கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையாம்பாளையம், கோயமுத்தூர் - 105. -சங்க காலத்தில் மாந்தர்களிடையே நிலவிய அகப்புற உணர்வுகளை உணர்த்துவதற்குத் தேவையான புலப்பாட்டு முறைகளையும் கொள்கைகளையும் வரையறை செய்துகொண்டு அவற்றிற்கிணங்க இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய மரபினை எடுத்துரைக்கும் பகுதி பொருளிலக்கணமாகும். இப்பொருளிலக்கணத்தில் தொல்காப்பியர் தன் காலத்தில் நிலவிய இலக்கியங்களைத் தரவுகளாகக் கொண்டு செய்யுளியலில் இலக்கியத்தின் வடிவம், உள்ளடக்கம், உத்திகள், வகைமை ஆகியவற்றைப் படைத்துள்ளார் எனலாம். பிற்காலத்தில் இவைகள் அனைத்தும் இலக்கியக் கோட்பாடுகளாகத் தோற்றம் பெற்றன. செய்யுளியலின் உறுப்புகள் இலக்கியக் கோட்பாடுகளாகத் திகழ உரையாசிரியர்களின் உரைகள் நமக்கு ஏதுவாக அமைகின்றன. தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்க காலச் சமூக இயங்கியல் தளத்தில் தலைவன், தலைவி காதல் வாழ்வில் நிகழ்ந்த மாற்றம் மற்றும் சமுதாயத்திற்குத் தேவையான நற்பயன்களை இலக்கியம் படிக்கும் வாசகனைச் சென்றடையும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இன்றைய நவீன இலக்கியங்களான நாவல், கவிதை, சிறுகதை போன்றவைகளிலும் தொல்காப்பியரின் பயன் கோட்பாட்டினைப் பொருத்திப் பார்க்கலாம் என்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். ஓவ்வொரு இலக்கிய வகையும் ஏதோ ஒரு பயனைச் சமுதாயத்திற்கு விட்டுச்செல்கிறது  அவற்றினை இனம்கண்டு வெளிக்கொண்டு வரலாம்.

தொல்காப்பியரின் பயன் கோட்பாடு
தமிழில் தோற்றம் பெற்ற படைப்புகள் அனைத்தும் வாசிக்கும் வாசகனுக்கு ஏதாவதொரு பயன் நல்குமாறு அமைகின்றன. அப்படைப்பினைச் சமூக இயங்கியல் தளத்தோடு பொருத்தும் போது ஏதாவதொரு நற்பயனை விட்டுச் செல்லும். இதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் படைத்துள்ளார். இதனை,

“இதுநனி பயக்கு மிதனா னென்னுந்
தொகைநிலைக் கிளவி பயனெனப் படுமே”  (தொல்.பொருள்.பேரா.நூ.515)


என்ற நூற்பாவில் ஒவ்வொரு படைப்பினையும் தொகுத்துரைத்தால் ஏதாவதொரு பயனை நல்கும் என்று தொல்காப்பியர் பயன் என்னும் உறுப்பினை திறம்படக் கையாண்டுள்ளார் எனலாம். இதற்கு “யாதானும் ஒரு பொருளைப் பற்றிக் கூறியவழி இதனாற் போந்த பயன் இதுவென விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினாலே தொகுத்துணர வைத்தல் பயன் என்னும் உறுப்பாம்.”1 என்று க.வெள்ளைவாரணன் தனது ஆய்வுரையாகக் கொடுத்துள்ளார்.

பயன் என்னும் கோட்பாட்டிற்கு, ச.பாலசுந்தரம், “இதன் காரணமாகப் பெரிதும் இது விளையும் என்னும் முடிவினை அறிய நிற்கும் கூற்றுக்கள் பயன் என்று கூறப்படும். அதாவது தலைவன் முதலாகக் கூற்று நிகழ்த்துவோர் சொற்களுக்குள் மறைந்து நிற்கும் பயனைக் கேட்போர் உணருமாறு கிளத்தல்”2 என்று விளக்கம் அளிக்கிறார். மேலும் தமிழண்ணல். “ஒரு பாடலைப் படித்து முடித்த அளவில், அக்கூற்றின் பயன் யாதென உய்த்துணரப்படும். தோழி தலைவனிடம் இற்செறிப்பை அறிவுறுத்தும் பாடலில், அவனை விரைந்து மணம் செய்து கொள்ளத் தூண்டுவதே ‘பயன்’ எனப்படும். பாடலுக்குள் ‘ஆகவே, மணம் செய்து கொள்’ என்று வாராது. அஃது உய்த்துணரப்படுமாறு பாட்டுப் போக்கு அமையும்.”3 என்று தனது கருத்தினை முன்வைக்கிறார். ச.வே.சுப்பிரமணியன், “இந்தச் செயலால் இந்தப் பயன் விளையும் என்பதைத் தொகுத்துக் கூறுதல் பயன் என்று கருதப்பெறும் என்பர்.”4 அதாவது ஒவ்வொரு இலக்கியத்தைப் படிக்கும் போதும் வாசகனுக்கு ஏதாவதொரு பயன் இருக்க வேண்டும். அவ்விலக்கியத்தில் சமூக இயங்கியல் தளத்திற்குச் சிறந்த நற்கருத்துக்களைப் படைக்க வேண்டும். அப்போதுதான் அப்படைப்பின் வெளி சிறந்து விளங்கும். ஒரு படைப்பினை வாசிக்கும் வாசகனுக்கு அப்படைப்பின் வழி,  நற்பயனை அளக்க முடியும் என்ற கொள்கையை செய்யுளியல் உறுப்புகளில் ஒன்றான பயன் என்னும் கோட்பாட்டு எடுத்துரைக்கிறது.

