--யோ.புரட்சி,  வள்ளுவர்புரம், இலங்கை -பள்ளியறையில் மட்டுமல்ல‌
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.

மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.

அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.
நீ வழங்கும் சம தானம்.

இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.

உப்பு கறிக்குக் கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்கத் தவறாதே.

சின்னச் சின்னச் சண்டைகள்
தினம்தோறும் போட்டுக்கொள்
சினம்கூடி பெரும்சண்டை
வந்திடாமல் பார்த்துக்கொள்.

அடிக்கடி உறவு வைத்தால்
அலுத்துமே போய்விடும்
அவ்வப்போது உறவுகொண்டால்
ஆனந்தம் பெருகிடும்.

அவள் கர்ப்பம் சுமக்கையில்
நீ அவளை சுமந்திடு.
அவள் வேலையில் அரைவாசி
உன் கையில் எடுத்திடு.

சிலநாளில் காலைவரை
அவள் அழகாய்த் தூங்கட்டும்
அவள் படுக்கை அறை சென்று
உன்கை தேநீர் வழங்கட்டும்.

உறவது முடிந்த பின்னே
உன்பாட்டில் தூங்காதே
உன்னவள் உன் மார்பில்தூங்க‌
ஓரிடம் கொடுக்கத் தவறாதே.

தாமதித்து வீடு வந்தால்
தகுந்த காரணம் சொல்.
தப்பு உன்னில் இருந்தாலே
மன்னிப்பு கேட்டுக்கொள்.

வேலைக்குச் செல்லும்போதும்
வேலைவிட்டு வந்தபோதும்
புன்னகை சேர்ந்தமுத்தத்தை
பூவையவளுக்குப் போட்டுவிடு.

சிறப்பான நிகழ்ச்சி எதற்கும்
தேவி அவளை கூட்டிச்செல்
எடுப்பான பெண்ணைக் கண்டால்
எட்டி நீயும் நின்றுகொள்.

நோயிலே அவள் வீழ்ந்தால்
பாயாகி விடு.
நோவொன்று அவள் கண்டால்
தாயாகி விடு.

உன்னாலே அவள்
வடிக்கின்ற கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராய் இருக்கட்டும்.

ஆத்திரம் கூடினால்
அழுது தொலைத்துவிடு.
அவளை அடிக்கும் பழக்கமதை
அறவே வெறுத்துவிடு.

வேளை வரும் போதெல்லாம்
வெளியே அழைத்துச்செல்.
வேதனை அவள் கொள்ளாமல்
விருப்பங்களினை ஏந்திக்கொள்.

அவளொரு குற்றம் செய்தால்
அணைத்து புரியவை.
அன்னையாக நீ மாறி
அவளை திருந்தவை.

அவளின் நட்புகளை
அவள் தொடர அனுமதி.
அவளுக்கும் மனசிருப்பதை
உன் மனம்புரிந்தால் பெறுமதி.

சின்னச்சண்டை பிடித்து
சினத்துடன் வெளிச்சென்றாலும்
செல்பேசியை நிறுத்தி வைக்காதே
செல்வியவள் இதயத்தை உடைக்காதே.

தலை நரைக்கும் காலத்திலும்
சேர்ந்தே உறங்கிவிடு.
சாகப்போகும் நேரத்திலும்
அவள்கை பிடித்துவிடு.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.