Latha Ramakrishnan

(1)
கால்காசு கிடைக்க வழியில்லாதபோதிலும்
கவிதைமேல் காதலாகிக் கசிந்துருகி
காயங்களுக்கு வடிகாலும்,
மாயவுலகத் திறவுகோலுமாய்
காலங்காலமாய் எழுதப்பட்டவைகளிலெல்லாம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்
கால தேச வர்த்தமானங்கள்;
தேடப் பொருதியின்றி திட்டித் தீர்க்கிறீர்கள்.
பொருட்படுத்திப் படிக்கும் பெருந்தன்மையின்றி
உங்களுக்கு முன்னே எழுதிய கவிஞர்களை பிரச்னையற்றவர்களாக்கி
பெருந்தனக்காரர்களாக்கி
கவிதையைப் பொழுதுபோக்காக பாவிக்கும் பித்தலாட்டக்காரர்களாக்கி
பேட்டை தாதாக்களாக்கி
சோதாக்களும் பீடைகளும் பீத்தைகளுமாக்கி
சேறு பூசி, செம்புள்ளி கரும்புள்ளி குத்தி,
சிலுவையிலறைந்து முடித்து
குண்டாந்தடியை செங்கோலெனச் சுழற்றியபடி
பரிவாரங்களோடு பவனி வந்து
உங்களுக்கு நீங்களே விசுவரூப சிலைவடித்துக்கொள்கிறீர்கள்
உலக அரங்குகளில்.
உண்மையான கலகம் இதுவல்ல என்று
உணர்வீர்களோ என்றேனும்?

[2]
மொத்தமாய் வெறுப்பைக் குத்தகைக்கு எடுத்திருப்பதுபோல்
நித்தம் வன்மத்தைக் கொட்டித்தீர்க்கின்றன உங்கள் வரிகள்.
இலக்கியம் ,சமூகப் பிரக்ஞை, மனிதநேயம், பரிவதிர்வு –
இன்னும் என்னென்னவோ பெயரிட்டு
அயராது வரிவரியாய் காறித்துப்பியவாறிருக்கிறீர்கள்,
நல்லது.
நிஜமான அக்கறையோடு தான் இதைச் சொல்கிறேன்.
வாயும் குடலும் வெந்துபோய்விடாமல் கவனமாயிருங்கள்.

[3]
செத்த பாம்போ, ரப்பர் பாம்போ, காற்றால் திரிக்கப்பட்ட கயிற்றரவோ
தேர்ந்த விற்பனையாளர்களின் கைகளுக்கு உண்டு
எல்லாவற்றையும் காசாக்கிவிடும் செய்நேர்த்தி.
உங்கள் வணிக வளாகத்தில் விற்பனை அமோகமாக நடக்கிறது.
உள்ளூரிலும் நாட்டிலும் கடல் தாண்டியும் உங்கள் வர்த்தக சாம்ராஜ்யத்தை
விரிவுபடுத்திய வண்ணமே
அங்கங்கே சில பெட்டிக்கடைகளில் வெறும் அன்பால் கவிதைகளை
அடுக்கிவைத்து அழகுபார்த்து இலவசமாய் வினியோகித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து
அத்தனை இளப்பமாகச் சிரிக்கிறீர்கள்.
வாயைக் கழுவ மறந்துவிட்டீர்களா என்ன?
உள்ளிருக்கும் சொத்தைப் பற்களின் அழுகிய வாடையில்
குமட்டிக்கொண்டு வரவில்லை?

[4]
“நெருப்பு, நெருப்பு” என்று பொய்யாய்க் கூவிக் களித்த மெடில்டா சிறுமி.
நீங்களோ விவரம் தெரிந்த பெரியவர்.
நவீன காலத்திற்குத் தோதாய்
கற்பனைக் கைகள் உங்கள் கால்களைக் கட்டிப்போடுவதாய்
கூவிக்கூவியே
உலக வர்த்தகச் சந்தையில் உங்கள் விலையை ஆகாயத்திற்கு உயர்த்தியவாறு.
தம்போக்கில் கவிதையெழுதிக்கொண்டிருந்த அப்பிராணிகளின் சிறகுகளை
அறுத்தெரிந்தபடி
கத்துங்கடல் தாண்டி அதி ஒயிலாய் பறந்துசென்று
அரங்கேற்றிவருகிறீர்கள் உங்களை நீங்களே.
கீறல் விழுந்த ரிகார்டாய் இன்னும் எத்தனை காலம்தான்
கவிதையை பிழைக்கச்செய்துவிட்டதாக உங்களுக்கு நீங்களே
கிரீடம் சூட்டிக் கொண்டாடிக்கொண்டிருக்கப்போகிறீர்கள்?


[5]
வெற்றிகரமாக முடிசூட்டிக்கொண்டு தர்பாரில் வீற்றிருக்கிறீர்கள்.
அரியணையின் இருபுறமிருந்தும் வீசப்படும் வெண்சாமரங்கள்
மென்பட்டாடைகள்
மாடமாளிகைகள்
கூடகோபுரங்கள்
சிவிகைகள்,
சிகையலங்காரம்,
ஒப்பனை
சேடிப்பெண்கள் என
அத்தனை அரச லட்சணங்களோடும்
அதிகாரமும் அகங்காரமுமாய்
வசையம்பை வெறுப்புக்கணையை வீசி சிரசுகளைக் கொய்தபடி
சேகரித்த தலைகளை
கலாபூர்வமாக உங்கள் வரவேற்பறையில் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.
சந்தேகமில்லை, உங்கள் கையிலிருப்பது செங்கோல் தான்.
சக படைப்பாளிகளின் ரத்தக்கறை படிந்தது.


[6]
கழுவேற்ற மேடையெல்லாம்
உங்களால் வாய்போன போக்கில் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின்
உதிரக் கொழகொழப்பு.
வழுவழுத் தரை விரிந்த அரண்மனையில் அறுசுவை உணவைச் சுவைத்து
குச்சுவீட்டில் கொலைப்பட்டினியில் உழல்வதான பாவனைபுரிந்தபடி.
நியாயத்தின் பெயரால், மனிதநேயத்தின் பெயரால்
உங்களுக்கு முன்பு எழுதிய பலரை
சிறையிலடைத்து அடையாளம் அழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
அட, பரிவதிர்வைக் கூடவா உரிமைகொண்டாட முடியும்?
மகாராஜாக்களும் ராணிகளும் ஆணையிட்டால் மும்மாரி பொழிந்துவிடுமா என்ன?
காற்றின் பிள்ளைகள் நாங்கள்.
உங்கள் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்படியாமல்
கவிதையெழுதிக்கொண்டிருக்கிறோம்; இருப்போம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.