சங்கப் பாலைத்திணை கவிதைகளில் பயன் கோட்பாடு
சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்திலும் புலவர்கள் ஏதாவதொரு நற்பயனைக் கொண்டு பாடியுள்ளனர். அதாவது இலக்கியம் பாடும் புலவன்  தான் சொல்லவரும் பொருண்மையில் தனிமனிதனுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ ஏதாவதொரு நற்பயனை ஏற்படுத்தும் விதமாக சங்கக் கவிதைகள் அனைத்தும் படைக்கப்பட்டுள்ளன. அக்கால சமூக வாழ்வியல் இயங்குத் தளங்குகளுக்கு ஏற்ப சங்கக் கவிதைகளில் தொல்காப்பியரின் பயன் கோட்பாட்டை அடையாளம் காணமுடிகிறது. தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்கக் கவிதை மரபில் பொருத்தும் போது தலைவன், தலைவி கூற்றுக்கள் வழி அவர்களின் இன்பப் பயன், இளமைப் பயன்,  சமுதாயப் பயன் போன்றவை வெளிப்படுவதைக் காணலாம்.

இளமைப் பயன்
சங்கக் கவிதைகள் தலைவன், தலைவி, நற்றாய், தோழி கூற்றுகளாகவே பாடப்பட்டுள்ளன. கவிதைகளில் கதைமாந்தர்கள் தங்களின் வாழ்வில் இளமைக் காலம் வீணாகும் விடயத்தினை எடுத்துரைக்கின்றனர். குறிப்பாகத் தலைவன் பொருள் காரணமாகப் பிரியும் போது, குறித்த காலத்தில் வரவில்லையெனில் தலைவியின் இளமை அழகினைத் தலைவனால் அடைய முடியாது போகும் செய்திகள் சங்கப் பாடல்களில் நிறைந்துள்ளன. அவ்வாறு தலைவன் குறித்த காலத்தில் வந்தால் தலைவியின்பால் தலைவனுக்கு இளமைப் பயனை அடைய முடியும் என்பது வெளிப்படுவதைக் காணலாம்.

தலைவியைத் தலைவனோடு உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைவி எடுத்துரைப்பது. இதனை,

 

“அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே,  இனியே
வான்ப10ங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துஉக் காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில் லாதே”                (குறுந்.பா.149)


இப்பாடலில் தலைவியின் நாணம் நிலையற்றது. தலைவியின் நாணம் நிலையற்றுப் போனால் இளமைப் பயனான காமமே மிகுதியாக விளங்குவதைக் காணமுடிகிறது. ஆதலால் தலைவி தலைவனோடு உடன்போக்குச் சென்றால் தலைவியின் இளமைக் காலப் பயனான காமமே சிறந்து விளங்கும் என்ற கருத்துப் புலப்படுகிறது. மேலும் இந்நூலில் பொருள் காரணமாகப் பிரிந்த தலைவனின் பிரிவைத் தாங்கிக் கொள்ளுமாறு உரைத்த தோழியிடம் தலைவி தன் நிலையினை எடுத்துரைத்தல்.5 இப்பாடலில் பசுவினது பால் கன்றும் உண்ணாமல் பாத்திரத்திலும் பிடிக்காமல் விட்டால் வீணாகத்தான் போகும். அதுபோல தலைவியின் இளமை அழகு தலைவன் தொடாமல் போனால் மாந்தளிர் போன்ற தலைவியின் இளமை அழகு பசலை வந்து பயனற்றுப் போகும். இதில் தலைவியின் இளமை அழகு வீணாகும். அதுபோல தலைவனுக்குத் தலைவியின்பால் கிடைக்கும் இளமைப் பயனான காமம் கிடைக்காமல் போகும் என்ற கருத்தினைக் காணமுடிகிறது. மேலும், பொருள் தேட எண்ணிய தன் நெஞ்சிற்குத் தலைவன் உரைத்தது, தலைவியை விட்டுப் பொருள் தேடச் சென்றால். தலைவியுடனான இளமைப் பருவத்தில் நிகழும் வாழ்வியலை இழந்து விடுவோம் என்று தலைவன் நினைக்கின்றான்.6 அதாவது தலைவியை விட்டுப் பிரிந்தால் தலைவனுக்குத் தலைவியின்பால் கிடைக்கும் இளமைக்காலப் பயன் கிடைக்காமல் போகும் என்ற நிகழ்வினைத் தெரிந்துணர முடிகிறது.

