் சாயம் கலந்த வெந்நீரில் வெள்ளைத் துணிகளைப் போட்டு தனது கால்களால் அமிழ்த்துகிறான். இதனால் அவன் கால்கள் பச்சை மற்றும் சிவப்புசாயம் கலந்தவையாக மாறுகிறது. (சாயத்திரை, ப.144) வேலுச்சாமிக்கு சாயப்பட்டறையில் கெமிக்கல்களைக் கலக்கும் வேலை. பல நேரங்களில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தனது கைகளாலே கலக்குவான். எந்த அளவு சாயம் கலக்க வேண்டும் என்ற நுணுக்கத்தைத் தெரிந்தவன் (சாயத்திரை ப 94) இந்த இருவர் மூலம் சாய்ப்பட்டறையில் வேலை பார்ப்பவர்களுக்கு எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என்பதையும், இவ்வாறு செய்வதால் ஏற்படும் பின்விளைவுகளைக் கூட அறியாதவர்களே வேலை செய்வதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

நொய்யல் ஆறு

நொய்யல் ஆறு தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகிறது. இது கோயமுத்தூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. ஆகவே தான் நொய்யல் என்ற பெயரைப் பெற்றது. இதன் சங்க கால பெயர் 'காஞ்சிமாநதி" ஆகும். இது கோயமுத்தூர் நகரைக் கடக்கும் போது 18 குளங்களை நிறைக்கின்றது. பின் திருப்பூரை அடைந்து அதிலிருந்து 18 கி.மீ தொலைவில் ஒரத்துப்பாளையம் அணைக்குச் செல்கிறது. நொய் என்ற சொல் மென்மை, நுண்மை என்னும் பொருள் உடையது. இவ்வாற்றின் பெயர் மென்மையான நுண்ணிய மணற்துகள்களால் பெறப்பட்டது என்றும் கருதப்படுகிறது.

நவீனத்துவம் மேலோங்காதக் காலத்தில் நொய்யல் ஆறு தூய்மையான ஆறாக இருந்தது. நொய்யலின் பழைய நிலையை சாயத்திரை பக்தவச்சலம் என்ற பாத்திரத்தின் மூலம் விளக்குகிறது. கரைபுரண்டு ஓடும் நீர் அடைமழை காலத்தில் பாலம் வரை  நுரையைக் கிளப்பியபடி ஓடிக் கொண்டிருக்கும் (சாயத்திரைய, ப .16) நொய்யலில் உள்ள முக்குளித்தான் மதகு, கடைமதகு ஆகியவற்றில் சும்மா வேட்டியைப் போட்டு இழுத்தாலே மீன்கள் கூடை கூடையாகக் கிடைக்கும் (சாயத்திரை, ப. 80). நாகன் என்ற பாத்திரத்தின் வாயிலாக நொய்யலின் பழம் பெருமையை ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். சோழனின் கோட்டை அகழியாய் இருந்தது. நொய்யலைச் சுற்றி எங்கும் தோப்புகளும் தோட்டங்களும் காணப்படும். எனவே நொய்யலை 'தென்புறம் குடிமக்கள் வீடு", 'பேட்டை" என்று அழைத்தனர் (சாயத்திரை, ப .165).

இன்றைய நொய்யல்

சாயப்பட்டறைகள் மூலம் வெளியேறும் கழிவு நீர் நொய்யலில் கலக்கப்படுகிறது. ஒரு நாளைக்குத் திருப்பூரிலிருந்து வெளியாகும் சாயக்கழிவு நீர் தோராயமாக 10,000 கோடி லிட்டர் ஆகும். இவை நொய்யலில் கலப்பதால் நன்னீர் சாய நீருhக மாறிவிட்டது. சாக்கடை கலந்த கருநிறத்தில் தண்ணீர் மாறிவிட்டது. இதனை யாராலும் அருந்த முடியாது.

