கவிதை: இரவு!

இரவு அழகானதுதான்
நிம்மதியாய் தூங்குகிறவனுக்கு
இரவு அழகானதுதான்
தாயின் அன்பை புசிப்பவனுக்கு
இரவு அழகானதுதான்
பிள்ளைகளுடன் கொஞ்சி குலாவுகிறவனுக்கு
இரவு அழகானதுதான்
மனைவியின் அழகை ருசிப்பவனுக்கு
இரவு அழகானதுதான்
வான் நிலவை ரசித்து பார்ப்பவனுக்கு

நடு நிசியில் கண் விழித்து
நாய் குரைக்க பரிதவித்து
கோடிக்குள்ளால் ஓடி
பற்றைகளுக்குள் நின்று
பாம்புக்கும் பல்லிக்கும் பயந்து
விடியும் வரை தூங்காமல்
விழித்திருந்த இரவுகளை எப்படி அழகென்பேன் ?

ஏச்செஞ்சியிடம் காசு கட்டி
ஏமாந்து மொஸ்கோவில்
ஏமாளியாய் முகட்டை பார்த்தபடி
ஏக்கமுடன் விழித்த இரவுகளை
எப்படி அழகென்பேன்

தூக்கம் கெட்டு உழைத்து
துண்டு துண்டாய் சீட்டுக் கட்டி
ஆண்டு இரண்டு கழிச்சு
களிவில்லாமல் சீட்டெடுக்க ...
தாச்சிகாரன் கனடாவில் நின்றால்
அந்த இரவை எப்படி அழகென்பேன்

நட்பாகி காதல் அரும்பாகி
கொப்பாகி பூத்து குலுங்கையிலே - புரிதல்
தப்பாகி பிரிதல் வந்து
அப்பாவியாக நானிருந்த 
அந்த இரவை எப்படி அழகென்பேன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.