அன்புமணிமுருகபூபதி"ஒருவன்  என்னவாக  இருக்க வேண்டும் என்பதை  அவன்  மனமோ அல்லது அவனின் அறிவோ   தீர்மானிப்பதில்லை,  அவனின் ஆன்மாதான்    தீர்மானிக்கிறது"   என்ற  மகாபாரத  தத்துவத்தை சமீபத்தில் படித்தேன்.  இந்தத்தத்துவத்தை  நெஞ்சத்துக்கு  நெருக்கமானவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில்   அதிலிருக்கும்    உண்மை  புலப்படுகிறது. வயது    செல்லச்செல்ல  நெஞ்சத்துக்கு  நெருக்கமானவர்கள்  யார்...? என்ற   தெரிவு  எம்மையறியாமலேயே   மனதிற்குள் உருவாகிவிடுகிறது.    அவர்களில்  பலருடைய  மறைவு வெற்றிடத்தையும்    தோற்றுவிக்கிறது. ஈழத்து    இலக்கிய  வளர்ச்சியில்  காத்திரமான பங்களிப்புச்செய்தவரும்    மூத்ததலைமுறை   எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான    அன்புமணி  இரா . நாகலிங்கம்  கடந்த  2014 ஆம்    ஆண்டு  ஜனவரி  மாதம்  12  ஆம்    திகதி  மறைந்தவுடன் கிழக்கிலங்கையில்    மட்டுமல்ல எழுத்தாளர்கள்  மத்தியிலும்  ஒரு வெற்றிடம்    தோன்றியதுபோன்ற  உணர்வே   வந்தது.

அவர்    தமது  வாழ்வில்  என்னவாக  இருக்கவேண்டும்   என்று விரும்பினார்...?   என்ற  வினாவுக்குத் தேவைப்படும்  பதில்  அவரது வாழ்விலேயே இருந்தது.    அவர்  தமது  அறிவை   சமூகநலன்சார்ந்து பயன்படுத்தியவர். எமது  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  பணிகளுக்கு  ஆதரவு வழங்கிய   மட்டக்களப்பு  பிராந்தியத்தின்  செயலூக்கமுள்ள நால்வரைப்பற்றி     நண்பர்  பிரேம்ஜி    அடிக்கடி   சொல்வார்.   அவர்கள்: ரீ. பாக்கியநாயகம்,   எதிர்மனசிங்கம்,   செ.குணரத்தினம்,   அன்புமணி. இவர்களில்   அதிகமாக  எழுதிக்குவித்தவர்  செ.குணரத்தினம். எதிர்மனசிங்கம்    ஒருவகையில்  எனது  உறவினர்.  கலாசார உத்தியோகத்தராக  பணியாற்றியவர்.   பாக்கியநாயகம்  மட்டக்களப்பு எழுத்தாளர்   சங்கத்தின்  தூணாக  விளங்கியவர்.  பாக்கியநாயகத்தையும்    எதிர்மனசிங்கத்தையும்  மட்டக்களப்பு கச்சேரிக்கு    1978  காலப்பகுதியில்    சென்றபொழுது  முதல்  முதலில் சந்தித்தேன்.    அவ்வேளையில்  மட்டக்களப்பை    சூறாவளி கோரமாகத்தாக்கியிருந்தது. குணரத்தினம்    அவ்வப்பொழுது  வீரகேசரி  வந்து  செல்லும் படைப்பாளி.    அதனால்  அவர்  இலக்கிய  நண்பரானார். அன்புமணி    பற்றி   மல்லிகைஜீவா  என்னிடம்  சொன்ன    காலத்தில் அவர்    கிழக்கிலங்கையிலிருந்து  மலர்  என்ற  இலக்கிய  திங்கள் இதழை    வெளியிட்டுக்கொண்டிருந்தார்.    கொழும்பு  சென்றால் கோட்டை    ரயில்  நிலையத்திற்கு  முன்பாகவிருந்த  ராஜேஸ்வரி பவனில்   இதர  இலக்கிய  இதழ்களுடன்  மலர்    இதழையும் வாங்கிவிடுவேன்.    மலர்  தரமான    இதழ்.    ஆனால்,  1972 காலப்பகுதியிலேயே   தனது  ஆயுளை   முடித்துக்கொண்டது.

