[அண்மையில் இலண்டனில் ஆகஸ்ட் 14 தொடக்கம் - ஆகஸ்ட் 18 வரை நடைபெற்ற 'உலகத் தமிழியல் மாநாடு 2013'இல் ஆகஸ்ட் 15 அன்று  வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.- நுணாவிலூர் கா. விசயரத்தினம். ]

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)தொல்காப்பியம் என்னும் நூலை 'ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்படுபவரும் தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) அறுநூற்றி எண்பது (680 - கி.மு.711) ஆண்டில் வாழ்ந்தவருமான தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கிய இலக்கண நூலைப் பாடியருளினார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும் இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவருமாவார். 'இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்' என்பது நக்கீரனாரின் கூற்றாகும். 'தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்' என்று டாக்டர் மு. வரதராசனார் கூறியுள்ளார். தொல்காப்பியனார் ஒரு காப்பியக்குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற் பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் 'திரணதூமாக்கினி' எனவும், 'சமதக்கினியாரின் புதல்வர்' எனவும் கூறுவர். குறுமுனி அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் எனவும் ஒரு கூற்றுண்டு. இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.

தொல்காப்பியத்தை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்களாக ஒருமித்து 27 இயல்கள் உள்ளன.  எழுத்ததிகாரத்தில் 483 சூத்திரங்களும், சொல்லதிகாரத்தில் 463 சூத்திரங்களும், பொருளதிகாரத்தில் 656 சூத்திரங்களுமாக ஒருமித்து 1,602 சூத்திரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளன.  ஆனால், இந்நூற் சூத்திரங்கள் 1,595 என இளம்பூரணரும், 1,611 என நச்சினார்க்கினியரும் வகுத்து உரையெழுதியுள்ளனர். இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும்  இன்னும் பலரும் தொல்காப்பிய நூலுக்கு உரை எழுதியுள்ளனர்.  இவற்றுள் இளம்பூரணர் உரை ஒன்றே காலத்தால் முற்பட்டதும், முற்றாகக் கிடைப்பதும் ஆகும். இனி மேற்காட்டிய விடயம் தொடர்பில் தொல்காப்பியர் கூறும் செய்திகளையும் காண்போம். தமிழ்நாட்டு எல்லை வடக்கே திருவேங்கட மலையும், தெற்கே குமரியாறும், கிழக்கு மேற்குத் திசைகளில் கடலாகவும் அமைந்த எல்லைப் பரப்பே ஆசிரியர் தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாடு என்றழைப்பர்.  ஆனால், தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் கடல் எல்லைகளைக் குறிக்கவில்லை. அவர் பாயிரம் இவ்வாறு தொடங்குகின்றது.
                  
                     'வடவேங்கடந்  தென்குமரி
                     ஆயிடைத்
                     தமிழ்கூறும்  நல்லுலகத்து .. ..’
 
பனம்பாரனாரின்  பாயிரத்தில் ஒரு சிறப்பு அம்சம் அமைந்திருப்பதை நாம் காணலாம். இங்கே ஆசிரியர் ஒரு விடயத்தை - அதாவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லையாக அமைந்துள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்லிப் போகின்றார்.  வடக்கே நீண்ட தொடர் வேங்கட மலை.  தெற்கே பாய்ந்தோடும் குமரியாறு.  இது கடல் வரை சென்று சங்கமிக்கும்.  எனவே, கடல் எல்லையைக் கூறாமற் கூறியுள்ளார்.  இன்னும், வேங்கட மலைக்கும், குமரியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு என்று குறிப்பிடுவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லைவரை  உள்ள நிலப்பரப்பே தமிழ் கூறும் நல்லுலகமாகும் என்பது தோன்றா நிற்கும். ஏழு திணைகள் நம் பண்டைத் தமிழர் இயற்கையோடு இணைந்து, பிணைந்து, ஒன்றறக் கலந்து, மகிழ்ந்து, இன்புற்று வாழ்ந்து வந்தனர்.  மேலும் நிலம் பற்றிக் கூறுகையில், திருமால் காக்கும் காடாகிய முல்லை இடமும், முருகவேள் காக்கும் மலையாகிய குறிஞ்சி இடமும், இந்திரன் காக்கும் வயலாகிய மருதம் இடமும், வருணன் காக்கும் பெரு மணலான நெய்தல் இடமும,; முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர்களால் மொழியப்பட்ட பெயர்கள் எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
         
