நூலகர் செல்வராஜா" ஈழநாட்டிலே  பல சமூகத்தவர்கள் இருக்கின்றார்களெனினும் தமிழரின்  சொந்தப்  பண்பாட்டினையும்  உரிமைகளையும் எடுத்துரைக்கும்போது,  பிறசமூகத்தினரும் இந்நாட்டில் வாழ்ந்துவருகின்றனர்  என்பதையுணர்ந்து வேற்றுமையில்  ஒற்றுமை காண  முயலவேண்டும். ஒற்றையாட்சி( யுள்ள) இந்நாட்டில் மனித உரிமைகளைப்பெறுவது  சாத்தியமானதா...? அடிப்படை மனித உரிமைகள்  அனைத்தும் நன்கு பாதுகாக்கப்படுமா...? அன்றேல் சமஷ்டிதான்  இலங்கைக்கு  உகந்ததா...? மாகாண சுயாட்சி முறை எமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றத்தக்கதா...? இவைபோன்ற கேள்விகளுக்கு  விளக்கம்  தரும் கருத்தரங்கமாக 'ஈழநாடு' விளங்கும்." - என்று 58 ஆண்டுகளுக்கு முன்னர் (அமரர்) கே.சி. தங்கராஜா யாழ்ப்பாணத்திலிருந்து 11-02-1959 ஆம் திகதி வெளியான முதலாவது ஈழநாடு வார  இதழில் பதிவுசெய்துள்ளார். ஈழநாடு  வெளிவருவதன் நோக்கத்தை அவர் அன்று எழுதியிருந்தாலும், அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு இற்றைவரையில் சரியான பதில் கிடைக்கவும் இல்லை.  தீர்வுகளும் தூரத்தூர  விலகிச்சென்றுகொண்டே  இருக்கின்றன.

இலங்கையில்  இதுவரையில் எத்தனை தடவை அரசியலமைப்பு மாற்றப்பட்டுவிட்டது...?  தொடர்ந்தும்  வரைபுகள் முன்வைக்கப்படுகின்றன. பெரியார்  தங்கராசாவின் அரிய கருத்துக்களுடன் 1959 இல் ஒரு பிராந்திய பத்திரிகையாக இலங்கையில் வெளியான ஈழநாடு பற்றிய ஒரு  ஆவணப்பதிவாக வெளியாகியிருக்கிறது ' ஈழநாடு ஒரு ஆலமரத்தின் கதை'

ஏற்கனவே  இலங்கையின்  இலக்கிய - அறிவியல் படைப்புகள் பற்றிய செய்திகளையும்  ஆளுமைகள் மற்றும் நூலகவியல் பற்றிய கட்டுரைகளையும்,  நூல் பதிப்புத்துறை தொடர்பான ஆக்கங்களையும் - எரிக்கபட்ட யாழ். பொது நூல்நிலையம் பற்றியும்  வெறும் குறிப்புகளாக அல்லாமல்,  நீடித்து நிலைத்துநின்று பேசத்தக்க ஆவணமாகவே தமிழ் உலகிற்கு   வழங்கியிருக்கும் நூலகர் என். செல்வராஜா அவர்களின் மற்றும் ஒரு தேடல் பயணத்தின்  பயன்தான் இந்த அரிய நூல். ஆவணப்படுத்துபவர்களுக்கு  தேடல் மனப்பான்மையும், பதிவுகளைத்தொகுக்கும்  அனுபவமும் இருக்கும் பட்சத்தில்  எம்மைப்போன்ற வாசகர்கள்  பயனுள்ள  தரவுகளையும் தகவல்களையும்  பெற்றுக்கொள்வார்கள். வாசகருக்காகவும்  அதேவேளை சமூக, அரசியல் ஆய்வாளர்களுக்காவும்   தொடர்ச்சியாக அயற்சியின்றி இயங்கிவரும் நூலகர் செல்வராஜா எம்மத்தியில் சிறந்த ஆவணக்காப்பாளராகவே விளங்கிவருகிறார். அவரது அயோத்தி நூலகசேவை இந்நூலை  வெளியிட்டுள்ளது. 35 கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியிருக்கும் இந்நூலுக்கு வீரகத்தி தனபாலசிங்கம் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

