நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -- 1984  இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'.  'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா)  வெளியீடாக ஜனவரி 1987இல்  கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.  இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல்  'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  ஒரு பதிவுக்காகப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -


 

அத்தியாயம் ஆறு: கமலா எங்கே?

நாட்கள்தான் எவ்விதம் உருண்டோடி விடுகின்றன. 'காலம் தான் காத்து நிற்பதில்லையே. கமலா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்து ஏறத்தாள ஒரு வாரம் கழிந்து விட்டது. இந்த ஒரு வாரமாக அவளடைந்த  மன வேதனை  வார்த்தையில் அடங்காது. கிராமத்தவர்கள் ஒவ்வொரு நாளும் மாறி மாறி வந்தபடி ஆறுதல் கூறி விட்டுச் சென்றார்கள். நடராஜா வாத்தியாரோ எதிலுமே பற்றற்றவராய் சுருட்டொன்றைப் புகைத்தபடி திண்னையில் குந்திவிடுவாராயின் அவரை எழுப்புவதே பெரும்பாடாகப் போய்விடும். சாரதாதான் 'அப்பு உள்ளுக்கு வந்து இரணை”. என்று வற்புறுத்தி ஒரு மாதிரி அவரை உள்ளுக்குள் கொண்டு வந்து விடுவாள். அதன் பிறகுதான் அவளுக்கு ஓரளவாவது ஆறுதல். கமலாவின் போக்கும் முன்பு மாதிரியில்லை. பெரிதும் மாறித்தான் போய்விட்டாள். சாரதாவே வீட்டு வேலைகளையெல்லாம் கவனித்துக் கொண்டாள். எவ்வளவுதான் முற்போக்காய் இருந்தபோதிலும் கமலாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவளை அச்சம்பவம் பெரிதும் பாதித்து விட்டது.

எந்நேரமும் சிந்தனையில் மூழ்கியவளாகவேயிருந்தாள். ஒருகணம் "இனியும் நான் வாழ்வதில் என்ன பயன்?" என எண்ணுவாள். மறுகணமே "நான் சாவதால் மட்டும் பெண்களின். எம் தமிழ்ப் பெண்களின் அவலநிலை மாறிவிடுமா?" இவ்விதம் எண்ணமிடுவாள். 'இதுவரையில் ஈஸ்வரனின் நினைவொன்றுடன் வீட்டிற்காக உழைத்தேன். ஆனால் இனிமேலும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பழைய வாழ்வினில் என்னால் இறங்கவே முடியாது. பெண்களும் அக்கிரமங்களுக்கெதிரான போரில் ஆண்களுடன் சேர வேண்டிய காலம் வந்துவிட்ட்து'. முரண்பட்ட எண்ணப் போக்குகளுக்குள் சிக்கியவளாக அலைமோதிக் கொண்டிருந்த கமலாவின் நிலையோ பரிதாபத்திற்குரியதாக இருந்தது. இதே சமயம் சிங்கள இராணுவத்தினரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயிருந்தன. நீண்டதொரு தற்காப்பு போர் முறையைப் பற்றியதொரு சிந்தனைக்குச் சகல தமிழர்களும் தள்ளப்பட்டிருந்தார்கள். உணர்ச்சி வெறியில் மேற்கொள்ளப்படும் சிங்கள இராணுவத்தினர் மீதான சிறுதாக்குதல்கள் ஏற்படுத்திய அழிவுகள் தமிழ் மக்களை விடுதலைப் போராட்டம் பற்றிய தீவிர சிந்தனைக்குத் தள்ளியது. பல்வேறு வகைப்பட்ட சித்தாந்த வேறுபாடுகளைக் கொண்டதாக விளங்கிய விடுதலை இயக்கங்களைப் பற்றி நன்கு புரிந்து எடை போடுவதற்கு முதன் முதலாக சகல தமிழர்களும் முயன்றார்கள். நாளுக்கு நாள் சீர்குலைந்து கொண்டுவந்த தமிழீழத்தின் நிலமை தமிழர்களை ஒற்றுமையின் அவசியம் பற்றியும் நீண்ட கால தற்பாதுகாப்புடன் கூடியதொரு போர்முறை பற்றியும் முன்னெப்போதையும் விட மிக அதிகமாகவே இப்போது சிந்திக்க வைத்தது.

அதேசமயம் சிங்கள இனவாத அரசோ மேலும் மேலும் சிங்களப் பாமர மக்களை இனவாதச் சேற்றில் மூழ்கடிப்பதில் வெற்றி பெற்றுக் கொண்டு வந்த, அதேசமயம் தமிழர்களுக்கெதிரான போர் ஒன்றைப் பற்றிய பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு ஆயுதப் படைகளுக்கு அனுசரணையாக சிங்களவர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது. இரு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நாளுக்கு நாள் கூர்மையடைந்தே வந்தன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்குவதற்கு ஶ்ரீலங்கா அரசோ சகலவிதமான கொடூர முறைகளையும் கையாளத் தொடங்கியிருந்தது. எல்சல்வடோரில், நிக்கரகுவாவில் சி.ஐ.ஏ. பின்பற்றும் முறைகளையும் பலஸ்தீனியர்களுக்கெதிராக இஸ்ரேலிய மொசாட் கைக்கொள்ளும் முறைகளையும் பூரீலங்கா அரசு பின்பற்றத் தொடங்கியதின் விளைவு தமிழ்க் கிராமங்கள் எரிக்கப்பட்டன. தமிழ் மக்கள் ஏராளமாகக் கொல்லப்பட்டனர். அதே சமயம் ஆயிரக் கணக்கில் கைது செய்யப்பட்டனர். பெருமளவில் காணாமல் போயினர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகினர். பொதுவான நாட்டு நிலமை இப்படியிருக்கையில் தமிழ் மக்கள் சிறிதளவாவது ஆறுதலுடன் இருந்தார்களென்றால் அதற்குக் காரணம் தென் இந்தியாதான். ஆறு கோடி இந்தியத் தமிழர்கள் இருக்கும் வரையில் சிங்களவரால் தமிழர்களை ஒரு போதுமே முற்றாக அழித்துவிட முடியாது என்ற நினைப்பொன்றே ஒருவித தென்பை அவர்களுக்குத் தந்தது.

