30-01-2012   திங்கள்  அன்று  எனதுஅன்புத் தாய் காலமாகிவிட்டார்,அவர்களது

உள்ளத்தில் வேதனை  யெனும்
நெருப்பை  மூட்டி!
நேந்திரமாம்  ஒளிமலரை
இறுக     மூடி!
பிரிந்ததேன்..?என் தாயே..!
துடித்து    வாடி..!
ஹிதாயாமகள்   கதறிப்புலம்புவதை
காணீரா     யோ..?

உம்மாவென அழைக்க இனி
யார்    தான்   உண்டு.!
உலகிலே! இனியும்மை
எங்கு    காண்பேன்..?
உயிரிலே..! நிறைந்திட்ட   
பாசத்தாயே..! அரை நொடிக்குள் என்னைவிட்டுப்
பிரிந்த   தேனோ...?ஹிதாயாவின்கண்ணீரைத்
துடைக்க  வாரீர்...!

நூறாண்டு  காலம் நீர் வாழ்ந்திருந்து
ஊரார் அன்பை பெற்று எமையும் காத்து
வேரூண்டும்   புகழோடு.!வேந்தே என்னை
வேதனையே அணுகாது! மகிழ்வை   தந்து
என்னுயிர் பிரியும்வரை வாழவேண்டு  மென்றே..!
இரவு பகலாய்ப் பிராத்தித்தேன்..! பயனேயின்றி
நீரேனோ..!இறையடியை நாடிச் சென்றீர்..?
பாவியிவள்  புரிந்திட்ட  கொடுமை என்னே...?

பாசமகள் எழுத்துக்களை  படித்து நீங்கள்
அனுதினமும் போற்றிவந்தீர்..! ஏனோ இன்று
என்னரிய  தாயாரின் மரணப்  பயணம்
ஹிதாயா மகள் கண்டலறும்   நிலையைத்தந்தீர்..?
பொன்னுடலை வெள்ளை  நிறப் பிடவை  யாலே..!
போர்த்தித்தான்  ''காபன்'' என்றே தூக்கிச் சென்றனர்..!
அன்பென்னும்   சிறகாலே..!  எம்மைக்காத்து
ஆதரித்த  தாயாரை நான்  எங்கு  காண்பேன்..!

சுவர்க்கத்தில் நீர் வாழ.!சுகங்கள்  காண
சொல்லரிய  பெருமானார்''உம்மத் '' தோடு
தவமாக  நீர் கலக்க..!முஸ்தக்கீம் பாலம் தாண்ட
பொல்லாத புதை குழியின்  தொல்லை நீங்க
புவி வாழ்வில் நீர் செய்த நன்மை யாவும்
பிசகாது உம்மோடு வந்து சேர
தவறாமல் தினந்தோறும் பிராத்திப்பேன் யான்
தாயே..! உமதான்மா.!சாந்தி கொல்ளும்..!

துடிப்போடு..!ஸைனப் என்னும் நாமம்,
தொல்லுலகில்..!தாயே..!உமக்கிருந்தும்
பிடிப்போடு ஊராரோ..! அன்பு சிந்த
''ஹிதாயாம்மா'' யென அழைத்தின் புற்றார்..!
அடிக்காது..!அன்போடு..!அரவ ணைத்தே
அயலவரும் மேச்சிடவே எமைவளர்த்தீர்
துடிக்காத நெஞ்சில்லை நீர்   பிரிந்த
துயரத்தைக்  கேட்டிங்கே ..! கண்ணீர் வெள்ளம்..!

புதுமையுடன்   கவி வடிப்பேன்..!பெண்கள்வாழ்வு
புலர்வதற்கே.. ! நாள்  தோறும் கலை சமைப்பேன்
முதுமை நிலைவருமுன்னர் தாய் கண்ணை..!
மூடியதால்..!கண்ணீரை வடிக்கின்றேனே..!
விதியென்றே..!கணவரும் உடன்பிறந்த
சகோதரமும்.! சுற்றத்தார் அனைவ ரோடும்
மதியிழந்த வானம் போல்.!கலங்குகின்றேன்
மனதியிலே உமையிருத்தி இறைஞ்சுகின்றேன்...!

- 30-01-2012   திங்கள்  அன்று  எனதுஅன்புத் தாய் காலமாகிவிட்டார்,அவர்களது
வேதனை தாங்க முடியாத துயரில் என்னால் எழுதப்பட்ட  சிறு கவிதை -

[உங்கள் துயரைப் 'பதிவுகளும்' பகிர்ந்து கொள்கிறது. - ஆசிரியர்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.