ஜனவரி 2013 கவிதைகள் - 1

 வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) கவிதைகள்!

 1. சுழற்சி வாழ்வு.
 
காதலில் தொடங்கிய கருவின் பயணம்
காசினியில் தவழும் குழந்தை உருவம்.
தூரிகை திருத்தம் அழகோவியமாய்
காரிகை எழுதும் அழகுக் கவிதையாய்
நாரிகை வயிற்றுச் சிற்பக் குழந்தை
பேரிகை மனதில் கொட்ட உலாவி
யாரிதுவென நிமிரும் வாலிபப் பருவம்
சூரியகாந்தமாய்ப் பலரைக் கவரும்.

நிலையூன்றும் வாலிப மனம் சிகரம்.
தலைகீழாக நிற்கும், சரித்திரம் மாற்றும்.
மலையான செயலும் கடுகாய்ப் பகரும்.
நிலையாக சாதனை நிகழ்த்தும் பருவம்.
வேலை, வேதனம், வேக வாழ்வுச் சதுக்கம்
விலையில்லாப் படிப்பினை கலையாகச் செதுக்கும்.
கலை பொங்கும் காதல் துணையின் சந்திப்பு.
வலைப் பின்னலாகச் சம்சாரம் இணைப்பு.

காலை மாலையென காலம் நேரமின்றிக்
காதல் பூவன இல்லறப் பூங்காவில்
முப்பாலும் அருந்தி முழுமையாய் மூழ்கி
அப்பாலும் செல்லும் சுழற்சி வாழ்வு.
இல்லறத் தொழிற்சாலை, இனிய குழந்தைகள்
நல்லறம் நடமிடும் நவரச நந்தவனம்.
பல்வினை பரிமாறும் பரிசோதனைப் பவனம்.
நல்வினைகள் நலங்கிடும் நம்பிக்கை மன்றம்.

 
2. நம்பிக்கைத் துரோகம்.
 
நயமாக்கி வஞ்சித்தல், கயமையாய் நடத்தல்
நயவஞ்சகப் பாரபட்சமும் நம்பிக்கைத் துரோகமே.
பேச்சுத் தேனாகும், பேதலித்த செயலாகும்
பூதலத்துப் பகுத்தறிவாளரின் பாதகம் இதுவாகும்.
நயமாய் உயருவோனை ஏற்காத ஆற்றாமை
நஞ்செனும் பொறாமையும் கூட்டுச் சேர்த்து
நம்பிக்கைத் துரோகக் கொடி கட்டும்.
நானிலத்தில் இது ஒன்றும் பிரம்மரகசியமல்ல.

பந்தம் பிடிப்போனை பாமாலை பாடுவோனை
பக்குவமாய் பார்க்கிறது தலைமையிடம்.
பக்கசார்பின்றி, கர்ப்பூர தீபம் ஏற்றுவோரை
கோவில் மணி அடிப்போரை, சாம்பிராணி
தூபம் இடுவோரை மட்டும் கடவுள்
உயரத்தில் ஏற்றுவதில்லை நல்ல
கடப்பாடு செய்வோரையும் கடைக்கண்ணோக்குகிறார்.
கடவுளிடம் மனிதனின் நம்பிக்கைத் துரோகமில்லை.

நாட்டு மக்களைப் பாதுகாக்கும் கடமை
நழுவி, நயவஞ்சகமாய் கொலை செய்தலும்
நரித்தன அரசின் நம்பிக்கைத் துரோகமே.
நரி தட்டிலே கொக்கிற்கு விருந்தும்
கொக்கு நரிக்குக் கழுத்தொடுங்கிய
பாத்திரத்தில் விருந்திட்ட கதை போன்றதே
ஒருவரை ஒருவர் ஏமாற்றும் வித்தையாம்.
இன்றைய உலக நம்பிக்கைத் துரோகம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


அங்குசம்காணா யானை

பிச்சினிக்காடு இளங்கோ

ஜனவரி 2013 கவிதைகள் - 1

நிலைத்தது
எது என்று தெரியாவர்கள்
நினைத்தபடி
ஆடி முடித்துவிடுகிறார்கள்

தெரியாவர்கள்
தெரிந்துகொள்ள விழைந்தால்
திருந்திவிடுவார்கள்

விழையாதவர்கள்
இறுதிவரை
விளங்காதவர்களாகிவிடுகிறார்கள்

விளங்காதவர்கள்
விலங்காகும் வாய்ப்புமுண்டு

மனிதர்களோ
அடிப்படையில் சமூக விலங்குகள்

அவர்கள்
வெண்மையின் உச்சத்தை
வெளிச்சப்படுத்துகிறார்கள்

பாகன் பழக்காத
யானையாகிவிடுகிறார்கள்

அவர்களால்தான்
தீவினைகளும்
தீராக்கொடுமைகளும்…

ஈடற்ற இழப்புகளை
எண்ணும்போதெல்லாம்
விலங்குகளைத்தான்
எண்ணவேண்டியிருக்கிறது

எண்ணம் விரிவடையாதவர்களை
எண்ணும்போதெல்லாம்
மனதுக்குள்
என்னமோபோல் இருக்கிறது

என்ன செய்ய..?
எல்லாம் எண்ணம்தான்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 வே.ம.அருச்சுணன் ( மலேசியா ) கவிதைகள்!