மலர்    ஆசிரியர்   அன்புமணி,    மலரை    மாத்திரம்  வெளியிடாமல் மலர்    வெளியீடாக  செ.யோகநாதனின்  ஒளி  நமக்கு  வேண்டும் (குறுநாவல்) ,    முல்லைமணியின்    அரசிகள்  அழுவதில்லை (சிறுகதைகள்) ,    அருள்.  சுப்பிரமணியத்தின்  அவர்களுக்கு  வயது வந்துவிட்டது   (நாவல்)   முதலான  நூல்களையும்  வெளியிட்டார். அன்பு    வெளியீட்டகத்தினாலும்  பல  நூல்களை   அவர்   பதிப்பித்தார். நான்   அறிந்தமட்டில்  அவருடைய  நூல்கள்:

 *இல்லத்தரசி -  வரலாற்றுச் சுவடுகள்   (சிறுகதை) 
 *ஒரு  தந்தையின்  கதை (நாவல்)
 *ஒரு  மகளின்  கதை (குறுநாவல்)
 *தமிழ்   இலக்கிய  ஆய்வு,   
 *எட்டுத் தொகை  பத்துப்பாட்டு  நூல்கள்,
 *பதினெண்  கீழ்கணக்கு  நூல்கள்,

1953    இலேயே    கல்கியில்  எழுதத்தொடங்கிய  அன்புமணி,    கங்கை, கண்ணன்,    உட்பட  சில   தமிழக  இதழ்களில்  எழுதியவர்.   அவர் எழுதத்தொடங்கிய   காலத்தில்  எனக்கு  மூன்று வயதுதான். எனக்கும்    அவருக்குமிடையே   16   வருடங்கள்    வயது  வித்தியாசம் காணப்பட்டது.    மூத்தசகோதரனாகவே   என்னுடன்  பழகியவர். அவரது    சகோதர  வாஞ்சையை  1983  தொடக்கத்தில்    நாம்  நடத்திய பாரதி    நூற்றாண்டு விழா  காலத்தில்  புரிந்துகொள்ள  முடிந்தது. கிழக்கிலங்கை   பாரதி  நூற்றாண்டு  விழா    நிகழ்ச்சிகளுக்காக நானும்    இளங்கீரனும்,    தமிழகத்திலிருந்து  வருகை   தந்திருந்த  பாரதி   இயல்  ஆய்வாளர்  சிதம்பர  ரகுநாதனும்   சென்றிருந்தபொழுது    எமது    தேவைகளை    உடன்   இருந்து கவனித்துக்கொண்டார்    அன்புமணி. கொழும்பு    கோட்டை    ரயில்  நிலையத்தில்  இரவு  தபால்  ரயிலில் எம்மை    ஏற்றி  வழியனுப்பவந்த  பிரேம்ஜி   சொன்னார், "கல்முனையில்    மருதூர்க்கொத்தனும்   மருதூர்க்கனியும் பார்த்துக்கொள்வார்கள்.    மட்டக்களப்பில்  அன்புமணி பார்த்துக்கொள்வார்."

யாவுமே    கடிதத்தொடர்பாடல்தான்.    கைத்தொலைபேசியோ மின்னஞ்சலே   இல்லாத  அக்காலத்தில்  கடிதங்களுக்கு  இருந்த மதிப்பு    மகிமையானது.    இக்காலத்தில்   மின்னஞ்சல் , கைத்தொலைபேசி    இருந்தும்  தொடர்பாடல்  ஆரோக்கியமாக இல்லை.

அன்று    கடிதங்களுக்கு  வலிமை    இருந்தது.   சொன்னால்  செய்து முடிப்பார்கள்.    சாக்குப்போக்குச்சொல்ல மாட்டார்கள்.    அனுப்பிய கடிதத்தை   நம்பி  புறப்படலாம்.  அன்புமணி , கிழக்கிலங்கை நிகழ்ச்சிகள்    முடிந்ததும்  மறுநாள்   காலை   என்னையும் ரகுநாதனையும்    யாழ்ப்பாணம்  பஸ்ஸில்  ஏற்றியபின்னர்  இளங்கீரனை    கொழும்பு    பஸ்ஸில்    ஏற்றிவிட்டே    தனது  அன்றாட கடமைக்குச்சென்றார். அதன்   பின்னர்  அவரை    நான்    சந்தித்தது  சுமார்  28   வருடங்களின் பின்னர்தான்.    இறுதியாக  பாரதி  நூற்றாண்டில்  சந்தித்தோம்.    அதன் பிறகு    கொழும்பில்  2011  இல்    நடந்த    சர்வதேச  தமிழ்   எழுத்தாளர் மாநாட்டில்    சந்தித்தோம்.

