- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


மேரி ஆன் மோகன்ராஜ்எழுத்தாளர் மேரி ஆன் மோகன்ராஜ்...2005ம் ஆண்டு கோடைக்கால முடிவில் நான் விமானத்தில் பயணம் செய்தபோது எனக்கு பக்கத்திலிருந்த இருக்கையில் ஒரு வெள்ளையர் வந்து உட்கார்ந்தார். அவருடைய உடம்பு அகலம் இருக்கையின் அகலத்துக்கு சரியாக இருந்தது. ஆசன பெல்ட்டை நுனி மட்டும் சிரமப்பட்டு இழுத்து பூட்டிக்கொண்டார். உடனேயே கைப்பிடியை யார் கைப்பற்றுவது என்ற போராட்டம் எங்களுக்குள் ஆரம்பமானது. தோற்றுவிடுவேன் என்று தோன்றியபோது நான் விட்டுக்கொடுத்தேன். சிறிது நேரம் சென்று பார்த்தபோது அவருடைய முகம் இளமையானதாகத் தோன்றியது. மெல்லப் பேச ஆரம்பித்தோம். நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று சொன்னதும் உங்களுக்கு மேரி ஆன் மோகன்ராஜை தெரியுமா என்றார். இல்லை என்றேன். கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றார். அதற்கும் குற்ற உணர்வு மேலிட இல்லை என்றேன். இன்று Erotica (காம இலக்கியம்) எழுதுபவர்களில் அவர் முன்னணியில் இருப்பதாகவும், பல புத்தகங்களை அவர் எழுதியிருப்பதாகவும் சொன்னார். மேரி ஆன் ஓர் இணையதளம் நடத்துகிறார்; தொடர்ந்து டயரி எழுதுகிறார்; பல புத்தகங்களுக்கு தொகுப்பாசிரியராக இருக்கிறார். அவர் கடைசியாக எழுதிய Bodies in Motion புத்தகம் இரண்டு மாதங்கள் முன்புதான் வெளியானது. இவ்வளவு விபரங்களை அவர் வாய் ஓயாமல் சொல்லி முடித்ததும் அவருடைய சுற்றளவு சற்று குறைந்துவிட்டதுபோல எனக்குப் பட்டது. வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக Bodies in Motion நாவலை வாங்கிப் படித்தேன். அவர் தொகுத்து வெளியிட்ட இரண்டு காம இலக்கியப் புத்தகங்களையும் வாசித்தேன். அவை தண்ணீருக்கு வெளியே வைத்துப் படிக்கக்கூடிய புத்தகங்கள். தண்ணீருக்கு உள்ளேயும் வைத்துப் படிக்கலாம். அப்படி பிளாஸ்டிக் போன்ற ஒரு தாளில் அவை அச்சடிக்கப்பட்டிருந்தன. பாண்டவர்களும், கௌரவர்களும் அடிக்கடி ஜலக்கிரீடை செய்யும்போது இப்படியான புத்தகங்களை படித்திருப்பார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

மேரி ஆன் மோகன்ராஜ் (Mary Anne Mohanraj) ஓர் இலங்கைத் தமிழ்ப் பெண். இரண்டு வயதாக இருக்கும்போதே பெற்றோருடன் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். ஆரம்பத்தில் தமிழ் பேசக்கூடியவராக இருந்தாலும் அமெரிக்க வாழ்க்கையில் சீக்கிரம் மறந்துபோனார். இப்பொழுது திரும்பவும் தமிழ் கற்பதாகக் கூறுகிறார். பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு எம். ஏ வகுப்புக்கு இடம் கிடைக்காததால் இரண்டு வருடங்கள் அவருடைய காதலனுடன் பிலெடெல்பியாவில் வசித்தார். அந்தக் காலகட்டத்தில் காம இலக்கியம் எழுதத் தொடங்கி, உடனேயே பிரபலமாகிவிட்டார். எதற்காக எழுதினார் என்று கேட்டால் மிக மோசமாக எழுதினார்கள், அதை என்னால் தாங்கமுடியாமல் இருந்தது. என்னால் நல்லாக எழுதமுடியும், ஆகவே எழுதினேன் என்கிறார்.

