எழுத்தாளர் சீர்காழி தாஜ்இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்களின் மறைவுச் செய்திதான் அது. எழுத்தாளர் அனார் தனது முகநூற் பதிவில் தாஜ் அவர்களின் மறைவுச்செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். செய்தியினை உள்வாங்குவதற்கே சிறிது கஷ்ட்டமாகவிருந்தது. நேற்றும் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய முகநூற் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்த முகநூற் பதிவொன்றுக்குத் தன் கருத்துகளை 'அன்பு  கிரி' என்று ஆரம்பித்துப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களா மறைந்து விட்டார். அவரது அங்கத்தம் தவழும் எழுத்து நடைக்கு நான் எப்பொழுதுமே அடிமை. நண்பர் எழுத்தாளர் தாஜ் அவர்கள் மறைந்த செய்தி ஏற்படுத்திய துயரத்தை  அளவிட வார்த்தைகளேதுமில்லை.

சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

'பதிவுகள்' இதழில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் நண்பர் தாஜிம் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியினையே தந்தது. அச்செய்தினைக் கனவில் கூட எதிர்பார்த்திராத நிலையில் அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியினைத்தந்தது. கூடவே அளவிட முடியாத துயரையும் தந்தது.

நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியின அண்மையில்தான் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி.

சீர்காழி தாஜ் கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். http://tamilpukkal.blogspot.ca/

எழுத்தாளர் தாஜ் அவர்களின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் (முகநூல் நண்பர்களுட்பட) அனைவருக்கும் எனது மற்றும் 'பதிவுக'ளின் ஆழ்ந்த இரங்கல்கள். கூடவே 'பதிவு'களில் , முகநூலில் வெளியான அவர் பற்றிய குறிப்புகளையும் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.


முகநூற் குறிப்புகள்: சீர்காழி தாஜின் முகநூற் பதிவுகள் பற்றியதொரு கலந்துரையாடல்

எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனது முகநூல் நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். அவர் அவ்வப்போது முகநூலில் இடும் பதிவுகள், சிறு குறிப்புகளாகவிருக்கட்டும் அல்லது குறுங்கவிதைகளாகவிருக்கட்டும், கலந்துரையாடலைத் தூண்டுபவை. அவரது எழுத்தில் வெளிப்படும் பாசாங்கற்ற உண்மையின் தெளிவும், தனக்குச் சரியென்று பட்டதை மனம் நோகாதவாறு துணிச்சலுடன் கூறும் பண்பும் , மற்றும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் அங்கதமும் என்னை மிகவும் கவர்ந்தவை. அண்மையில் முகநூலில் அவர் சில குறுங்கவிதைகளைப் பதிந்திருந்தார். அவை பற்றிய முகநூலில் பதிவு செய்த எனது கருத்துகளையும் (கவிதை வடிவில்), அவற்றையும் பதிவுகள் வாசகர்களூடன் பகிர்ந்துகொள்வதன்பொருட்டு இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

தாஜ்:
பொழுது போன நேரம்
எத்தனை விளக்குகளை
ஒளிர விட்டென்ன?
இரவுதான் நட்சத்திர நாயகன்.

கிரிதரன்:

இத்தனை சுடர்கள் இரவினில் சுடர்ந்தும்
இரவின் ஆதிக்க மிருப்பது எதனால்?
இரவு கருமையில் இருப்ப தெதனால்?
இதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்
உண்டு. விரியும் வெளியில் தெரியும்
சுடர்கள் இருக்கும் காலம் ஒளியின்
வேகத்தால் ஒன்றென இருப்ப தில்லை.
இரவு சுடரின் நாயகன் இருப்பது
இதனால் தானே. இதனால் தானே! :-)

தாஜ்:
//இரவு கருமையில் இருப்ப தெதனால்?
இதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்
உண்டு. விரியும் வெளியில் தெரியும்
சுடர்கள் இருக்கும் காலம் ஒளியின்
வேகத்தால் ஒன்றென இருப்ப தில்லை.// இதனூடான அறிவியலை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்கள் கிரி. பிளீஸ்.

கிரிதரன்:
வெளி விரிந்துகொண்டிருக்கிறது. சுடர்கள் வெவ்வேறு ஒளியாண்டுத் தொலைவுகளில் இருக்கின்றன. எமக்கு ஒரே நேரத்தில் அவை சுடர்வதாகத் தெரிந்தாலும் வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து அவை சுடர்ந்துகொண்டிருக்கின்றன. விரியும் வெளியினூடு எம்மை வந்தடையும் அவற்றின் ஒளியும் நீர்த்துப் போய்விடுகின்றது. இது போன்ற காரணங்களினாலே இவ்வளவு சுடர்களிருந்தும் இரவு வான் ஒளிராமல் இருண்டு கிடக்கின்றது.

நண்பர் தாஜின் கவிதையின் வரிகளான //பொழுது போன நேரம்
எத்தனை விளக்குகளை
ஒளிர விட்டென்ன?
இரவுதான் நட்சத்திர நாயகன்// என்பதை நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில் என் கருத்தினை முன் வைத்தேன். பொழுது போன நேரம் எத்தனை விளக்குகளை ஒளிரவிட்டென்ன என்பதிலுள்ள விளக்குகளை நான் நட்சத்திரங்களாகக் கருதினேன். அவ்விதம் அவை பல ஒளிர்ந்தாலும் இரவுதான் நட்சத்திர நாயகன் என்பதை நான் இருண்டிருக்கும் இரவுதான் அந்த ஒளிரும் நட்சத்திரங்களின் நாயகனென்று கருதிக்கொண்டேன். ஏனென்றால் இவ்வளவு சுடர்கள் (நட்சத்திரங்கள்) இருந்தும் , ஒளிர்ந்தும் அவற்றால் இரவின் கருமையினை நீக்க முடியவில்லை. இரவின் ஆதிக்கத்தை நீக்க முடியவில்லை. அதனால் இரவுதான் நட்சத்திரங்களின் நாயகன் என்று புரிந்துகொண்டதன் அடிப்படையில்