அவுஸ்திரேலியா   வந்த  பின்னர்  அவருடன்  கடிதங்கள்  ஊடாக தொடர்பாடலை   மேற்கொண்டேன்.    புத்தகங்கள்,  இதழ்கள் அனுப்பினேன்.    அவரும்  அனுப்பினார்.    கிழக்கு  மாகாணத்தில் போரில்    பாதிக்கப்பட்ட  மாணவர்  விபரங்களையும்  அன்புமணி ஊடாகவே    சேகரித்து  எமது  இலங்கை    மாணவர்  கல்வி நிதியத்திற்கு   வழங்கினேன்.    அவர்  18 - 01- 1992   ஆம்    திகதி   எனக்கு    எழுதிய  கடிதத்தில்  இறுதி  வரியாக   "... இந்த  பரஸ்பர இலக்கியப்பரிமாற்றம்  கடல்  கடந்த  இலக்கிய  வளர்ச்சிக்குப்பெரிதும்   பயன்படும்    என்பது  எனது  நம்பிக்கை "    என   எழுதியிருந்தார்.

அவரது   நம்பிக்கையும்  சேர்ந்ததுதான்    2011  இல்    நாம்    ஒன்றுகூடி  நடத்திய   எழுத்தாளர்  மாநாடு.  ஆனால்,  அதன்   உள்ளார்த்தம் தெரிந்துகொள்ளாமல்    பலர்  சூழ்நிலைக்கைதிகளாகியது    காலத்தின் துயர்.    அன்புமணி    அந்த  மாநாடு   முடிந்ததும்  ஞானம்  இதழில் தனது கருத்துக்களை    பதிவுசெய்து  ஒதுங்கி  நின்றவர்களுக்கும் புறம்கூறியவர்களுக்கும்     சத்திய  வாக்குமூலம்  அளித்தார். அவரது    வாழ்வும்  பணிகளும்     முன்னுதாரணமானவை.    ஒரு எழுதுவினைஞராக   தொழில்  ஆரம்பித்து  நிருவாக சேவைப்பரீட்சையில்   தேறி,  உதவி  அரச  அதிபராகவும்  வடக்கு கிழக்கு    மாகாண  சபையின்  உள்துறை    உதவிச்செயலாளராகவும் பணியாற்றி   ஓய்வுபெற்றவர்.    சிறிதுகாலம்  மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற   உறுப்பினர்  செல்வி    தங்கேஸ்வரியின் செயலாளராகவும்    பணியாற்றினார். சமீபத்திய    எனது  இலங்கைப்பயணத்தில்  சில  மணிநேரங்கள் அதாவது  ஒரு  பகல்பொழுதில்  மட்டக்களப்பில்  நிற்கநேர்ந்தது. மட்டக்களப்பு    நூல்  நிலைய  கேட்போர்  கூடத்தில்  மகுடம்  கலை இலக்கிய    வட்டம்  ஒழுங்கு  செய்திருந்த  யாவரும்  பேசலாம்  என்ற சந்திப்பில்    அமெரிக்காவைச் சேர்ந்த  மானுடவியல்  பேராசிரியர் பேர்னாட்  பேட்  அவர்களின்    உரையை    கேட்கச்சென்றேன். சித்திரலேகா   மௌனகுரு  தலைமை   தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு   வருகை   தந்திருந்த  தங்கேஸ்வரி,  நிகழ்ச்சி முடிவில்   தமது  இல்லத்துக்கு  அழைத்துச்சென்றபொழுது அன்புமணியை    நினைவுபடுத்தினார்.    தங்கேஸ்வரியின் நூல்களையும்    தமது  அன்பு   வெளியீட்டகத்தினால் வெளியிட்டிருப்பவர்   அன்புமணி. அன்புமணி   மட்டக்களப்பு  பிராந்தியத்தில்  கலை , இலக்கிய செயற்பாட்டுக்கு   இயங்கு  சக்தியாகவே   தொழிற்பட்டவர்.   தமது அரச   பதவியை  ஆசனம்  சூடாக்கும்  பதவியாக  ஏற்காமல் சுற்றிச்சுழன்று   கருமமாற்றியவர்.    மட்டக்களப்பு  கலாசாரப்பேரவை, புலவர்   மணி  நினைவுப்பணிமன்றம்,    விபுலானந்தர்   நூற்றாண்டு விழாச்சபை,    உட்பட   சில  வெகுஜன    இயக்கங்களில்   அன்புமணியின்    அயராத  உழைப்பு  தங்கியிருந்திருக்கிறது.