சாயத்திரையில் ரோசா என்ற பாத்திரம் ஆறு என்பதற்கு விளக்கம் தருகிறது. மரிய ரோசா என்பவர் வெளிநாட்டு பத்திரியாளர். திருப்பூருக்கு வருகிறார் நொய்யலைக் காண்கிறார். ஆறு என்றால் எங்கள் ஊரில் வருடம் முழுவதும் நீர் ஓடும். பனிக்காலங்களில் பனிக் கட்டிகளாக இருக்கும். இதையும் நீங்கள் ஆறு என்று கூறுகின்றீர்கள் என்று கூறுகின்றார். அதற்கு பக்தவச்சலம் மறைந்து போன நதி என்று கூறலாம் என்று கூறுகின்றார் (சாயத்திரை, ப.16) மாசுபட்ட நிலையில் உள்ள நொய்யலை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இறந்த ஆறு என்று கூறுவர். இதனையே ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார்.

விவசாயம்

நொய்யலில் சாயக் கழிவுகள் கலந்து மாசுபட்ட நிலையில் இருப்பதால் விவசாயத்திற்கு பயன்படாமல் போய்விட்டது. அங்கே வளர்கின்ற தாவரங்களில் சாய நீரின் தன்மை இருக்கும். மரிய ரோசா திருப்பூரில் உள்ள இளநீரினைக் குடிக்க ஆசைப்படுகிறார். அதற்கு பக்தவச்சலம் இது விபரீத ஆசை என்று கூறுகிறான். மேலும் சாயப்பட்டறைத் தண்ணீர் இளநீருக்குள்ளும் இருக்கும் என்றும் இளநீர் தண்ணீரில் பல வர்ணங்களைப் பார்க்கலாம் என்று கூறுகின்றான். (சாயத்திரை, ப. 17)
தண்ணீர் பஞ்சம்

உலகிலேயே இலவசமாகக் கிடைக்கக்கூடிய பொருள் தண்ணீர் மட்டுமே. ஆனால் இன்று விலை கொடுத்து வாங்கும் அவலநிலை நிலவுகிறது. சாயத்திரை நாவல் தண்ணீர் பஞ்சத்தை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது. திருப்பூரில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை. எனவே குழாயிலிருந்து வடியும் சிறு கசிவு நீரைக்கூடப் பிடிப்பதற்குப் பெண்கள் வரிசையில் காத்துக் கொண்டு இருக்கின்றனர். (சாயத்திரை, பக். 17, 18) திருப்பூரைச் சுற்றி உள்ள கிராமங்களிலிருந்து தண்ணீரை லாரிகள் சாயப்பட்டறைகளுக்கு எடுத்துச்செல்கின்றன. எனவே தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது (சாயத்திரை, ப. 27) முனிசிபாலிட்டி பத்து நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீரை விடுகிறது. (சாயத்திரை, ப. 35) எனவே மக்கள் தங்களது தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய எப்போதாவது வரும் தண்ணீர் லாரிகளில் ஒரு குடம் 60 காசு, 75 காசு என்று விலைக்கு வாங்குகின்றனர் (சாயத்திரை, பக். 27, 28) மனிதனின் ஒரு நாளைக்கு 7 முதல் 8 குடம் தண்ணீர் தேவைப்படுகிறது. இதுகூட கிடைக்காத நிலை. போனிக் நாட்டில் ஒரு சிறுவனுக்கு ஒரு நாளைக்கு 3000 லிட்டர் நீர் பிரயோஜனமாகிறது. ஆனால் இங்கு பற்றாக்குறை மட்டும் உள்ளது. (சாயத்திரை, ப. 127)முனிசிபல் தண்ணீர் பத்து நாட்களுக்கு  ஒருமுறை வருகிறது. சில நேரங்களில் அதுவும் சாக்கடையாக வருகிறது. சூசையாபுரத்தில் குடிநீர் சாக்கடை நீரோடு கலந்து குடிநீர்க் குழாயில் வந்தது. அது மட்டுமல்லாது மலத்துனுக்கு மற்றும் சாயப்பிசிறுடன் வந்தது, இதை அருந்தியவர்கள் பல நாட்கள் படுக்கையில் விழுந்தனர். (சாயத்திரை, ப.129) இந்தச் சாய நீரானது நிலத்தடி நீரை பாதிப்பதோடு மட்டுமல்லாது மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கின்ற கிணறுகளையும் பாதிக்கிறது. மக்களுக்குக் குடிநீர் பாசன நீர் வழங்குகின்ற ஒரத்தப்பாளையம் அணையிலும் கலக்கிறது. எனவே அணையில் மாசுப்பட்ட நீரே உள்ளது. அங்குள்ள மீன் போன்ற நீர் உயிரினங்கள் வாழ்கின்றன. (சாயத்திரை, பக். 129,130) சாயநீரால் மதகுகள் அரிக்கப்பட்டு பாசன நிலங்கள் அழிகின்றன. (சாயத்திரை, பக். 198, 199, 201)