1. உலகை ஏமாற்றிய வித்தகன்        

ஜனவரி 2013 கவிதைகள் - 1

உலகில்,
அழிவை  தடுக்கத்தான் ஐ.நா.சபை
அமைதியை  ஏற்படுத்தத்தான் ஐ.நா.சபை
வல்லரசுகளுக்குச் சோரம் போகாமல்
நல்லரசு  தந்து  உலக  மக்கள்
அமைதிப் பூங்காவில் வலம்  வரவே
அரை நூற்றாண்டுகளுக்கு  முன்பு
தொலைநோக்காய்
மிகுந்த  எதிர்பார்ப்புடன்  உலகவிரும்பிகளின்
கண்ட உலக  அமைப்பை
உலகத்தார்  ஆராதனை  செய்தனர்
ஐ.நா.  இருக்கும் வரை
அநீதிக்கு  இடமில்லை
அமைதிக்கு  உத்திரவாதம்  உண்டு
அநீதிக்குப்  பங்கம்  இல்லை என்று
இறுமார்ந்தவேளை
ஒருவேளை  இல்லை  பலவேளைகளில்
அமைப்பின்  முதுகுத்தண்டு  உடைந்து
நிலைகுழைந்து போனதே....!
 
ஆள்பார்ந்து உதவும் உலக  அமைப்புகளுக்குகிடையில்
ஆலமரமாய்  ஓங்கி  வளர்ந்த  ஐ.நா.சபையும்
தடம்  புரண்டுவிட்டதே
என்ன  கொடுமை.....?
நம்பிக்கை  வைப்பது  தவறா.....?
 
ஈழமக்களைக்  காப்பாற்ற முடியாமல்  போனது  ஏன்?
கைகட்டி.....வாய்ப்பொத்தி  ஊமையாகிப்போனது   ஏன்?
ஐ.நா.சபை  இயங்காமல்  போனது  ஏன்? 
மனசாட்சியைக் கொன்று  மன்னிப்புக்  கேட்பது  நீதியா.....?
சந்தர்பச் சபையாக  மாறியதை   ஏற்கலாமா....?
 
நாடு, இனம்,  மொழி,  சமயம் 
பார்க்காதப் பொதுச்  சபையா
தமிழன்  என்ற  பேதத்தைப்  பெரிது  படுத்தியது....?
நம்பவைத்துக் கழுத்தறுத்த
இந்தச்  சபை  இனியும்  நமக்குத்  தேவையா....?
ஒன்றாய்  இணைந்து உரக்கக்  கேட்போம்
உலகநாயகன்  பதில்  கூறட்டும்......!

2. என்ன அவசரம் சிவம்.....? 
 
புதிதாய் மலர்ந்த மலரே
உன் மணம் தென்றலில் கலக்குமுன்னே
நீ மறைந்து போனது ஏனோ?
என்ன அவசரம் சிவா?
 
இறைவன் உனக்கு அழகைத் தந்தான்
மறக்காமல் ஆற்றலையும் தந்தான்
சுமைகள் அதிகம் என்றே
மின்னலாய்ப் பறந்து போனாயோ?
 
இந்த வயதில் செல்வதற்குத்தான்
அளவுடன் பேசினாயோ?
அன்புடன் பழகினாயோ?
புன்முறுவலுடன் அமைதியுடன்  இருந்தாயோ?
நிறைகுடம் தளும்பாது என்றே
எண்ணிக்கொண்டேன்....!
 
ஏமாந்து விட்டேன் சிவம்
உன் எழுத்தால் உலகம் நிமிரும் என்றே
என்னுள் பெரிய கணக்கு
ஆனால்,
உன் மறைவு மலேசிய இலக்கியத்தின் சிதைவு...! 
இலக்கிய உலகம் பலரை இழந்திருக்கிறது
ஆனால், இன்றைய புத்தாக்க உலகில்
உன்னை இழப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை
பேரிழப்பு
உன்னை இழந்தது பேரிழப்புதான்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


சமூக முன்னேற்றம் தொடர்பாக சற்றுமுன் நான் எழுதிய சில துளிப்பாக்கள்

முனைவென்றி நா. சுரேஷ்குமார்,

ஜனவரி 2013 கவிதைகள் - 1

உங்கள் பணம் உங்களுக்கே
வேதம் ஓதும்
சாத்தான்கள்

திருடர்கள் ஜாக்கிரதை
நெருங்கி விட்டது
தேர்தல்

சரியாய்த்தான் காட்டுகிறது
மைதடவிய ஆள்காட்டிவிரல்
புதிய திருடனை

விலையில்லா இலவசங்கள்
கோடிகளில் கல்வி
அரசியல் வியாபாரிகள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.