- ஞா. ஜீலியட் மரிய  ப்ளோரா, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி  (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641018 -சிறு வயதிலேயே பொட்டுக்கட்டப்பட்டு, தாசியாக வாழ மறுத்து, பெரும் போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து தீர்க்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையே ‘செடல்’ புதினமாகும். இப்புதினத்தின் முதன்மைக் கதை மாந்தர் செடல். நட்டுவன் குலம், கூத்தாடிச் சாதியைச் சேர்ந்த இவள், அக்குடும்பத்தின்  எட்டாவது பெண்பிள்ளை. மழை பெய்ய வேண்டும் என்ற ஊர் நன்மையைக் காரணம் காட்டி, பழைய பஞ்சாங்கத்தை நம்பிக் கொண்டு, ஊரிளுள்ளோரின் வற்புறுத்தலினாலும், மேல் குடியினரின் அதிகாரத்தினாலும் செடல் பொட்டுக்கட்டி விடப்படுகி றாள். 

வாழ்வு நிலையைக் கூறவந்த ஆசிரியர் இமையம், பாத்திரத்தின் பண்புகளை ஒரு உத்தியாக பயன்படுத்திள்ளார். செடல் தன் நிலைக்கேற்ப தன்னுடைய பண்புகளை மாற்றி வாழப் பழகிக் கொள்கிறாள். பொட்டுகட்டியபின் தன் வீட்டிற்குச் செல்கையில் அவள் திருப்பி அனுப்பப்படுவதும், வறுமையின் காரணமாக அவளுடைய குடும்பம் கண்டிக்குக் கப்பலேறுவதும் அவள் தனிமைப்படுத்தப்படுவதை உணர்த்துகின்றன.

வயதுக்கு வந்த அன்று மழைக் கொட்ட, இரவில் வீடு இடிந்து விழ, உடல் நோவுடன், துணைக்கு யாருமற்ற தனித்த சூழலில் ‘உயிரோடு ஏன் இருக்க வேண்டும்?’ என்ற வினா எழ, கதறி அழுகிறாள்.  ஆழ்மனத்தின் வெளிப்பாடான வாழ்வு உந்துதல், அழிவு (சாவு) உந்துதல் என்ற இரு நிலைகளில, அவள் அழிவு உந்துதல் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். “அதிர்ச்சி தரத்தக்க துன்பமான நிகழ்வுகளை உள்ளம் மீட்டுருவாக்கம் செய்கின்றது. நடந்த முடிந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பொழுது உள்ளம் தாங்கும் சக்தியினை இழந்து சாவினை நோக்கிச் செல்கிறது.” 1 என்ற ப்ராய்டின் உளவியல் கொள்கை இங்கு செடலின் சூழலுக்குப் பொருந்தி நிற்கிறது.

இந்த நிராதரவான சூழலில், பொன்னனின் வருகையால் அவள் நிலையில் மாற்றம் ஏற்பட, அவளுக்கு வாழவும் வழி உண்டாகிறது; வாழ்வும் தடம் மாறுகிறது. பள்ளு பாடியவள் கூத்தாடச் செல்கிறாள். இவையெல்லாம் அவள் வாழ்வதற்கான போராட்டத்தை எடுத்துக்காட்டுகின்றன.

சாதியமைப்பு, பொட்டுக்கட்டுதல், வறுமை, வெறுமை, பழைய பஞ்சாங்கம், அதிகமான குழந்தைகள், நிரந்தர வருமானமின்மை போன்ற காரணங்கள் அவளின் வாழ்க்கை நிலையை மேன்மேலும் சிக்கலுக்குரியதாக்குகின்றன.

 

உணவுக்காக வீடு வீடாகச் சென்று சின்னம்மாள் கிழவி பெற்று வரும் உணவை சமைத்து உண்ண வேண்டிய நிலையில் உள்ளதால், அவள் யாரையும் எதிர்த்தோ, மறுத்தோ பேசுவதில்லை. ஏனெனில் அவள் தன் நிலையை நன்கு உணர்ந்துள்ள சூழலில், அவளது வாய் மட்டுமின்றி மனமும் ஊமையாகிறது.அருந்ததியக் குழந்தையைத் தூக்கினாலோ, தொம்பக் கிழவியுடன் பழகினாலோ, தன்னை மற்றவர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் அவர்களை விலக்கி வைக்கிறாள். பெரியவர்களுக்குத் தெரிந்தால் ஏசுவார்கள் என்றும், ஐய்யருக்குத் தெரிந்தால் காதைத் திருகுவார் என்றும் எண்ணுகிறாள். இதிலிருந்து சாமியும் சாதியும் இரண்டறக் கலந்து நின்று மனிதர்களுக்குள் வேற்றுமையை விளைவிக்கின்றது என்பது நிருபனமாகிறது.