விளைவுகள் - தொழிலாளர் நிலை

சாயப்பட்டறைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர். சாயத்திரையில் வரும் வேலுச்சாமியின் கைகள் எப்பொழுதும் பல வர்ணக் கலவையில் தோய்ந்து விட்டது போலவே இருக்கும் (சாயத்திரை, ப. 95) அவனது உடம்பு முழுவதும் புண்கள் ஏற்பட்டு பரவ ஆரம்பித்தன. சாயங்களைக் கிளறும் போது ஏற்படும் புகையும் நாற்றமும் பதறச் செய்து கொண்டே இருந்தது. இதனால் கண்களிலிருந்து தொடர்ந்து நீர் வடிய ஆரம்பித்தது. (சாயத்திரை, ப. 96) சாயப்பட்டறையில் உள்ள பாய்லர் வெடித்து விபத்து அடிக்கடி ஏற்படுவதால் பலர் காயம் அடைகின்றனர். கை, கால்களை இழக்கின்றனர் (சாயத்திரை, பக். 142, 174)

முறையற்ற சாயநீர் வெளியேற்றம்

சாயப்பட்டறையிலிருந்து சாயக்கழிவு நீரானது சரியான முறையில் வெளியேற்றம் செய்ய வேண்டும். ஆனால் அவை சரியான முறையில் நடைபெறாததை ‘சாயத்திரை’ எடுத்துரைக்கிறது. சாயம் போட்ட துணிகளை யாராவது வாயில் வைத்தால் அது அவர்களது உயிரை எடுத்துவிடும் (சாயத்திரை, ப .146) சாயக்கழிவு நீரானது சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் ஓடுகிற சாக்கடையில் கலக்கின்றனர் (சாயத்திரை, ப.147) தெரு ஓரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் சாயக்கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். சாயக்கழிவின் தன்மையைத் தெரியாமல் சிறுவர்கள் கால்களை அதில் நனைத்து தங்களுக்குப் புதிய நிறத்தில் காலணி கிடைத்திருப்பதாக மகிழ்ந்து விளையாடுகின்றனர் (சாயத்திரை, ப. 145) இந்தச் சாயக்கழிவுநீரை நாய் நீரெனக்கருத்தி அருந்தி உயிரை விடுகிறது (சாயத்திரை, ப.150) பொதுவாக ஆற்றில் ஒருவர் விழுந்தால் சிலசமயம் உயிர் பிழைத்துக்கொள்வார். சிலசமயம் மட்டுமே மரணம் ஏற்படும். நொய்யலில் ஒருவர் விழுந்து சாயநீரின் காரணத்தால் உயிரை இழந்ததை இந்நாவல் எடுத்துரைக்கிறது. (சாயத்திரை, ப. 163)