ஐங்குறுநூற்றில், தலைவி, தலைவனோடு உடன்போக்குச் சென்று விட்டாள். அதனை அறிந்த நற்றாய் உடன்போக்கு அறநெறிதான் ஆனால் என் அன்புமகள் கொடுமையான பாலைவழி இனிமையுடையதாக மாறவேண்டும் என்று புலம்புகிறாள். இதனை,

“மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர்நெடும் குன்றம் படுமழை தழீஇச்
சுரம்நனி இனிய ஆகுக தில்ல
அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்
பிறைநுதல் குறுமகள் போகிய கானே”                 (ஐங்.பா.371)


எனும் பாடல் உணர்த்துகிறது. இப்பாடலில் தலைவி தலைவன் மீது கொண்ட காதலால் இல்வாழ்வில் சிறப்புற்று விளங்க உடன்போக்குச் சென்றுவிட்டாள். அதாவது கணவன் சொல்லை ஏற்று அதன்படி வாழ்தல் கற்புடைய மகளிருக்குச் சிறந்த நற்பயனைக் கொடுக்கும் என்ற கருத்துப் புலப்படுகிறது. மேலும் அகநானூற்றில், தலைவன் பொருள் காரணமாகப் பிரிய, அந்தப் பிரிவினால் தன் இளமை அழகு. கெட்டு காமநோய் மிகுந்த தலைவி. தன் வருத்தத்தை அன்புத் தோழியிடம் எடுத்துரைக்கிறாள்.7 இப்பாடலில் தலைவன் பொருள் காரணமாகப் பிரிந்தான். தலைவன் வரக் காலம் தாழ்த்தியதால் தலைவியின் இளம்மேனி அழகிழந்து காணப்படுகிறது. ஆதலால் தலைவனுக்குத் தலைவியின்பால் கிடைக்கும் (காமம்) இளமைப் பயன் கிடைக்காமல் போகும் நிலையினை அடையாளம் காணமுடிகிறது.

கலித்தொகையில், பிரிவு உணர்த்திய தலைமகனுக்குத் தோழி தலைவியின் இளமை அழகின் அருமையை எடுத்துக் கூறி,  நீர் பொருள் ஈட்டுதல் எக்காலத்திலும் நிகழ்த்தலாம். ஆனால் தலைவியின் இளமை அழகினை மீட்க முடியுமா என்று கூறிச் செலவினைத் தவிர்க்கிறாள்.8 இப்பாடலில் தலைவியின் இளமை அழகு இழந்தால் தலைவன் கொண்டு வந்த பொருளால்,  தலைவியின் இளமை அழகினைத் திரும்பப் பெற முடியாது என்று தோழி கூறுவதன் மூலம் தலைவியின் இளமைப் பயன் தலைவனுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. மேலே விளக்கப்பட்ட கவிதைகள் அனைத்தும் அன்றைய சமுதாய நிலையோடு நோக்கும் போது,  ஆண்கள் பொருளாதாரத் தேவைக்காக பிரியும் போது பெண்களின் இளமை அழகினை அடைய முடியாமல் போகும் போக்கினை வெளிப்படுத்துவதாக உள்ளன.

சமுதாயப் பயன்
பண்டைய தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வியல் நிலைப்பாட்டினை நம் கண்முன் நிறுத்துவனவாகத் திகழ்வது சங்க இலக்கியமாகும். இதில் ஒவ்வொரு திணையின் வாழ்வியல் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டே சங்கக் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதையும் சமுதாயப் பின்புலத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதில் கதைமாந்தர்கள் மூலம் சமுதாயத்திற்கு நற்பயன் விளைவதைக் காணலாம்.