பிறரால் நாம் தள்ளி வைக்கப்படுவோம் என்றஞ்சி சிலரை நாம் தள்ளி வைப்பதும், பிறரால் நாம் தள்ளி வைக்கப்படுவதுமான நிலையை புதினம் பல இடங்களில் நன்கு உணர்த்தி நிற்கின்றது. “தலித்துகளில் சற்று மேலான சாதியினர் தங்களுக்கு ‘கீழான தலித் சாதியினர்’ மீது தீண்டாமையை அனுசரிக்கின்றனர்..... தலித் சாதியினரிடையே 99 வகையான வேற்றுமைகள் காணப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவிக்கிறது ஓர் அறிக்கை”2 இது சாதி அடுக்கு முறையையும், சாதி ஒரு சிக்கலில் இருந்து மற்றொரு சிக்கலை உருவாக்குவதையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

தன்னுடன் கூத்தாடுபவர்கள் வறுமையுற்ற காலத்தில், தன்னிடமிருப்பவற்றை பகிர்ந்தளிக்கிறாள். தனக்கே இல்லாதபோது ‘தன்கையே தனக்குதவி’ என்றெண்ணி, தான் விரும்பாத கூத்தாடுதல் தொழிலை மேற்கொள்கிறாள்.

“வூடு வாசன்னு ஏதுமில்ல, சாதிசனமின்னு ஒருவருமில்ல, மக்க மனுசன்னு எனக்கு யாரு இருக்காங்க? ஊருல உள்ளவங்களுக்கெல்லாம் கண்ணாலம், புள்ளப்பெறவுன்னு வரும் எனக்குன்னு என்ன இருக்குங்கிறீங்க? இந்தச் சாவு ஆட்டம் தான்”3 என்று செடல் கூறுவதிலிருந்து, அவள் மற்றவர்களைப் போல் திருமண வாழ்வை விரும்பினாலும், அவளுக்கு அவ்வாழ்வு கிடைக்கப்பெறாது என்பதை நன்கறிந்துள்ளாள் என்பது உணர்த்தப்படுகிறது. “மனிதர்களின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது உணர்வு அல்ல, மாறாக, அவர்களது சமூக வாழ்வு  நிலையே அவர்களது உணர்வைத் தீர்மாணிக்கிறது”4 எனும் கார்ல்மார்க்ஸின் சிந்தனையின் வெளிப்பாடாக செடலின் வாழ்வு அமைந்துள்ளது.

பொன்னனின் மனைவி அஞ்சலை, செடலை தன் கணவனுடன் இணைத்துப் பேசுகிறாள். அவன் இறந்த அன்று ‘அவன் சாவுக்கு செடல்தான் காரணம்’ எனறு பழி தூற்றுகிறாள். அதேப்போல் விருத்தாம்பாளின் தாய் சிந்தாமணியும் செடலை தவறாகப் பேச, அவள் வாய்மூடி அமைதியாகிறாள். தன் சொந்த ஊருக்கு வந்தபோது பஞ்சாயத்தில் சண்டை ஏற்பட, அதற்கும் செடல்தான் காரணம் என்று ஊர்ப் பேச, அப்பழியையும் ஏற்றுக்கொள்கிறாள்.

பொன்னனின் இறப்பிற்குப்பின் செடல் நாடக செட்டிற்குத் தலைமை ஏற்க, இதனை விரும்பாத ஆரானால் அவள் பல தகாத வார்த்தைகளை கேட்க வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்படுகிறாள். மனிதர்களுக்காகவும், உறவுகளுக்காகவும் ஏங்கியவளுக்கு வீண் பழியே பரிசாகக் கிடைக்க, செல்லு புற்றில் பாம்பு புகுந்த கதையாக அவளுடைய வாழ்க்கை நிலை அமைகிறது.