இது இவ்வாறிருக்க கமலாவோ நாட்டைப் பற்றியும் வீட்டைப் பற்றியும் மாறி மாறி எழுந்த உணர்வுகளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தாள். அதுவொரு அமாவாசை இரவு. வேளைக்கே இருண்டு விட்டிருந்தது. வீட்டினில் எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள், கமலாவைத் தவிர. கட்டிலில் படுத்திருந்தபடியே யன்னல்களினூடு இரவின் கருமையில் பயங்கரமாக காற்றில் ஆடிக் கொண்டிருந்த பனைகளையே வெறித்தபடியிருந்த கமலாவின் கவனத்தை "கமலா. கமலா”, என்ற மெல்லிய குரலில் யாரோ அழைப்பது போன்று வந்த ஒலி கவரவே கூர்ந்து கவனித்தாள்.

ஆமாம் யன்னலுக்கு வெளியில் இருளோடு இருளாக யாரோ நிற்பதை அவளால் உணரமுடிந்தது. தன்னை வெகுவாகவே சுதாகரித்தபடி மெல்ல எழுந்தவள் தலைமாட்டில் கிடந்த ரோச்சை எடுத்து யன்னலினூடு ஒளி வெள்ளத்தைப் பாயவிட்டாள்.  'டோர்ச்' ஒளியில் கண்ட உருவம் அவள் நெஞ்சில் வியப்பையும், திகைப்பையும், இன்பத்தையும் ஒருவித திகிலையும் ஒரே நேரத்தில் பாய்ச்சின. அங்கு நின்றிருந்தது வேறு யாருமல்ல. இருவருடங்களிற்கு முன்னால் தலை மறைவாகி விட்டிருந்த ஈஸ்வரனே நின்றிருந்தான்.

"ஈஸ்வரன் நீங்களா" என்றபடியே யன்னலை நெருங்கியவள் மெல்லத் திறந்ததும் கம்பியில்லாத அந்த ஜன்னல் வழியே ஈஸ்வரன் மெல்ல உள்ளே ஏறிக்குதித்தான்.

"கமலா டோச்சை 'நூரு’ என்றவன் யன்னலுக்கருகில் நின்றபடியே தொலைவில் வேலிக்கப்பாலிருந்த வீதியையே நோக்கி நின்றான். தொலைவில் சில இராணுவ வாகனங்கள் விரையும் ஒலிகள் மெலிதாகக் கேட்டன. கமலாவிற்கு ஈஸ்வரன் இக்கட்டொன்றிலிருந்து தப்பி வந்திருக்கிறானென்பது மட்டும் புரிந்ததே தவிர வேறெதுவும் புரியவில்லை.

'இரண்டு வருடங்களிற்குள் ஈஸ்வரன்தான் எவ்வளவு மாறிவிட்டார்.

மறுநாள் விடிந்தது. நெடு நேரமாகியும் கமலா எழும் பாததைக் கவனித்த சாரதா கமலாவைத் தேடி அறையில் நுழைந்தபோது அவளை கட்டிலிருந்த காகிதம்தான் வரவேற்றது. அதை வாசித்தவள் மறுகணம் 'அப்பா என்று அலறிவிட்டாள்.


அத்தியாயம் ஏழு: மகளின் கடிதம்.

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -சாரதா எத்தனைதரம் அக்கடிதத்தை வாசித்தாளோ, சாரதாவிற்கு தெரியாது. மீண்டும் மீண்டும் வாசித்தாள். கடிதம் இவ்வண்ணம் ஆரம்பமாயிருந்தது.

"அன்புமிக்க அப்பா!

"என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என்னால் இதனைத்தவிர வேறெவ்வித முடிவினையுமே தற்சமயம் எடுக்க முடியவில்லை. பயப்படாதீர்கள். நான் தற்கொலை எதுவும் செய்து விடப்போவதில்லை."

இவ்வரிகள் தந்த ஆறுதலுடன் சாரதா தொடர்ந்து படித்தாள். தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு நான் கோழையல்ல; வாழ்வினை சவாலாக ஏற்கும் பக்குவம் எனக்கு - உங்கள் மகளிற்கு நிறையவேண்டும் அப்பா!. உண்மையில் என்னை 'அந்தச் சம்பவம்' பாதித்துத்தான் விட்டது. அந்தப் பாதிப்புடன் தொடர்ந்தும் அதனை அப்படியே ஜீரணித்துக் கொண்டு வாழ்வதற்கு நிச்சயம் முடியவே முடியாது. எமது சமுதாயத்தில் ஏற்கனவே "பெண்கள்' வெறும் பண்டமாற்றுப் பொருளாகத்தான் வாழ்கின்றார்கள். அத்துடன் இப்போது தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவக் காடையரின் காமுக வெறியாட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள், தமிழர்களின் போராட்டத்தில் பெண்களும் ஆண்களுடன் தோளுயர்த்திப் போரிட வேண்டிய தருணம் வந்து விட்டதாகக் கருதுகின்றேன். ஆமாம் அப்பா எனது தாய்நாட்டு விடுதலைக்கான வேள்வித்தீயினில் குதிப்பதற்கு நான் முடிவு செய்து விட்டேன். உங்கள் மகளைப்பற்றிய கவலையினை இனி விடுங்கள். ஈஸ்வரனை எனது வாழ்வில் கணவராக அடைந்து குடியும் குடித்தனமுமாக வாழ்வதற்கு எமது இன்றைய நிலமை எம்மை அனுமதிக்க வில்லை. ஆயினும் எமது மக்களின் விடுதலைக்கான போரில், அவருடன் இணைந்து போராடுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.