//இத்தனை சுடர்கள் இரவினில் சுடர்ந்தும்
இரவின் ஆதிக்க மிருப்பது எதனால்?
இரவு கருமையில் இருப்ப தெதனால்?
இதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்
உண்டு. விரியும் வெளியில் தெரியும் //

என்று என் கருத்தினை முன் வைத்தேன். :-)

ஒருவேளை கவிஞர் இவ்விதம் எண்ணாமல் இன்னுமொரு அர்த்தத்தில் கூறியிருக்கலாம். அவ்விதமிருந்தாலும் நான் இவ்விதம் விளங்கிக்கொண்டதற்கேற்ப கவிஞரின் சொற்கள் விழுந்திருக்கின்றன. நல்லதொரு கவிதை. வாழ்த்துகள்.

தாஜ்:
அன்பு கிரி... உங்களது விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் நட்சத்திரங்களின் ஒளியை குறிப்பிட்டு சொல்வதறியாமல் நான்தான் கேள்வி எழுப்பி விட்டேன். நீங்கள் சந்தேகப்பட்டிருப்பது மாதிரி //இன்னுமொரு அர்த்தத்தில்...// உருக்கொண்ட வரிகள்தான் அவை. என்னையும்/ காலத்தையும்/ தேய்மானத்தையும்/ பளிச்சிடும் அவசர அவசர செயல்பாடுகளையும் முன்வைத்து எழுதப்பட்ட வரிகளது. நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டதும் சரி. வெறும் நான்கு வரிகள்தானே..!! சாதாரணம் காட்டிவிடுங்கள்.

கிரிதரன்:
நண்பர் தாஜுக்கு, ஒரு கவிதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி புரியலாம். சில வேளைகளில் அதை எழுதியவரின் அர்த்தத்தையும் கடந்து இங்கு நடந்தமாதிரி நடக்கலாம். இதனால்தான் ஒரு படைப்புக்குப் பல உரைகள் சாத்தியமாகின்றன. இந்த விடயத்தில் பிரெஞ்சுத் திறனாய்வாளரான 'ரோலண்ட் பார்த்'தின் புகழ்பெற்ற கட்டுரையான 'ஆசிரியரின் மரணம்' என்பதை நினைவில் கொள்வது நல்லது. அந்தக் கட்டுரையில் ஒரு படைப்பொன்றினை அதனைப் படைத்த ஆசிரியரின் நோக்கம், வாழ்க்கைப் பின்னணியில் ஆராய்வதைக் கடுமையாக எதிர்த்திருப்பார். அந்தப் படைப்பினை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு அதனைப் படைத்தவர் முக்கியமில்லாதவர். அந்தப் படைப்பின் மூலமல்ல முக்கியம். அது யாரைச் சென்றடைகின்றதோ அதுவே முக்கியம். படைத்தவரின் பின்னணியில் ஒரு படைப்பினை அர்த்தப்படுத்திக்கொள்வது அந்தப் படைப்பின் மீதான வாசிப்பின் மீது தடைகளை ஏற்படுத்தி விடுகின்றதென்பதவர் கருத்து. தாஜின் இந்தக் கவிதை வரிகளை நான் அர்த்தப்படுத்திக் கொண்டது இதனைப் படைத்த தாஜின் அர்த்தத்தினின்றும் வேறானபோதும் என்னைப் பொறுத்தவரையில் என் அர்த்தத்திற்குச் சரியாகவே அந்த நறுக்குக் கவிதை வரிகள் அமைந்திருக்கின்றன. இதனை இன்னுமொருவர் இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வார். இத்தகையதொரு சூழலில் //சாதாரணம் காட்டிவிடுங்கள்// என்று கூறும் உரிமையினை நீங்கள் அந்த வரிகளை முகநூலில் பதிவு செய்ததுடன் இழந்து விட்டீர்கள். இப்பொழுது அந்த வரிகள் முகநூல் வாசகர்களின் பல்வேறுபட்ட வாசிப்பினை வேண்டி நிற்கின்றன. :-)

தாஜ்:
புண்ணிய பூமியில்
எத்தனை ஜனத் திரள்!
எங்குத் தேடினாலும்
மனிதனைக் காணோம்.

கிரிதரன்:
பாலியல் வன்முறை ஜாதிக் கலவரம்
நாளும் பொழுதும் நடக்கும் பூமியைப்
புண்ணிய பூமி எனல் தகுமோ?
நண்பரே! வெந்த புண்ணில் வேலினைப்
பாய்ச்சிடும் வார்த்தைகள். மானுடர் நெஞ்சினை
வருத்திடும் மண்ணிது. இனிமேல் கூறுவோம்
புண்செயும் பூமி என்று.
மானுடர் உள்ளம் பண்படும் வரையில். :-)

தாஜ்:
புண்செய்யும் பூமியென்பது அர்த்தப்படவே செய்கிறது. கலாச்சாரப் பண்பாட்டின் கூறுகள் நம்மீது ஏற்றிவைத்திருப்பதெல்லாம் 'புண்ணிய பூமி' இதுவென்று. முதல் பூஷ்வா சுரண்ட தொடங்கிய கணத்தில் அவன் படிப்பித்த ஆதிப் பாடமாக இருக்கும் இந்தப் 'புண்ணிய பூமி!' கிரி சரியாதான் பேசுகிறேனா?

தாஜ்:
யாரும் இல்லாத ஊருக்கு
நான் ஏன்..
இத்தனை அவசியமாக
விரைந்து கொண்டிருக்கிறேன்?

