- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

1. உழை!

சும்மா கிடப்பதுவும்
சோர்ந்தே படுப்பதுவும்
இம்மை வாழ்வுக்கே
இடராகும்; அறிவீரோ ?

என்றும் வாழ்வுதனை
எழிலாய்  அமைத்துவிட
நன்றாய்த் தொழில்செய்தல்
நலமாகும்; அறிவீரோ ?

அல்லும் பகலிலும் நீ
அயரா துழைப்பதனால்
தொல்லை பல நீங்கும்
துயரம் பறந்தோடும் !

கொள்ளை கொலைசெய்யும்
கொடூர மனப்பாங்கு
உள்ளத்தை நாடாது.
உயர்வு தேடி வரும் !

வறுமை அகன்று விட
வாழ்வுசிறந்து விட 
பெருமை வாழ்வில்வர
பொறுமையோடு உழை !

துணிவுகொண்டு உழை
சுறு சுறுப்புஅடை
கனியும் வாழ்வு -ஒரு
கனியாகி மணக்கும்

2. நலமே செய்யும் உருவங்கள்!

காட்டில் வாழும் மிருகங்கள்
கயமை செய்யா உருவங்கள்!
நாட்டில் வாழும் மனிதரிலும்
நலமே செய்யும் உருவங்கள்!

ஏட்டில் படித்த அறிவில்லை
இறையைக் காணும் நெறியில்லை!
காட்டில் கூடி வாழுகிற
காட்சி கூட நாட்டிலில்லை !

உயர்வு தாழ்வு அவைக்கில்லை
உலகை ஆளும் ஆவலில்லை !
கயமை மிருக வாழ்க்கையிலே
கானல் கூட அரிதாகும்!

பொறாமை கொண்ட அகமில்லை
புரியுந் தன்மை அவைக்கில்லை!
கருமை நெஞ்சத் திலுமில்லை!
காட்டில் ஒன்றைக் கூடிவரும்

உள்ளம் தன்னில் ஓரெ ண்ணம்
ஒரு நாள் கூட வைத்து விடா(து)
கள்ளம் கொண்ட மனிதரிலும்
காட்டு மிருகம் மேலாமே....!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.