இணையதளத்தில் தினம் நாட்குறிப்பு எழுதிவருகிறார், இதை ஆயிரக் கணக்கானோர் படிக்கிறார்கள். இவரிடம் ஒளிவு மறைவென்பதே கிடையாது. தாராள மனது கொண்டவர். நல்ல சுபாவம், மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னுக்கு நிற்பார். யூட்டா பல்கலைக்கழகத்தில் Ph.D படிப்பை முடித்த காலகட்டத்தில் எழுதியதுதான் Bodies in Motion என்ற நாவல். சமையல் குறிப்புகள், தொகுப்புகள் உட்பட, பத்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். வெர்மோண்ட் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்பித்தபடி, கணிதவியல் பேராசிரியர் கெவினுடன் இல்லினோயில் வசிக்கும் இவர் தற்பொழுது நாவல் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறார்.

இவரை ஒருநாள் தொலைபேசியில் பிடித்தேன். அந்த சம்பாசணை கீழே வருகிறது.

அ.மு : நீங்கள் ஒளிவு மறைவில்லாத பெண்ணாக இருக்கிறீர்கள். உங்களை 'கண்ணாடிப்பெண்' என்று சொல்கிறார்களே?

ஆன் : அப்படியா, நன்றி. நம்பிக்கைத் தன்மையை உண்டாக்குவதற்கு இதை விடச் சிறந்த வழி என்ன இருக்கிறது. ஆகவே நான் எதையும் ஒளிப்பதில்லை.
என் சுயசரிதை திறந்து வைத்த புத்தகம்போல. என்னுடைய பிறந்த தேதி, உயரம், எடை, எங்கே பிறந்தேன், எவ்வளவு படித்தேன், என்ன எழுதினேன் அனைத்தும் இணையத்தில் கிடைக்கிறது.

அ.மு : எழுத்தாளர்கள் தங்கள் முகவரி, மின்னஞ்சல் விலாசம், தொலைபேசி எண் போன்றவற்றை வங்கி கடவு எண் போல பாதுகாக்கும்போது நீங்கள் இவற்றை பொதுச் சொத்தாக்கிவிட்டீர்களே?

ஆன் : நான் வாசகர்களுக்காக எழுதுகிறேன். அவர்களிடமிருந்து மறைப்பதில் என்ன பிரயோசனம். மேலும், அப்படி மறைப்பதற்கும் என்னிடம் ஒன்றுமில்லையே. இதனால் சிறு தொந்திரவு என்னவோ இருக்கிறது உண்மைதான், ஆனால் அளக்கமுடியாத அளவுக்கு நன்மையும் இருக்கிறது. ஒரு நாளைக்கு நூற்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் எனக்கு வருகின்றன. நான் எல்லோருக்கும் பதில் எழுதுவேன் என்று சொல்லமுடியாது ஆனால் நிச்சயமாக அவற்றைப் படிப்பேன். வாசகர்களுடைய நாடித்துடிப்பு எனக்குத் தெரியும். அது முக்கியமில்லையா?

அ.மு : உங்கள் சிறுவயது ஆசை என்ன?

ஆன் : விண்வெளி விஞ்ஞானி ஆவது.

அ.மு : உங்கள் ஆசை நிறைவேறியதா?

ஆன் : எப்படி நிறைவேறும், ஓர் அங்குலத்தில் தவறியது. என்னுடைய ஆசைக்கு இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று, விண்வெளி விஞ்ஞானியின் குறைந்த பட்ச உயரம் 5 அடி மூன்று அங்குலம் இருக்கவேண்டும். எனக்கு ஒரு அங்குலம் போதாது. இரண்டாவது, விண்வெளி விஞ்ஞானிக்கு விஞ்ஞானம் தெரியவேண்டும் என்று சொன்னார்கள். அது பெரும் அநியாயமாகப் பட்டது. எனக்கு விஞ்ஞானக் கதைகள் பிடிக்கும், ஆனால் விஞ்ஞானம் பிடிக்காது.