1959 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு ஈழநாடு வார இதழின் முதல் பிரதியை எடுத்துக்கொண்டு ஆசி பெறுவதற்காக  யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரமத்தில் இருந்த யோகர்சுவாமிகளிடம்  சென்றிருக்கிறார்கள். அவர்," நன்றாக இருக்கிறது.  நன்றாக வரும். ஏசுவார்கள், எரிப்பார்கள், அஞ்சவேண்டாம். உண்மையை எழுதுங்கள். உண்மையாக எழுதுங்கள்" என்று சொல்லியிருக்கிறார். ஞானிகளின்  தீர்க்கதரிசனம்  என்றாவது ஒரு நாள் பலித்திடும் என்பர். ஈழநாடு  பத்திரிகைக்கும் அதுதான் நடந்தது. 1981 ஜூன் மாதம் யாழ்.பொது நூலகமும் ஈழநாடு காரியாலயமும் இலங்கையிலும் தமிழகத்திலும் பிரசித்திபெற்ற பூபாலசிங்கம் புத்தகசாலையும் கயவர்களினால் எரிக்கப்பட்டது.

காலம் பல கடந்த நிலையில்,  பாராளுமன்றில்  இன்றைய பிரதமரும் இவை எரிக்கப்பட்ட  காலத்திலிருந்த  ஐ.தே.க. அரசின் கல்வி - இளைஞர் விவகார  அமைச்சருமான  ரணில் விக்கிரமசிங்கா 1981 இல்  யாழ்நகரில்  நடந்த வன்முறைக்காக  பகிரங்கமாக மன்னிப்புக்கோருகிறார்.  இது காலம் கடந்த ஞானம். யோகர் சுவாமிகளின் ஞானம் காலத்தையும்  முந்தியது.

நூலகர் செல்வராஜா இந்நூலில் ஈழநாடு பத்திரிகையை  ஆலமரம் என்றே அர்த்தமுடன் சொல்லியிருக்கிறார். ஆலமரம் பெருவிருட்சம். அது பலருக்கும் நிழல் தரும். அதில் வாழ்ந்த பறவைகள் உலகெங்கும் பறந்துசெல்லும். சென்றவிடத்தில் கிடைத்த மரத்தின் கிளைகளில் கூடுகட்டி வாழும். அங்கிருந்தும் பறந்துசென்று வேறு வேறு பிரதேசங்களில் கூடுகட்டும். இனவிருத்தி செய்யும். அவ்வாறே யாழ்ப்பாணம் ஈழநாடுவில் பணியாற்றிய பல ஊடகவியலாளர்கள் உலகெங்கும் பரதேசிகளாக  அலைந்து,  தமது உள்ளார்ந்த  ஆற்றல்களை மேலும் வளம்படுத்தி  பத்திரிகைகள், இதழ்கள் வெளியிட்டார்கள்.   சிலர் இணைய இதழ்கள்  நடத்துகிறார்கள்.  எனினும், தம்மை அன்று வளர்த்து  ஆளாக்கிய ஈழநாடு பற்றிய நினைவலைகளை  நன்றியுணர்வோடு  பதிவுசெய்து வருங்காலத்தலைமுறைக்கு  அதன் சரிதையை சொல்லியிருக்கிறார்கள்.  அவர்களின் வாக்குமூலங்களை தொகுத்திருக்கும்  நூலகர் செல்வராஜா, மிகவும் புத்திசாலித்தனமாக,  இதில் கட்டுரைகள் எழுதியிருப்பவர்களுக்கே  அவரவர் கட்டுரைக்கு பதிப்புரிமையும்  தந்திருக்கிறார்.நூலகர் செல்வராஜாவுக்கும் ஈழநாடு பற்றிய ஒரு ஆவணத்தை தொகுக்கவேண்டும்  என்ற கனவு ஏற்கனவே இருந்திருக்கிறது. அதனை  அவரது வார்த்தைகளிலேயே இங்கு தருகின்றோம்,

" 2005 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி, லண்டன் ஐ.பீ.சீ. வானொலியில், இடம்பெறும் வாராந்த இலக்கியத்தொகுப்பு நிகழ்ச்சியின்போது, ' ஈழநாடு' பற்றி  ஒரு உரையாற்றியிருந்தேன். ' ஈழநாடு' சார்ந்த சமகால வெளியீடாக கே.ஜி. மகாதேவா அவர்களின் நினைவலைகள் என்ற நூல் எனது வானொலி அறிமுகத்திற்காகவும் நூல் தேட்டத்தில் பதிவதற்காகவும்  கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், அந்நூலின் பின்னணியில் ' ஈழநாடு' பற்றி வெளிவந்த பிற நூல்களையும்  நினைவுகூர்ந்து எனது உரையை தயாரித்து வழங்கியிருந்தேன். அந்த  உரையின் இறுதிப்பந்தி கீழ்க்கண்டவாறு  அமைந்திருந்தது:

" ஈழநாடு பத்திரிகையால் வளர்க்கப்பட்ட  பத்திரிகையாளர்கள் பலர் தத்தம்  பாணியில் தத்தமது  பார்வைக்கோணத்தில், தமது வாழ்வனுபவங்களினூடாக  சில  நூல்களையும் கட்டுரைகளையும் எழுதிவந்திருக்கிறார்கள்.  இனியும் எழுதுவார்கள். இது அவரவர் பார்வையில்  எழுதப்பட்டதால் அனுபவங்கள் தாம் சார்ந்த கொள்கைகளுக்கும்,  அணிகளுக்கும்  ஏற்ப  சுயதணிக்கை செய்யப்பட்டவையாகவே  காணப்படுகின்றன.  புலம்பெயர்ந்து வந்துவிட்ட   இவர்களால்  இந்த ஆலமரத்தின் இறுதிக்காலத்தை சரிவரப்பதிவாக்க  இயலாமல் போயுள்ளது.  அதில் முக்கிய பணியாற்றிய  முன்னோடிகளும்  முதுமையின்  பிடியில் சிக்கிக்கொண்டார்கள். மேற்கூறிய  நூல்கள்  ஒவ்வொன்றும் 'ஈழநாடு' என்ற ஒரு பெருவிருட்சத்தின்  ஒவ்வொரு கிளைகளின் கதைகளாகவே அமைகின்றன.  இவை அனைத்தும்  ஒன்றுசேரும்போது  ஒரு வேளை அந்த ஆலமரத்தின்  கதை  பூரணமாக  வெளிவரலாம்."

செல்வராஜாவின்  கனவு பதினொரு வருடங்களின் பின்னர் நனவாகியிருக்கிறது.  ஆவணப்படுத்தல் முயற்சிகளில் இவர் காண்பிக்கும்  அக்கறையைப்பற்றி  சிந்திக்கும்பொழுது, உ.வே. சாமிநாத  அய்யரிடம் காணப்பட்ட  உத்வேகம்  பற்றிய பதிவில் நான் படித்ததில்  பிடித்ததை  இங்கு  சொல்லவேண்டியவனாகின்றேன்.  " ஒரு காரியத்தைச்  செய்ய அதற்கான உழைப்பைப் போட வேண்டிய  அவசியம் இருக்கின்றது. அதற்குத் திட்டமிடுதல் வேண்டும். பின் அதனைச் செயல்படுத்தும் திறனும் வேண்டும். பலருக்கு அதற்குப் பொறுமை  இருப்பதில்லை. இதனால் செய்ய நினைக்கும் எந்தக் காரியத்தையும் செய்து முடிக்காமல், தனது இயலாமைக்குப் புறத்தே  காரணத்தைத் தேடி தம் இயலாமைகளைப் பார்த்து சரி செய்து கொள்ளத்தவறி விடுகின்றனர். "

செல்வராஜாவையும் உ.வே. சா.வுடன்  ஒப்பிடும் நோக்கில் இதனை இங்கு  சொல்லவரவில்லை. ஒரு  நல்ல முயற்சியை கனவுகாண்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அதனை  நனவாக்குவதற்காக மேற்கொள்ளும் அயராத  ஊக்கத்தினால்  ஆக்கபூர்வமான விடயங்கள்  சாத்தியமாகின்றன.  நடைமுறைக்கு  வருகின்றன. அவ்வாறு  பிரதிபலன் எதிர்பாராமல் தமிழ்சார்ந்த விடயங்களை ஆவணப்படுத்துபவர்களில்  எம்மத்தியில் குறிப்பிடத் தகுந்தவர்தான் நூலகர் செல்வராஜா. ஈழநாடு  இதழின் ஸ்தாபகர் கே. சி. தங்கராஜா, சிறந்த நிருவாகி. கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்தவர்.   இலங்கைப்பாராளுமன்றில்  அன்றைய நிதியமைச்சர் என்.எம். பெரேராவின் பாராட்டையும்  பெற்றவர்.