        ‘மாயோன் மேய காடுறை உலகமும்
        சேயோன் மேய மைவரை உலகமும்
        வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
        வருணன் மேய பெருமணல் உலகமும்
        முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
        சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’. - (பொருள். 05)

தொல்காப்பியர் காலத்திற்குமுன் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது. ஆனால் காலப்போக்கில் முல்லையும், குறிஞ்சியும் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிப் போயுள்ள நிலத்தைப் 'பாலை' எனப் பெயரிட்டனர். இதன் பின்தான் நால்வகை நிலங்கள், ஐவகை நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகின்றது.
      
           'முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
           நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்,
           பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.  '   - (காடுகாண் காதை. 64 – 66)

முதற்பொருள்

முதற்பொருள் எனப்படுவது நிலமும், பொழுதும் ஆகிய இயற்கையென உலகவியலை அறிந்தோர் கூறுவரெனச் சூத்திரம் கூறும்.

         ‘முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
         இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.’- (பொருள். 04) 

நிலம் என்பது  முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களாக வகுக்கப்பட்டவையாம்.  பொழுது என்பது அந்த ஐவகை நிலம் சார்ந்தோருக்கு இன்ப உணர்வினைக் கொடுக்கின்ற பெரும்பொழுதும், சிறுபொழுதும் ஆகிய இரண்டுமாம்.

இன்னும், பெரும்பொழுதில் கூதிர், முன்பனி, வேனில், பின்பனி, வைகறை, கார் என்னும் ஆறு பருவங்கள்  ஆகிய காலமும், சிறுபொழுதில் யாமம், நண்பகல், மாலை, எற்பாடு பொழுது, விடியல் ஆகிய பொழுதும் அடங்கும். இனிச் சூத்திரம் கூறும் பாங்கினையும் காண்போம்.
          
           'காரும் மாலையும் முல்லை. ''   - ( பொருள். 06)
           குறிஞ்சி, 'கூதிர் யாமம் என்மனார் புலவர்.'  -  (பொருள். 07)

           'பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.' – (பொருள். 08)
           'வைகறை விடியன் மருதம்.'    -  (பொருள். 09)

          எற்பாடு
          'நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும். ' - (பொருள். 10)

           'நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
           முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.'   - (பொருள். 11)

          'பின்பனி தானும் உரித்தென மொழிப.'     - (பொருள். 12)

நம் பண்டைத் தமிழர் நிலத்தை ஐவகைகளாக வகுத்து, அதற்குப் பெரும் பொழுதும், சிறு பொழுதும் அமைத்து, அவற்றுக்கு இதமான காலப்பகுதிகளும் கணித்து, அததற்கேற்ற இன்ப உணர்வுகளோடு ஒட்டி, உறவுகொண்டு பெரு வாழ்வு பெற்றனர் என்பது தௌ;ளத் தெளிவாகின்றது.

பண்டைத் தமிழர் வாழ்வியலை அகம், புறம் என வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விபரிக்கும். மேலும் இதை ஒருதலைக் காமம் எனவும், அன்புடைக் காமம் எனவும், பொருந்தாக் காமம் எனவும் மூன்று பகுதிகளாக்கி அவற்றை முறையே கைக்கிளை எனவும், அன்பின் ஐந்திணை எனவும், பெருந்திணை எனவும், ஒருமித்து ஏழு திணைகளை ஆன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் இவ்வண்ணம் அமைத்துள்ளர்.
             
       'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
       முற்படக் கிளந்த எழுதிணை என்ப.'    -  (பொருள். 01)

அன்பின் ஐந்திணை
 
முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை ஆகியவற்றை அன்புடைக் காமம் என்றும் அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். இதில் குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் போன்ற செய்திகளைத் தொல்காப்பியம் இவ்வாறு கூறும்.  
            
          ‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
          ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
          தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.' (பொருள் 16 )

ஐந்திணைகளுக்கும் நிலம் அமைந்துள்ளமை காண்க.  இருத்தல் - தலைமகன் வரும்வரையும் ஆற்றியிருத்தல். இரங்கல் - ஆற்றாமை. 
கைக்கிளை கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். (கை – பக்கம், கிளை – உறவு) .இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணரா நிகழ்ச்சியாகும். கைக்கிளைக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை.
 