அ.மு : ஆகவே உங்கள் கனவு நிராசையாகிவிட்டது என்று சொல்லுங்கள்? நீங்கள் எழுத்தாளரானது இரண்டாம் பட்சம்தானா?

ஆன் : அதுகூட இல்லை. எங்கள் குடும்பத்தில் எல்லோருமே டொக்ரர்கள் அல்லது கல்லூரி பேராசிரியர்கள். நான் டொக்ரர் அல்லது கல்லூரி பேராசிரியர் ஆகவேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். எழுத்தாளர் என்று ஒரு இனம் இருப்பதே நான் பிற்பாடு அறிந்துகொண்டதுதான்.

அ.மு : சிறுவயதில் நிறைய வாசிப்பீர்களா?

ஆன் : ஒரு சிறு பெண்ணால் அந்த வயதில் எவ்வளவு வாசிக்க முடியுமோ அவ்வளவு வாசித்தேன். என்னுடைய அப்பா அதை ஊக்குவித்தார். ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் நான் தயாராவேன். என்னுடைய அப்பா என்னைக் காரிலே ஏற்றிக்கொண்டுபோய் நூலகத்தில் இறக்குவார். நான் அங்கேயே இருந்து பல மணி நேரங்கள் படிப்பேன். அப்பொழுது உச்சபட்சமாக முப்பது புத்தகங்கள் எடுத்துப் போகலாம். நான் முப்பது புத்தகங்களை அடுக்கிக்கொண்டு தயாராக நிற்பேன். அப்பா கூட்டிப்போவார். ஒரு கிழமையில் அவ்வளவையும் படித்து முடித்துவிடுவேன். மறுபடியும் அடுத்த சனிக்கிழமைக்கு காத்திருப்பேன்.

அ.மு : நீங்கள் காம இலக்கியம் படைப்பது உங்கள் வீட்டாருக்கு தெரியுமா? எப்படி அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்?

ஆன் : ஆரம்பத்தில் ஒரு விளையாட்டாக, என் எழுத்து திறமையை காட்டத்தான் எழுதினேன். எழுத எழுத என் ஈடுபாடு அதிகமாகி என் பெயர் இணைய தளங்களில் பிரபலமானது. இது என் பெற்றோருக்கு பல நாட்களாகத் தெரியாது. ஒருநாள் என் அப்பாவுக்கு யாரோ சொல்லிவிட்டார்கள். என் அப்பா ஒரு டொக்ரர். சுதந்திரமாகச் சிந்திப்பதை, செயல்படுவதை அனுமதிப்பவர். இது அவருக்கே ஓர் அசௌகரியமான உண்மையாக இருந்தது. ஆனால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை ஏனென்றால் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாது.

அ.மு : எதற்காக காம இலக்கியம் படைப்பது முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

எழுத்தாளர் மேரி ஆன் மோகன்ராஜ்...ஆன் : நான் இலங்கையைச் சேர்ந்தவள். அங்கே பேணப்படும் கலாச்சாரத்தை இங்கேயும் கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். என் பெற்றோருடைய திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அப்படியே நானும் இருக்கமுடியுமா? என் கன்னிமையை பாதுகாத்து வரப்போகும் கணவருக்கு பரிசாகத் தரவேண்டும் என்று சொல்கிறார்கள். இவர்கள் எந்தக் காலத்தில் இருக்கிறார்கள்? இந்த யுகத்தில் இங்கே வாழும் ஒரு பெண்ணிடம் இதை எதிர்பார்க்கமுடியுமா? நான் பாலியல் உறவு பற்றியும், தடைகள் பற்றியும், எல்லைகள் பற்றியும் பல வருடங்களாக சிந்தித்து வருகிறேன். செக்ஸ் என்னும் அற்புதமான அனுபவத்தை பாவம் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். அது ஒரு இன்பம் துய்க்கும் அனுபவம். ஆனால் அதைத் தண்டனை ஆக்கிவிட்டார்கள். ஓர் ஆணும் பெண்ணும் சம்மதித்து கலவி செய்வதில் என்ன தப்பு இருக்கிறது. அதில் ஒருவருக்கும் கெடுதி இல்லை. என்னைக் கேட்டால் பெண்ணும் ஆணும் பாலியலுக்கு சம்மதிக்கும் வயதை அரசு நிர்ணயித்த வயதிலும் பார்க்க இன்னும் குறைப்பேன். அதுவே ஆரோக்கியமானது.

