தோழர் சேனன்“வானமும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (மத்தேயு 24:35)

வார்த்தைகளின் வல்லமைகளை பறை சாற்றும் பரிசுத்த வேதாகமத்தின் வாசகங்கள் அவைகள். மனிதனால் மட்டுமே பேச முடிகின்றது. சிந்திக்க முடிகின்றது. வார்த்தைகளை உருவாக்கி இன்னொரு மனிதனுடன் உரையாட முடிகின்றது. இவ் உரையாடல்களின் மூலம் அவன் தனது எண்ணங்களை, உணர்வுகளை தேவைகளை வெளிப்படுத்திக் கொள்கிறான். இன்று மனிதனது தேவைகள் அதிகரித்துள்ளன. பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. இன்றைய 21ம் நூற்றண்டில் தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் அசுர வளச்சி பெற்றுள்ள நிலையில் அதற்கான உரையாடல் வெளிகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. எமது புலம்பெயர் வாழ்விலும் நாம் இன்று அதிகம் உரையாட வேண்டிய தேவை எமக்குண்டு. ஒரு வலி மிகுந்த சமூகமாக, 3௦ ஆண்டு கால யுத்தம் ஏற்படுத்திய கொடுந்துயரமான வாழ்வும் அது ஏற்படுத்திய வலிகளும் ரணங்களும் இன்னும் மாற்றம் பெறாத நிலையில், எமது துயரங்கள், தோல்விகள், தவறுகள், குறித்தும் இனி போக வேண்டிய பாதைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தெல்லாம் நாம் அதிகம் பேச வேண்டிய மனிதர்களாக மாற்றப்பட்டுள்ளோம். உரையாடல்கள் மூலம் நாம் எத்தகைய தீர்வுகளையோ முடிவுகளையோ எட்ட முடியாது என்பது உண்மையாயினும் அதனை செயற்பாடுகளுக்கான ஒரு முன்னூட்டமாக அதனை நாம் மாற்ற முடியும் என்பது எமது அசையாத நம்பிக்கை.

இவ்வகையில் இன்று நாம் பேசுகின்றோம், உரையாடுகின்றோம், பல் வேறு விதமான உரையாடல் வெளிகளை உருவாக்கி வருகின்றோம். பிரதிகள் மூலமாக, பாடல்கள் மூலமாக, செய்திகள் மூலமாக, கலந்துரையாடல்கள், நேர்காணல்கள் மூலமாக, கவிதைகளாக, புனைவுகளாக, வேறும் பல்வேறு வழிகளிலும். அத்தகைய உரையாடல்களில் காத்திரமானவைகளை, அது காற்றில் கலந்து கரைந்து இல்லாமல் போகு முன்பே, பாதுகாப்பாக பதிவுகள் செய்வதே இத்தொடரின் நோக்கமாகும்.

கொலை மறைக்கும் அரசியல் – இது பகை மறப்புக் காலம் அல்ல. •தோழர் சேனனுடனான உரையாடல் குறித்து. 

கடந்த வார ஐ.பி.சி. தமிழின் அக்னிபார்வை நிகழ்ச்சியில் தோழர் சேனன் அவர்கள் கலந்து கொண்டார். இங்கு புகலிடத்தில் சமூக, அரசியல், கலாச்சார தளத்தில் இயங்குபவர்களில் சேனனை அறியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. தோழர் சேனன் அவர்கள் ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத்தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக் கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று உழைப்பவர். Tamil Solidarity அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர். ‘கொலை மறக்கும் அரசியல்’ லண்டன்காரர்’ என்ற நூல்களின் ஆசிரியர். விமர்சகர். ஊடகவியலாளர்.

அன்றைய நிகழ்ச்சியில் தோழர் நடேசனுடனான கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதில் அளித்த பாங்கானது மிகவும் அசத்தலாக இருந்தது. எந்த வித தயக்கமுமின்றி, தடுமாற்றங்களுமின்றி மிகவும் இயல்பாக அவர் அளித்த பதில்கள் அவரது நீண்ட முதிர்ச்சி பெற்ற அரசியல் அனுபவங்களையே பறை சாற்றி நின்றன. முக்கியமாக அவரது Body language இந்நிகழ்வில் சிறப்பாக அமைந்திருந்து அவரை ஒரு பயமறியாத போராளியாக இனங்காட்டியது. 

அந்நிகழ்வில் அதிகளவில் அவர் கடந்த காலத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராக இயங்கியது பற்றியும் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின்பான அவரது அரசியல் செயற்பாடு பற்றியுமே அதிகம் விவாதிக்கப் பட்டது. அதன்போது அவர் போராட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளின் மீது தான் பல்வேறு விமர்சனங்களை வைத்ததாகவும் ஆனால் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் இங்கு இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்த, அதன் பின்பும் ‘பகை மறப்பு’ அரசியல் செய்த, பிழைப்பு வாத தமிழ் சக்திகளுக்கு எதிராக தான் தனியொரு மனிதனாகவும் அமைப்பு ரீதியாகவும் இருந்து போராடிய வரலாறுகளை சொல்லி, இதற்காகவே தான் ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்ற நூலை எழுதியதாகவும் சொன்ன அவர், அந்நூலில் தான் கேட்ட கேள்விகளுக்கு இன்று பலவருடங்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான பதில்கள் இன்னும் சம்பந்தப்பட்டவர்களால் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். இன்றும் தொடர்ச்சியாக தமது அமைப்பானது மீள் குடியேற்றம் தொடர்பாகவும், யுத்த கைதிகள் விடுதலை குறித்தும் குரல் கொடுத்து வருவதாகவும் கூறிய அவர், இங்குள்ள இளைய தலைமுறையினர் குறித்து யாரும் அக்கறைப் படுவதில்லை என்றும் தமது அமைப்பினரே அவர்களையும் இணைத்து செயற்படுவதாகவும் கூறினார். தாயகத்தில் கடந்த காலத்தில் இடதுசாரிகள் புரிந்த தவறுகள் குறித்த கேள்வியின்போது அவர்கள் அனைவரும் ஸ்டாலினிஸ்டுகள் என்ற ஒரு ஒற்றைச் சொல்லின் ஊடாக அளித்த பதில் கொஞ்சம் நெருடலாக இருந்தது. இந்த திறந்த உரையாடலில் அவரது ‘லண்டன்காரர்’ நாவல் குறித்தும் அவரது இலக்கியச் செயற்பாடுகள் குறித்தும் ஒன்றும் பேசப்படாதது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஆயினும் காத்திரமான உரையாடல். ஆரோக்கியமானதும் அறிவார்ந்ததுமான பதில்கள். 

Well done சேனன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.