அப்பா! உங்களைப்போன்ற ஒரு தந்தைக்கு ஏற்பட்ட நிலமை எந்தத் தமிழனிற்கும் ஏற்படக்கூடாதென்றால். என்னை நீங்கள் நிச்சயம் வாழ்த்துவீர்களென்ற நம்பிக்கை நிறையவேயுண்டு. சாரதா, மைவிழி, தேன்மொழி, பார்த்திபன் எல்லோரிற்கும் என் அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு, அன்பு மகள்"

இதனைப் படித்து முடித்ததும்தான் சாரதா அப்பா' என்று அலறினாள். கிணற்றடியில் முகம் கழுவிக் கொண்டிருந்த நடராஜா வாத்தியாரும், அடுக்களையில் தேனிர் கலந்து கொண்டிருந்த பார்த்திபனும் ‘என்னவோ ஏதோ என்று பதறியவர்களாக ஓடி வந்தார்கள். வந்தவர்க்கு முதலில் ஒருகணம் ஒன்றும் விளங்கவில்லை. கையில் கடிதத்துடன் நின்ற சாரதாவை வியப்புடன் நோக்கினார்கள்.

"என்னம்மா நடந்தது" என்ற நடராஜா வாத்தியார், அச்சமயம்தான் கமலா அங்கில்லாததைக் கவனித்தவராக, சாரதா வைத்திருந்த கடிதத்தைப் பறித்துப் படித்தார்.

ஏற்கனவே அதிர்ச்சியால் உடைந்து கிடந்த அந்தத் தந்தையின் நெஞ்சினில் இவ்விடயம் எவ்வித பெரிய அதிர்ச்சியினையும் தந்து விடவில்லை. மாறாக ஒரு வித ஆறுதலையே தந்ததெனலாம். அடக்கு முறைகளிற்கெதிரான புனிதப்போரில் குதித்துவிட்ட மகளிற்காக 'வாழ்த்துக்கள்’ கூறிய அந்தத் தமிழ் ஆசிரியத் தந்தையின் உள்ளம் ஒரு புறத்தே தந்தைக்கேயுரிய பாச உணர்வுகளிலும் துடிக்கத்தான் செய்தது.

தமிழ் மக்களின் மிகமெல்லிய புனிதமான உணர்வுகளை, குடும்ப உறவுகளை எவ்விதம் சிறிலங்கா அரசின் கொடுங்கோலாட்சி குலைத்துச் சிதைத்துவிட்டது. ஒவ்வொரு தமிழனின் குடும்பத்திலும் ஏதோ ஒரு விதத்தில் கண்ணிர்க் கதையொன்றின் தடம் இல்லாமலில்லை என்ற நிலைக்கு நிலமை மோசமாகிக்கொண்டே வந்து கொண்டிருந்தது.

தமிழ்ச் சமுதாயத்தின் புரையேறிய இருபெரும் புண்களாக 'சீதனம் 'சாதி என்னுமிரு விடயங்களும் இருந்தபோதும், தமிழர்கள் அமைதியாக தை பிறந்தால் வழி பிறக்குமென்று ஆடி, புத்தாண்டை சித்திரையில் பண் பாடி வரவேற்று ஐப்பசித் தீபாவளியில் களித்துக் கார்த்திகையில் தீபமேற்றி கோயில் குளங்களென்று ஒருவித இனிமையாக வாழ்வை ஒட்டிச் சென்ற காலம் மலையேறிவிட்டது. இன்று மரணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மனித வரலாற்றின் போக்குகளில் அடக்குமுறைகளும் அடக்கு முறைகளிற்கெதிரான போர்களும், வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விதமான தன்மைகளில் வெடித்துக் கொண்டிருந்தன. இன்றைய சிறிலங்காத் தமிழர்களின் விடுதலைப் போரும் தென் கிழக்காசியாவின் முக்கியதொரு பிரச்சினையாக உருமாறி விட்டிருந்தது.


அத்தியாயம் எட்டு: மண்ணின் மைந்தர்கள்!

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -வழக்கம்போல் அதிகாலையில் பால் கொடுத்து விட்டு வரும் வழியில்தான் அநபாயனிற்கு 'கமலா டீச்சர் இயக்கமொன்றில் சேர்ந்துவிட செய்தி தெரியவந்தது. கிராமத்தவர்களெல்லாம் கமலா டீச்சரைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். இதுவரை இருளில் தடுமாறிக் கொண்டிருந்தவர்களுக்கு விடிவெள்ளி தென்பட்டதைப் போல் அக்கிராமத்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள்.