அ.மு : பத்து வருடங்களுக்கு மேலாக காம இலக்கியம் எழுதி வருகிறீர்கள். கண்ணால் பார்க்கக்கூடிய ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

ஆன் : ஏன் இல்லை. எந்தப் புத்தகக் கடைக்கும் நீங்கள் போகலாம். முன்பு போல காம இலக்கியம் கடைகளின் பின் மூலைகளில் முடங்கிக் கிடப்பதில்லை. அவை இப்போது கடை முன் வாசல்களில் அகப்படுகின்றன.

அ.மு : உங்கள் ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்போது எப்படி உணருவீர்கள்? உங்களை எப்படி சமாதானப் படுத்திக்கொள்வீர்கள்?

ஆன் : நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். அநேகமாக நிராகரிப்புகளை நான் கணக்கெடுப்பதில்லை. சில ஏற்கப்படுகின்றன; சில திரும்பி வருகின்றன. ஓர் ஐம்பது வீதம் ஏற்கப்படுவதே பெரும் வெற்றிதான். அதை நூறுவீதம் ஆக்குவதற்கு ஒரு சுருக்கு வழி இருக்கிறது - 200 வீதம் படைப்பதுதான்.

சில வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு விஞ்ஞான நாவல் எழுதி அது திரும்பிவந்துவிட்டது. அன்று முழுக்க நான் அறையைப் பூட்டிக்கொண்டு அழுது தீர்த்தேன். இப்பொழுது நான் அப்படிச் செய்வதில்லை. இலங்கைப் பின்னணியில் ஒரு விஞ்ஞான நாவல் நாலு அத்தியாயம் எழுதி வைத்திருக்கிறேன். ஓர் அவசரமும் இல்லை. எப்படியாவது ஒரு நாள் அதை முடிப்பேன்.

அ.மு : நீங்கள் எழுதிவரும் இணைய நாட்குறிப்புகள் பிரபலமானவை. இணையத் தளங்களில் எழுதப் படும் டயரிகளை ஆயிரக்கணக்கானோர் படிக்கிறார்கள். உங்களுக்கு அந்த எண்ணம் எப்படித் தோன்றியது.

ஆன் : இன்னொருவருடைய டயரியைப் படிப்பதுபோன்ற சுவாரஸ்யமான விஷயம் வேறு ஒன்றுமே இல்லை. நான்கூட நேரம் கிடைக்கும்போது இணையத்தில் மற்றவர்கள் எழுதும் டயரியைப் படிப்பேன். 91ம் ஆண்டு எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் கம்புயூட்டர் நிபுணர். அவரிடமிருந்துதான் கம்புயூட்டர் பற்றிக் கற்றுக்கொண்டேன். அவர் உதவியில் இணையத்தளம் அமைத்து எழுதத் தொடங்கினேன். அப்பொழுது இந்த டயரி எழுதும் பழக்கமும் ஏற்பட்டது. உலகத்தில் இணையத் தளத்தில் முதலில் டயரி எழுதிய ஐந்து பேரில் நானும் ஒருத்தி. பதினொரு வருடங்களாக தொடர்ந்து எழுதிவருகிறேன். முப்பது லட்சம் பேர் படித்திருக்கிறார்கள்.

அது மாத்திரமல்ல எத்தனையோ சின்னச் சின்ன உபயோகமான விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. சில பிரச்சினைகளுக்கு விடை அவர்களிடமிருந்தே கிடைக்கிறது. அதைப்போல மகிழ்ச்சி தரும் விஷயம் எனக்கு வேறு இல்லை.

அ.மு : Bodies in Motion நாவலில் ஒரு புதுமை இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையாகவும், எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்துப் படிக்கும்போது ஒரு நாவலாகவும் உள்ளது. இந்த நாவலை எந்த அத்தியாயத்திலிருந்தும் தொடங்கிப் படிக்கலாம். இந்த எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது? ஏதாவது முன்னுதாரணம் உண்டா?

