கவிதை வாசிப்போமா?

1. குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன்!

கு.அழகிரிசாமியின்
குமாரபுரம்
ரயில்வே ஸ்டேசனுக்குக்
காவிய குலுங்கலோடு
வந்து நின்றது
இரயில் வண்டி.

வெயிலில் கருத்த
கரிசல் மண்ணும்
குடை ராட்டுகள் போல
விரிந்து நிற்கும்
கருவேல மரங்களும்
காய்ந்து நிறம் மங்கிய
நாணல்களின்
காற்றில் இளைப்பாறிய
தலையசைப்பும் தாண்டி
கு.அழகிரிசாமியும்
அவரது நண்பர்
ஸ்டேசன் மாஸ்டரும்
என்னைப்பார்த்து
கையசைத்த போது
வேகமாய் வந்த
எக்ஸ்பிரஸ் ரயில்
குறுக்காக தடதடக்க
படுக்கையில் பிரிந்த
மோத்திரமாய்
குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன்
எனது நினைவுகளில்
பிசுபிசுத்தது.

2. தாமிரபரணி புராணம்!

தாமிரபரணி என்றோ
பொருநை என்றோ
பெயர் சொல்லி அழைப்பது
அந்த ஆற்றுக்கோ
ஆற்றின் கரையில் வாழும்
பேராத்துச்செல்விக்கோ
தெரியாது.

பள்ளம் நோக்கிப்
பாய்ந்தோடும் சங்கிலியாய்
பாறைகளை அறுத்து ஓடிய
ஆற்றின் மருங்கில்
பழந்தின்னி வௌவால்களும்
கிளிகளும் அடையும்
மருதமரங்களும்
பனை விளைகளும்
கருமந்திகள் சுவைக்கும்
மூங்கில் குருத்துகள் நீண்ட
மூங்கில் புதர்களில்
குட்டிகள் ஈன்ற களைப்பில்
புலிகளும்
வெயில் முத்துக்களும்
பரவிக்கிடக்கும் காடு அது.

காட்டின் நிழலில்
ஆற்றின் வெளியில்
பாதங்களில் நீர்சுழித்தோட
பேராற்றுச்செல்வி
கானமர் செல்வியாக இருந்தாள்.

பின்னொரு கால்
பாண்டியர் வரவால்
பேராட்சி அம்மன் ஆனாள்.

பிளாஸ்டிக்கழிவுகள்
ஆற்றை முழுங்கும் சாக்கடைகள்
அழுகி வீசும் எச்சில் உணவுகள்
அதை மேயும் பன்றிகள்
சூழ
பாலித்தின் குப்பைகளைப்
பூக்களாகச் சூடிய
உடை மரங்களின் மத்தியில்
இன்று வியர்த்திருக்கிறாள்.

பேராச்சி என்றே
குலத்தில் மூத்தவளாய் காணும்.
மருத மக்கள்
நெஞ்சில் பெருக்காத நெருப்பை
பொங்கப்பானை அடியில்
பெருக்கி என்ன விடியப்போகிறது என
காற்றாக நெருப்பைக் கடந்து
மலையாளதேசம் போய்விட்டாள்
அம்மன் என்று சொன்னான் கோடாங்கி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.