நவம்பர் 2013 கவிதைகள் -1

  

  

  

  

நன்றிக்காக…..

- பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) -

 நான்       
நன்றிசொல்ல    
வந்திருக்கிறேன்

எனக்குக்கிடைத்தவை
எல்லாம்
பரிசுகள்
             
கணமும்
எனக்குப் பரிசுதான்

எல்லா கணமும்
என்படிமத்தின் கனத்தை
பரிமாணத்தைக் கூட்டுகின்றன
கூட்டியிருக்கின்றன
         
சில அரசியல்கள்
என்னை
அலிமினியமாய் எண்ணியதுண்டு
           
அரசியல்கள்
என்னிடம்
அலுமினியமானதுண்டு
சுத்த செம்பென்று
சும்மா செப்பவேண்டியதில்லை

என் வெளிகள்
குறைவின்றி நிறைந்திருக்கிறது

என் பயணங்கள்
சீராகவே நிகழ்கின்றன

சிதறிடாமல்
காலத்தைக் கையகப்படுத்துகிறேன்
வெற்றிடமில்லாமல்
விளைவித்துவருகிறேன்

காலமே
எனக்குக்கிடைத்த
பரிசிலும் பரிசு

காலத்தைச்
செப்பேடாக்குவதில்
கரைகிறது கவனம்
கழிகிறது காலம்
  
இப்போதைக்கு
நான்
நன்றிசொல்லவே வந்திருக்கிறேன் 

இன்னும்
நன்றிசொல்ல
வருவேன்       
          
(31.10.2013 அன்று மாலை 3மணிக்குத்தொடங்கி 4.30க்கு    67பேருந்தில் எழுதியது.)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 வெள்ளாடுகள்

-துவாரகன் -

நவம்பர் 2013 கவிதைகள் -1

 

 

 

இந்த ஆடுகளை என்னதான் செய்வதாம்
எப்படித்தான் சாய்த்துச் சென்றாலும்
வழிமாறிவிடுகின்றனவே?

ஆடுகளிலே ஆவலாதிப்படுவன
இந்த வெள்ளாடுகள்தானாம்!

அம்மம்மா சொல்லுவா…
‘சரியான பஞ்சப் பரதேசிகள்’ என்று
கண்டதெல்லாத்திலயும் வாய் வைக்குங்கள்
முருங்கையில ஒரு பாய்ச்சல்
பூவரசில ஒரு தாவல்
பூக்கண்டில ஒரு கடி
மேய்ச்சல் தரவையில சரியா மேயாதுகள்

இந்த ஆவலாதிப்படும் ஆடுகளை
என்னதான் செய்வதாம்?
சத்தம் போடாம
கட்டையில கட்டவேண்டியதுதான்.
10/2013
Posted by துவாரகன் at 07:41 2 கருத்துகள்:
http://vallaivelie.blogspot.com/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


எலும்புக் கூடுகளாய...

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை  -

நவம்பர் 2013 கவிதைகள் -1

 

 

 

வைத்தியசாலைகளில்
நோயாளர்களின் வேதனைகள்  -
தலை விரித்தாடும்

நாடி நரம்புகளை
உறுப்புக்களை  உடைத்தபடி
கண்ணீர் விழிகளினால்
அழுது வடிக்கும் -
மனசு !

நிச்சயம் இல்லாவாழ்வில்
எதிர்காலம் -
உறிஞ்சும் நிலமாய்
மாறிப் போகும் !
வரண்டு போகும் !!

அமைதியும்  நிம்மதியும்
காணாமல் போய்விட்டதினால் ,
வாழ்வே
சோகமானாதால்
தூக்கமுடியாத சுமைகளாய் 
உள்ளத்தின் உணர்வுகள்
பகலை இருளாக்கும்
இருளைப் பகலாக்கும் !

சளித் தொல்லைகள்
இருமல் பாசையால்
ஒப்பாரிவிட்டு அலறும்
தலைவலிகளை
உடம்பு -
விரும்பிச் சுவைக்கும்

கட்டில் படுக்கைகளின் 
பெயர் பட்டியல்களை
மருந்துக் கலவைகள்
ஊசி மாற்றங்கள் 
குத்தி பதம் பார்க்கும் !

நடுங்கி நடனமாடும்
ஜுரப் போர்வைக்குள்
தாதிமார்களின்
குளிசைகள்
வியர்வைதுளிகளை  வடிக்கும்

அதே நேரம்
பிரசவ வேதனையில் துடிக்கும்
தாய்மார்களின்
கண்ணீர் துளிகள்  வெள்ளமாகும்

உடம்பின் சுரப்பிகளை தடுத்து
நிரழிவு வியாதியாக்கி
சீனியையும்
இனிப்பு பண்டங்களையும்
தடுத்து நிறுத்தும் !

அழகான் மனித தோற்றம்
எலும்புக் கூடுகளாய
பரிணாமிக்கும் வரையில் 
ரணங்கள் பதிவாகும் !
உணவுகள் குறைவாகும் !!
நிம்மதிகள் தூரமாகும் !!!
கவலைகள் அதிகமாகும் !!!!
இன்னும் இன்னுமாய் !!!!!
பல பல தொடரும் ..!!!!!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.