ஆன் : இதற்கு ஆரம்பம் Season of Marriage என்ற சிறுகதைதான். இதைத் தொடர்ந்து இதே மாதிரி எழுதச்சொன்னார்கள். ஆகவே அதைப்போல பின்னணியில் இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதினேன். அப்படியே ஒன்றுக்கொன்று தொடர்பான சிறுகதைகள் உருவாகின. அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு நாவலாக எழுதினால் என்னவென்று தோன்றியது. அப்படி பிறந்ததுதான் இந்த நாவல். இதைப்போல இன்னும் சிலரும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். Rohinton Mistry யின் Swimming Lessons, ஒரு தொடர் மாடிக் கட்டிடத்தின் வீடுகளில் நடப்பதைச் சொல்லும் நாவல். அடுத்தது, Love Medicine, அதை எழுதியவர் Louise Erdich என்று நினைக்கிறேன். இன்னும் வேறும் இருக்கலாம்.

அ.மு : ஆனால் இந்த தொகுப்பில் Season of Marriage கதை இல்லையே. அது எப்படி விட்டுப்போனது?

ஆன் : அது இன்னொரு கதை. எல்லாச் சிறுகதைகளையும் எழுதி முடித்த பிறகு அவற்றை ஒன்றாகப் பார்த்தபோது Season of Marriage சிறுகதை இந்த தொகுப்புக்குள் பொருந்தவில்லை; கொஞ்சம் நீட்டிக்கொண்டு நின்றது. எனக்கும் எடிட்டருக்கும் இதுபற்றி நீண்ட விவாதம் நடந்தது. கிட்டத்தட்ட அந்தக் கதையை முற்றிலும் திருப்பி எழுதினால்தான் பொருத்தமாக இருக்கும். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அறிவித்த தேதிக்குள் நாவலைக் கொண்டு வரவேண்டிய கட்டாயம். வேறு வழியின்றி அந்தச் சிறுகதையை தவிர்த்து விட்டேன்.

அ.மு : Bodies in Motion அருமையான தலைப்பு, பொருத்தமானதும்கூட. இது எப்படித் தோன்றியது?

ஆன் : இந்த தலைப்பை பலவிதமாக அர்த்தப் படுத்திக்கொள்ளலாம். வானவியல் ஆராய்ச்சி பற்றி ஒரு கதை வருகிறது, அதன் தலைப்பு இது. கோள்கள் ஒன்றையொன்று தொடாமல் ஒரு விதியின் பிரகாரம் சுற்றிக்கொண்டே இருக்கும், அந்தக் கதையில் வரும் பெண் சாயாவைப்போல. அதே சமயம் ஒன்றாக வாழ்வது, பிறகு உறவை முறித்து பிரிவது போன்று மனித உடல்கள் நகர்ந்தபடியே இருக்கின்றன; அதைக் குறிக்கும். கலவியின் குறியீடாகவும் ஓர் அர்த்தம். ஆனால் முக்கியமாக இலங்கையில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறுபவர்களும், அமெரிக்காவிலிருந்து திரும்பி இலங்கையில் குடியேறுபவர்களுமாக இந்த நாவலில் மாந்தர்கள் நகர்ந்தபடியே இருக்கிறார்கள். அதைச் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

அ.மு : இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது 'ஏழு கிண்ணம் தண்ணீர்.' மிக நிதானமாகவும், அழகாகவும் சொல்லப்பட்ட கதை. இதை மொழிபெயர்ப்பதற்கு நான் அனுமதி கேட்டபோது பதிப்பாளர்கள் மறுத்துவிட்டார்கள். பெங்குவின் (இந்தியா) இதை தமிழில் மொழிபெயர்க்கப் போவதாக அறிகிறேன். ஆனாலும் பல கதைகள் நம்பிக்கைத்தன்மையின் எல்லையில் நடைபெறுகின்றன. அதிலும் கடைசிக் கதை, கொழும்பில் நடைபெறும் 71 வயது மங்கையின் கதையை நம்பவே முடியவில்லை.