கூத்தாடிகள், சாதியால் மட்டுமின்றி செய்யும் தொழிலாலும் இழிவாகக் கருதப்படுகின்றனர். செடலும் அவள் சார்ந்த கூத்தாடிகளும் ‘பறத் தெரு செட்டு’ என்றழைக்கப்படுகின்றனர்;. ஒருமுறை கூத்தாடுவதற்காக சென்று கொண்டிருந்த பொழுது கொள்ளையர்களிடம் மாட்டிக் கொள்ள, அப்போது அவர்களில் ஒருவன் செடலை தவறான நோக்கத்துடன் அணுக, மற்றவர்கள் அவனை எதிர்க்கவில்லை. செடல் கை கூப்பி, மன்றாடி தன்னைக் காத்துக்கொள்கிறாள். கொள்ளையர்களின் கொச்சையான வசவுகளுக்கு ஆளான நிலையிலும், அவர்களை எதிர்க்க இயலாத அடிமைத்தன நிலையை புதினம் காட்டுகிறது. “ஒரு தலித் பெண்ணுக்கு ‘பெண்’ என்ற நிலையைக் காட்டிலும் ‘தலித் பெண்’ என்கிற நிலையிலேயே அடையாளம் கட்டமைக்கப்படுகிறது. ஒரு தலித் பெண்ணின் பிரச்சினைகள் அவள் பெண்ணாக இருப்பது என்பதைக் காட்டிலும் தலித் பெண்ணாக இருப்பதாலேயே ஏற்படுகின்றன”5

தன் தேவைக்காகவும், வசதிக்காகவும் பொட்டுக்கட்டிவிடப்பட்ட பெண்களில் பலர் தவறான உறவு முறைகளில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட போதும், செடல், லட்சுமி, பாஞ்சாலி போன்றோர் இதற்கு விதிவிலக்காகத் திகழ்கின்றனர்.

“நீ வீசியெறிந்த சிறு வாழ்க்கை
உனக்கே காணிக்கை
சிறு வாழ்க்கையை
தோள் மீது சுமந்து காப்பாற்றுவாயோ
தோளின் சுமையெனக் கருதி குன்றிப் போவாயோ
உன்பால் விட்டது
எதுவாக இல்லாவிட்டாலும் மண்ணாக்கி விடு.
இக்கணத்தில் முளைக்கும், வேருக்கும்
இளந்தளிருக்கும் உரமாக்கிக் கொள்”6

என்ற கவிதைக்கேற்ப செடல் தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறாள்.

ஆரான், வீரமுத்து உடையார் போன்றோர் அவளை தவறான நோக்கத்துடன் அணுகியபோது, அவர்களை தவிர்த்து விடுகிறாள். ஊல் அவளை பலரும் பலவிதமாகப் பேசிய போதும், அவள் தன்னை மாற்றிக் கொள்ளாது, தன் முடிவில் நிலைத்து நிற்கிறாள். சமூகம் தன்னை எத்தகைய கண் கொண்டு நோக்கினாலும் சாரி; தான் மட்டும் தன்னுடைய சத்தியத்திலிருந்து மாறாத நன்னெறியிலேயே வாழ எண்ணுகிறாள்.

“கட்டுப்பாட்டின் மறுபெயரே சாதி. சாதி அனுபவித்தலுக்கு (Enjoyment) ஒரு வரம்பு கட்டுகிறது. அனுபவித்தலுக்காக ஒரு மனிதன் சாதி எல்லைகளைத் தாண்டுவதை சாதி அனுமதிப்பதில்லை”7 இதைப் போன்றே சில வேளைகளில் செடல் போன்ற  மனிதர்களும் சாதி எல்லைகளை மட்டுமின்றி, சமூக ஒழுக்க எல்லைகளையும் தாண்டுவதில்லை.

தன் பெற்றோர் இறந்த செய்தி அறிந்த போதும், தனது சகோதரி வனமயில் இறந்ததைக் கண்ட  போதும் செடலினது மனம் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளது. “எல்லாரும் மண்ணாயிட்டாங்க. வம்சமே கடயத்துப் போயிடிச்சி ............ என்னோட பொணம் என்னிக்கு ஆத்துல சாம்பலாவுமோ”8 என்று அரற்றும் அவளது நிலையைக் காணுகையில் அவளது மனம் மட்டுமல்ல, வாழ்க்கையின் மீதும், சமூகத்தின் மீதும் அவளுக்கு அவ நம்பிக்கையும், வெறுப்பும் ஏற்பட்டுவிட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.

