- தம்பா (நோர்வே) -வானம்  கொழித்து  
வனமும் செழித்த மண்ணில்
நல்லிணக்கம் விளைந்ததில்லை.

பஞ்சம் பிளைக்க வந்தவரை
தஞ்சம் களைத்து
வஞ்சகம் பிளைக்க வைக்கிறது.

மத்தியகிழக்கில் தெறித்து விழுந்த பொறி
தென்கிழக்கால் காட்டுத் தீயானது எப்படி?

தரைபட்ட உயிரை காக்க
ஒரடி குழந்தை அரையடி சேற்றில்
பல மைல்களை உழுது வருகிறது.
கைக்குழந்தைக்கு கழுத்திலும் மார்பிலும்
சேற்றுப்புண் பார்த்திடும் மாயமென்ன?

தாகம் தாளாது
சேற்றுமண்ணை குவித்து
தண்ணீர் கட்டி குடிக்க விளைய
அதனுள் சிறுநீர்கழித்து
களிப்புறும் காவல்படையும்
ஏளனம் செய்து மகிழும் துறவியும்  
உடைகளில் பிரிந்து நின்றனர்.  நடக்க தள்ளாடும் முதியவர்களை
எல்லைவரை விரட்டி
கண்ணிவெடிகளை பரப்பி 
தத்திச்செல்லும் கிளிக்கோடு விளையாட
நிர்பந்திகிறது சாத்வீகம்.

மனிதம் துறவுபூண
துறவு ஆயுதம்பூண
ஆயுதம் அதிகாரம் பூணுகிறது.
தினம் தினம் பௌர்ணமியை கொன்று
அமாவாசையை ஆரவாரித்து
ஆனந்தம் கொள்கின்றனர்.

ராணுவமயப்பட்ட மதமும்
மதவயப்பட்ட ராணுவமும்
இரு குழல் துப்பாக்கி போன்றது.
எத்திசைகளிலும்  கனல் கக்கி
தர்மங்களை கருகவைக்கிறது.

வரலாறு வன்னித்தமிழனை
வறுத்தெடுக்க சித்தப்பிரமையானவன்,
மியன்மார் காடுகளில் சேற்றுப் பிணமாகிறான். 

எமக்கென்ன பர்மாக் கடற்கரையில்
`wifi´ சரியில்லை என
ஐநா விற்கு ஒரு முறைப்பாடு
`email´  எழுதிவிடவேண்டியதுதான்.