ஆன் : நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. கற்பனை உண்மையை மீறிப் போயிருக்கலாம். ஆனால் எனக்கு கதையின் மையச் சம்பவம் பிடித்திருந்தது.

அ.மு : மற்ற எழுத்தாளர்கள் தங்கள் சொந்த விஷயங்களை மூடி மறைப்பார்கள். நீங்கள் உங்களுடைய எடிட்டரின் பெயரைக் கொடுக்கிறீர்கள், ஏஜண்டின் பெயரை நாட்குறிப்பில் எழுதுகிறீர்கள், விலாசத்தை தருகிறீர்கள். எப்படி புத்தகங்களைப் பிரசுரிப்பது என்ற அறிவுரைகளையும் தயங்காமல் வழங்குகிறீர்கள். இப்படி யாருமே செய்வதில்லையே. உங்களால் எப்படி முடிகிறது?

ஆன் : எழுத்தாளருடைய வேலை எழுதுவது. ஓர் இளம் எழுத்தாளர் தான் எழுதியதை பிரசுரிப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார் என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் நான் அந்தப் பாதையை கடந்து வந்தவள். சில்லு ஏற்கனவே கண்டுபிடித்தாகிவிட்டது. அதை மீண்டும் ஒருமுறை கண்டுபிடிக்கத் தேவையில்லை. எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம் வீண். அதுதான் புது எழுத்தாளர்களுக்கு இதுபற்றி விளக்கி அறிவுரை கொடுத்தேன். இப்படியான வேலைகளில் அவர்கள் நேரத்தை வீணடிக்கக்கூடாது. அவர்கள் எழுதுவதில் மட்டுமே தங்கள் அருமையான நேரத்தை செலவழிக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அ.மு : உங்கள் எழுத்து சில இடங்களில் கவிதையாக மாறிவிடுகிறது. வேறு இடங்களில் சாதாரணமாக இருக்கிறது, ஒரே சீராக இல்லை. கொஞ்சம் முயற்சி எடுத்தால் கலாநேர்த்தி கூடிவரும் என்று படுகிறது. அது பற்றி யோசித்திருக்கிறீர்களா?

ஆன் : என் வாசகர்கள் அடுத்த புத்தகம் எப்போ, எப்போ என்று கேட்டு துளைக்கிறார்கள். பதிப்பாளர் விரட்டுகிறார். நீங்கள் சொல்லுவதுபோல எழுதுவதற்கு நிறையக் காலதாமதம் ஆகும், நீங்கள் காத்திருப்பீர்களா?

அ.மு : நல்ல புத்தகத்திற்கு எத்தனை வருடமும் காத்திருக்கலாம். உங்களுக்கு பல விசயங்களில் ஈடுபாடு இருக்கிறது; ஓவியம், இசை, தோட்டம், சமையல் கலை. எங்கே உங்களுக்கு நேரம் கிடைக்கிறது. சமையல் கலை பற்றிய புத்தகம்கூட எழுதியிருக்கிறீர்களே?

ஆன் : நேரம் கிடைப்பதில்லை, அதை உண்டாக்க வேண்டும். இயற்கையாக எனக்கு தோட்டத்தை பராமரிப்பதிலும், சமைப்பதிலும், விருந்து கொடுப்பதிலும் ஆர்வம் உண்டு. அமெரிக்கர்களுக்கு இலங்கை உணவு, அதிலும் யாழ்ப்பாணமுறைப்படி சமைத்த உணவு, நிறையப் பிடிக்கும். அவர்களை திருப்திப் படுத்த எழுதியதுதான் சமையல் குறிப்புகள் புத்தகம். இரண்டு வயதில் வந்தபோது நான் நல்ல தமிழில் பேசுவேன், இப்போது மறந்துவிட்டது. அதுபோல யாழ்ப்பாண உணவின் சுவையையும் மறந்துவிடக்கூடும் என்ற கவலை பிடித்தது. அதுதான் எழுதினேன்.

அ.மு : அப்பம் சாப்பிடுவீர்களா?