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

நகர்மயமாக்கலின் காரணமாகக் கிராமப்புரங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வசிப்பதற்குப் போதிய இடம் நகர்புரங்களில் இல்லை. எனவே ஆறுகள், ஏரிகளில் வீடுகளைக் கட்டி குடியேறுகின்றனர். திருப்பூரில் மழை பெய்கிறது. நொய்யல் ஆற்றின் கரைகளில் அதன் உட்பகுதியில் குடியிருப்பவர்களின் குடியிருப்பில் நீர் புகுந்து அனைத்து உடைமைகளையும் அடித்துச் செல்கிறது. (சாயத்திரை, ப.23) இதனால் நீர்நிலைகளில் மழைநீர் சேகரிக்க முடியாமல் நீராதாரம் குறைகிறது.

போராட்டம்

நொய்யலில் சாயநீர் கலப்பால் நிலத்தடிநீர் மாசுபட்டு மக்கள் குடிப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் நீரில்லாமல் போய்விட்டது. எனவே இதனை தடுப்பதற்காக விவசாயிகள் சங்கம் 1996 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியமானது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து 1998-ம் ஆண்டு சலவை, சாயப்பட்டறை உரிமையாளர் சங்கம் வழக்கு தொடுத்தது. இதனால் திருப்பூரில் உள்ள பல பனியன் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலானது நலிவடைந்தது. (சாயத்திரை, பக். 150, 154) சுற்றுச்சூழல் மாசடைவதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனை சாயத்திரை பக்தவச்சலத்தின் மூலம் வெளிப்படுத்துகிறது. பக்தவச்சலத்திடம் ஒருவன் ஊர்வலத்தில் கலந்து கொண்டால் பணமும் சாப்பாடும் தருவதாகக் கூறுகிறான் (சாயத்திரை, பக்.186, 187) மாசுபாட்டிற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தாலும் மக்களிடையே விழிப்புணர்வு இன்மையைக் காட்டுகிறது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சாயப்பட்டறையிலிருந்து வெளிவரும் கழிவு நீரானது சுத்திகரிப்பிற்குப் பின்னே வெளிவர வேண்டும். சுத்திகரிப்பு செய்வதற்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது. எனவே சாயப்பட்டறை உரிமையாளர்கள் சுத்திகரிக்கப்படாதச் சாயநீரையே வெளியேற்றுகின்றனர். (சாயத்திரை, ப. 48)

நிறைவாக

திருப்பூர் நகரம் இந்தியாவின் அந்நிய செலவானியை ஈட்டித்தரும் நகரங்களில் ஒன்று. தொழிற்சாலைகள் அதிகமாக உருவாகி தொழிற்வளர்;ச்சிக்கு இட்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் கேட்டிற்கும் வழிவகுக்கின்றன. இதன் விளைவு நொய்யலில் நன்னீர் சாயநீராக மாறுதல். நிலத்தடி நீர் குறைதல் கிணறுகள் மூடப்படுதல் சாயப்பட்டறை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வீதிகளிலும் ஆறுகளிலும் வெளியேற்றுதலின் விளைவு பல நோய்கள் ஏற்படுதல். இதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தாலும் மாசுபாட்டைத் தடுக்க முடியாத சூழலே நிலவுவதை சாயத்திரை எடுத்துரைக்கிறது. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே மாசுபாட்டைத் தடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

துணைசெய்த நூல்கள்
1.சுப்ரபாரதிமணியன், சாயத்திரை, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி.
2.சுப்ரபாரதிமணியன், சூழல் அறம், நியூ செஞ்சுரி புக்;;;;ஹவுஸ், சென்னை.
3.எஸ்.ஜனகராஜன், தமிழக ஆறுகளின் அவலநிலை, பாரதி புத்தகாலயம், சென்னை.
4. www.vinavu.com
5.www.vickypedia.com
6.www. Dinamani.com
7.தமிழினி இணைய இதழ்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர்: பேரா.சி.பாக்கிய செல்வ ரதி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி.