அன்னா அக்மதோவாஅ. யேசுராசா1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து,1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக்கொல்லப்பட்டார். 1912 இல், அக்மதோவாவின் முதலாவது கவிதை நூலான ‘மாலைப்பொழுது’ வெளிவந்தது; 1914 இல் ‘மணிகள்’ என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது. 1935 – 40 ஆம் ஆண்டுகளில், - ஸ்டாலினின் ‘களைஎடுப்புக்’ காலகட்டத்தில் – எழுதப்பட்ட ‘இரங்கற்பா’ நெடுங்கவிதை  மிக முக்கியமான படைப்பாகும். ஸ்டாலினின் இலக்கியக்  கொமிஸாரான ‘ஸ்தனோவ்’, “ பாதி கன்னியாஸ்திரி ; பாதி வேசி” என அக்மதோவாவை இழித்துரைத்தார். ‘யுனெஸ்கோ’ நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை ‘அக்மதோவா ஆண்டு’ எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார். 1966 இல் மரணமடைந்தார்.

அன்னா அக்மதோவா கவிதைகள்!
ஆங்கிலம் வழி தமிழில் : அ.யேசுராசா

              
1. பிரிதல்

மாலை,
சரிவான் பாதை  என்முன்னால்.
“என்னை மறவாதே”  என
காதலோடு அவன்,  வேண்டினான்.
இன்று வெறுங்காற்றும்,
இடையனின் அழு  குரலும்மட்டும்.

தூய ஊற்றினருகில்,
‘செடார்’ மரங்கள்  அலைப்புறு  கின்றன.

1914
-அலை சித்திரை – வைகாசி 1978

 2. மாலையில்....

தோட்டத்தின் இசையில்
வெளிப்படுத்த முடியாத்  துயரம்.
தட்டின்மேல் ஐஸ்கட்டியில்
‘மட்டிச்சதை’யின்  கூர்மையான கடல்  மணம்,
புதுமையுடன் மணக்கிறது.

‘நான் உண்மையான  நண்பன்’  என
அவன் எனக்குச்  சொன்னான்;
எனது உடைகளையும்  தொட்டான்.
அவனது கரங்களில்
எந்த, உணர்ச்சியுமில்லை.

அது, பூனையையோ  ஒரு  பறவையையோ
தொடுவதனைப் போல....
செம்மையாய் அமைந்த  குதிரையின்முதுகில்,
சவாரிசெய்வோனைப்  பார்ப்பதனைப் போல....
மெல்லிய பொன்னிற  இமையின்  கீழே,
அவனது
கண்களில்மட்டும்  ஒளி.

பரவும் புகையின்மேல்
வயலினின் துயர  இசை,  எழும்புகிறது:
கடவுளுக்கு நன்றிசொல்;
முதற் தடவையாக
உன்,
காதலுடன் நீ  தனியாக.

-   1913 -அலை
மார்கழி 1988

3. காட்டில்....

நான்குவைரங்கள் – நான்கு  கண்கள்
இரண்டு ஆந்தையினுடையது,  மற்றவைஎனது.
எனது காதலன்
இறந்த,
கதையின்முடிவு கொடூர  மானது.

ஈரலிப்பான, அடர்ந்த  புற்றரையில்
நான் படுத்திருந்தேன்;
அர்த்தமற்றெனது  சொற்கள் ஒலித்தன.
தானே பெரியஆள்போல்  பார்த்தபடி
அவதானமாய்,
ஆந்தைஅவற்றைக் கேட்டது.

ஃவேர்மரக்கூட்டம்  எமைச்சூழ்ந் திருந்தது,
கறுப்புச்சதுரமாய்  வானம் எமக்குமேலே;
உனக்குத்தெரியும்  உனக்குத்தெரியும்
அவர்கள்  அவரைக் கொன்றார்கள் –
எனதுஅண்ணன்,  அவரைக் கொன்றான்.

தனித்ததோர்  சண்டையிலல்ல;
யுத்த  களத்திலும், சமரிலுமல்ல.
ஆனால்
வெறிதான  காட்டுப்பாதையில்,
எனதுகாதலன்  என்னிடம் வருகையில்....

அவர்கள்  அவரைக் கொன்றார்கள்;
எனதுஅண்ணன்,  அவரைக் கொன்றான்.

 -1911  -அலை
சித்திரை – வைகாசி 1978

4. வெற்று  இரவு....

மகிழ்ச்சியிலும்  துயரிலுமான என்
குரலுக்கு,
அந்த  இதயம் இனி
பதில்  தராது;
எல்லாம்  முடிந்தது.
நீ  இல்லாமற் போன
அந்த  வெற்று  இரவுக்குள்,
எனது  பாடல்
ஒலித்தபடி  செல்லும்!

-கவிதை
ஐப்பசி – கார்த்திகை 1994


 நன்றி: அ.யேசுராசாவின் முகநூற் பதிவுகள். அ. யேசுராசாஅ. யேசுராசா (1945, குருநகர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார். 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ. யேசுராசா ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அதிகாரி ஆவார். திரைப்படங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அ. யேசுராசா 1979 - 1981 காலப்பகுதியில் யாழ். திரைப்பட வட்டத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். தற்போது யாழ். பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தின் திரைப்படக் காட்சிகளில் பங்கெடுத்து வருகிறார். 1975 இல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 - 1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான கவிதை இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல் தெரிதல் என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.

அலை வெளியீடு மூலம் இதுவரை ஒன்பது நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

சஞ்சிகைகள்
அலை
கவிதை
தெரிதல்

இவரது நூல்கள்
அறியப்படாதவர்கள் நினைவாக
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்
தூவானம்
பனிமழை

நன்றி: விக்கிபீடியா