ஆன் : யாழ்ப்பாண அப்பம் என்றால் எனக்கு நல்ல விருப்பம். என் சிநேகிதி ஒருத்தி ரொறொன்ரோவில் இருக்கிறார். அவர் ரொறொன்ரோ அப்பக் கடையைப் பற்றியே எப்போதும் உயர்வாகப் பேசுகிறார். நல்லாய் இருக்குமா?

அ.மு : நீங்கள் அடுத்தமுறை ரொறொன்ரோ வரும்போது நான் உங்களை அங்கே கூட்டிச் செல்வேன். அவர்ளுடைய அப்பம் தன்னிகரற்றது. அதற்கு நான் உத்திரவாதம்; அவர்கள் சேவைக்கு உத்திரவாதம் தரமுடியாது
.
ஆன் : நான் நிச்சயம் வருவேன்.

அ.மு : உங்கள் நேரத்துக்கு நன்றி. வணக்கம்

ஆன் : வணக்கம்.

மேற்படி சம்பாசணையின்போது ஓர் இடத்தில்கூட 'திருமணம்' என்ற வார்த்தையையோ 'கணவன்' என்ற வார்த்தையையோ அவர் தட்டித்தவறியும் உபயோகிக்கவில்லை. அவர் சொல்கிறார் 'கெவினும் நானும் ஒன்றாக வாழ்கிறோம். எங்களுடையது ஒரு திறந்த உறவு. அதில் நான் அதிர்ஷ்டக்காரி. அதனால் கெவினுடன் ஒன்றாக வாழ்ந்தபடி என் வாழ்வில் வேறு காதலர்களையும் என்னால் அனுபவிக்க முடிகிறது.'

Bodies in Motion ஒரு சுவாரஸ்யமான நாவல். ஆனால் அதில் வரும் பாலியல் காட்சிகளை அகற்றிவிட்டுப் பார்க்கும்போது அதில் பெரிய இலக்கியம் இருப்பதாக எனக்குப் படவில்லை. தமிழில் இன்னும் சிறந்த எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் எழுதுவதில் உள்ள அனுகூலம் இதுதான்.

ஆரம்பத்தில் இந்த உரையாடலை எழுதும்போது 'இந்த இடத்தில் சிரிக்கிறார்' என்று அடைப்புக்குறிக்குள் எழுதிவந்தேன். பிறகு பார்த்தால் ஒவ்வொரு பதிலுக்கு முன்பும், பின்பும், நடுவிலும் அவர் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். ஆகவே அவற்றை நீக்கிவிட்டேன். பொதுவாகவே அவர் திறந்த மனமுள்ள, தாராள குணமுள்ள ஒரு பெண்மணி. தன் வாழ்நாளில் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை இன்பங்களையும் ஒன்றும் விடாமல் துய்த்துவிடவேண்டும் என்ற விருப்பம் உள்ளவராகப் பட்டார். அவருடன் பேசும்போது நேரம் போவதே தெரியாது; அவருடைய உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்.

34 வயது நிரம்பிய இந்த காம இலக்கிய தேவதை என்னை அசர வைத்தார். இவருடைய இணைய தளத்தில் ஓடும் நாட்குறிப்புகளை நான் கடைசியாகக் கண்ணுற்றபோது அந்த தளத்திற்கு 30 லட்சம் பேர் வருகை தந்திருந்தது தெரிந்தது.

அவருடைய The Arrangement நாவல் ஹார்ப்பர் கொலின்ஸ் வெளியீடாக விரைவில் வர இருக்கிறது. 336 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் பல இடங்களில் காமம் சொட்டுவதாக ஆன் உத்திரவாதம் அளிக்கிறார். யூலை 2006 ல் வெளிவரப்போகும் இந்த நாவலுக்கு இப்பொழுது தொடங்கியே விளம்பரங்கள் ஆரம்பமாகிவிட்டன. அவை உங்கள் பிரதிகளுக்கு இப்பொழுதே பதிவு செய்யுங்கள் என்று கூறுகின்றன.

ஐந்து அடி மூன்று அங்குலம் உயரத்தை தொடமுடியாத காம அரசி இன்று இலக்கியத்தின் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறார்.


எழுத்தாளர் அ.முத்துலிங்கம். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பதிவுகள் யூலை 2006 இதழ் 79