- தம்பா (நோர்வே) -

"வா மகனே வா
உன் வருகையே
எமக்கு சுக்கிர திசையாகும்.~

"வேண்டாம் பெற்றவரே வேண்டாம்,
ஒன்றுவிட்ட அகவையை
மூலதனமாக்கி மூச்சிரைக்க வைக்காதீர்."

"கந்து வட்டியும் காணா வட்டியும்
குலைந்து போகுது.
போட்டதை எடுத்ததுமில்லை.
பல்மடங்காகி பெருகியதுமில்லை.
வா மகனே வா"

" உயிர் ஒன்றும் பணமல்ல
முதலீடு செய்வதற்கு,
உணர்வுகள் ஒன்றும் பொருளல்ல
விற்பனைக்கு வைப்பதற்கு,
மகிழ்ச்சி ஒன்றும் கணக்கல்ல
லாப நாட்டம் பார்ப்பதற்கு."

"ஊருக்கும்  உலகுக்கும்
தனயனின் வளச்சியை
பறைச்சாற்றும் மகிழ்வறிவாயோ?"

"உதயத்தில் உதிர்ந்த
லச்சோபலட்ச கணங்களில்
என்வாழ்வும் என்மகிழ்வும்
அறிந்த கணமேதுமுண்டோ?

வடக்கும் தெற்கும்
திசைவழி வேறு வேறு.
தேட்டம் உங்களின் கனவுலகம்,
தேடல் எனது நனவுலகம்.

உணவு முட்டி வயிறு பெருக்க
நெஞ்செரிக்க விருந்து
வேண்டிலர் பெருந்தகை.
போரில் தறித்து வீழ்ந்தவர்
வயிறு ஒட்டி உணவு வேண்டி
கண்ணெரிய பினி
வேண்டிலார்  பெரும்தொகை.

ஆயிரம் ஆயிரம் சாமானியர்களின்
சூனிய தளைகளை  
என் ஆடம்பர அகவையின்
வலைகள் உடைக்கட்டும்.
நெடுவாழ்வும் மகிழ்வேன்.

வாருங்கள் பெற்றவரே வாருங்கள்
பணம் பார்க்காத
பாசத்தையோ நேசத்தையோ
படியளக்கலாம் வாருங்கள்!"