நற்றிணையில்,  பொருள்வயிற் பிரிந்த தலைவன் தன் தலைவியை நெஞ்சோடு நினைத்துக் கொள்வது. அதாவது மழைக்காலம் வருவதற்குள் வருவதாகச் சொன்ன தலைவன் பொருள் தேடி முடிக்கும் முன்பே மழைக்காலம் வந்துவிடுகிறது. இதனை அறிந்த தலைவி அழுதுகொண்டு இருப்பாள் என்பதைத் தலைவன் தன் நெஞ்சோடு நினைத்துக் கொள்ளும் நிகழ்வு. இதனை,

“இருங்கண் ஞாலத்து ஈண்டுதொழில் உதவிப்
பெரும்பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப்
பல்பொறி அரவின் செல்புறங் கடுப்ப
யாற்றுஅறல் நுணங்கிய நாட்பத வேனில்
இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும்
நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்
கேட்டொறுங் கலுழுமால் பெரிதே காட்ட
குறும்பொறை அயல நெடுந்தாள் வேங்கை
அம்ப10ந் தாதுஉக்கு அன்ன
நுண்பல் தித்தி மாவு யோளே.”                       (நற்.பா.157)


எனும் பாடலால் அறியலாம். இப்பாடலில் தலைவி மழைக்காலம் வந்தும் தலைவன் வரவில்லை என்று அழுதுகொண்டிருக்கும் நிகழ்வு துன்பச் செய்தியாகும். ஆனால் கோடைக் காலங்களில் மழைபொழிந்தால் மக்கள் நல்வாழ்வு பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்ற சிறப்புக் குறிப்பு சமுதாயப் பயனை எடுத்துரைக்கின்றது. மேலும் இந்நூலில் தலைவன் பொருள் தேடச் செல்லும் செய்தியைக் கேட்ட தலைவி வருத்தமடைகிறாள். அதற்குத் தோழி தலைவன் பொருள் தேடச் சென்ற நோக்கத்தினைத் தலைவியிடம் எடுத்துரைக்கிறாள்.9 இப்பாடலில் தலைவன்,  தலைவி இல்லற வாழ்விற்குத் தேவையான பொருட்களைத் தலைவன் கொண்டு வந்தால்,  குடும்ப வாழ்வில் வறுமையின்றி சிறப்புற்று வாழ முடியும் என்ற கருத்துப் புலப்படுகிறது. குடும்பம் சமுதாயத்தின் ஓர் அங்கம். இங்கு குடும்பம் சிறந்து விளங்கும் போது சமுதாயமும் சிறந்து விளங்கும்  என்பதை இப்பாடல் வழி அறியமுடிகிறது.

நற்றிணை 186ஆம் பாடலில் தலைவன் பிரிவதை அறிந்தால் தலைவி வருத்துவாள் என்று எண்ணிய தோழி வருத்தமடைந்து உடல் மெலிந்து காணப்படுகின்றாள். அதற்குத் தலைவி தோழியிடம் தலைவன் பொருள் தேடச் சென்ற நோக்கத்தினை எடுத்துரைத்தல். அதாவது அவர் தன் சுயநலத்திற்காக மட்டும் பொருள் தேடச் செல்லவில்லை. பொருள் இல்லாத வறியவர்களுக்குத் தன்னால் முடிந்த பொருள் உதவியைக் கொடுத்து மகிழ்ச்சிகொள்ளவே சென்றுள்ளார் என்று தலைவனின் நோக்கத்தினை எடுத்துரைக்கிறாள். இப்பாடலில் தலைவன் தன் சுயநலத்திற்காக மட்டும் பொருள் தேடச் செல்லவில்லை சமுதாயத்தில் பொருள் இல்லாது வறுமையில் வாடும் மக்களுக்கு உதவி செய்யும் நிலையினைக் காணமுடிகிறது.

இதுபோன்று புறநானூற்றின் 335ஆம் பாடலுக்கு மாதையன் முன்வைக்கும் கருத்து,  “இனக்குழுச் சமுதாயத்தில் இருந்த குழுவினர் பறையன்,  துடியன், பாணன்,  கடம்பன் எனக் கலை மரபினராகவே இருந்துள்ளனர். இவர்கள் இனக்குழுத் தலைவனின் ஆதரவிலேயே வாழ்ந்துள்ளனர். புன்செய் வேளாண்மையை அடிப்படைப் பொருளாதாரமாகக் கொண்டிருந்த இந்த இனக்குழுச் சமுதாயம் பற்றாக்குறை உடைய சமுதாயமாக இருந்துள்ளது. பற்றாக்குறைக் காலங்களில் இனக்குழுத் தலைவர்களான சீறூர் மன்னர்கள் அதைப் போக்குவதற்கான தொழிலாக, வேந்துவிடுதொழிலை மேற்கொண்டுள்ளனர். வேந்துவிடு தொழிலால் கிடைத்த உணவுப் பொருட்களும் பரிசுப் பொருட்களும் சமுதாயப் பொதுத்துடப்பிற்கும் மீள்வழங்குகைக்கும் உரியனவாக இருந்துள்ளனவேயன்றி தனிஉடைமைகளாக இருக்கவில்லை. பாணர் போன்றோர்க்குத் தானியங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த வேந்துவிடு தொழிலே நிலக்கொடைகளைப் பெற்று நிலத்தலைவர்களாக உயரும் நிலைக்குச் சீறூர் மன்னர்களை மாற்றுகின்றது. இந்நிலையில் பாணர் போன்ற இனக்குழுச் சமுதாயக் குடிகள் உடைமைச் சமுதாயத்தின் வளத்தை நோக்கி நகரத் தொடங்குகின்றனர்.”10 சங்க காலத்தில் பொருள் இல்லாத மக்களுக்கு உதவிச் செய்யும் மனப்பான்மை சாதாரண நிலத்தலைவர் முதல் மன்னர்கள் வரை நிகழ்ந்துள்ளது. அக்காலச் சமுதாயத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