இவரது  கொழும்பு இல்லமே யாழ்ப்பாணம்  ஈழநாடுவின்  இலங்கைத் தென்பகுதி அலுவலகமாக  அமைந்திருந்தது. அவரது  1959 ஆம் ஆண்டு கட்டுரையுடன்--  செல்வராஜா, பேராசிரியர் கா. சிவத்தம்பி,  கே.ஜி. மகாதேவா, பொன். பாலசுந்தரம், கே. குப்புசாமி,  செல்வி குணமணி கதிரவேலு, சீ. இரத்தினசபாபதி, எஸ்.பெருமாள்,  ச. அம்பிகைபாகன், ஈ.கே. ராஜகோபால், வேரற்கேணியன், ஆ. இராஜலிங்கம், செங்கைஆழியான், எஸ். திருச்செல்வம்,  அனந்த பாலகிட்ணர், சு. சபாரத்தினம்,  கே. பி. ஹரன், அ.கனகசூரியர், ம.வ. கானமயில்நாதன், எஸ்.கே. காசிலிங்கம், எஸ்.எம். கோபாலரத்தினம், இ.கந்தசாமி, பொ. இரகுபதி ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.  இந் நூலைத்தொகுத்திருக்கும் செல்வராஜா தமது முன்னுரையுடன் மேலும் மூன்று கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.அவ்வாறே கே.ஜி. மகாதேவாவும் செங்கை ஆழியானும் ஒன்றுக்கு மேற்பட்ட  ஆக்கங்களை  எழுதியுள்ளனர். இவ்வாறு 22 பேர் எழுதியிருக்கும் 35 கட்டுரைகளையும்  படித்தவாறு ஈழநாட்டின் வரலாற்றைக்கடந்துவந்த பொழுது,  ஒருசிலரின்  கட்டுரைகள்   இதில் இடம்பெறவில்லை என்பது மனதில் நெருடலாகியது.

ஈழநாடு எஸ்.எஸ். குகநாதன் இந்தப்பத்திரிகையில் நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். பிரான்ஸ் சென்றதும் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். பலவருடங்கள் புகலிட நாட்டில் வெளியானது. தற்பொழுது அவரே புதிய ஈழநாடு என்ற இணைய இதழையும் நடத்துகிறார். யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றியவாறே ரஜனி வெளியீடு மூலம் மாதம் ஒரு நாவல் வெளியிட்டார்.

லண்டனில் நாழிகை வெளியிடும் 'மாலி'  மகாலிங்க சிவம் நீண்டகாலம் ஈழநாடு பத்திரிகையின் பாராளுமன்ற நிருபராக இருந்தவர். இவர்களது கட்டுரைகள்  இதில் இடம்பெறவில்லை என்பது எனக்கு  ஆச்சரியமானது. நூலகர் செல்வராஜா  இந்த நூலுக்காக சில வருடங்களுக்கு முன்பிருந்தோ கட்டுரைகள் கேட்டு பலரையும் தொடர்புகொண்டதுடன்,  இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளின் ஊடகங்கள் வாயிலாகக்கேட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.   ஆயினும்,   சிலர் அவரது வேண்டுகோளை அலட்சியப்படுத்தியிருப்பதும்   தெரியவருகிறது.  இந்நூலில் கட்டுரைகளை தொகுக்கும்போது சுயதணிக்கை பற்றியும் குறிப்பிடுகிறார். ஆனால், பொறுப்பற்ற முறையில்  குகநாதன் பற்றி எழுதியிருக்கும் ராஜகோபாலின் ஆக்கத்தை  ஏன்  கவனிக்க  மறந்தார்...?

ஈழநாடு  என்ற ஆலமரத்தின் வரலாற்றை பதிவுசெய்ய வந்தவர்கள், அத்தோடு  நின்றுகொண்டால் நல்லது. அதனைவிடுத்து தங்கள் தனிப்பட்ட  விருப்புவெறுப்புகளை  உதிர்ப்பதற்கு வரலாற்று ஆவணங்களை  பயன்படுத்த  முனைவது அழகல்ல. தொகுப்பாசிரியர்கள், ஆவணங்களை தொகுக்கும்போது எத்தகைய செம்மைப்படுத்தல்களை மேற்கொள்ளவேண்டும் என்பதையும் சிந்திக்கத்தூண்டும் விதமாக இந்த நூல் அமைந்துள்ளது. ஈழநாடு கலை, இலக்கியத்திற்கும் அருந்தொண்டாற்றிய பத்திரிகை. அதன் இருபத்தைந்து ஆண்டுகால இலக்கியப்பாரம்பரியத்தை செங்கைஆழியான் விரிவாகத்தந்துள்ளார். அத்துடன் ஈழநாடு பத்திரிகையில் வெளியான சிறுகதைகளையும் அவர் தொகுத்து வெளியிட்டவர். குறிப்பிட்ட தொகுதிக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்களில் கலைப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கும் ஊடகத்துறை கற்கை நெறியில் ஈடுபடும் மாணவர்களுக்கும் மட்டுமல்ல-- சமூக, அரசியல் ஆய்வாளர்களுக்கும் பயனுள்ள ---  ஒரு காலத்தில் செழித்து வளர்ந்து, பின்னர் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட விருட்சத்தின் கதையை  பேசும்  இந்நூலை தொகுத்திருக்கும்  நூலகர் என். செல்வராஜாவுக்கு  எமது  மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.