அன்னையர் தினக் கவிதை: அன்னையின் கருணை

அன்னையின் கருணை அமுதம் போன்றது
அன்பே தாயென வடிவம் பெற்றது
உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது
உறவே நிறையென உள்ளம் நிறைந்தது

 

வாழ்வின் தத்துவம் சொல்லித் தந்தது
வாழ்வே கலையென வகுத்துச் சொன்னது
உணர்வைச் செதுக்கிடும் மகிமை வாய்ந்தது
உழைப்பே உயர்வென ஊக்கம் படைத்தது

பசியில் பகிர்ந்திட கற்றுத் தந்திடும்
பரிவே மூச்சென மலரச் செய்திடும்
இனிய சொற்களைப் பேச வைத்திடும்
இல்லமே கோயிலென உணரச் செய்திடும்

வினாக்கள் பற்பல விடைகள் கிடைத்திடும்
விதியே இன்றி வினோதம் படைத்திடும்
நிழலாய் ஒளியாய் நிலையாய் காத்திடும்
நினைந்தே நெஞ்சம் நிம்மதிப் பெற்றிடும்

கருணை உள்ளம் கண்களில் மின்னிடும்
கண்களில் கண்ணீர் சொரிந்து வடிந்திடும்
தேகம் வளர்ந்திட தேனாய் சுரந்திடும்
தேறிட மனமோ அம்மா என்றிடும்…
              
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.