கிரிதரன்:

இல்லாத ஊருக்கு விரைவதன் அவசியம்
ஏனென்று கேட்கும் நண்பரே. காரணம்
யாரு மற்ற ஊரில் நிலவிடும்
தனிமை நாடிய விருப்பினால் போலும். :-)

தாஜ்:
//தனிமை நாடிய விருப்பினால் // மனிதன் இல்லாத இடம்தான் ஏது கிரி? தனிமையில் கூட அவனது நல்லதும் கெட்டதுமான சிந்தைதானே நம்மை ஆள்கிறது. எந்த ஞானியாலும் அதனிடமிருந்து தப்ப முடியுமா என்ன? நான் சுட்டும் விரைவு..., நிஜத்தில் உங்களுக்கு புரியாததுமல்ல.

தாஜ்:
பொழுதெல்லாம்
தேடியலைகிறேன்.
அனுபவம் கூட
கூடிவர மறுக்கிறது!

ஹிம் ரஷீத்:
ஏதோ ஒரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது என்று சொல்கிறார்களே...அதனுடைய வேலையாக இருக்குமோ??

தாஜ்:
//ஏதோ ஒரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது // ஆமாம் இருக்கிறது. இது விரிவான தளத்தில் வியக்க, வியக்க பேச வேண்டிய ஒன்று. இந்த நாலுவரி கவிதை மொழி நான் உணர்ந்த தனிச் சங்கதி. காலத்தில் சாதாரணமாக வாய்க்கக் கூடிய அனுபவம், அலைகிற சிலபோது கூடிவருவதில்லை என்கிற எதிர்மறை வியப்புதான் அந்த நான்கு வரிகள். அவ்வளவுதான். நிறைய எழுதி சிரமம் தந்துவிட்டதாக நினைக்கிறேன். Anyway.. ரஷீதுக்கு நன்றி.

கிரிதரன்
:
பொழுது எல்லாம் தேடி அலைவதும்
அனுபவம் தானே! கூடவே நிழலென
அனுபவம் வருகையில் கூடி உம்முடன்
கூடிவர வில்லை என்பதி லென்ன
நியாய முண்டு. கூறுவீர் நண்பரே! :-)

தாஜ்:
அன்பு கிரி.. அனுபவமும் நாளும் கூடினால்தானே அந்த அனுபவத்திற்கும் ஓர் அழகிருக்க முடியும்? செக்கு மாட்டுத்தனம் என்ன அனுபவத்தைத் தந்துவிட முடியும் சொல்லுங்கள்?


முகநூற் குறிப்புகள் (பதிவுகள் - 04 August 2012)

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்!  இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்கதாஜ் டீன்:
எந்தவொரு மனிதனும்
நான்...
இந்த மதத்தில்தான் பிறப்பேன் என்று
தவமிருந்தோ, வேண்டி விரும்பியோ
பிறந்தவர்களாக
இருக்க முடியாத போது....

ஒவ்வொரு மனிதனுமிங்கே
...தனது மதத்தை குறித்து
புலகாயிதமும் / பெருமையும் /
புகழ்ச்சியும் / இறுமாப்பும் / தீவிரமும்...
கொள்வதென்பது எப்படி?

கிரிதரன்: நண்பர் தாஜின் கேள்வி நியாயமானது. மொழி, இனம், மதம், தேசம், ஆண், பெண்.. என்று பல்வேறு பிரிவினைகளெல்லாம் மனிதரைப் பிரித்து வைப்பதற்குத்தான் உதவும். அனைவரும் பல்வேறு முரண்பாடுகளுடன், வேறுபாடுகளுடன், அம்முரண்பாடுகளை, வேறுபாடுகளைப் பகை முரண்பாடுகளாக்காமல், நட்புரீதியில் பேணுவார்களென்றால் எவ்வளவு நன்றாகவிருக்கும். இந்தக் கிரகத்தில் பெரும்பாலான உயிர்கள் மாமிச பட்சணிகள். ஒன்றையொன்று கொன்று, தின்று வாழும் வகையிலேயே படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதருக்குச் சிந்திக்கும் வல்லமையிருக்கிறது. ஏன் ஒற்றுமையாக, இணக்கமாக வாழ் முடியாமலிருக்கிறது? மனிதருக்கிடையில் நிலவும் பொருளியல்ரீதியிலான வேறுபாடுகளிருக்கும்வரையில் இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லையென்று மார்க்சியம் வலியுறுத்தும். இந்தக் கேள்வி எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமியின் மிகவும் புகழ்பெற்ற கவிதையான 'எதிர்காலச் சித்தன்' கவிதையினை ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறது. அதனைத் தழுவி ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன். நீண்ட கருத்துகளை இங்குப் பதிவு செய்ய முகநூல் விடாத காரணத்தால் அவற்றைத தனியாக முகநூலில் பிரசுரித்திருக்கிறேன்.

தாஜ் டீன்: அன்பு கிரிதரன், அந்தக் கதையையும், அ.ந.கந்தசாமியின் கவிதையினையும் அனுப்பித் தாருங்கள். இது ஒரு முக்கியமான கேள்வி எனக்கு. நண்பர்கள் இக் கேள்வியின் ஆழத்தை அறியவில்லை என்றே தோன்றுகிறது. சரியான கோணத்தில் உணர்ந்திருக்கக் கூடுமெனில் நிறைய நண்பர்கள் முன்வந்து கருத்துகளை வைத்து கலந்து கொண்டிருப்பார்கள். நன்றி.. கிரிதரன்



தாஜ் டீன்: பேய்? பயப்படாமல் உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள், அதாவது.... நீங்களே...  நேரடியாக பேயை பார்த்ததுண்டா? அதான்... என் மனைவியை அல்லது என் கணவனைப் பார்க்கிறேனே... என்கிற மாதிரியான தமாஸெல்லாம் கூடாது. நிஜத்தை சொல்லணும்.

அருமைநாயகம்: NO

அப்துல் மஜீத்: ‎3 தடவை பாத்துருக்கேன். கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் கதையே வேறுமாதிரி ஆயிருக்கும்.