அன்று மாலை, மெல்ல இருளத் தொடங்குகையில் அநபாயன் சாரதாவைப் பார்ப்பதற்காக நடராஜா வாத்தியாரின் வீட்டை அடைந்தபோது, பின்வளவில் சாரதா மட்டுமே கோழிகளுக்குத் தீனிபோட்டபடியிருந்தாள். மெல்லிய அந்தியின் முடிவில் தனிமையில் நின்றிருந்த சாரதாவின் தோற்றம் அநபாயனின் இதயத்தை அப்படியே இளக்கிவிட்டது. மெல்லப் பின்புறமாகச் சென்றவன் அவள் கண்களை பொத்தி மார்போடணைத்தபோது, திடுக்கிட்டவளாகத் திரும்பிய சாரதாவின் வதனத்தில், அநபாயனை கண்டதும் மகிழ்ச்சியலைகள் படர்ந்தன.

"என்ன இது அநபாயன். சிறுபிள்ளைமாதிரி” என்று பொய்க் கோபத்துடன் கூறிய சாரதாவைப் பார்த்து அநபாயன், குறும்புடன் "சாரதா அம்மாவிற்குக் கோபம் வந்துவிட்டால், கண்ணகிக்கே வந்த மாதிரித்தான்” என்றபோது சாரதா நாணிச் சிவந்தாள்.

சோகமும், திகிலும், படபடப்புமாக உருண்டு கொண்டிருந்த வாழ்வில் இந்த இளம் சோடிகளின் வாழ்வில் ஓரளவாவது சந்தோஷமான கணங்களைத் தருவது இத்தகைய சந்தோஷமான சந்திப்புக்களும், தனிமையில் இனிமைகளுமல்லவா. மெல்லிய தென்றலில் பூவரசுகளும், பனைகளும் ஆடிக்கொண்டிருந்த வளவிற்கப்பால் விரிந்து கிடந்த வயல்வெளியில் கிளிகள் கூட்டங்கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. இடையிடையே அங்கிருந்த வேப்ப மரமொன்றிலிருந்து "குக்குறுபான்” கள் 'குக்குறுத்துக் கொண்டிருந்தன. கோழிகளைக் கூட்டினுள் "அடைய” விட்டு சாரதா, அநபாயனுடன் வீட்டினுள் நுழைந்த போது நன்கு இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது.

அறை "லைற்’களை எரியவிட்டவளாக, அடுக்களைக்குள் நுழைந்த சாரதாவை அநபாயன் தொடர்ந்தான். வழக்கம்போல் பார்த்திபனை இன்னும் காணவில்லை. நடராஜா வாத்தியாரையும் இன்னும் காணவில்லை.

"சாரதா. இனித்தான் நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். எனக்கென்றால் நீங்கள் இங்கிருப்பது நல்லதாகப் படவில்லை. பேசாமல் கொஞ்ச நாட்கள் எங்களுடன் வந்து விடுங்கள்."

"அநபாயன் ஏனப்படி சொல்கிறீர்கள்."

'பிட்டு" அவிப்பதற்காக, மாவைக் குழைக்கத் தொடங்கிய சாரதாவையே சிறிது நேரம் பார்த்தபடி நின்ற அநபாயன் தொடர்ந்தான்.

"சாரதா. உங்கக்கா இயக்கமொன்றில் சேர்ந்த விடயம் ஊர் முழுக்கத் தெரியும். நிச்சயம் 'ஆமிக்குத் தெரியாமல் போகாது. காட்டிக் கொடுக்கும் உளவாளிகற்கா எம்மினத்தில் பஞ்சம். உங்களப்பாவும் தம்பியும் வரட்டும். எல்லாருமாக எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள். கொஞ்ச நாட்கள் இருந்து பாருங்கள்.”

சாரதாவிற்கு அநபாயன் சொல்வது சரியாகத்தான் பட்டது.

"அநபாயன். இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே பயந்து ஒளிந்து அலைந்து திரிவது."

இவ்விதம் கேட்ட சாரதாவைப் பார்க்கப் பாவமாயிருந்தது.

"சாரதா. விடுதலைப் போரில் ஆண்கள், பெண்களுட்படக் குதிக்க வேண்டிய காலம் தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டு விட்டது. விடுதலைப் போராளிகளிற்கு உறுதுணையாக மக்கள் யாவருமே தங்களால் இயன்ற வகையில் பங்களிப்புச் செய்ய வேண்டிய வேளை இது. சாரதா. உனக்கு நான் ஒன்று சொல்கிறேன். வெகு விரைவிலேயே உன் அக்காவின் வழியில் செல்வதற்கு நான் முடிவு செய்து விட்டேன்."

அநபாயனை வியப்புடன் நோக்கினாள் சாரதா.

"ஆமாம் சாரதா. என்னைப் பொறுத்தவரையில் நானொரு சாதாரண ஆசாபாசங்களைக் கொண்ட சாதாரண மனிதனே. ஆனால் நாளிற்கு நாள் வளர்ந்து வரும் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறைக் கெதிராகப் போரிடாது போனால். நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணிற்குச் செய்யவேண்டிய பங்களிப்பினின்றும் தவறியவனாவேன். ஒவ்வொரு மனிதனிற்கும் அவன் பிறக்கும் மண்ணுடனானதொரு கடமை இருக்கவே செய்கின்றது. அவனது வாழ்வு அம்மண்ணில் நிலவிடும் சூழ்நிலைகளினாலேயே நிர்ணயிக்கப் படுகின்றது. அவன் தாயின் முகத்தில் மகிழ்ச்சியினைக் காண வேண்டுமானால் தாய்க்குத் தாயான அவன் பிறந்து தவழ்ந்த மண்ணில் மகிழ்ச்சி நிலவவேண்டும். சாரதா. "எந்த மண்ணில் அநீதியும், அக்கிரமும் தாண்டவமாடுகின்றதோ, எந்த மண்ணில் பொய்மை மலிந்து கிடக்கின்றதோ, எந்த மண்ணில் போற்றிட வேண்டிய பெண்மை புழுதியிலே புரண்டு கிடக்கின்றதோ, அம் மண்ணில் அமைதியும்,  இன்பமும் நிலவுவதில்லை. குடும்ப உறவுகள் குலைந்து விடுகின்றன. அம்மண்ணின் மைந்தர்களின் “விழிப்பினாலேயே விடுதலைப் போரினாலேயே அங்கு நீதி நிலை நிறுத்தப் படுகின்றது.’ என்று எனக்குப் பிடித்த பிரபல நாவலாசிரியர் நந்தி தேவன் புனிதப் பயணம் என்ற நாவலில் கூறியிருப்பது தான் எத்துனை உண்மையானது."

