கவிதை: 1. நான் 1 & நான் 2

1

கவிதை படிப்போமா?நான் 1: போர்கள் எனக்கு பிடிக்காது
நான் 2: ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு போருக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் போர்கள் எனக்கு பிடிக்கும்

2

நான் 1:  கொலைகள் எனக்கு பிடிக்காது
நான் 2:  ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு கொலைக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் கொலைகள் எனக்கு பிடிக்கும்

3

நான் 1:  மனிதர்களை எனக்கு பிடிக்காது
நான் 2:  ஆயினும்
ரகசியமாக நீயுமொரு மனிதனாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் மனிதர்களை எனக்கு பிடிக்கும்

(ஆர்.டி.லெயிங்கிற்கு)



கவிதை:  2. சிறு  பயணம்

கவிதை படிப்போமா?வெறுமையிலிருந்து
பூரணத்திற்கு பயணிப்பது
மிகக் கடினம்தான் தோழி
உள்ளேயிருந்து சில
குரல்கள் மிக உண்மையாக பேசும்போது
பழைய புகைப்படங்களை நினைவுகள்
தொட்டுத்தொட்டுத் பார்க்கின்றன
மரங்களின் அமைதியில்
என் மெழுகுவர்த்தியை
கொளுத்தி
உனக்காக அறத்தை குற்றத்தால்
தெளிவாக பதிலீடு செய்துபார்க்கிறேன்
ரகசியமாக உருவாக்கிய தத்துவங்களை
மலையுச்சியிடம் விவாதித்து ரகசியமாக
வன்முறைகளில் பங்கேற்கிறேன்
ஒரு புத்தகம்
கல்லெறிகிறது மூளையை
நோக்கி இவ்வளவு நாள்
என்ன செய்தாயென
பாவம்
நம் கண்ணீருக்கு தெரியவில்லை எப்படி
கண்ணீராக இல்லாமல் இருப்பதென்று
உன்னுயிருக்கும் யென் முன்ஜென்மத்திற்கும்
இடையே நாம் கிடக்க மனப்பிறழ்
தருணங்கள் யெல்லாம் கண நீளமேயுள்ள
கொடூரமான புத்தாண்டுகளாகின்றன
வெறுமையிலிருந்து
பூரணத்திற்கு பயணிப்பது
உண்மையிலேயே  மிகக் கடினம்தான்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.