தாஜ் டீன்: பேயை பார்த்திருக்கியான்னா? பேயோட குகையை சொல்றீயாக்கும்? அடப் போய்யா.

அப்துல் மஜீத்: சரி, ஒரு பதிவு போட்றவேண்டியதுதான்....

ரியாஷ் அகமத்: நான் இன்னும் பார்க்கவில்லை....

கிரிதரன்: பேயைப் பற்றிக் கதைப்பதற்கு முன் கலிங்கத்துப் பரணியை ஒருமுறை படித்துப் பாருங்கள். பல்வகையான பேய்களை அங்கு நீங்கள் பார்க்கலாம். பேய்களின் தலைவியாகக் காளி குறிப்பிடப்படுவாள். நிணக்கூழ் குடிக்கும் பேய்கள் பற்றி, பேய்களின் உறுப்புகள் பற்றி, அவற்...றின் உறுப்புக் குறைபாடுகள் பற்றி, கலிங்கத்துப் போர் நிகழ்வதற்கான முன்னறிகுறிகளைப் பேய்கள் தீர்க்கதரிசனமாகக் கூறுவது பற்றி, பேய்களின் பசிக்கொடுமை பற்றி, கணிதப்பேய் பற்றி, மாய வித்தைகளைக் கற்ற முதுபேயொன்று அவற்றை வேடிக்கையாக விபரிப்பது பற்றி .. இவ்விதமாகப் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறும் அளவுக்குப் பேய்களைப் பற்றிய தகவல்களைக் கலிங்கத்துப் பரணி அள்ளி வழங்குகிறது. புலியூர்க் கேசிகனின் 'கலிங்கத்துப் பரணி'யை நீண்ட நாட்களின் முன் வாசித்தபொழுது பேய்கள் பற்றிய விபரிப்பால் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிய அனுபவம் இன்னும் பசுமையாக நெஞ்சிலுள்ளது. இணையத்தில் எங்காவது 'கலிங்கத்துப் பரணி'யைக் கண்டால் வாசித்துப் பாருங்கள். [கலிங்கத்துப் பரணி குலோத்துங்க சோழனின் புகழ்பெற்ற படைத்தளபதியான கருணாகரத்தொண்டைமானின் கலிங்கத்துப் போர் வெற்றியைப் பற்றிப் பாடும் பரணி. போரில் குறைந்தது 700-1000 வரையிலான யானைகளைக் கொன்றிருக்க வேண்டுமென்பது பரணி பாடுவதற்குரிய அடிப்படை நிபந்தனைகளிலொன்று. சாண்டியல்யனும் கருணாகரத்தொண்டைமானைக் கதாநாயகனாக் கொண்டு (இளையபல்லவன் கருணாகரத்தொண்டைமான்) 'கடல்புறா' வைப் படைத்திருக்கின்றார். இலங்கையில் வடபகுதியிலுள்ள 'தொண்டைமானாறு' கூட கருணாகரத்தொண்டைமான் வெட்டியதாக வரலாறு கூறும். சரி இனி நண்பர் தாஜின் பேய்கள் பற்றிய விடயத்திற்கு வருவோம்.

நள்ளிரவில் , பன்னிரண்டு மணியென்றால், மயானத்துக்குப் போவதற்கே மனிதர் பயப்படுவர். பேய் , இரத்தக் காட்டேரி, அல்லது புளியமரத்து முனி அடித்துவிடுமென்ற அச்சம். ஆனால் மிகக்குறைந்த அறிவேயுள்ள பூச்சி, புழுக்கள், பறவைகள், மிருகங்களெல்லாம் மிகவும் இலகுவாக எவ்வித அச்சமுமின்றி மயானங்களை நள்ளிரவுப்பொழுதுகளில் உலா வருகின்றனவே! வாசம் செய்கின்றனவே! ஏன் அவைற்றைப் பேய்கள் ஒன்றும் செய்வதில்லை?

ஏனென்றால் மானுடராகிய நாம் சிந்திக்கின்றோம். அவற்றால் அவ்விதம் சிந்திக்க முடிவதில்லை. சிந்திப்பதால் இருப்பு பற்றிய அச்சம், மரணம் பற்றிய அச்சம் எம்மைக் கற்பனை செய்ய வைக்கின்றது. விளைவு: ஆலமரத்து முனி, இரத்தக்காட்டேரி போன்ற பல்வகைப் பேய்கள்.

இவ்விதமெல்லாம் கூறுகின்றேனேயென்று என்னை நள் யாமத்தில் மயானத்துக்குச் செல்லும்படி மட்டும் சவாலுக்கு அழைத்து விடாதீர்கள் :-)

பால பாரதி: பேய் பத்தின என் அனுபவத்தை கதையாக்கி இருக்கிறேன். http://blog.balabharathi.net/?p=108 அதனால படிச்சுட்டு என் அனுபவத்தைக்கொண்டு பதிலை கண்டுபிடிங்க பார்க்கலாம்.

தாஜ் டீன்: அன்பு கிரிதரன், உங்களது பொறுப்பான விளக்கம் என்னை நெகிழ்வூட்டுகிறது. ஃபேஸ்புக் பக்கம் வரும் நண்பர்களின் மனோநிலையை அறியும் பொருட்டுத்தான் இப்படியானப் பதிவுகளை போட்டு அவர்களோடு கதைக்கிறேன். என் கிரிதரன் பதில்களும் எனக்கு என்கிற போது... மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் அளவில்லைதான். இந்த உங்களின் விளக்கத்தை இன்றைக்கு பதிவேற்றி வாசகர்களின் பார்வைக்கு வைப்பேன். நன்றி.

தாஜ் டீன்: தம்பி பாலபாரதிக்கு நன்றி. கதையை நான் உபயோகிக்க இருக்கிறேன்.

