கலைஞனுக்கு  அழிவில்லை: சினிமா  நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்பேராசிரியர் மெளனகுரு2012  ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கொழும்பில் அசோகா  ஹந்தகமயின்  இனி அவன்  எனும் திரைப்படம் முன்னோடிக்காட்சியாக  கொழும்பு  புல்லர்ஸ்  வீதியில்  இருந்த  இலங்கைத்  திரைபடக் கூட்டுத்தாபன  சினிமா திரைஅரங்கில்    திரையிடப்படுகிறது. நண்பர்  அசோகா ஹந்தகம எனக்கும் ஓர் அழைப்பு அனுப்பியிருந்தார். இடையில்  சந்தித்தபோது  அவசியம் வாருங்கள் என்றும் கூறியிருந்தார். திரை அரங்கினுள்ளே  சிங்கள சினிமாவை உலகத் தரத்திற்கு  உயர்த்தியவர்களான அசோகா ஹந்தகம, தர்மசேன பத்திராஜா,  தர்மசிரி  பண்டாரநாயக்க,  சுனில் ஆரியரத்தினா முதலான சிங்கள சினிமா நெறியாளர்களும்  ,சுவர்ணமல்லவாராய்ச்சியும்   அமர்ந்திருந்தனர். (இவர்கள் அனைவரும்  நாடகத்தால்  எனக்கு நண்பரானவர்கள்)  மற்றும் நான் அறியாத  சிங்கள பிரபல சினிமா நடிகர்களும் ,சினிமா விமர்சகர்களும்,பத்திரிகையாளர்களும் பிரசன்ன விதானகே முதலான முக்கிய சிங்கள சினிமா நெறியாளர்களும் காத்திரமான சினிமா ரசிகர்களும் அரங்கை நிறைத்த வண்ணம்  அமர்ந்திருந்தனர். அரங்கு நிறைந்த சபை.  படம் இன்னும் ஆரம்பமாகவில்லை. திடீரென  அனைவரும் எழுந்து நின்றனர். மகிழ்ச்சியோடு  கர ஒலி  எழுப்பினர்.  யாரையோ வரவேற்றது போல இருந்தது. பின் வாசல் வழியாக தொண்டு கிழவரான லெஸ்டர்  ஜேம்ஸ் பீரிஸை  அவர் மனைவி  சுமித்ரா சக்கர நாற்காலிவண்டியில் வைத்துத் தள்ளிய வண்ணம் அரங்கினுள்  பிரவேசித்தார்,

இப்பெரும் நெறியாளர்களும் நடிகர்களும் தம் இரு கைகூப்பி அவரைப் பக்தியோடு குனிந்து  வணங்கினர். அது ஓர் உணர்ச்சிகரமான கணம். தங்களுக்கு காத்திரமான சினிமா எடுக்க வழிகாட்டிய தமது பாட்டனாரைப் பேரக் குழந்தைகள் அன்பு பொங்க மிக மரியாதையுடன்  வரவேற்ற கணங்கள் அவை. அவரும் ஒரு குழந்தைபோல கை அசைத்து  சக்கர நாற்காலி வண்டியிலிருந்து  சற்று எழும்பி அனைவரதும் வரவேற்பை அன்போடு ஏற்றுக்கொண்டார். ஒரு முது  கலைஞரை இளம்  கலைஞர்  தலைமுறை  மதித்துப்போற்றும்  அப்பண்பு என்னை வெகுவாக ஆகர்சித்தது. நாமும்  அவர்களுடன் கலந்து எழுந்து நின்று   பெரு மகிழ்ழ்சியோடும் மரியாதையோடும்  கைதட்டி  லெஸ்டரை  வரவேற்றோம். குனிந்து  வணங்கினோம். அவ்வணக்கமும் கைகுவிப்பும் நம் நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து  வந்தவை. அந்த அளவு சினிமா ரசிகர்களின் மனதில் ஓர் பெரும் இடம் பிடித்து வீற்றிருந்தார்  லெஸ்டர் ஜேம்ஸ்  பீரிஸ்.

