ஶ்ரீராம் விக்னேஷ்

எச்சிலிலை எடுத்துண்ணும் என் நண்பா உன்னிடத்தே,
கச்சிதமாய் ஒன்றுரைப்பேன் கவனம் , அதை மறைத்துண்ணு….!
பிச்சையெடுப் போரிடமும் பிடுங்கியே தின்றுவிடும்,
'எச்சிக்கலை' பலரின்று  இருக்கின்றார் பதவிகண்டு….!

நாயை வீட்டிலிட்டு நல்விருந்து குவித்தாலும்,
வாயைத் திறந்தோடும் வாய்க்காற் கழிவுண்ண….!
சம்பளத்தைக் கூட்டித்தான் சர்க்கார் கொடுத்தாலும்,
கிம்பளப் பிச்சைபெறக் கிளம்புகிறார் கையேந்தி….!

தன்னவளுக்குப் பிள்ளைதரத் தகுதியிலா திருப்போர்கள்,
அந்நியரைச் சேரவிட்டு அதில்தகுதி சேர்ப்பார்கள்….!
தன்மானம் களைந்துவிற்றுத் தகுதியுடை உடுப்பார்கள்….
“என்னைவிட ஒருவரில்லை ” எனத்துள்ளிப் பறப்பார்கள்….!

எப்படியோ தகுதியென்று  இருப்பவர்முன் உலகினிலே,
“இப்படித்தான் தகுதியென்று " இன்னும்சிலர் வாழுகின்றார்….!
அன்னவரின் முகத்தாலும் அவர்தமது மதிப்பாலும்,
சின்னவர்கள் சிரிக்கின்றார்  சிறந்திடத்தான் மறுக்கின்றார்….!

* வட்டார வழக்குச் சொல்: எச்சிக்கலை - எச்சில் சாப்பாடு.

Srirham Vignesh <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>