இவ்விதம் அநபாயன் கூறிக்கொண்டிருக்கையில் நடராஜா வாத்தியார் வந்து சேர்ந்தார். நீண்ட வற்புறுத்தல், வாதங்களின் பின்னால் அநபாயன் நடராஜா வாத்தியாரை தன்பக்கம் இழுப்பதில் வெற்றி கண்டான். அன்றிலிருந்து நடராஜா வாத்தியாரும், சாரதாவும், பார்த்திபனும் அநபாயனின் வீட்டிலேயே தங்கத் தொடங்கினார். மைவிழி, தேன் மொழிக்கும் மறுநாளே இவ்விடயம் அறிவிக்கப்பட்டது. அநபாயன் எச்சரித்தது எவ்வளவு உண்மை என்பதனை, மூன்றாம் நாளிரவு நடந்த சம்பவங்களே விளக்கி நின்றன.


அத்தியாயம் ஒன்பது: சாமியாரின் சுயரூபம்.

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -மேற்கு அந்தியின் சிவப்பில் குளித்துக் கிடந்தது.   இரத்தச் சிவப்பில் புதைந்து கிடந்த சூரியனும், தொலைவில் நிழல்களென மறையும் முகில்களும், பறவைகளும். மெல்லிய தென்றலும்...... கனத்துக் கொதித்துக்கிடக்கும் நெஞ்சம் ஒரு கணமாவது அமைதியடைவதுண்டென்றால் இத்தகைய ஒரு சில பொழுதுகளில்தானே.

வழக்கம்போல் அந்தத் தனிமையில், அந்த மணற் குன்றுப் பிரதேசத்தில் கவிந்து கிடந்த மெளனத்தில் மூழ்கிக் கிடந்தான் அநபாயன். அவன் எச்சரித்தது உண்மையாகவே நடந்து விட்டது. கமலா டீச்சரின் வீடு ஓரிரவு இராணுவத்தினரால்  எரித்துக் குலைக்கப்பட்டுவிட்டது. அந்த வெறியர்களின்  அட்டகாசத்திற்கு அருகிலிருந்த குடிசையொன்றில் வாழ்ந்து கொண்டிருந்த ஏழைக் குடும்பமொன்றும் பலியாகி விட்டது. அக்குடிசையிலிருந்த கர்ப்பிணிப் பெண் லலிதா படுபயங்கரமாக கணவன், குழைந்தைகள், பெற்றார் முன்னிலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மட்டுமல்ல அவளது கணவன் மோகனும் சுட்டுக் கொல்லப்பட்டான். நாளிற்குநாள் சிங்கள இராணுவத்தினரின் அக்கிரமங்களும் புதிய பரிமாணங்களைப் பெற்றுக் கொண்டிருந்த அதேசமயம், இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவுகளும் நாளிற்கு நாள் மோசமாகிக் கொண்டேயிருந்தன. தமிழ் நாட்டில் விடுதலைப் போராளிகள் பயிற்சி பெறுவதாக சிறிலங்கா குற்றம் சாட்டுவதும், இந்தியா மறுப்பதுமாகயிருக்கையில். சிறிலங்காவிலேயே பிக்குகளுடன் சேர்ந்த இனவெறி பிடித்த அரசோ தமிழ் மக்கள் மீதான கொடுங்கோன்மையினைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது.

'ஆகா. அந்தியின் சிவப்பிலும் ஒரு தத்துவமே தெரிகிறது"

சிந்தனையினின்றும் நீங்கியவனாக அநபாயன் திரும்பினான்; எதிரில் சாமியார் நின்றிருந்தார்.

"இரவு எனும் கொடுங்கோலன், பகலைக் குற்றிக் குதறியதன் விளைவோ இந்தச் சிவப்பு.’ என்றபடியே அருகிலமர்ந்த சாமியாரையே நோக்கினான் அநபாயன்.

"இவ்வுலகில் வாழ்வே ஒரு போராட்டம்தான். ஒவ்வொரு உயிருமே தனது வாழ்விற்காகப் போராடிக் கொண்டு தானிருக்கின்றது. போராட்டமென்பது இயற்கையில் இயல்பாக, நியதியாகவே உள்ளது."