1960  களில்  பேராதனைப்பல்கலைக்க்ழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில்  சிங்கள  சினிமாக்களுக்கு அறிமுகமானேன். அப்போது சிங்களம் புரியாவிடினும்  சில நல்ல  சிங்கள சினிமாக்களுக்கு எமது  சிங்கள  நண்பர்கள் எம்மை அறிமுகம் செய்தனர். அவற்றுள் ஒன்றுதான் லெஸ்டரின்  இரண்டாவது படமான  சந்தேசிய (தூது)  இப்படத்தை நான் 1961 இல் பார்த்தேன். தமிழ் சினிமா பார்த்து அதன் மனோரதிய உலகில் இருந்த என்னை சந்தேசிய  படம்  நிஜ உலகுக்கு இழுத்து  வந்தது. உள்ளூரிலிருந்த போர்த்துக்கேசிய  கோட்டை ஒன்றை உள்ளூர்க் கிராமப் புரட்சிகர இளைஞர்கள் ஒன்று  சேர்ந்து  தாக்கி அழிக்கும்  கதை. அந்த இளைஞர்களுள் ஒருவராக வந்து அப்போரில் இறப்பவராக மறைந்த நடிகர்  காமினி பொன்சேகா நடித்திருந்தார். அதற்காக அக்கிராமம்  தலைநகரில் இருந்து வந்த  போர்த்துக்கேய இராணுவத்தால்  ஈவு இரக்கமின்றி அழித்தொழிக்கப்படுகின்றது. அந்த அழித்தொழிப்பும் மக்கள் அவலமும் மனதில் ஆழமாகப்பதிந்தன. அந்தப்படத்தின் தயாரிப்பாளர் குணரத்தினம். அதன் இசையமைப்பாளர்கள்: முத்துசாமி , மொஹிதீன்பெக், லதாவல்பொல, தர்மதாச  வல்பொல   ஆகியோராவர். அதில் வந்த “போர்த்துக்கீசக்காரயா ரட்டவல்லல் யன்ன  சூரயா” என்ற பாடல் சிங்கள மக்கள் நாவெல்லாம் நடமாடிய பாடல்.

அதன்பின்  1964 களில் லெஸ்டரின் கம்பரலிய படம்  பார்க்கக் கிடைந்த்து.  புதிய பொருளாதரச்சூழலினால்  மாறிவரும் சிங்கள கிராமம் பற்றிய படம் அது. காமினிபொன்சேகாவுடன் சிங்கள நவீன நாடக முன்னோடியான ஹென்றி ஜெயசேனாவும் அதில் நடித்திருந்தார். அந்தப்படம்தான்  சிங்கள சமூகத்தை அதன் கிராம வாழ்வை மனித உணர்வுகளை எனக்கு அறிமுகம் செய்த  படமாகும். அது பிரபல சிங்கள நாவலாசிரியரான  மார்ட்டின் விக்கிரமசிங்காவின் நாவலொன்றின் திரைக்கதை வடிவமாகும். சந்தேசியாவைவிட அது பல மடங்கு சிறந்ததுடன் பல சர்வதேசப்பரிசுகளையும்  பெற்றுக்கொண்டது.

1968 இல் வந்த அவரது மற்றும் ஒருபடம் கொலுகதவத்த.  சிங்கள பாடசாலை ஒன்றில்  மாணவருக்கிடையேவரும்  காதலை மையமாகக் கொண்டது. அதுவும் ஓர் சிங்கள நாவலின் திரைவடிவமே.
1972 இல்  வந்த அவரது படமான நிதானய புதையல் தேடும் சம்பவத்தை அடிப்படையாககொண்டது.
1975 இல் அவர் சிகிரியாவை ஆண்ட காசியப்பனை  மையமாகக்கொண்டு  கோட் கிங் என்ற  ஓர் ஆங்கிலப்படமொன்றை நெறியாள்கை  செய்து  வெளியிடுகிறார்.
1979 இல் அந்நியருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த தேசிய வீரனான

வீரபுரான்  அப்பு வைப்பற்றிய  படத்தை வெளியிடுகிறார்.

1982  களில் அவர் நெறியாள்கை  செய்த கலியுகய, 1983  களில்  அவர் நெறியாள்கை செய்த ,யுகாந்தய எனும் படங்கள்  அவரை உச்சத்துக்குக்  கொண்டு  சென்றன. அவை அவருக்கு உலகப்புகழ் தேடித்தந்தன.
2006 இல் அவர் கடைசியாக நெறியாள்கை செய்தபடம் 'அம்மாவருணே'.
1960 இலிருந்து 2006 வரை தொடர்ச்சியாக  45 வருடங்கள் சிங்கள சினிமா உலகின் அசைக்கமுடியாத பேருருவாக  நின்றவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள்.