கூத்தாடும் போது சுயம்வர ராணியாக வலம் வந்து, பலதேச அரசர்களுக்கு மாலை சூடியிருக்கிறாள். ஆனால் உண்மை நிகழ்வில் அவள் கன்னி தான். ‘என்றைக்குமே அவள் உடம்பு உயிர் பெறப் போவதில்லை. அதைத் தான் உலகம் விரும்புகிறது. அதற்காகத்தான் சோறும் போடுகிறது’ என்ற உண்மையை நன்கு உணர்ந்துள்ளாள்.

வீரமுத்து உடையாரின் தீண்டுதலால் சஞ்சலப்பட்டுபோனதை எண்ணி வேதனையடைகிறாள். இந்நிலைக்கு காரணம் செல்லியம்மன் தானே தவிர, தான் காரணமல்ல என்று கூறி, தன் மனதிற்கு ஆறுதல் தேடிக் கொள்கிறாள்.

“பலி கொடுக்கிறப்பக் கூட அரவானுக்குக் கன்னி கயிச்சித்தான் பலியிட்டாங்க. எனக்கு எதுவுமில்லை. எல்லாருமா சேர்ந்து இந்தப் பாவி வவுத்துல காயறுத்திட்டீங்களே! நான் எதுக்குப் பொறந்தன்?” 9 என்று அழுது புலம்புவதைக் காணுகையில் அவள் குடும்ப வாழ்வுக்காக ஏங்குவதையும், பொட்டுக்கட்டியவள் என்பதால் ஒழுக்கத்துடன் வாழ விரும்புவதையும் காண முடிகிறது. விரும்பாமல் ஏற்றுக் கொண்ட சுமையாக இருந்தாலும், அதை காலம் முழுக்க சுமக்க வேண்டிய கடமையாக எண்ணி, அதை கறைபடாமல் சுகமாக சுமக்க விரும்புவதையும் அவளது பாத்திரம் உணர்த்தி நிற்கிறது.

“எத்தனை அடக்குமுறைகளுக்குள் என்னை நீ ஆழ்த்தினாலும், அவற்றினுள் சிக்காமல் நான் எனக்கென்று ஒரு சுதந்திர உலகை உண்டாக்கிக் கொள்ள முடியும். அதுதான் இன்னும் நான் உயிர் வாழ்வதற்கான, வாழ்க்கையை நேசிப்பதற்கான, நான் ஆடுவதற்கும் பாடுவதற்கும் களிப்பதற்குமான, ஆதாரம்”10 எனும் இவ்வரிகள் ‘சாத்தியமான உலகங்கள்’ என்ற கோட்பாட்டை பற்றி ராஜ் கௌதமன் கூறியவை எனினும், அவை செடலின் வாழ்க்கை உலகிற்கும் பொருந்தி நிற்கின்றன.

இமையத்தின் புதினங்கள் காட்டும் மாந்தர்கள் அனைவரும், ஒருவிதத்தில் வாழ்க்கையின் அவலங்களைச் சுமந்தவர்களாகவும், அல்லல்பட்டவர்களாகவும், அவமானத்திற்கு ஆளானவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர்.  செடலைப் போன்று வாழ்க்கையின் உண்மைத் தன்மையை அனுபவிக்கும் கதைப் படைப்புகளே களத்தில் உள்ளனர்.

குறிப்புகள்
1.ச.தனலட்சுமி, தமிழ்ப் புதினங்களில் ஓர் உளவியல் பார்வை, ப.14
2.டி.ஞானையா, அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துகளும், ப.320
3.இமையம், செடல், ப.126
4.ஆனந்த் டெல்டும்டே, ஏகாதிபத்திய – எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், ப.82
5.அ.மார்க்ஸ், கலாச்சாரத்தின் வன்முறை, ப.36
6.து.சரஸ்வதி, என்ன செய்வீங்க?, ப-எழுத்தாளனின் இதயத்திலிருந்து
7.அண்ணல் அம்பேத்கர், காந்தியம், ப.8
8.இமையம், செடல், ப.209
9.இமையம், செடல், ப.187
10.ந.முத்துமோகன், மார்க்ஸ்-அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகை, ப.175

அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.