'அம்மா'வின் பறிபோன ஆட்சியும் , பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தீர்ப்பும்!

'அம்மா'வின் ஆட்சி முடிவுக்கு வந்ததையிட்டு எதிர் அரசியல்வாதிகள் துள்ளிக்குதிக்கின்றார்கள். அம்மா முதல்வரோ இல்லையோ அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அவர்தான். அவர் சிறையிலிருந்தாலும், வெளியிலிருந்தாலும் ஆட்சிக்கயிறு அவர் கையில்தான். இதனைப் புரிந்துகொள்ளாமல் தமிழக அரசியலின் ஊழற் பெருச்சாளிகளெல்லாம் துள்ளிக்குதிக்கின்றன. விரைவில் இந்தியாவின் பல அரசியல்வாதிகளுக்கெதிரான ஊழல் வழக்குகள் தீவிரப்படுத்தப்படலாம். அம்மாவுக்கே இந்த நிலை என்றால் அவர்களது நிலை.. இப்பொழுதே அவர்களுக்கு வயிற்றைக்கலக்கத் தொடங்கியிருக்கும்.

தமிழக முதல்வருக்கெதிரான இந்தத்தீர்ப்புக் காரணமாக நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாகச் சிலர் மகிழ்ச்சியடைந்திருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஊழல் புரிந்தவர்களெல்லாரும் வெளியிலிருக்கின்றார்கள். அவர்களும் உள்ளே போகும் நிலை வந்தாலே பாரதத்தில் நீதி நிலை நாட்டப்பட்டு விட்டதாகக் கருத முடியும். இந்திரா காந்தியின் படுகொலையின்போது, குஜராத் படுகொலையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவற்றுக்குக் காரணமானவர்கள் இன்னும்  வெளியிலிருக்கின்றார்கள். அவர்கள் யாவரும் உள்ளே செல்லும் நிலை வந்தால்மட்டுமே இந்தியாவில் நீதி இன்னும் உயிருடனிருப்பதாகக் கருத முடியும். அதுவரையில் இத்தீர்ப்பினை முழுமையாக நீதி செத்துவிடவில்லை என்பதன் அடையாளமாகக் கொள்ள  முடியாது.

தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட இந்நிலையால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பவர்கள் அவருக்கு வாக்களித்த தமிழகத்தின் பொதுமக்கள்தாம். ஜெயலலிதாவின் செல்வாக்கு உச்சத்திலிருக்கும் சமயத்தில் இந்தத்தீர்ப்பு வந்திருப்பதால், அவரைத் தெய்வமாக நினைக்கும், அவருக்காக அவரது கட்சிக்கு வாக்களித்தவர்கள் (பெரும்பாலானவர்கள் பாமர மக்கள்)  இந்தத்தீர்ப்பினை அம்மாவுக்கெதிரான அரசியல் பழிவாங்கலாகவே கருதுவார்கள். இந்தத்தீர்ப்பும் ஒரு விதத்தில் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்தான். தமிழகத்தில் செல்வாக்கினை இழந்த தி.மு.க.வும் ஏனைய கட்சிகளும் தம் செல்வாக்கினைக் கட்டியெழுப்ப முனையும் அதே சமயம், ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்யும். ஆனால் அவர்களின் திட்டங்கள் வெற்றியடையுமா என்பது கேள்விக்குறிதான். ஜெயலலிதா அரசியல்ரீதியில் செல்வாக்கினை இழந்திருக்கும் சந்தர்ப்பத்தில் இது போன்றதொரு தீர்ப்பு வந்திருந்தால் அது ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்திருக்கும். ஆனால் அவர் தமிழக மக்களிடத்தில் செல்வாக்குடனிருக்கும் சமயத்தில் இத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால், இத்தீர்ப்பானது அவர் மீது அனுதாபத்தினை ஏற்படுத்தப்போகின்றது. இதன் விளைவாக அ.தி.மு.கவின் வலிமை தமிழகத்தில் இன்னும் அதிகமாக வளரப்போகின்றது.

அதே சமயம் தற்சமயம் தமிழகத்தில் அ.தி.மு.கவினரின் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து, அசம்பாவிதங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி மத்திய அரசு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை அமுல்செய்தாலும் செய்யலாம். அதுவும் அ.தி.மு.க.வின் செல்வாக்கினை அதிகரிக்கவே வழி சமைக்கும்.

மேலும் இந்தத்தீர்ப்பானது பெங்களூரில் அறிவிக்கப்பட்டிருப்பதும், வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றிருப்பதும் தமிழக மக்களிடத்தில் கர்னாடக மாநிலத்தால் தமிழகத்துக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதப்படும் சாத்தியமுமுண்டு. இதற்குக் காரணங்களாக காவிரி நீர்ப்பிரச்சினை, தமிழர்களுக்கெதிரான கன்னடர்களின் தாக்குதல்கள், முன்பு படப்பிடிப்பொன்றில் ஜெயலலிதாவுக்கெதிராகத் தாக்குதல் நடாத்த முயன்ற கன்னடத்து இனவாதிகளின் செயற்பாடுகள் போன்றவையிருக்கும்.

குற்றமிழைத்தவர்கள் யாராகவிருந்தாலும் சட்டத்தின்முன் சமமாகத் தண்டிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் பாரதத்தில் நீதி செத்து விடவில்லை என்று கருத முடியும். அவ்விதம் தண்டிக்கப்படும் நிலை வந்தால் பாரதத்தின் பிரதமர் மோடி ஓடிப்போகும் நிலை முதலில் வரும். ஆயிரக்கணக்கான அப்பாவிப்பொதுமக்களின் இரத்தக்கறைகள் படிந்த கரங்கள் அவருடையவை. கலைஞரின் குடும்பம் என்று வரிசையாக அரசியல்வாதிகள் காத்துநிற்கும் நிலை தோன்றும். போபர்ஸ் ஊழல் வழக்கில் சோனியா காந்தியின் குடும்பம் உள்ளே செல்ல வேண்டிவரலாம்.