ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.பூனையைப் புறம்பேசல்

அவரிவர் குடியிருப்புப் பகுதிகளோ
ஆற்றங்கரையோரமோ
குட்டிச்சுவரோ
வெட்டவெளியோ _
பூனைக்கு அதுவொரு பொருட்டில்லை.
அதன் சின்ன வயிற்றுக்கு 
இரை கிடைத்த நிறைவில்
கண்களை மூடிப் படுத்திருக்கும்.
உலகை இருளச்செய்யவேண்டும் 
என்று கங்கணம் கட்டிக்கொண்டா என்ன?
பூனையாக நாம் மாறவியலாதது போலவே 
பூனையும் நாமாகவியலாது.
இதில் 
இலக்கும் பிரயத்தனமும்
அடுக்குமாடிகளும் அதிகாரபீடங்களுமாக இருப்பவர்கள்
இலக்கியத்தில் தங்களை யிழந்தவர்களையெல்லாம்
‘அசால்ட்’டாகப் பூனையாக்கிப் பேசுவதால்
அம்பலமாவது இறந்துபோய்விட்டவர்களல்ல –
இவர்களே யென்றறிவார்களாக.

 

2.இயங்கியல்

இரு நாற்பதுகளுக்கு மேல் இருக்கும் வயது.
இருந்தும், இன்றெழுதிவரும் கவிஞர்களில் இடம்பெறுபவர்.

”இவரா கவிஞர்? ஐயையையே” என்று மலம் மிதித்ததாய்
மறைவாய் முகஞ்சுளித்தபடியே
அவருக்கு முகமன் கூறி விதந்தோதி மலரச் சிரிக்கும் 
சக கவிகள் சிலர் உண்டென்றாலும்
அவசியம் படிக்கவேண்டிய கவி யிவர் என்பதே 
அப்பட்டமான உண்மை.

அப்படியிருந்தும் 
இன்றுவரை இலக்கிய பீடாதிபதிகளால் அதிகவனமாக
கண்டுங்காணாததாய் கடந்துசெல்லப்படுபவர்.
(ஆஹா! இஃதெல்லாம் இலக்கியவுலகில் அதி சகஜமப்பா! )

என்றாலும்
அவர்க்கான புகழாஞ்சலிகள்
அனைவரிடமும் ஆயத்தமாக உள்ளன!

ஒருக்கால் அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டால்
குறைந்தபட்சம் அவருடைய நான்கு நூல்களையாவது 
அவசர அவசரமாக, ஆயிரமில்லாவிட்டாலும் அறுநூறு அச்சுப்பிழைகளுடனாவது வெளியிட்டுவிட _
அல்லது அன்னாரின் படைப்புகளைப் பற்றி
யரைகுறையாகவும் அறிந்திராத அவருடைய குடும்பத்தாருக்கு
குத்துமதிப்பாக ஒரு சிறுதொகையைக் கொடுத்து
அவருடைய நூல்களில் பிரபலமானவற்றை
வன்பதிப்பு செய்ய _

சில வளர்ந்த பதிப்பகங்கள் என்றுமே தயார்நிலையில்!

3.தனிமொழியின் உரையாடல்

”உன் கவிதையில் எந்நேரமும் நீந்திக்கொண்டிருக்கும் மயில்களை
உண்மையில் காட்டமுடியுமா உன்னால்”

”உங்கள் கனவுகளிலிருக்கும் ஆற்றைக்கடந்துதானே அவை என்னை அடையாளம் கண்டு வந்தடைகின்றன!”

”என் கனவுகள் எனக்கே தெளிவாகாதபோது நீ யார் 
அவற்றில் நதிகளை வகுத்துரைக்க?”

உங்கள் உள்ளாழ நிலவறைகள் சிலவற்றின் திறவுகோல்கள் என்னிடமிருக்கின்றன!”

”களவாணியா நீ?”

“கவி”.


4.இங்கிருந்து வெளியே….

இத்தனை அலைச்சலுக்குப் பிறகும் இரண்டாம் சதுரம் வசப்படவில்லை யிதுவரை.

மூன்றாவது தொடுவானத்திற்கப்பால்.

அந்தரத்தில் அவ்வப்போது தொங்கிக்கொண்டிருக்கும் நூலேணியில்
எத்தனை முறை ஏறியும்
நிலவுக்குள் நுழையவே முடியவில்லை.

விண்கலத்தில் ஏறிச்செல்ல நானொன்றும் விஞ்ஞானியல்லவே.

அருகிலிருந்து பார்க்க அது அவ்வளவாக அழகாகவும் இல்லையாக…..

ஒரு குழந்தைபோல் காற்றின் முதுகேறி எத்தனை நேரம்தான் பறந்துகொண்டிருப்பது?

ஆற்றங்கரையோரத்தில் கட்டிவைத்திருக்கும் அரிய தோணி அப்படியேயிருந்தாலும்
ஆற்றைக் காணவில்லை.

நேற்றின் ஒரு முனையும் இன்றின் மறுமுனையும்
இறுகித்திருகி முறுக்கிக்கொண்டிருக்கும் நாளைக்குள்
நிற்கத் தோதான நான்காம் சதுரமிருக்கும் என்று நம்ப வழியில்லை.

சுக்கானற்ற நாவாயாய்
பாதாளத்தில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் என் ரயில் வேறு
உலக உருண்டையின் பொன்சாய் வடிவமாய்
குறுகிய வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருப்பதும்
புரிந்துவிட்ட பிறகு _

திரும்பிடத்தான்வேண்டும் முதல் சதுரத்திற்கு….

என்னவொன்று _
சதுரம் சற்றே பின்வாங்கியிருக்கக்கூடும்
வடிவம் கொஞ்சம் சிதைந்திருக்கலாம்.

விட்டுவந்த மரகதப்புற்களும் மண்ணுளிப் புழுக்களும்
இன்னுமிருக்குமோ இருக்காதோ…..

ஆனாலும், ஆழ வேர்ப்பிடித்து அகலவிரிந்திருந்திருக்கும்
அந்த மரத்தின் அடியில்
நிற்க நிழலிருக்கும் எப்போதும்.

அதுபோதும்.


- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.