தாழ்வான ஒழுக்கங்களான காமவுணர்ச்சி தோன்றாத சிறிய பெண்ணிடத்துப் பாதுகாவல் இல்லாதபொழுது துன்பமுற்றுப் புகழ்தலும், பழித்தலும் ஆகிய இருசெயல்களாலும், தனக்கும், அவளுக்கும் சார்பானவற்றைச் சேர்த்து, அவள் சொற்கேளாமல் தானே சொல்லி இன்பமடைதல், பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு ஆகுமென்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார். 

        ‘காமஞ் சாலா இளமை யோள்வயின்
         ஏமஞ் சாலா இடும்பை எய்தி
         நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
         தன்னொடும் அவளொடும்  தருக்கிய புணர்த்துச்
         சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
         புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.’- (பொருள். 53)

பெருந்திணை

பெருந்திணை என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும்.  இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர்.  பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்ச்சியாகும். பெருந்திணைக்கும் நிலம் ஒதுக்கப்படவில்லை.

ஆண்மகனுக்கே உரிய மடலேறுதல், இளமை நீங்கி முதுமைக் காலத்தும் ஆசை மிகுதியால் தம்முள் கூடி இன்பம் துய்த்தல், தெளிவற்ற நிலையில் காமத்தின் கண் மிகுதிப்பட்டு  நிற்றல், ஐந்திணையாகிய  ஒத்த காமத்தின் மாறுபட்டு  நிற்றல் ஆகிய நான்கும் பெருந்திணை எனத் தொல்காப்பியம் கூறும்.

       ‘ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
        தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
        மிக்க காமத்து மிடலொடும்  தொகைஇச்
        செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.’  -(பொருள். 54)

பெருந்திணை தாழ்வான ஒழுக்கங்களைச் சார்ந்தது.   ஷஇளமை தீர்திறம்| என்பது தலைவன் முதியவனாகித் தலைவி இளையவளாதலும், தலைவி முதியவளாகித் தலைவன் இளையவனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கிய பின்பும் அறத்தின்மேல் மனம் நாடாது காமத்தின்மேல் மனம் நாடலும் என்னும் மூவகையாம். களவொழுக்கம் பூமிப் பந்தாகிய உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம் அங்கு வாழும் அனைத்து உயிரினங்களின் இன்பம் கருதியேயாம். மனிதன் இன்பமுற்று வாழ்ந்தால் உலகமே இன்ப மயமாகி விடும். அவனின்றேல் உலகம் காடுதான். மனித வாழ்வுதான் உலகமாகின்றது.

இன்பம்,   பொருள்,  அறம்   என்று   கூறப்பட்ட  அன்புடனிணைந்த   ஐந்திணையில் (கைக்கிளை, பெருந்திணை நீங்கிய ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்) நிகழும் காமக் கூட்டமானது எட்டு வகை மணத்துள் அமைந்த யாழினையுடைய காந்திருவரது கூட்டத்தை ஒத்தது போலாகும் என்று களவொழுக்கத்தைப் பற்றித் தொல்காப்பியர்  சூத்திரம் அமைத்துள்ளார்.
         
   ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
    அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
    காமக் கூட்டங் காணுங் காலை
    மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
   துறையமை நல்யாழத் துணைமையோர் இயல்பே’- (பொருள். 89)

மணம் எட்டாவன: (1) அசுரம், (2) இராக்கதம், (3) பைசாசம், (4) காந்திருவம், (5) பிரமம், (6) பிரசாபத்தியம். (7) ஆரிடம், (8) தெய்வம் ஆகியனவாம். இவற்றுள் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் கைக்கிளையைச் சாரும் என்று சூத்திரம் கூறும்.

                    ‘முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.’- (பொருள். 102)

இன்னும், மேற்காட்டிய எண்வகை மணத்துள்  பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணையைச் சாரும் என்று தொல்காப்பியம் கூறும்.

