வேதா இலங்காதிலகம்1. நல்ல முடிவு வருமென …

சல்லிப் பொதி கொம்பிலே கட்டி
மல்லுக்கட்டி எருதை அடக்கி பொதியெடுக்கும்
தொல்லுலகின் ஆதி வீர விளையாட்டு.
நல்லுலகின் கலாச்சார விளையாட்டு ஏறுதழுவுதல்.

தடை உடைக்க தமிழ் உலகம்
படை எடுத்து பகட்டின்றிக் கூடி
பகல் இரவு பயம் தயக்கமின்ற
பக்குவமாய் தம் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்

மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டிற்கு உலகிலுச்சம்.
யாதவர்களின்(ஆயர்) மரபுவழிக் குல விளையாட்டிது.
காளையின் கொம்பு பிடிப்பவன் வீரன்.
காளையின் வால் பிடிப்பவன் தாழ்ந்தவன்.

பழந்தமிழ் இ.லக்கியம், சிந்துவெளி நாகரிகம்
பிழையற சான்று கூறுகிறது சல்லிக்கட்டிற்கு
கலித்தொகை முல்லைக்கலியில் ஏழு பாடல் கூறுகிறது.
கி.மு இரண்டாயிரம் ஆண்டுக் கலாச்சாரமிது.



2. எங்கள் வீட்டுப் பிள்ளை முரட்டுக் காளை

வேதா இலங்காதிலகம்சல்லிக்கட்டு - ஏறுதழுவுதல் வீரம்
சொல்லும் பொங்கலோடிணைந்த விளையாட்டு.
சல்லிக் காசு முடிப்பு கொம்பிலே.
வல்லமையாய் மாட்டையணைப்பவனுக்கு முடிப்பு கையிலே.

முல்லை நிலத்து ஆயர் மகளிர்
வெல்லும் மஞ்சு விரட்டு ஆடவனுக்கு
கல்யாண மாலை சூட்டி வாழ்ந்திடுவாள்.
சல்லிக்கட்டிற்கு எதிர்ப்பும் ஆதரவும் உண்டு.

பண்பாட்டு அடையாளமிது தமிழருக்கு.
திண்டாட்டம் மக்களுக்கும் காளைகளுக்குமென்றும்.
ஆண்டாண்டாய் நிபந்தனைகள், வழக்கு நீதிமன்றம்
இவ்வாண்டு சல்லிக்கட்டுத் தடையுடைக்க.

சனப் போராட்டம் உலகெங்கும்
சொல்லி எடுக்கிறார். உடலிற்கும்,
தொல்லையின்றி மனதிற்கும் காயமற்ற தீர்வாகட்டும்.
வெல்லட்டும் தமிழின மானம்.

முரட்டுக் காளை எங்கள் வீட்டுப் பிள்ளையை
விரட்டி அடக்கும் அனுமதியை
புரட்டிடாது தந்திட அகிம்சை நிறைத்தும்மை
மிரட்டுகிறார் அறத்திற்குத் தலை வணங்குங்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.