அகநானூற்றில், கரிகாலன் செல்வமிக்கவரை ஆதரிப்பதோடு, நலிந்தோரைப் பாதுகாக்கும் செல்வவல்லமை கொண்டவன். அதுபோல தலைவியைப் பிரிந்து பொருள் ஈட்டச் சென்ற தலைவன்,  தன் ஊரில் செல்வம் இல்லாத மக்களுக்கு தான் கொண்டு வந்த பொருளினைக் கொடுத்து மகிழ்ச்சி கொண்டால், இல்லறம் சிறப்புடன் விளங்கும் என்ற கருத்துப்புலப்படுகிறது. இதனை,

“துவரப் புலர்ந்து தூமலர் கஞலி,
தகரம் நாறும் தண்ணறும் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ
கூழைக் கூந்தல் குறந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீம்குலை வாழை ஓங்குமடல் இராது,
நெடுங்கால் மாசுத்துக் குறும்பறை பயிற்றும்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்இசை வெறுக்கை தருமார்,  பல்பொறிப்.”           (அகம்.141:12:24)


இப்பாடலில் கரிகாற் சோழன் போல தலைவன் ஈட்டிவரும் செல்வம் சமுதாயத்தில் வறுமையாக வாழும் மக்களுக்குப் பயனைத் தரும் எனும் செய்தியைக் குறிப்பிடுகின்றது. மேலும்,  இந்நூலில், தலைவன் பிரிந்திருந்த போது அவன் பிரிவைப் பொறுத்தக் கொள்ள முடியாத தலைவி தோழியிடம் நாம் எந்தக் குறையும் தலைவருக்குச் செய்யாத போது நம்மை மறந்ததோடு வருவதற்கும் காலதாமதம் செய்வதை நினைத்து தலைவி தோழியிடம் புலம்புவது.11 இப்பாடலில் தலைவியின் துன்பச் செய்தியோடு, சிறப்புக் குறிப்பாக இருமல் நோய் உள்ளவர்கள் புற்று மண்ணை மருந்தாக வாயில் போட்டுக் கொண்டால் இருமல் குணமாகும் என்ற விடயத்தினை அடையாளம் காணமுடிகிறது.

கலித்தொகையில், தலைவன் பொருள்வயிற் பிரிய, தோழி தலைவியிடம் நிமித்தம் கூறி ஆற்றுவித்தல். அதாவது தலைவன் பொருள் தேடச் சென்ற நோக்கம் என்னவென்றால் கருணையுடைய பெரியோர்க்கு உதவுவதால் கிடைத்தற்குரிய நற்பயனைக் கொடுக்கும் அறமும், பகைவரை வெல்ல உதவும் பொருளும், இல்லற இன்பம் அனுபவிக்க உதவும் பொருள் ஆகிய மூன்று நற்பயன்களை அடையவே பொருள் தேடச் சென்றுள்ளார்.12 இப்பாடலில் தலைவன் தலைவி இல்லற வாழ்வில் பொருள் இல்லாத வறியவர்களுக்குத் தங்களால் முடிந்த பொருள் உதவி செய்வதைத் தெரிந்துணர முடிகிறது. மேலும் பெண்களுக்கு இடக்கண் துடித்தல் நற்பயன் விளைவிக்கும் சிறப்பினை அடையாளம் காணமுடிகிறது.

சங்கக் கவிதைகளில் தனிமனிதர்களால் சமுதாயத்திற்கு நற்பயன் அடைவதோடு, சமுதாய மக்களுக்கு நற்கருத்துதை எடுத்தியம்பும் அறிவுப்பெட்டகமாக விளங்குவதைக் காணமுடிகிறது. மேலும் சங்கக் கவிதைகள் அக்காலச் சமுதாய இயங்கியல் தளத்தோடு இயங்குகின்றன. ஏனெனில் தலைவன், தலைவி காதல் வாழ்வில் இல்லறம் நடத்துவதோடு, சமுதாயத்தின் வறுமை நிலையினைப் போக்குவதையும் அடையாளம் காணமுடிகிறது. அதாவது ஒரு நிலத்தலைவன் முதல் மன்னர்கள் வரை மக்களின் நலன் கருதியே வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