                    ‘பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.’ - (பொருள். 103)

எண்வகை மணத்துள் எஞ்சிய காந்திருவம் ஐந்திணைக்குரியதாம். ஐந்திணையோடு பொருந்தி வரும் யாழோர் கூட்டம், சிறப்புற்ற ஐவகை நிலத்தையும் பெற்றதனால், யாழோர் கூட்டம் ஐந்தெனப்படுமாம். நிலமும், காலமும் முதல் எனக் கூறப்பட்டுள்ளது. ஐவகைக் கூட்டமாவன:- களவு, கற்பு, உடன் போக்கு, இற்கிழத்தி, காமக்கிழத்தி/ காதற்பரத்தை என்பனவாம்.
          
     'முதலாகு புணர்ந்த யாழோர் மேன
     தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.'  -  (பொருள். 104 )

இவ்வண்ணம் எண்வகை மணத்தையும் ஏழு திணைகளுக்கும் வகுக்கப்பட்டமை காண்க. களவொழுக்கக் காலவரை களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ள பொழுது தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கும் வழக்கம் இல்லை. களவுக் காதல் தெய்வீகமானது. அவ்வண்ணமே அன்றைய காதலர்கள் கருத்தொருமித்துச் செயற்பட்டனர். இருந்தும், தலைவன் தலைவியரிடையே தோன்றிய களவின் காலவரையை இரண்டு மாதம்தான் நிகழுமென்று இறையனார் களவியலில் வரையறை வகுக்கப்பட்டுள்ளது.
                  
            ‘களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
            திங்கள் இரண்டின் அகமென மொழிப.;- (நூற்பா. 32)

தலைவன் தலைவியரிடையே ஒரு தவறும் நடந்தேறிவிடக் கூடாதென்ற பேரவாக் கொண்ட  பழந்தமிழறிஞர் இவ்வாறான வரையறையை வகுத்துள்ளமை போற்றற்குரியதாகும்.

கற்பொழுக்க நெறி

தலைவன் தலைவியர் களவொழுக்கம் வெளிப்படுதலும், தமரின் மூலம் திருமணம் செய்து கொள்ளுதலும் என்று கூறப்பட்ட இவைமுதலாகிய இயற்கை நெறியில் மகிழ்தலும், புலத்தலும், ஊடலும், ஊடல் தீர்த்தலும், பிரிதலும் என்று சொல்லப்பட்டவற்றுடன் கூடிவருவது கற்பு என்று கூறப்படும்.
          
        ‘மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
        இவைமுத லாகிய வியனெறி திரியாது
        மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
        பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.’ - (பொருள். 488)

அம்பலும் அலரும்

தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது களவு வெளிப்படுதலுமுண்டு. இது ஷஅம்பல்|, ஷஅலர்| என இருவகையால் வெளிப்படும். அம்பல் என்பது சொல் நிகழா முகிழ்நிலைப் பரவாக் களவாகும்.  அலர் என்பது சொல் நிகழ்தலான பரவிய களவாகும். இவ்விரண்டிற்கும் தலைவனே பொறுப்பாவான் என்று கூறும் தொல்காப்பியம். தலைவி  இவற்றிற்குப் பொறுப்பாகாள் என்றவாறு.     
            
                'அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின்
       அங்கதன் முதல்வன் கிழவ னாவான்’- (பொருள். 137)
 
களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இரண்டிலும் தலைவன் தலைவி ஈடுபட்டிருக்கும் பொழுது அலர் (பழி) தூற்றுதல் நிகழ்வதுண்டாம். தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து, பரத்தையை நாடிச் சென்று, அவளுடன் சேர்ந்து ஆடல், பாடல் நிகழ்த்தி, ஆற்றிலும், குளத்திலும் நீராடி மகிழ்தலும், அலர் பரவலுக்குக் காரணமாம்.
                       
                          'களவுங் கற்பும் அலர்வரை வின்றே.'  -  (பொருள். 160)
             
                          'கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே.'   - (பொருள். 162)

கற்பும் கரணமும்

கரணம் என்பது சடங்கொடு கூடிய மணநிகழ்வு. சடங்கோடு கூடிக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவன், கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவியைக் கொடுத்தற்குரிய தலைவியின் தமர் மணஞ்செய்து கொடுக்கும் முறையைக் கற்பென்று சிறப்பித்துக் கூறுவர். இது கொண்டு கொடுக்கும் முறையாம்.

கற்பு, கரணம், கிழவன், கிழத்தி, கொளற்குரி மரபினர், கொடைக்குரி மரபினர், கொண்டு, கொடுத்து என்பன நிரல் படுத்திக் கற்பொடு பொருந்திய மணவிழாவினைக் காண்க.
         