அப்துல் மஜீத்: ‎//மிகக்குறைந்த அறிவேயுள்ள பூச்சி, புழுக்கள், பறவைகள், மிருகங்களெல்லாம் மிகவும் இலகுவாக எவ்வித அச்சமுமின்றி மயானங்களை நள்ளிரவுப்பொழுதுகளில் உலா வருகின்றனவே! வாசம் செய்கின்றனவே! ஏன் அவைற்றைப் பேய்கள் ஒன்றும் செய்வதில்லை? // கிரிதரன், அங்கேயே...வசிக்கும் மனிதர்களும் உண்டு. வெட்டியானுக்கெல்லாம் வீடு இருக்கும். ஆனால் தம்மை ஆதரவற்றவராக மாற்றிக்கொண்ட மற்ற சிலபேருக்கு ஜாகையே அங்குதான் (பல வசதி கருதி). அய்யா கி.ரா. தனது பேய்கள்னு ஒரு சிறுகதையில் நிஜப் பேய்களில் ஒன்றைக் காட்டியிருப்பார்.

அரவிந்த் சாமிநாதன்: பேயைப் பார்த்ததில்லை. ஆனால் இறந்து போன ஒரு மனிதர் அவரது சிறுவயது மகனின் (6 வயது) உடலில் புகுந்து தன்னுடைய குரலில் பேசியதைக் கேட்டதுண்டு. (பையனுக்கு மிமிக்ரி எல்லாம் தெரியாது. அப்பாவி ) அந்த மனிதர் கேட்டது : “சோடா கொண்டா”

அரவிந்த் சாமிநாதன்: “சோடா கொண்டா” என்பதன் விளக்கம். கடையில்இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அந்த மனிதருக்கு திடீரென நெஞ்சு வலி. பெரிய மகன் சோடா வாங்கி வந்து கொடுப்பதற்குள் உயிர் பிரிந்து விட்டது. அதான் சோடா கொண்டா... :-)))

கிரிதரன்: அரவிந் சுவாமிநாதனுக்கு, இந்த இருப்பு பற்றிய புரிதலே எமக்குப் போதுமானதாகவில்லை. பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கும் முப்பரிமாணத்து அடிமைகள் நாம். நாம் எல்லாரும். மனோசக்தி பற்றி அறிய வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது. ஒரு தர்க்கத்துக்குப் பார்த்தோமென்றால் .. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருளையும் (நம்மையும் சேர்த்துத்தான்) பிரித்துக்கொண்டே போவோமென்றால் அணுக்கள், அவற்றை ஆக்கிய அடிப்படைத்துணிக்கைக்களென்று பிரிபட்டுக்கொண்டே செல்கையில் அங்கு நாம் பொருளையே காண முடியாது. எல்லாமே வெறும் சக்தி வடிவமாகவே இருப்பதைக் காணலாம். திட்டவட்டமாகத் தெரியுமிந்தப் பொருளுலகு, அடிப்படைத்துணிக்கைகளின் நிச்சயமற்ற நாட்டியத்தின் விளைவாகவே இருப்பதைக் காணமுடியும். இந்நிலையில் இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருளுமே எமது அன்றாடப் பார்வையில் தனித்தனியாகத் தெரிந்தாலும், குவாண்டம் நிலையில் ஒன்றுடனொன்று கலந்துதானிருக்கின்றது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே' என்று திருவிளையாடலில் சிவனாக வரும் சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் பாடுவார். அது ஒருவிதத்தில் குவாணடம் நிலையில் ஒன்று கலந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் சாத்தியமாகவேபடுகிறது. மிகமிகச் சக்திவாயந்த நுணுக்குக்காட்டியொன்றினை வைத்து இவ்வுலகினைப் பார்ப்பீர்களென்றால் உயர்திணை, அஃறிணைகளுக்கிடையில் பெரிதாக வித்தியாசமேதும் தெரியப்போவதில்லை. மேலும் இங்கு நடைபெற்ற அனைத்துமே, எண்ணங்கள், செயல்கள், உரையாடல்கள் அனைத்துமே மிக மிக பலமிழந்த நிலையிலென்றாலும் பரவிக் கலந்துதானிருக்கின்றன. எண்ணங்களின் சக்தி, நனவு மனம், நனவிலி மனமென்றெல்லாம் ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன. ஒருவரை ஆழ்துயிலில் ஆழ்த்தி மருத்துவர்கள் அவரின் கடந்த காலத்தையெல்லாம் அறிவதாக அறிந்திருக்கின்றோம். இது போல் இறந்த தந்தையின் குரலில் அந்தச் சிறுவன் பேசியதற்கும் ஏதாவது உளவியல்ரீதியிலான காரணமிருக்கக் கூடும். எப்பொழுதாவது தந்தை சோடா கொண்டா என்று மூத்த மகனை அழைத்திருக்கக்கூடும். அது கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் ஆழ்மனதில் பதிந்திருந்து வெளிப்பட்டிருக்கக் கூடும். உடன்டியாக பேய்தான் காரணமென்று முடிவுக்கு வந்துவிட முடியாது.

மேலும் வாசித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இலத்தீன் பண்டிதர் ஒருவரின் வீட்டில் வேலை பார்த்த எந்தவித அறிவுமற்ற வேலைக்காரியொருத்தியை அவளது இறுதிக்காலத்தில் ஆழ்துயிலில் ஆழ்த்தி பரிசோதித்தபொழுது அவள் சரளமாக இலத்தீன் பேசினாளாம். காரணம்: அவள் இலத்தீன் பண்டிதர் படிப்பித்துக்கொண்டிருக்கும்போது அருகிலுள்ள கூடத்தினைக் கூட்டிக் கொண்டிருப்பாளாம். அச்சமயத்தில் பண்டிதரின் இலத்தீன் உரைகள் அவளது ஆழ்மனதினுள் சென்று படிந்துவிட்டிருந்ததாம். அவைதாம் மருத்துவரின் ஆழ்துயில் பரிசோதனையின்போது அவள் வாயிலிருந்து வெளிப்பட்டனவாம். அதுபோல் இந்தச் சிறுவனின் நிலையும் இருக்கக் கூடும்.

