- ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்) -மாமுனிவன்   அகத்தியனின்   மகிமையாலே
மரமாக  முழைக்கவென  வந்த  வித்தே..!
தேமதுர  ஓசையில்நீ  செழிக்க  வேண்டித்
தென்மதுரை  மண்ணிலுன்னை  முளைவைத்தோமே..!
பாமணமாய்  பக்குவமாய்  பாற்கடலமுதாய்,
பட்டொளியை  வீசியெங்கும்  பறக்கும்  கொடியாய்,
பூமணத்தைத்  தந்துவக்கும்  தமிழே  நித்தம்,
புன்னகைத்தே  என்னமுதே  தருவாய்  முத்தம்...!

மண்டலங்கள்  போற்றுகின்ற  எழிலைச்  சிந்தா
மணியாள்மே  கலையாளுன்  இடையாள்   நீந்த,
குண்டலங்கள்  காதில்வளை  யாபதி  கரத்தில்,
குறுநடைக்கு  மொலியிலலங்  காரஞ்  செய்யும்
கண்டவர்கள்  நெஞ்சையள்ளுங்  காலின்  சிலம்பும்,
காட்டிவருங்  கன்னியுனைக்  கட்டி  முகர்ந்து,
உண்டிடவோ  உறிஞ்சிடவோ  உன்னிதழ்  தேனே...!
உறவிடவா  என் தமிழே   உன்பெய  ரமுதே...!

உன் எழிலைக்   காதலித்து  உறவு  கொண்டோர்,
உயிர்த் துடிப்பாய்  பலபடைப்பைப்  பிரச  வித்தார்..!
பின்வருவோர்   சந்ததிக்குப்   பெரிதும்   உதவ,
பெருமைகளை  யதிற்புகுத்திச்  சிறக்க  வைத்தார்..!
பன்னவரு   முனைத்  தொட்டுப்  பழகிய  போதும்,
பங்கமி(ல்)லை :  யுன்பெயரிற்   பாவமு  மில்லை....!
அன்னவளே...  என்னையும்நீ  அணைத்துக்  கொள்ளு..,
அமுதேயெனை  உனதுறவில்  இணைத்துக்கொள்ளு...!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.