இன்பப் பயன்
எல்லா உயிரினத்திற்கும் இன்பம் என்பது முதன்மையானது. அதேபோல உலகத்தில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும் தங்கள் இனவிருத்தி அடைவது அடிப்படையான செயலாக விளங்குகிறது. உயிரிகள் இனவிருத்திக்குத் தத்தம் இனத்தின் எதிர்ப்பாலினத்தைக் கவர்தல் முக்கிய விடயமாகச் செயல்படுகின்றது. ஆண்கள் பெண்ணையும்-பெண்கள் ஆணையும் (தலைவன்-தலைவி) கவர்தல் என்பது இயல்பாக நடைபெறும் செயலாகும். இந்நிலைப்பாட்டினைப் பண்டையத் தமிழ்ப் புலவர்கள் அகப்பொருள் நிலையில் வைத்துக் கவிதைகள் பாடியுள்ளனர் என்பதைக் காணலாம். குறுந்தொகையில்,

“இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்றுஇழி அருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்பக்
கால் இயல் செலவின் மாலை எய்திச்
சில்நிரை வால்வளைக் குறுமகள்
பன்மாண் ஆகம் மணந்துஉவக் குவமே”         (குறுந்.பா.189)


இப்பாடலில் அரசன் ஏவிய செயலால் தலைவியைப் பிரிந்து சென்று,  வினை முடிந்து வந்த தலைவன் தேர்ப்பாகனிடம் தேரை விரைவாகச் செலுத்துமாறு கூறுகின்றான். அதன் நோக்கம் என்னவெனில் தான் அழகிய தலைவியின் இளமார்பகங்களைக் கட்டித் தழுவி இன்பம் கொள்ளவே, தலைவன் எதிர்நோக்கும் நிலையினைக் காணமுடிகிறது. இதில் தலைவன் தலைவியைக் கவர்ந்து இன்பம் கொள்ள நினைப்பது தெளிவாகிறது. “எல்லா ஆண்களும் பெண்களும் அவரவர் பருவ காலத்தில் இணைவிழைச்சால் ஏற்படும் இன்பத்தை நுகர்ந்தே அதன் பயனாக மனித குலத்தைப் பெருக்கி வந்திருக்கிறார்கள். தவிரவும், இந்த இன்பத்தின் நானாவிதமான தன்மைகளைக் கவிதையில் உரைவதே அகப்பொருள் பாடல்களின் பெருநோக்கமாய் இருந்திருக்கிறது.”13 சங்க அகப்பொருள் கவிதைகளில் தலைவன்,  தலைவியின் இன்பப் பயன் சிறப்பு வாய்ந்ததாகக் கருதலாம். மேலும் தலைவன் பொருள் காரணமாகப் பிரிந்து சென்று,  பொருள் தேடி வந்து பொருள் இல்லாது வறுமையில் வாழும் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான பொருளினைக் கொடுத்து மகிழ்ச்சி கொள்ளும் இன்பப் பயனும் வெளிப்படுகிறது.14

நற்றிணையில்,  தலைவன் பொருள் காரணமாகப் பிரிந்து சென்றான். தலைவன் குறித்த காலத்தில் வருவதாகச் சொன்ன காலம் வந்தும் வரவில்லை. ஆதலால் தலைவி வருத்தமடைவதைப் பார்த்த தோழி பொருத்திருக்குமாறு கூற அதற்குத் தலைவி மறுமொழியாகத் தோழியிடம் எடுத்துரைப்பதாகப் பாடல் அமைந்துள்ளது. இதனை,

“மாசுஇல் மரத்த பலிஉண் காக்கை
வளிபொரு நெடுஞ்சினை தளியொடு தூங்கி
வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி அம்பல் யாணர்
விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப
மழைஅமைந்து உற்ற மால்இருள் நடுநாள்,
தாம்நம் உழைய ராகவும்,  நாம்நம்
பனிக்கடு மையின் நனிபெரிது அழுங்கி,
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர்-தோழி நம் காத லோரே”                  (நற்.பா.281)

இப்பாடலில் தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை என்ற வருத்தம் தலைவியைச் சூழ்கொண்டது. ஆதலால் தலைவி தலைவனோடு கூடி மகிழும் இன்பப் பயனை எதிர்நோக்கி காத்திருத்தலைக் காணமுடிகிறது. மேலும், தலைவன் வினை முடித்து வந்த காலத்து வருத்தமடையும் தலைவியைத் தோழி வற்புறுத்த தலைவி தலைவனின் செயல்பாட்டினை எடுத்துரைக்கிறாள்.15 இப்பாடலில் தலைவன் தலைவியோடு இருந்தாலும் பரத்தை மீது அதிக நாட்டம் கொள்கிறான். அப்போது தலைவியைக் கட்டித் தழுவும் போது தலைவிக்கு எந்த இன்பப் பயனும் கிடைப்பதில்லை. ஆதலால் தலைவி பரத்தையோடு தலைவன் கொள்ளும் இன்பம் போல தனக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர்நோக்கும் நிலையை எடுத்துரைக்கிறது.