மேலும் தொடர்ந்தார்:

"இயற்கையின் முரண்பாடுகளும், போராட்டங்களுமே வரலாற்றை வழி நடாத்திச் செல்கின்றன. ஆதியில் மனிதனின் அகவுலகோ இருண்டு கிடந்தது; அறியாமை அங்கே குடி கொண்டிருந்தது. அவன் தன் அறியாமையின் விளைவாக, புற உலகில் நிலவிய முரண்பாடுகளைப் பிழையாகக் கையாண்டதன் விளைவோ, பிரச்சினைகளைச் சிக்கலாக்கியது. அவனது அறிவு வளர வளர, முரண்பாடுகளை அவன் கையாண்ட விதம், பழைய முரண்பாடுகள் இருந்த இடத்தில் புதிய முரண்பாடுகளைக் குடியமர்த்தின. இத்தகைய புதிய முரண்பாடுகளை அவன் தீர்க்கையில், மேலும் சில முரண்பாடுகள் உருவாகின."

இவ்விடத்தில் அநபாயன் இடை மறித்தான். "ஐயா! முரண்பாடு முரண்பாடு என்கின்றீர்களே. அதென்ன முரண்பாடு. எவை எவற்றிற்கிடையிலெல்லாம் முரண்பாடு. விளக்குவீர்களா”

இதற்குச் சற்று நேரம் அமைதியாயிருந்து விட்டு சாமியார் தொடர்ந்தார்.

"தம்பி மனிதனின் அகவுலகை எடுத்துக் கொள்வோம். அவன் மனதிலோ நல்ல உணர்வுகளுமுள்ளன; அதே சமயம் கெட்ட உணர்வுகளுமுள்ளன. இவையிரண்டும் முரண்பட்ட உணர்வுகளல்லவா. இவைதான் அகவுலக முரண்பாடுகள். இம்முரண்பாடுகளை எவ்வகையில் கையாளுகின்றா னென்பதில்தான் அவன் வாழ்வு ஒன்றில் சிறக்கிறது; அல்லது சிறுக்கிறது. மனித உடலை எடுத்துக் கொள்வோம்; பிராண வாயுவை உள்ளுக்கெடுத்து, வெளியில் விடுதல் என்ற இரு முரண்பட்ட செயல்கள்தான்; உணவை உள்வாங்குதல்; கழிவை வெளிவிடுதல் என்னுமிரு முரண்பட்ட செயல்கள்தான்; வாழ்வை வழி நடாத்துகின்றன. இவைதான் உடல் வகைப்பட்ட முரண்பாடுகள். இதனைப் போலவே தான் மானுட சமுதாயமும் முரண்பாடுகளால் பிளவுண்டு கிடக்கின்றது. செல்வந்த நாடுகள், வறிய நாடுகள் இடைப்பட்டவை என்று உலகம் முரண்பட்டுக் கிடக்கின்றது. ஏழை, பணக்காரன்; முதலாளி; தொழிலாளி; இனம், மதம், மொழி, குலம், கோத்திரமென்று சமுதாயமும் பிளவுண்டு போய்க் கிடக்கின்றது."

"ஆக முரண்பாடுகள் என்பவை தவிர்க்க முடியாதபடி என்றுமே இருந்து வருமென்கின்றீர்கள். அப்படித்தானே அடிகளே” இவ்விதம் கேட்ட அநபாயனிற்கு சாமியார் இவ்விதம் பதிலளித்தார்.

"ஆமாம் தம்பி 'பழையன கழிந்து புதியன புகுவது' இயற்கைதானே. பழைய முரண்பாடுகளிருக்குமிடத்தில் புதிய முரண்பாடுகள் வருவதும் இயற்கையே. நான் முன்பு கூறியது போல், மனிதன் அறியாமையால் இம்முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக்கிச் சிக்கலாக்கி விட்டு விட்டு, பின்னால் சீராக்க முயல்கிறான். ஏன் இலங்கையை எடுத்துக் கொள்வோம். 1948ற்கு முன்னாலும் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களிற்கிடையில் முரண்பாடுகள் நிலவத்தான் செய்தன. ஏழை, பணக்காரன், சாதி, சமயமென்று சமுதாயம் முரண்பட்டுத் தானிருந்தது. அந்நிய ஆட்சியில் அடிமைப் பட்டுக்கிடந்த சமூகத்தில், அந்நியர் சுதேசிகள் என்ற முரண்பாடே முக்கியமாக நிலவியது. ஆனால் 1948ற்குப் பிறகோ தமிழர் சிங்களவர்க்கிடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வந்தன. பதவிகளிற்காக சிங்கள, தமிழ் தலைவர்கள் இம்முரண்பாடுகளைக் கூர்மையாக்கியதன் விளைவே இன்றைய விடுதலைப் போர். தமிழர்களைப் பொறுத்த வரையில் தங்களிற்கிடையில் நிலவும் முரண்பாடுகளைச் சீராக்குவதற்காகவும், சிங்கள தமிழர்களிற்கிடையேயுள்ள முரண்பாடுகளைச் சீராக்கு வதற்காகவுமே போராடுகின்றார்கள். சிங்களத் தலைவர்களோவெனில் தங்களிற்கிடையில் உள்ள முரண்பாடுகள் முற்றி வெடிப்பதைத் தவிர்ப்பதற்காகத் தமிழ் சிங்களவர்க்கிடையேயான முரண்பாடுகளைத் தூண்டி விட்டுக் கவனத்தைத் திசை திருப்புகின்றார்கள்."

இச்சமயம் ஜீப்பொன்று விரைந்துவரும் சத்தம் கேட்கவே சாமியார் பேச்சை நிறுத்திவிட்டு, அமைதியாக தோளில் மாட்டியிருந்த பையினை எடுத்து அருகில் வைத்தபடி எழுவதற்கு ஆயத்தமாகி நின்றார்.

விரைந்து வந்த ஜீப் மணற் குன்றிற்கருகே சடாரென நின்றதும் அதிலிருந்து நான்கு ராணுவத்தினர் பாய்ந்து இறங்கினர்.

