- தம்பா (நோர்வே) -கடவுளை
எப்போதும் தேடியதுமில்லை
கடவுளை
எப்போதும் நிந்தித்ததுமில்லை.

எப்போது
சினகூகனுக்குள் புகுந்து
கத்தியால் குத்திக் கிழிக்கப்படுகிறதோ
அப்போது
நான் யூதனாக உணர்கிறேன்
எப்போது மசூதிகளுக்குள்
இயந்திர துப்பாக்கிகள் துவம்சம் செய்கிறதோ
அப்போது
நான் இசுலாமியனாக உணர்கிறேன்.
எப்போது
தேவாலயங்களின் மீது
விமான குண்டுகள் வீழ்கிறதோ
அப்போது
நான் கிறிஸ்த்தவனாக உணர்கிறேன்.
எப்போது
கோவில்களை பீரங்கிகள்
மிதித்து சிதிலங்களாக்குகிறதோ
அப்போது
நான் இந்துவாக உணர்கிறேன்.
எப்போது
விகாரைகளை தற்கொலை குண்டுகள்
அழித்து போடுகிறதோ
அப்போது
நான் பௌவுத்தனாக உணர்கிறேன்.

எப்போது
மனங்கள் பாறைகளாக உறைந்து கடினப்படுகிறதோ
அப்போது
உயிர்கள் உமிபோல் காற்றில் கரைந்து போகின்றன.

எம்மை
காக்க காத்திருக்கும் கடவுளாரே
உங்களை ஆராதிக்க கேள்விப் பூவொன்று
`மனிதனை மனிதன் அழித்துக் கொள்ள
ஆயிரம் மதங்கள் உண்டு,
ஆனால் மனிதனை மனிதன் அணைத்து கொள்ள
மதங்கள் எப்போது தோன்றப் போகிறன?´