இத்தனைக்கும்   அவர்  ஆக்க  இலக்கியம்,    இசை,   நாடகம்,   ஓவியம், சிற்பம்    முதலான  துறைகளிலும்  ஈடுபாடுகொண்டிருந்தவர். கிழக்கிலங்கையில்   முன்னர்  வெளியான   பல  அரிய  நூல்களை மீள்பதிப்பு    செய்துமுள்ள  அன்புமணி,  கிழக்கிலங்கை  கதை  வளம் என்ற    நூலையும்  பதிப்பிக்கவிருந்தார்  என்ற  தகவலும்  உண்டு. ஆனால்,   அந்த  நூல்   வெளிவந்த  தகவல்  தெரியவில்லை. தொடர்ச்சியான   சமூக  கலை  இலக்கியப்பணிகளுக்காக   பல விருதுகளும்    பெற்றவர்.    ஆரையம்பதியில்  பிறந்த  அன்புமணிக்கு ஆறு    ஆண்    செல்வங்கள்.    அவர்களுக்கு  இறுதியில்  செல்வன் என்றே  பெயர்  முடியும்.    இந்தச்செல்வன்கள்   தந்தையின்  அச்சேறாத    நூல்களை    பதிப்பித்து  தமிழ்  இலக்கிய  உலகிற்கு வழங்கவேண்டும்.

இந்தப்பத்தியின்   தொடக்கத்தில்  குறிப்பிட்டவாறு  அன்புமணியின் ஆன்மா    என்ன  நினைத்ததோ    அவ்வாறே    அவர்  வாழ்ந்து மறைந்தார்.    தன்னைப்பற்றிச்சிந்திக்காமல்  தனது  புகழ் -  பெருமை பற்றி   அலட்டிக்கொள்ளாமல்  தன்னைச்சூழவுள்ளவர்களிடமிருக்கும் ஆற்றல்களை    இனம்  கண்டு  கைதூக்கிவிடும்  இயல்பு ஆன்மாவிலிருந்துதான்    வெளிப்படும். இத்தகையவர்கள்    விமர்சனங்களுக்கும்  ஆளாவதுண்டு. அன்புமணியும்    விமர்சிக்கப்பட்டார்.  ஆனால்,  அதற்காக  அவர் சோர்ந்துவிடவில்லை.    கலை,   இலக்கியத்துறையில்  ஆற்றல் மிக்கவர்களை    இனம்  கண்டு   ஊக்கமளிப்பவர்கள்    குறித்து மலினமான     விமர்சனங்களும்    முன்வைக்கப்படுகின்றன. " வாசகர்    கடிதம்  எழுதுபவர்களையும்  எழுத்தாளராக்கிவிடும் மதிப்பீட்டாளர்கள் "  என்ற     நக்கல்   பேச்சை  உலாவவிடுபவர்கள் மத்தியில்    தீர்க்கதரிசனத்துடன்  பலரை  இனம்காட்டி  தூக்கிவிட்டவர் அன்புமணி.

அவரால்   இனம்காணப்பட்டு  வளர்த்துவிடப்பட்ட  பல படைப்பாளிகள்   மனதில்  அன்புமணி   வாழ்ந்துகொண்டிருப்பார். மட்டக்களப்பின்   கலை -  இலக்கிய  வரலாறு  எழுதப்படும்பொழுது அன்புமணிக்கும்    அதில்    சில    அத்தியாயங்கள்   நிச்சயம் இருக்கும். மீன்  பாடுகிறதோ   இல்லையோ  மீன்பாடும்  தேனாட்டில் மட்டக்களப்பு    வாவியின்   இயற்கை   எழிலுடன்    அன்புமணியின் சுவாசமும்     கலந்திருக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.