அரவிந் சாமிநாதன்:  ‎//அரவிந் சுவாமிநாதனுக்கு, இந்த இருப்பு பற்றிய புரிதலே எமக்குப் போதுமானதாகவில்லை. // நான் என்ன சொல்ல்ணும்னு நினைக்குறீங்க கிரிதரன். பேயை நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்ததாகச் சொன்னவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பொய் சொல்லக் கூடியவர்கள் அல்ல. நான் பார்த்ததில்லையே தவிர அவற்றை நான் நம்புகிறேன். உங்களுக்கு என்ன விளக்கம் தேவை?

கிரிதரன்: பேயை நம்பும் முகநூல் நண்பர்களுக்கு, பேய் பற்றிய என்னுடைய கருத்துகள் உங்கள் நம்பிக்கையினைக் கிண்டலடிப்பதற்காகவோ அல்லது உங்கள் நம்பிக்கையை மாற்றுவதற்காகவோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவும். பேய் பற்றிய என் கருத்துகள் என் கருத்துகள் மட்டுமே. நண்பர் அரவிந் அவர்களுக்கு, உங்களது நம்பிக்கையையும், கருத்துகளையும் நான் மதிக்கிறேன். அது உங்களுடைய அடிப்படை உரிமை.

அரவிந் சாமிநாதன்: கிரிதரன், பேய் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அதுவா இப்போது பிரச்சனை? தாஜ் டீன் கேட்டதற்கு பதில் சொன்னேன். அவ்வளவுதான். பேய் இருக்கிறது என்பதற்காக அதை ஆராதிக்க முடியுமா என்ன? இந்தப் பிரபஞ்சத்தில் நம்மை மீறிய பல ஆற்றல் தொகு...திகள் உண்டு. அவற்றுள் ”பேய்” எனப்படுபவை “கீழ்நிலை சக்திகள்” ஆக இருக்கக் கூடும். கீழானவற்றை நம்புவதோ, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோ ஏற்புக்குரியதல்ல. “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” அல்லவா? :-)))

தாஜ் டீன்:  ‎//அரபு நாடுகளில் கூட ‘அரபு இலக்கியம்’தான் உண்டே தவிர இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை. இஸ்லாமிய தாக்கமும் முசுடு மற்றும் முரட்டுத்தனங்களும் கொண்ட ...பாகிஸ்தானிலேயே கூட உருது இலக்கியம்தான் இருக்கிறதே தவிர இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை.  ஸ்ரீலங்காவை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லீம்கள் இப்படி ‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ என்கிற கோதாவில் மலேசியாவிலும்/ தமிழகத்திலும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களை ஒருங்கிணைப்பதில் உள்ளார்ந்ததோர் அரசியல் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. // http://abedheen.wordpress.com/2011/07/26/taj-islam-ilakkyam-maanadu/

கிரிதரன்: எனது இப்பதிவு சிறிது நீண்டு விட்டதனால் (முகநூல் அனுமதிக்காத காரணத்தால்) இரு பகுதிகளாகப் பதிவு செய்கின்றேன்.

நண்பர் தாஜுக்கு, மதரீதியாக இலக்கியத்தைக் கூறுபோடக்கூடாதென்ற உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன். அவ்விதம் கூறுபோடுவதை ஏற்றுக்கொண்ட...ால் இந்து இலக்கியம், பெளத்த இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம், யூத இலக்கியமென்றெல்லாம் பிரிக்கப்பட வேண்டும். மொழி ரீதியாக இலக்கியத்தை வகைப்படுத்துவதே சரியான அணுகுமுறை. இஸ்லாமிய எழுத்தாளர்கள் ஹிந்தியில் எழுதலாம்; தமிழில் எழுதலாம்; சிங்கள மொழியில் எழுதலாம்; ஆங்கிலத்தில் எழுதலாம். இவ்விதம் பல்வேறு மொழிகளில் எழுதப்படும் படைப்புகளை எழுதப்படும் மொழிகளை மையமாக வைத்தே அணுக வேண்டும்; திறனாய்வு செய்ய வேண்டும்.

தமிழ் இலக்கியத்திற்கு எத்தனையோ இஸ்லாமியப் படைப்பாளிகள் வளம் சேர்த்திருக்கின்றார்கள். உலகின் பல்வேறு மொழிகளிலும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். துருக்கிய எழுத்தாளரான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் Orhan Pamuk துருக்கிய எழுத்தாளராகத்தான் கணிக்கப்படுகின்றாரே தவிர துருக்கிய இஸ்லாமிய எழுத்தாளராகக் கணிக்கப்படுவதில்லை. இந்த வகையில் நண்பர் தாஜின் கூற்று வரவேற்கத்தக்கது.

வைக்கம் முகம்மது பசீர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர். அவரது புகழ் பெற்ற நாவல்களான பாத்துமாவின் ஆடு, எங்கள் தாத்தாவுக்கொரு ஆனை இருந்தது ஆகிய நாவல்கள் அளவைப்பொறுத்த அளவில் சிறியவை; ஆனால் அற்புதமானவை. வாழ்க்கையை, இப்பிரபஞ்சத்தின் பின்னணியில் வைத்து இனங்கண்டு கற்பனையை விரிக்கும் அவரது எழுத்தின் நயத்தை , நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதும் இன்றைய எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் அருகில் கூட நெருங்க முடியாது.

பசீரிடம் எனக்குப் பிடித்த இன்னுமொரு முக்கியமான விடயம்: அவரது ஜீவராசிகள் மீதான கருணை. அவரது 'பூமியின் வாரிசுகள்' என்பது போன்ற சிறுகதைகளிலாகட்டும், நாவல்களிலாகட்டும் அதனைக் கண்டுகொண்டிட முடியும். மேலும் இஸ்லாமிய மதம் பற்றிய தகவல்களைக்க்கூட பாத்திரங்களின் இயல்புகளுக்கேற்ப அவ்வப்போது தந்திருப்பார்.

