1. நதி பெய்கின்ற மழையில் பெருக்கெடுக்கும் இருள்

ராஜகவி ராகில்

சூரியன் கொண்டு வந்து விட்டுச் சென்ற இருளெனவும்
ஓர் இருளிலிருந்து கடத்தப்பட்ட
இன்னோர் இருள் மின்குமிழெனவும் நீ

ஓர் உயிர்த் தசை
பாவ இரும்புத்துகளாய் காந்த இதயம்

பொய் வேரில் நாவு மரம்
இருட்டு உண்ணுகின்ற இரவுக் கண்
கறுப்பு இசை உணருகின்ற மலட்டுக் காது ஓர் உயிர்க் காடு
கார் வெயில் உறிஞ்சுகின்ற வேர்கள்
வளைந்து நெளிந்து அசைகின்ற பாம்புக் கிளைகள்
பருந்துகளாய்ப் பறந்து பிணம் உண்கின்ற இலைகள்

பாவ நச்சு விதை முளைக்கின்ற வயல்
நெருப்பை உண்ணுகின்ற விறகு
கோப மலை ஏறுகின்ற உணர்ச்சிப் படிகள் என
சூறாவளி சிக்குப்பட்டு பிய்த்து வீசப்பட்டுக் கிடக்கிறது மனிதம்

முதற்கல் வைக்க கிடைக்கவே இல்லை
ஒரு மனிதன்
ஊரில் ஆலயம் கட்டுவதற்கு .

2. கூப்பிடு தூரத்தில் என் காற்று .

ராஜகவி ராகில்

இருள் ஒரு செடியாக முளைத்துப் படர்வதற்கு முன்
கடற்கரை மணல்வெளியில் நானும்
என் மாலைப் பொழுதும்

நூற்றுக் கணக்கான காலடித் தடங்களோடு
கலந்து விடுகிறது என் மனசும்

நேற்றைய என் பாதப்பதிவு நான் விட்டுச் சென்றிருக்கலாம்
தனியாகத்தான் என் தேகம் வந்திருந்தது பிறந்தது போல

இன்றும்
அப்படித்தான்

மெல்லிய குளிர் குடித்து
என்னில் உமிழ்ந்தபடி செல்கிறது காற்று

கடலில் போட்டாலும்
அணைந்து போகாத காதல் தீயும்
உயிரெங்கும் பரவியபடி காதல் விசமும்
மூச்சு நின்றுவிடாத நானும்

கூப்பிடு தூரத்தில்
என் தேவதை தாஜ்மகால்
நான் வாங்க வந்த காற்று
இன்னும் வெளியே வரவில்லை

ஒரு தரம் விழிகள் சுவாசித்தால்
அழகாகி விடும் என் கங்குல் 
என் காற்றுக் காணாது திரும்பினால்
சுவாசிக்கச் சிரமப்படும் என் இரவு

நாளையும் நான் வருவேன்
மூச்சு வாங்கி என் காற்று உயிர்க்கவும்
அவள் கண்கள் சுவாசித்து உயிர் திறக்கவும் .

3. பூஞ்செடியோடு பேசுபவன்

ராஜகவி ராகில்

வேலைக்குச் செல்லுகின்ற காலை நேரங்களில்
பூச்செடிகள் விற்கின்ற
அந்தத் தெரு என்னைக் கடந்து செல்லும் போதெல்லாம்
எனக்குள்ளும்
பூக்கள் அவிழ்ந்து கொள்ளும்

சூரியன் சறுக்கி விழுந்த மாலைப் பொழுதில்
மனசுக்குள் மழை ஏந்தியபடி
ஒரு செடிவாங்கினேன் என் முற்றம் அழகுபடுத்தலாமென

இரண்டு வாரத்தின் பின் பூக்குமென்றான்
வீடுக்கு வந்து
ஓரிடம் தெரிவு செய்து நட்டேன் புன்னகை சேர்த்தபடி

முதல் நீர் தெளித்தேன்
அடுத்த விடியலில் இரண்டாம் நீர்
செடியில் இருந்த இலைகள் சில கழன்று கிடந்தன
என்றாலும்
சில மொட்டுக்கள் எட்டிப் பார்த்தன

அடுத்த விடியலில்
என் மகிழ்ச்சி வாடகைக்கு அமர்த்தியவாறு
இரண்டு பூக்கள்

நான் தண்ணீர் ஊற்றிய போதெல்லாம்
அடி
உன்னைத்தானே நினைத்துக் கொண்டேன்
இது என் செடி மட்டும் தெரிந்த ரகசியம் .

நாளை மாறலாம்
அந்த இலைகளும் பூக்களாய் .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.