இறங்கியவர்களின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பியது. அடக்கி ஒடுக்கு முறைகளிற்கெதிராகப் போராடுவதற்கு வாய்ப்பு கிட்டாமலேயே, மண்ணிற்கான கடமையினைச் செய்யாமலேயே வாழ்வு முடிந்து விடப்போகின்றதேயென்ற உணர்வில் சப்மெஷின் கண்களுடன் வேட்டை நாய்கள் என ஓடி வந்த இராணுவத்தினரையே பார்த்தபடி அசையாமல் அநபாயன் நின்றிருந்தான்.

அடுத்த சில கணங்களில் அங்கு நடந்தவை. உண்மையிலேயே அநபாயனை அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒருங்கே அடைய வைத்தன. மின்னல்வேகம் என்பார்களே அவ்விதம் காரியங்கள் நடந்தன. “மெஷின் கன்"னின் வேட்டுக்களைத் தொடர்ந்து இராணுவத்தினர் நால்வரும் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார்கள். காரியத்தை கச்சிதமாகவே முடித்தபடி சாமியார் தனது 'சப் மெஷின் கன்னை பழையபடி தோற்பைக்குள் வைத்தவாறே, அநபாயன் பக்கம் திரும்பி மெல்லியதொரு இளநகையைத் தவழவிட்டார்.


அத்தியாயம் பத்து: மண்ணின் குரல்!

நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன் -இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த இராணுவத்தினரையே பார்த்தபடி திக்பிரமை பிடித்தவன் போலிருந்த அநபாயனைப் பிடித்து உலுக்கிய சாமியார், "தம்பி சும்மா நிற்பதற்கு நேரம் இதுவல்ல. உடனடியாக ஊரவர்க்கு எச்சரித்திட வேண்டும். அந்தப் பேய்கள் வந்து ஊரையே எரிக்கப் போகின்றார்கள்." என்றவர், ராணுவத்தினரின் சப் மெஷின் கன்களைத் தூக்கி ஜிப்பில் போட்டவர் தானும் பாய்ந்தேறினார்.

"சாமியார்! நானும் உங்களுடனே வருகின்றேன்” என்றபடியே அநபாயனும் ஜீப்பினுள் பாய்ந்து ஏறிக் கொண்டான். ஜீப்பிலே சென்று ஊரவர்களை எச்சரித்தார்கள்.

செல்லம்மாவிடமும் சாரதாவிடமும் அநபாயன் விடைபெற்றுக் கொண்டு "சாமியாருடனேயே அநபாயனும்  ஜீப்பில் ஏறிக்கொண்டான். உணர்ச்சிப் போராட்டங்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணங்களிற்கு திகில் படர்ந்த சூழ்நிலை இடம் தரவில்லை.

சாமியாரைப் பொறுத்தவரையில் இராணுவத்தினரைக் கொன்றதில் அவ்வளவு விருப்பமில்லை; ஆயினும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது சுடுவதைத் தவிர, விட்டிருந்தால் அவர்களிருவரையும் அவர்கள் முடித்திருப்பார்கள்.

"சாமியாரே! இப்படி செய்தாலென்ன..” என்ற அநபாயனை கேள்விக் குறியுடன் நோக்கினார் சாமியார்.

"எப்படியும் இக்கிராமத்திற்கு இராணுவத்தினர் வருவதற்கு நேரமெடுக்கும். அதற்கிடையில் இறந்த இராணுவத்தினரை எங்காவது ஒதுக்குப்புறமான இடத்தில் கொண்டு போய்ப் புதைத்துவிட்டாலென்ன."

"அதுவும் நல்ல யோசனைதான்." என்றபடியே சாமியார் ஜீப்பை மீண்டும் மணற் குன்றருகே திருப்பினார்; இரத்த வெள்ளத்தில் கிடந்த இராணுவத்தினரைத் தூக்கி  ஜீப்பினுள் போட்டபடியே, மணலைக் கொண்டு பரவியிருந்த இரத்தக் கறைகளை மறைத்தார்கள். அதற்கு மேல் செடி, கொடிகளைப் பிடுங்கிப் பரப்பினார்கள்.

மறுகணம், மின்னல் வேகத்தில் ஜீப் அக்கிராமத்தை விட்டு விரைந்தது.

இரண்டு நாட்களின் பின்னர், மனித நடமாட்ட மெதுவுமற்ற கடற்கரைப் பகுதியொன்றில் அநாதரவான நிலையில் வெறும் ஜீப் மட்டும் கண்டு பிடிக்கப்பட்டது. சிறிலங்கா வானொலியோ "வடபகுதிப் பயங்கரவாதிகள் நான்கு இராணுவத்தினரைக் கடத்திக் கொண்டு, இந்தியாவுக்குத் தப்பி விட்டதாக பாதுகாப்புப் படைகள் ஐயுறுவதாக" அடிக்கொரு தரம் அலறியது.

"ஐயோடியம்மா. இப்படி அவன் என்ர வயித்திலை குண்டைப் போட்டு விட்டானேயடியம்மா." என்று அடிக்கொரு தரம் புலம்பியபடியிருந்த செல்லம்மாவைப் பார்க்கையில் சாரதாவிற்குப் பாவமாகவிருந்தது.