மானுடரின் உளவியலை எவ்விதம் அவர் அவதானித்திருக்கின்றார் என்பதை 'பாத்துமாவின் ஆடு' போன்ற படைப்புகளில் காணப்படும் அவரது எழுத்தின் செழுமை புலப்படுத்தும். ஊருக்குத் திரும்பி வந்திருக்கும் நாயகனிடம் தாய், தங்கைமாரெல்லாம் பணம் , நகையென்று இரகசியமாகக் கேட்கும் நிகழ்வுகளை எவ்வளவு வேடிக்கையாக, அதே சமயம் யதார்த்தமாக அவர் விபரித்திருப்பார்?

பசீரின் எழுத்தை ஓர் இஸ்லாமிய எழுத்தாக வைத்து யாரும் பார்ப்பதில்லை. அவரைச் சிறந்த மலையாள மொழிப் படைப்பாளியாகத்தான், உலக இலக்கியப் படைப்பாளியாகத்தான் அவரை நாம் இனங்காண்கின்றோம்.

எனது அபிமான நடிகர்களில் முக்கியமானவர்களிலொருவர் மம்முட்டி. பசீரின் 'மதில்கள்' படம் இன்னும் சிந்தையில் படம் விரிக்கின்றது. மதிலுக்குப் பின்னாலிருக்கும் முகம் தெரியாத பெண் கைதியுடன் அவர் கதைக்கும் காட்சிகள் இன்னும் ஞாபகம் இருக்கின்றன. மம்முட்டியைக் கூட நாம் முகம்மது குட்டி என்று இஸ்லாமிய நடிகராக அணுகுவதில்லை. இது போல் அமீர்கான் போன்றவர்களையும் குறிப்பிடலாம்.

பொதுவாகக் கலை. இலக்கியப் படைப்புகள் அவை படைக்கப்படும் மொழியின் அடிப்படையில் வைத்தே அணுகப்பட வேண்டும்; திறனாய்வு செய்யப்பட வேண்டும். மதரீதியாகவல்ல.

நண்பர் தாஜின் கருத்துகளை வரவேற்கின்றேன். நண்பர் தாஜுக்குத் தனிப்பட்டரீதியிலும் இந்தச் சமயத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். பல வருடங்களுக்கு முன்னர் , சீர்காழியிலிருந்து, 'அமெரிக்கா', மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடுகள்) ஆகிய நூல்களை வாசித்துவிட்டு அனுப்பிய கடிதங்கள் இன்னும் என்னிடம் பத்திரமாகவுள்ளன. அத்துடன் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கொரு ஆனையிருந்தது' அனுப்பி உதவியிருந்தீர்கள். அதற்காகவும் நன்றி.

அப்துல் மஜீத்: கிரிதரன் சார், KPAC லலிதாம்மாவின் குரல் ‘நடித்ததை’ விட்டுவிட்டீர்களே! ??//பசீரின் 'மதில்கள்' படம் இன்னும் சிந்தையில் படம் விரிக்கின்றது.// எனக்கும்தான் (கூடவே ரியாத் அறையும் - பக்கத்து இருக்கையில் தாஜும்)June 18 at 3:23am · LikeUnlike.

தாஜ் டீன்: காலையிலேயே எழுதியிருக்க வேண்டும். தவறவிட்டேன். பணியின் அலைச்சலாலும், மின்கட்டின் இடைஞ்சலினாலும் இடைப் பொழுதிலும் எழுத இயலவில்லை. வலுவான முகாந்திரங்களுடன், சிரத்தையான உங்களது கருத்து முன்வைப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அன்பு கிரிதரனுக்கு என் நன்றிகள். ஒன்று குறித்து நாம் என்னத்தான் அபிப்ராயத்தை முன்வைத்தாலும், சமூகம் அத்தனைச் சீக்கிரம் காதுக் கொடுத்து கேட்பதில்லை. என்ன செய்ய?

தாஜ் டீன்: என் மஜீதுக்கு... நீ பங்கெடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி அதிகம். நீ மதில்களை குறித்து பேசியிருப்பதில் என்னை மாதிரியே கிரிதரனுக்கும் சந்தோஷமே மிகுந்திருக்கும். நன்றி மஜீத்.

கிரிதரன்: நண்பர் மஜீத், உண்மையில் அந்த 'சுந்தரமான' குரலை நான் மறக்கவில்லை. அந்தக் குரலுக்குரியவர் யாரென்பது இதுவரை தெரியாமலிருந்தது. அதனை அறியத் தந்துள்ளதன் மூலம் என் அறிதலை/ புரிதலை இன்னும் கொஞ்சம் அதிகரித்துள்ளீர்கள்; நன்றி. நண்பர் தாஜுக்கு, " நாம்...என்னத்தான் அபிப்ராயத்தை முன்வைத்தாலும், சமூகம் அத்தனைச் சீக்கிரம் காதுக் கொடுத்து கேட்பதில்லை" என்று கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் கருத்து உங்கள் அறிவுக்கெட்டிவரையில் சரியானதாகவிருக்கும் பட்சத்தில், உண்மையாகவிருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் கருத்தை எந்தவித முன் எதிர்பார்ப்புகளுமின்றி முன் வைக்கலாம். சில சமயங்களில் சமூகத்தோடு ஒத்து நில் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி நின்றிருந்தால் பாரதியால் தன் படைப்புகளைப் படைத்திருக்க முடியாது. கார்ல மார்க்சால் தனது மூலதனத்தை வாட்டிய வறுமைக்கும் மத்தியிலும் படைத்திருக்க முடியாது. அவரது குழந்தையொன்றின் மறைவுக்குக் கூட அவரால் முறைப்படி அஞ்சலி செய்ய முடியாத அளவுக்கு வறுமை அவரை வாட்டியது. அப்போது அவர் காலத்து சமூகம் என்ன செய்தது? முகமது நபிகளைக் கூட நகர் விட்டு நகருக்குத் துரத்தியது அவர் கால கட்டத்து சமூகமென்பது வரலாறு. ஆனால் அவர் அதற்கெல்லாம் அஞ்சாமல் தன் கருத்துகளை முன் வைத்தார். அதே சமூகம் பின்னர் அவரைத் தூக்கிக் கொண்டாடியது. மார்சையும் பின்னர் உலக சமூகம் தூக்கி வைத்துக் கொண்டாடியது. பாரதியின் நிலையும் இதேதான். நாம் வாழும் காலகட்டம் தொடர்ந்து செல்லும் வரலாற்றுடன் ஒப்பிடும் பொழுது அற்பத்திலும் அற்பமானதொரு சிறு துளி. அந்தத் துளிக்குள் நின்றுகொண்டு எதற்கு தேவையற்ற எதிர்பார்ப்புகள்? எது சரியென்று படுகிறதோ அதனை துணிந்து செய்வோம் எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று. ஆனால் அதே சமயம் அது பின்னொரு சமயம் அறிவின் வளர்ச்சியில் பிழையென்று பட்டால், அதனையும் துணிந்து ஏற்கும் பக்குவமும் இருக்க வேண்டும். இது என் நிலைப்பாடு.