தனக்குப்பின்னர் காத்திரமான நெறியாளர் பரம்பரையொன்றை  உருவாக்கியவர். சிங்கள மக்களின் ஐரோப்பிய  ஆதிக்கத்திற்கு  எதிரான எதிர்புப் போராட்டங்களை, அவர்களின் கிராம வாழ்வை, அவர்களின் மதநம்பிக்கைகளை, புதிய பொருளாதார வருகையை,  சிங்கள மக்களின்  கிராம வாழ்வை, அவர்களின் பண்டைய விழுமியங்களையும் மத நம்பிக்கைகளையும் தனது படங்களில் காண்பித்து,  தனக்குக்கைவந்த சினிமா மூலம் உலகத்துக்கு எடுத்துக்காட்டியவர்  லெஸ்ட்ர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள். அவரின் காத்திரமான அந்தப்பாதையை மேலும் முன்னெடுத்து இன்னும் முன் கொண்டு சென்றவர்களதான், தர்மசேன பத்திராஜாவும் ,தர்மஶ்ரீ பண்டாரநாயக்காவும், அசோகா ஹந்தகமவும், பிரசன்ன விதானைகேயும்.

தென்னிந்திய தமிழ்ச்சினிமாவும், இந்திய ஹிந்திப்படங்களும்  சிங்கள  மக்கள்  சினிமா  ரசனையை  அன்று தாக்கியிருந்தபோதும்,  அச்சிங்கள மக்களின்   சினிம ரசனையை இன்னொரு கட்டத்திற்கு வளர்த்தெடுப்பதில் மேற் சொன்னோரின் சினிமாப்படங்கள்  முன் நின்றன. எனவேதான் தங்களின் சினிமா பிதாமகரைக் கண்டதும்,  அந்தப் பெரிய ஜாம்பவான்கள் அனைவரும் பணிவோடு எழுந்து குனிந்து  வணங்கி  வரவேற்றனர். முளைக்க முதலே தாமே பெரியவர் தம்முன்னோருக்கு ஒன்றுமே தெரியாது என நினைக்கும் நம்மவர் சிலர் இவர்களிடமிருந்து  கற்றுக்கொள்ளக்கூடிய  பாடம் இது.

சிங்கள சினிமாவில் மிகப் புகழ் பெற்ற நடிகர்கள் யாவரும் லெஸ்டரின் படங்களில் விரும்பி நடித்துள்ளனர். காமினி பொன்சேகா,  மாலினி பொன்சேகா,  ஜோ அபயவிக்ரம, ரவீந்திர ரந்தெனிய, ஹென்றிஜெயசேன, டோனி ரணசிங்க  என அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் சிங்களத் திரை உலகின் சுப்பர் ஸ்டார்கள்.  ஆனால் லெஸ்டரின் படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்தவர்கள். லெஸ்டர் ஜேம்ஸ்பீரிஸை  அவர் வாழும்போதே மக்கள்  கௌரவம் செய்தனர்,கலைஞர்கள்  கௌரவம் செய்தனர். அரசு கௌரவம் செய்தது. ஜனாதிபதிகளும் பிரம மந்திரிகளும் அவர் வீடு தேடிச் சென்று அவரைகௌரவித்துத்  தாமும் கௌரவம் பெற்றனர்.

இந்திய மக்களின் வாழ்வை தனது திரைப்படங்களில் கொணர்ந்தார் சத்தியஜித்ராய்.  ஜப்பானிய மக்களின் வாழ்வைத் திரைப்படங்களில் கொணர்ந்தார்  அகிரா குரசாவோ. இலங்கை மக்களின் குறிப்பாகச் சிங்கள  மக்களின் வாழ்வை திரைப்படங்களில் கொணர்ந்தார் லெஸ்டர் ஜேம்ஸ்பீரீஸ். இவர்கள் மூவருமே உலகப் புகழ் பெற்ற சினிமா நெறியாளர்கள். இவர்கள் மூவரும் நம்மத்தியில் இன்று இல்லை. முதல் இருவரும் முன்னமேயே சென்று விட்டனர். இப்போது லெஸ்டரும் நம்மை விட்டுச் சென்று விட்டார். எனினும் அவர் தமது பேரப் பிள்ளைகள் எடுக்கும் சினிமாக்களில் தன்னை நினைவூட்டிக்கொண்டேயிருப்பார்.

கலைஞனுக்கு அழிவில்லை.