கலித்தொகையில், தலைவன் தன் பிரிவைப் பற்றித் தோழியிடம் கூற அதற்குத் தோழி தலைவனிடம் தலைவியின் துன்ப நிலையை எடுத்துரைக்கிறாள்.16 இப்பாடலில் தலைவன் பொருள் தேடச் சென்றால் தலைவியால் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து விடுவாள். அவ்வாறு தலைவி இறந்துவிட்டாள் தலைவன் கொண்டு வரும் பொருளால் தலைவியின் உயிரை மீட்க முடியாது போகும். ஆனால் தலைவன் பொருள் தேடச் செல்லாமல் தலைவியோடு இருந்த தன் இல்லற வாழ்வின் இன்பப் பயனை அடையாலம் என்ற கருத்து வெளிப்படுகிறது.

அகநானூற்றில், பொருளீட்டிக் கொண்டு இல்லம் நோக்கி வரும் தலைவன் தலைவியைக் கண்டு இன்புறும் நினைப்பைத் தன் நெஞ்சோடு நினைத்துக் கொள்ளுதல்.17 இப்பாடலில் உறவினரின் துன்பம் போக்கவும், சுற்றத்தார் கூடி உண்ணவும்,  அயலார் அன்போடு இருக்கவும் தலைவன் பொருள் தேடச் சென்று தேவையான பொருட்செல்வத்தைப் பெற்று வந்துள்ளான். ஆனால் தலைவனுக்குத் தலைவி மீது கொண்ட காதலால் விரைவில் வந்து தலைவியைப் பலமுறை கட்டித் தழுவும் இன்பப் பயனை அடைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கிக் காணப்படுவதை அறியமுடிகிறது. மேலும் ஐங்குறுநூற்றில், தலைவன் தலைவியை உடன் கூட்டிச் செல்ல முடியாது. தான் மட்டுமே பொருள் தேடச் செல்வேன் என்றான். அதற்குத் தோழி தலைவனிடம் அதாவது தலைவன் பொருள் தேடச் செல்லவிருக்கும் காட்டுவழியில் கோடை வெயிலின் தாக்கத்தால் உணவின்றிப் பசியால் வருந்தினாலும் பிடியைப் பிரியாமல் களிறு உடன் தழுவி நிற்கும் அந்தக் காட்சியைப் பார்த்தல்,  தலைவன் பொருள் காரணமாகப் பிரிந்து எந்தப் பயனையும் கிடைக்கப் போவதில்லை என்று தோழி எடுத்துரைக்கிறாள்.18 இப்பாடலில் தலைவன் பொருள் காரணமாகப் பிரியாமல் இருந்தால் தலைவியோடு கூடி வாழ்ந்து இன்பமான இல்லற வாழ்வினை அடைய முடியும் என்ற கருத்து வெளிப்படுகிறது.

தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்க அகப்பொருள் பாடல்களுக்குப் பெரிதும்  பொருந்திப் போவதைப் பார்க்க முடிகின்றது. தலைவன், தலைவி காதல் வாழ்வில் ஏற்படும் நற்பயன்களைப் பெரும்பாலும் எடுத்தியம்புவனவாக பாடல்கள் அமைந்துள்ளன. அதாவது களவு வாழ்வின் நிலையிலும் கற்பு வாழ்வின் நிலையிலும் எப்பயன் கதைமாந்தர்களுக்கு ஏற்படுகின்றது என்பதை எடுத்தியம்புகின்றது. மேலும் சங்க கால மக்களின் வாழ்வியல் நிலைப்பாட்டினை அகப்பொருள் பாடல்கள் வழி தெரிந்துணரலாம். தமிழண்ணல் பயன் கோட்பாட்டின் கருத்தாக, “அகத்திணைப் பாடல்களில் தான் இக்கோட்பாடு மிகுதியும் பயன்படுகிறது. களவுக் காதல் பாடல்கள் எல்லாம் கற்பை-திருமணத்தை நோக்கியனவாக இருக்கும். திருமணத்தில் முடியாத ‘களவுக் காதலை’  தமிழர்கள் காதல் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. இற்செறிப்பு, அறத்தொடு நிலை, தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது என வருவன பலவும், தலைவனை விரைவில் திருமணம் செய்து கொள்ளத் தூண்டுகின்ற ‘பயனை’ உடையன.”19 என்ற கருத்தை முன் வைக்கிறார்.

தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்கக் கவிதைகளில் பொருத்தும்போது அகப்பொருள் பாடல்களுக்கு முக்கியத்தும் அளிக்கிறது. அதாவது தலைவன், தலைவி என்ற கதைமாந்தர்களின் வாழ்வில் நிகழும் இளமைக்கால பயன், இன்பப் பயன், அவர்களால் சமுதாயத்திற்கு ஏற்படும் நற்பயன் போன்ற நிலைகளை எடுத்தியம்புகின்றன. மேலும் சங்கக் கவிதைகளை வாசிக்கும் வாசகனுக்கு அக்கால சமுதாய நிலைப்பாட்டினை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதனால் வாசிப்போன் வாழ்வில் நற்பயனை அடைய முடியும். தொல்காப்பியரின் பயன் கோட்பாட்டை  நவீன இலக்கியத்தில் பொருத்தி நவீனக் கோட்பாடாக உருப்பெறச் செய்யலாம். தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்க அகப்பொருள் பாடல்களில் பொருத்தி ஆராய வழிவகை உண்டு என்பதை மேற்குறிப்பிட்டுள்ள சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.    

தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்க அகப்பொருள் பாடல்களுக்குப் பொருந்துவதாக உள்ளது. தலைவன் தலைவி காதல் வாழ்வில் இளமைப் பயன்,  இன்பப் பயன்,  சமுதாயப் பயன் போன்ற நிலைகள் வெளிப்படுவதைக் காணலாம். ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தில் வறுமையில் வாழும் மக்களுக்கு தங்களால் முடிந்த பொருள் உதவி செய்யும் கொடைச்சிறப்பு கவிதைகளில் வெளிப்படுகிறது. இது அக்காலச் சமூக இயங்கியல் தளத்தைத் கண்முன் நிறுத்துவனவாக உள்ளது.

தலைவியின் இளமேனி அழகு வீணாகும் செய்தியையும், தலைவன் பொருள் தேடுதல் முயற்சியால் தலைவியின்பால் கிடைக்கும் இளமைப் பயனான (காமம்) கிடைப்பதில்லை என்பது சங்கப் பாடல்களில் புலப்படுகிறது. சங்கப் பாடல்கள் அனைத்தும் சமுதாய மக்களுக்கு பல்வேறு நற்பயன்களை எடுத்தோதுகின்றன. சங்ககால மக்களின் வாழ்வியல் நிலைப்பாட்டினை இன்றைய வாசகனுக்கு எடுத்துரைக்கும் ஓர் அறிவுப்பெட்டகமாகச் சங்கப் பாடல்கள் திகழ்கின்றன.

தொல்காப்பியப் பொருளதிகாரம் திராவிட இலக்கியச் சிந்தனையின் நுண்மை வடிவமாகும். அதனை வளர்த்தெடுத்தால் ஒருவேளை உலகிலேயே மிகத் தொன்மையான,  விழுமியத்தன்மை கொண்ட ஒரு அழகியல் கோட்பாட்டை நாம் பெறலாம். ஒருவேளை உலகிலேயே வேறெந்த மொழிகளிலும் இதுபோன்றதொரு இலக்கியக் கொள்கை முற்காலத்திலேயே தோன்றவில்லை என்பதால் திராவிடச் சிந்தனை மரபில் உருவான கோட்பாடுகள் பயன்கொள்ள வேண்டியதாக அமையும். அதனால் தொல்காப்பியப் பயன் கோட்பாட்டினைச் சங்க இலக்கியங்களில் பொருந்தி நவீனக் கோட்பாட்டிற்கான நீட்சியினை அடைகிறது எனக் கருதாலம். இவ்வாய்வு நவீனக் கோட்பாட்டிற்கான முயற்சி என்பதால் இலக்கண, இலக்கிய உரையாசிரியர்களின் உரைகள் வழியும் இன்றைய நவீன திறனாய்வாளர்களின் கருத்துக்களைக் கொண்டும் தொல்காப்பியரின் பயன் உறுப்பினை நவீனக் கோட்பாடுகளாகக் கொண்டு அதனை நவீன இலக்கிய வகைகளான நாவல்,  சிறுகதை,  கவிதைகளில் பொருத்தி ஆராயலாம்.

குறிப்புகள்
1.    க.வெள்ளைவாரணன்,  தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம்,  ப.954
2.    தமிழண்ணல்,  தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், பாகம்-2, ப.199
3.    தமிழண்ணல், தொல்காப்பியர்,  ப.80
4.    தொல்.பொருள்.செய்.உரைவளம்,  ப.689
5.    குறுந், பா.27
6.    மேலது,  பா.151
7.    அகம்,  பா.135
8.    கலித்,  பா.15
9.    நற்,  பா.148
10.    பெ.மாதையன்,  தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் காலமும் கருத்தும்,
ப.174 - 175
11.    அகம்,  பா.101
12.    கலி,  பா.11
13.    வீ.அரசு (பதிப்பு), சங்க இலக்கியம்; பன்முக வாசிப்பு,  ப.151
14.    குறுந்,  பா.137
15.    நற்,  பா.174
16.    கலி,  பா.9
17.    அகம்,  பா.93
18.    ஐங்,  பா.305
19.    தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் பாகம்-2,ப.200

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர்: - கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையாம்பாளையம், கோயமுத்தூர் - 105. -