கிரிதரன்: வ.ந.கிரிதரனின் அறிவியற் சிறுகதைகள் மூன்று: ' நான் அவனில்லை', 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!' & தேவதரிசனம்

Firthouse Rajakumaaren  நல்ல அறிவியல் சிறுகதைகளை எல்லோருக்கும் படிக்க தந்தமைக்கு நன்றி .கிரிதரன்

கிரிதரன்: நண்பருக்கு, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

தாஜ் டீன்: எங்கள் கிரிதரனின் அழகான எழுத்தை மீண்டும் வாசித்ததில்/ அது ப்[அரிசுக்கு தேர்வில் வென்று வந்து இருப்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.

கிரிதரன்: நண்பர் தாஜ்ஜின் பரந்த மனமும், அதிலிருந்து வெளிவந்த இனிய வார்த்தைகளும் மகிழ்ச்சி தருவன.·


காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் தாஜ் (சீர்காழி) அவர்களின் 'தங்ஙள் அமீர்'!

சீர்காழி தாஜ்

எழுத்தாளர் தாஜ்நண்பர் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் குறுநாவல்கள் அடங்கிய தொகுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. வாழ்த்துகள். 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன். எழுத்தாளர் தாஜ் அவர்களை தொண்ணூறுகளிலிருந்து எனக்குத் தெரியும். ஸ்நேகா (தமிழகம்) வெளியிட்ட எனது நூல்களான அமெரிக்கா, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களைத் தமிழக நூல் நிலையமொன்றில் கண்டு வாசித்து அவை பற்றி எனக்குக் கடிதங்கள் இரண்டு அனுப்பியிருந்தார். அதன் பின்னர் வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான 'என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலையும் தனது நண்பர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைக்கச் செய்தார். மறக்க முடியாது. தாஜ் அவர்களின் சிறுகதையான 'பால்ய விவாஹம்' பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காலச்சுவடு, கணையாழி போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவள விழாபோட்டியிலும் இவரது கவிதை முத்திரைக்கவிதையாக விருது பெற்றுள்ளது. இவர் தமிழ்ப்பூக்கள் என்னும் வலைப்பதிவினையும் வைத்திருக்கின்றார்.

எழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:

"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.

இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர்."


எழுத்தாளர் சீர்காழி தாஜின் சிறுகதையான 'பால்ய விவாஹம்' பதிவுகள் இணைய இதழில் வெளியான போது எழுதிய அறிமுகக் குறிப்பு:

- எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில்  பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை.  நிலவும்   வாழ்வியற் போக்குகளை  இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. 'பால்ய விவாஹம்' என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் 'பால்ய விவாகம்' பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது.  

ஒரு சிறுவனுக்கு காய்க்காத வீட்டு வளவு மா மரத்துடன் நடைபெறும் பால்ய விவாஹம் பற்றியதே கதையின் மையக்கருத்து. அந்தச் சிறுவனே கதை சொல்லியும்; அவனது பெயரும் தாஜ் என்றிருப்பது கதையின் நடையில் ஒருவித சுயசரிதத் தன்மையினைப் படர விடுகிறது. ஆனால் அவர், தாஜ், தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் பின்னிய சிறுகதையாகத்தான் இதனைக் கொள்ளவேண்டும். அவ்விதம் மரத்துடனான திருமணம் அந்த மரத்தைக் காய்க்க வைக்குமென்ற கருத்தொன்றும் அந்தச் சிறுவன் வாழும் சீர்காழி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுகின்ற விடயத்தை இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது. இதனைக் குழந்தைப் பேறில்லாது வாடும் பெண்களுக்கும் குறியீடாகக் கருத முடியும். இந்த கருத்தினூடு விரியும் கதையில் வரும் பாட்டி பாத்திரம் மிகவும் இயல்பான அனைவர் வாழ்வில் வந்துபோகும் பாத்திரம். உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர இந்தச் சிறுகதையில் சீர்காழியில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே நிலவும் பேச்சுத்தமிழை வாசிப்பில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்துடன் அச்சமுதாயத்தின் வாழ்வில கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் இச்சிறுகதையினூடு அறிந்துகொள்கின்றோம். இது தவிர சுற்றியுள்ள இயற்கை பற்றிய அழகான வர்ணனையும் கதையில் விரவிக் கிடக்கின்றது. தாஜ் அவர்களின் இச்சிறுகதையான 'பால்ய விவாஹம்' சிறுகதை இதுவரை நான் வாசித்த அவரது சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை. உங்களையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். வாசித்துப் பாருங்கள்.

- பதிவுகள் - 17 November 2013 -