"அம்மா கவலைப்படாதீர்கள். உங்கள் மகனை நினைத்து நீங்கள் பெருமைப்பட வேண்டும்." என்று அவளால் ஆறுதல் கூற முடிந்த போதும் உள்ளூர அவளும் பிரிவுத் துயரால் வதங்கிக் கொண்டுதாணிருந்தாள். மீண்டும் இனி என்று அவனைப் பார்ப்பேனோ" என்ற நினைவே அவள் இதயத்தைக் குத்திக் குதறி நோகடித்தது. நடராஜா வாத்தியாரோ வழக்கம் போல், எதிலும் பற்றற்றவராக வெறித்த பார்வையுடன் வளைய வந்து கொண்டிருந்தார்.

ஆனால் அதே சமயம் அநபாயனோ. புதியதோர் உலகினப் படைப்பதற்கான புனிதப் போரினில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டிருந்தான். சாமியார் வேறு யாருமல்லர், ஈசுவரனே, கோடானு கோடி உலகங்களைக் கொண்டதான பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு சிறு மூலையில் அணுத்துகளென சுழன்று கொண்டிருக்கும் இந்தப் புவியுலகோ வினாடிக்கு வினாடி போர்களாலும் இரத்தக் களரிகளாலும் வெடித்துக் கொண்டு தானிருக்கின்றது. அன்று தொட்டு இன்று வரை அதர்மத்திற்கும், தர்மத்திற்குமிடையிலான மோதல்கள் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விதமான பரிமாணங்களில் வெடித்துக் கொண்டிருந்தன. அடக்கு முறைகளும், ஒடுக்கு முறைகளும், வர்க்கச் சிதறல்களும். மனிதனே மனிதனை அழித்துக் கொண்டுதாணிருக்கின்றான். அதர்மச் சக்கரத்துள் உலகே அழிந்து விடுமோ என்று கூட அச்சம் படும்படியாக முரண்பாடுகள் முற்றி வெடித்த வண்ணமுள்ளன. ஆனால் தர்மத்தின் கரங்கள் சோர்ந்ததாக, தோற்றதாக வரலாறேயில்லை.

அதோ பாருங்கள். மத்திய கிழக்கு நாடுகளில், எல்சல்வடோர்களில், தமிழீழத்தினில். உலகின் நாலா பக்கங்களிலுமே, அடக்கு, ஒடுக்கு முறைகளிற்கெதிராக ஒரு மக்கள் கூட்டம் தர்மத்திற்கான வேள்வித் தீயினில் குதித்துப் போராடிக் கொண்டிருப்பதை. வறட்டு வேதாந்தத்தினுள்ளும், அடிமைத்தளைகளிற்குள்ளும், அறியாமையினுள் மாண்டிருக்கும் மானுடத்தை புத்துயிர்ப்படையைச் செய்வதற்காக, நடுக்கும் குளிரினுள், அர்த்த ராத்திரிகளில், கொடிய வனாந்தரங்களில், குகைகளில், மலைச் சாரல்களில், காடுகளில், ஊண் உறக்கமின்றி, இரவு பகல்களாக, ஏற்றத் தாழ்வுகளால், நாற்றமெடுத்துச் சீழ்பிடித்துச் சிதைந்து கிடக்கும் சமுதாயத்தினைச் சீர்திருத்துவதற்காக அவர்கள் ஜீவமரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தாம் பிறந்த மண்ணில், தாண்டவமாடிடும் அநீதியினை, அக்கிரமத்தினை அழித்தொழிப்பதற்காக, மலிந்து கிடக்கும் பொய்மையினை ஒழித்திடுவதற்காக, புழுதியில் புரண்டு கிடக்கும் பெண்மையின் புனிதத்தினைப் பேணுவதற்காக, சிதைந்துவிட்ட குடும்ப உறவுகளைச் சீராக்குவதற்காக, இழந்துவிட்ட அமைதியையும் இன்பத்தினையும் மீண்டும் நிலை நிறுத்துவதற்காக, மண்ணுடனான தமது கடமையினைச் செய்வதற்கான புனிதப் போரினில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த மண்ணின் மைந்தர்கள் நடத்தும் போராட்டம் இருக்கின்றதே. அது என்றுமே தோற்றுவிடுவதில்லை; இவர்கள் இறந்து விடலாம்; இவர்கள் ஏற்றி வைத்த இலட்சியச்சுடர்கள் அணைந்து விடுவதில்லை; விதைத்த தர்மப் பயிர்கள் மடிந்து விடுவதில்லை; இவர்களது உடல்கள் இம்மண்ணுடன் கலந்து விடுகையில். இம் மண்ணில் வீசும் தென்றலும் "புரட்சிப் பண் பாடி நிற்கும்; துளிர்க்கும் புற்களும் "போர்ப்' பண்ணிசைத்து விடும்; மலையருவிகள், குன்றுகள். இங்கெல்லாம் இம் மண்ணின் குரல் கேட்கின்றதே. உங்களிற்கு அவை புரிகின்றதா? "புரட்சிகள் வெடிக்காமல் புதுயுகங்கள் பிறப்பதில்லை; போர்ப்பறைகள் முழங்காமல் தார்மீகம் செழிப்பதில்லை."

ஆமாம்! என்று இம்மண்ணில் அநீதியும், அக்கிரமும் அழிந்தொழிந்து விடுகின்றதோ, பொய்மை உருக்குலைந்து போகின்றதோ, பெண்மை போற்றிடப்படுகின்றதோ, குடும்ப உறவுகள் சீர்பெற்று விடுகின்றனவோ, அன்று வரை இம்மண்ணின் குரலும் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே! அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே! அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி
என் வாயுற வாழ்த்தேனோ." - பாரதியார் -

- முற்றும் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நாவல்; மண்ணின் குரல் (1-5)