               
                  'கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
                 கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
                 கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.;- (பொருள். 140)

தலைவியும்  தலைவனும்  அன்பினாற்கூடி  ஒன்றுபட்டுச்  சேர்ந்து  சென்ற  பொழுதும்,  கொடுத்தற்குரிய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்கோடுகூடிய மணநிகழ்வு நடைபெறுதலும் உண்டாம். இவ்வண்ணம் கரணத்தின் சிறப்பு கூறப்பட்டமை காண்க.
           
                  ‘கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
         புணர்ந்துடன் போகிய காலை யான’ -  (பொருள் 141)

நால்வகை வகுப்பினரான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியவர்களிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்த காலமொன்று அன்று இருந்தது. அதன்பின் மேலோர் என்று சொல்லக்கூடிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகை வகுப்பரிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்தது.
         
                 ‘மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
         கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே’ - (பொருள். 142)

தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்ததென்பதும், தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்ததென்பதும், வேளாளர் தமக்குள் மாத்திரம் மணவினை நிகழ்த்தினரென்பதும் புலனாகின்றது. இன்று இம்முறைகள் யாவும் அருகி மறைந்துவிட, நால்வகுப்பினரும் தத்தமக்குள் கொண்டு, கொடுத்து, மணவினை காண்கின்றனர்.
நால்வகுப்பின மக்கள் இன்னும், நம் பண்டைத் தமிழ் ஆன்றோர் தம்இன மக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்  ஆகிய நான்கு வகுப்பினரில் அடக்கி, அரசர்களிலும் பார்க்க அந்தணர்க்கு முதலிடம் அளித்து, இரண்டாமிடத்தில் அரசரை அமர்த்தி, மூன்றாம் நான்காம் இடங்களில் முறையே வணிகர், வேளாளர் ஆகியவர்களை நிறுத்தி, அரசன் கையில் செங்கோல் கொடுத்து, மக்களை மாண்புடன் வாழவைக்கும் முறையினை அமைத்தமை காண்க.

மேலும், இன்று நம் மத்தியில் தாண்டவமாடும் சாதிப் பிரிவினையும், சீதனக் கொடுமையும் தொல்காப்பியர் காலத்தில் இருக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது. நாம் தொல்காப்பியர் வழியில் நிற்கின்றோமா? என்பது விடையற்ற ஒரு கேள்வி. ஐயர் யாத்த கரணம் தலைவன் தலைவியைக் கண்டு, காதல் கொண்டு, சிலநாட் பழகி, பல நாள் மறைந்தொழுகி, பின் நானறியேன் என்று பொய் கூறுதலும், குற்றப்பட ஒழுகுதலும் மக்கள் வாழ்வில் மங்கா வடுக்களைத் தந்து வாழ்க்கை முறைகளைச் சீரழித்து விடுகின்றன. தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்குகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர்.

         ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
         ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’   - (பொருள். 143)
                          
‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்' என்று வரும் கூற்றால், பொய்யும் வழுவும் தோன்றாக் காலமொன்றிருந்தமை புலனாகின்றது. அக்காலம் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதென்பதும் தெளிவாகின்றது.

பொய்யாவது செய்ததனை மறுத்து நிற்றல். வழுவாவது செய்ததை அதன் கண் நில்லாது தவறி ஒழுகுதல். கரணத்தொடு செயற்படின் பொய்யும், வழுவும் நிகழாவாம். இவ்வண்ணம் கரணம் வேண்டுவதாயிற்று. இன்றும் கரணத்தொடு கூடிய திருமணம் நடாத்துகின்றோம்.

களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோர்

பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி ஆகிய அறுவரும் களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோராவர் என்று கூறும் சூத்திரம் இது.
           
             ‘பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
              சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியொடு
              அளவியன் மரபின் அறுவகை யோரும்
              களவியற் கிளவிக் குரியர் என்ப.’  - (பொருள். 490)

கற்பிற் கூற்று நிகழ்த்தற்குரியோர்

பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் ஆகிய அறுவருடன் சிறப்பினையுடைய பார்ப்பான், பாங்கன் தோழி, செவிலி, கிழவன், கிழத்தி ஆகிய அறுவரையும் சேர்த்துப் பன்னிருவரும் கற்பிற் கூற்று நிகழ்த்தற்கு உரியோராவார்.

fstpw; $w;W epfo;j;j mWtiuAk;> fw;gpw; $w;W epfo;j;jg; gd;dpUtiuAk; epakpj;jik> fw;gpd;Nky; md;Ws;s Md;Nwhh; fhl;ba fl;Lg;ghl;bidf; fhz;fpd;Nwhk;.
                                            ‘பாணன் கூத்தன் விறலி பரத்தை
                            யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
                           பேணுதகு சிறப்பில் பார்ப்பான் முதலா
                           முன்னுறக் கிளந்த  அறுவரொடு தொகைஇத்
                           தொன்னெடு மரபிற் கற்பிற் குரியர்.’  - (பொருள் 491)


ஒத்த பத்து வகைப் பண்புகள்

பண்டைத் தமிழர்கள் மணவாழ்க்கைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துப் பத்து வகைப் பண்புகளில் தலைவனும் தலைவியும் ஒத்திருக்க வேண்டுமென விதிகள் அமைத்துள்ளனர்.

அவையாவன: (1)  ஒத்த  பிறப்பும், (2)  ஒத்த  ஒழுக்கமும், (3)  ஒத்த  ஆண்மையும்,  (4) ஒத்த வயதும், (5) ஒத்த உருவும், (6) ஒத்த அன்பும், (7) ஒத்த நிறையும், (8) ஒத்த அருளும், (9) ஒத்த அறிவும், (10) ஒத்த செல்வமுமாம். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் பார்ப்போம்.

                                       ‘பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
                                        உருவு நிறுத்த காம வாயில்
                                         நிறையே அருளே உணர்வொடு திருவென
                                        முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே’-- (பொருள். 269)

இப்படியான பத்து (10) வகைப் பண்புகள் ஒத்திருக்கும் தலைவன் தலைவியரிடையே அன்று திருமணம் நிகழ்த்தப்பட்டு அவர்கள் சீரும், சிறப்பும் அமைந்த இல்வாழ்க்கையை நடாத்தி இன்புற்றிருந்தனர். இன்று நாம் திருமணத்துக்குமுன் பதி;னான்கு (14) வகைப் பொருத்தங்கள் பார்த்து மணவிழா நடாத்துகின்றோம். அவையாவன: (1) நட்சத்திரப் பொருத்தம், (2) கணப் பொருத்தம், (3) மகேந்திரப் பொருத்தம், (4) ஸ்திரீதீர்க்கப் பொருத்தம், (5) யோனிப் பொருத்தம், (6) இராசிப் பொருத்தம், (7) இராசியதிபதிப் பொருத்தம், (8) வசியப் பொருத்தம், (9) இரச்சுப் பொருத்தம், (10) வேதைப் பொருத்தம்,  (11) புத்திரப் பொருத்தம், (12) ஆயுள் பொருத்தம், (13) விருச்சப் பொருத்தம், (14) நாடிப் பொருத்தம் என்பனவாம்.  இன்றுள்ள பதினான்கு வகைப்  பொருத்தங்கள்  அன்றிருந்த பத்து வகைப் பொருத்தங்களிலிருந்து எவ்வண்ணம் மாறுபட்டுப் போயுள்ளன என்பதை மேலே பார்த்தோம்.

தலைவனின் ஊர்திகள்

தலைவன் தலைவியர் காதல் வலையிற் சிக்குண்டனர். தலைவன் தலைவியை நாடிச் செல்வது வழக்கம். தேர், யானை, குதிரை முதலியவற்றிலும், பிறவற்றிலும் தலைவன் விரைந்து சென்று தலைவியைக் கூடுதலும் உண்டென்று சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியனார் ஆவார்.

         'தேரும் யானையும் குதிரையும் பிறவும்
         ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப.' -  (பொருள் 209)

தலைவன் ஒருவனிடம் தேரும், யானையும், குதிரையும் பிற ஊர்திகளும் உண்டென்பது அவனின் சிறந்த பொருளாதார நிலையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இன்னும் அவன் நாட்டுச் செழிப்பும் அவ்வண்ணம் அமைந்துள்ளமையும் புலனாகின்றது.

முடிவுரை

இதுகாறும் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலிருந்து தமிழ் நாட்டின் எல்லை, ஏழு திணைகள், முதற் பொருள், அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை, களவொழுக்கம், களவொழுக்கக் காலவரை, கற்பொழுக்க நெறி, அம்பலும் அலரும், கற்பும் கரணமும், நால்வகுப்பின மக்கள், ஐயர் யாத்த கரணம், களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோர், கற்பிற் கூற்று நிகழ்த்தற்குரியோர், ஒத்த பத்துவகைப் பண்புகள், தலைவனின் ஊர்திகள் ஆகியவை பற்றி விரிவுபடுத்திப் பார்த்தோம்.  

இன்னும், ஐந்திணையில் அவரவர் ஐவகை நிலத்திற்கேற்ற ஒத்த காம உணர்வு, எழுச்சி, நெகிழ்ச்சி ஆகியவற்றோடு ஒன்றறக் கலந்து, இணைந்து, பிணைந்து இயற்கையுடன் வாழ்க்கை நடாத்திய பண்டைத் தமிழரின் பண்பினை தொல்காப்பியர் தொகுத்துக் காட்டிய சூத்திரங்கள் யாவும் கடந்த மூவாயிரம் (3000) ஆண்டுகளாக வலிமை பெற்று இந்நாளிலும் உயிருடன் உலா வருகின்றதை நினைந்து அன்னாரின் வழித்தோன்றலாகிய நாம் அவர் தந்துள்ள செய்திகள;; அனைத்தையும் கட்டிக் காத்துப் பேணி அடுத்த சந்ததியினருக்கு விட்டுப் போவது நம்மனைவரின் கடமையாகும்.


நுணாவிலூர் கா. விசயரத்தினம்:          

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)தமிழன் தாயகமாம் ஈழத் திருநாட்டின் வட மாகாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் நுணாவில் மேற்கு என்னும் அழகிய பச்சைப் பசேலென்ற கிராமத்தில்  பிறந்து வளர்ந்து, தமிழ்க் கல்வியை மட்டுவில் தெற்கு சரசுவதி வித்தியாசாலையிலும், ஆங்கில மேற்படிப்பைச் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியிலும் கற்றவர். அவர் படிப்பை முடித்துää அரச சேவையில் சேர்ந்து, படிப்படியாகப் பல போட்டிப் பரீட்சைகளில் சித்திபெற்று, இலங்கையின் கணக்காய்வுச் சேவைக்கு ஆட்களை உள்ளீர்க்கும் நோக்கில் பரீட்சைத் திணைக் களத்தினால் நடாத்தப்பட்ட இலங்கை அரசின் கணக்காய்வுச் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்புக் கணக்காய்வு அதிபதித் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகக் கடமையாற்றி, ஓய்வு பெற்றார். அவர் அரச, சபை, கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்து, அறிக்கைகளை இலங்கை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து, நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுக்கூட்ட விவாதங்களிற் பங்கேற்ற அனுபவமும் உடையவர்.  இவர் ஒரு பட்டதாரியும், கணக்காய்வாளரும, உள்ளகக் கணக்குத் தணிக்கையாளரும், இலக்கிய ஆய்வுக்கான ‘தமிழியல் விருது -2011’ என்ற விருதைப் பெற்றவரும் ஆவார். 2005-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கணினியை விஞ்சும் மனித மூளை’ எனும் ஆய்வு நூலினதும், 2007-ஆம் ஆண்டில் வெளி வந்த ‘Essentials of English Grammar’ என்ற ஆங்கில இலக்கண நூலினதும், 2007-ஆம், 2010-ஆம், 2012-ஆம் ஆண்டின் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கமாகிய நுடுயுடீ-இன் தொகுப்பு நூல்களாகிய ‘பூந்துணர்’ இல் ஒருவராகவும், 2008-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தொல்காப்பியத் தேன் துளிகள்’ என்ற இலக்கிய ஆய்வு நூலினதும், 2010-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்ற ஆய்வு நூலினதும், 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இலக்கிய – அறிவியல் நுகர்வுகள்’ என்ற ஆய்வு நூலினதும்ää 2013-ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள ‘வியக்க வைக்கும் பிரபஞ்சம்’ என்ற விண்வெளி ஆய்வு நூலினதும், நூற்றுக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளினதும் ஆசிரியராவார். பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் (ELAB) இணைப்பாளரும் ஆவார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.