- தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே 'கணங்களும், குணங்களும்' நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக 'பதிவுகளி'ல் வெளியாகின்றது. -


தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியாயம் ஒன்று: ஒரு பயணத்தின் தொடக்கம்


ஏழு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை அவ்வளவு விரைவாகக் காலம் ஒடிக்கொண்டிருக்கிறது. இரவும் பகலும் மழையும் வெயிலும்.பருவங்கள் மாறியபடி கூடவே காலமும் விரைந்தபடி...முடிவற்ற வாழ்வின் பயணங்களிற்கு முடிவு தானேது. விடிவும், முடிவும், முடிவும். விடிவும்.தொடக்கமே முடிவாகவும் முடிவே தொடக்கமாகவும்.தொடரும் பயணங்கள். தொடர்ந்தபடி.தொடர்ந்தபடி. என் வாழ்க்கையில் எதிர்பாராமல் எதிர்ப்பட்டுவிட்ட.கடந்த ஏழு வருடங்கள் வாழ்வில் மறக்கமுடியாதபடி..ஒரு விதத்தில் களங்கமாகப் படிந்துவிட்ட காலத்தின் சுழற்சிகள்.எதற்காக? ஏன்? இவ்விதம் ஏற்பட்டது. சிந்தித்துப் பார்க்கிறேன். சில சந்தர்ப்பங்களில் சில தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. உள் மனத் தூண்டுதல்களின் ஆவேசத் தூண்டுதலின் முன்னால் அறிவு அடிபணிந்து விடுகிறபோதுகளில் தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. செய்துவிட்ட தவறுகளிற்காகப் பின்னால் மனது கிடந்து அடித்துக் கொண்டுவிட்டபோதும். நடந்த தவறு என்னவோ நடந்ததுதானே. அதன் பாதிப்பும் விளைவுகளும் ஏற்படுத்திவிடும் ஆழமிக்க காயங்களிற்கு மருந்து.

பஸ் விரைந்து கொண்டிருக்கின்றது. வவுனியாவை நோக்கி.பின்புறத்தில்.மூலைசீட்டில் அமர்ந்தபடி யன்னலினூடு விரையும் காட்சிகளைப் பார்த்தபடி, சிந்தனையில் மூழ்கியவனாக சிலையாக உறைந்து போய்க்கிடக்கின்றேன். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான சிந்தனைகள். உரையாடல்கள். அத்தனை பேரையும் தாங்கிக் கொண்டு அடிக்கொரு தரம் தரிப்பிடங்களில் இறங்க வேண்டியவர்களை இறக்கி, ஏற வேண்டியவர்களை ஏற்றி.வெற்றிலையைக் குதப்பித் துப்பியவாறே "அண்ணே ரைட்" என்ற கண்டக்டரின் குரலுடன்.குலுக்கலுடன் பஸ் விரைந்து கொண்டிருந்தது. பழைய நினைவுகளில் மனது மூழ்கிப் போய்விடுகின்றது. கடந்த ஏழு வருடங்களாக நேற்றுவரை நானொரு சிறைப்பறவை. நான் செய்து விட்ட அந்தக் குற்றத்திற்கு இந்த எழு வருடங்கள் போதவே போதாது. ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் தீரக்கூடிய பாவத்தையா நான் செய்திருக்கின்றேன். எந்த ஒரு நாகரீக மனிதனுமே செய்யக்கூசுகின்ற அஞ்சுகின்ற அந்தக் காரியத்தைச் செய்ய என்னால், மக்களிற்காக வாழ்ந்து மடிந்த தியாகி ராஜரத்தினத்தின் மகனால் எப்படி முடிந்தது? எப்படி முடிந்தது?

கடந்த ஏழு வருடங்களாக ஓயாமல் என்னையே கேட்டுக் கேட்டு வெந்துபோன என்னால் சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் முடியவில்லையா அல்லது. நேர்மை, அன்பு, பண்பு, என்று அடிக்கொரு தரம் எண்ணிக்கொண்டிருந்த என் மனத்தின் ஆழத்தே அவ்வுணர்வுகளிற்கு மாறாக, மிருக உணர்வுகள் உறைந்து கிடக்கின்றனவா? இல்லாவிடில் என்னால் எப்படி அப்படிச் செயற்பட முடிந்தது? பார்க்கப்போனால் மனிதனும் பாலுண்ணி வகுப்பைச் சேர்ந்த ஒரு மிருகம் தானே. அந்த மிருக இயல்புகள் இன்னமும் உள்மன ஆழத்தே உறைந்து கிடக்கத்தான் செய்கின்றனவோ. இன்று நான் வவுனியா நோக்கிச் செல்வதற்குரிய காரணம்.

கடந்த ஏழு வருடங்களாக என் மனதினுள்ளே புகைந்து கொண்டிருந்த வேதனைகளிற்கு ஒரு முடிவு கட்டும் நோக்குடன் தான் இன்று என் பயணத்தை தொடங்கியிருக்கின்றேன். இதில் எனக்கு வெற்றி கிட்டுமா? கிட்டாதா? என்பதில்தான் என் எதிர்காலமே ஒரு விதத்தில் தங்கியிருக்கின்றது என்று கூடச் சொல்லலாம். நான் செய்துவிட்ட பாவத்திற்கு ஓரளவாவது பிராயச்சித்தம் கிடைக்குமென்றால் அது இந்தப் பயணத்தின் வெற்றியில்தான் தங்கியுள்ளது. முடிந்து விட்டதாகக் கருதப்பட்ட என் வாழ்வின் தொடக்கமே இந்தப் பயணத்தில் தான் தொடரவுள்ளது.

சுப்பிரமணிய வாத்தியாரின் ஞாபகம் நிழலாடுகின்றது. நெந்றியில் நீறும், சந்தனப் பொட்டுடன், வேட்டியும் நாஷனலுமாக. பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கும் சுப்பிரமணியவாத்தியார், ஆசிரியர் என்பதற்கே வரைவிலக்

கணமாகத் திகழும் சுப்பிரமணிய வாத்தியார். கருணைக் கடலாகக் காட்சியளிக்கும் சுப்பிரமணிய வாத்தியார்.

சிறுவயதிலேயே தாயையும் தந்தையையும் இழந்துவிட்ட என்னை, ஏழ்மையென்றவுடனே மாயமாக மறைந்து விட்ட உறவினர்க்கு மத்தியில் அப்பாவின் பால்ய காலத்து சினேகிதரான சுப்பிரமணிய வாத்தியார் தன் பிள்ளையைப்போல் தன் வீட்டிலேயே வைத்து வளர்த்த கதை. அந்தத் தூய உள்ளத்திற்கு என்னால் எப்படி அவ்விதம் கெடுதல் செய்ய முடிந்தது? படிப்பில் முதலாவதாக வந்துகொண்டிருந்த என்னைப்பற்றி எல்லோரிடமும் அடிக்கடி பெருமிதமாகக் கூறிச் சந்தோசப்படும் சுப்பிரமணிய வாத்தியாருக்கு நான் செய்த கைம்மாறு இருக்கின்றதே.ஒரு போதுமே பிராயச்சித்தம் செய்ய முடியாத மாபெரும் குற்றமல்லவா. 'உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதென்பார்கள். அதனைச் செய்துவிட்ட மாபாவி நான். 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பார்கள். நினைக்க மறந்துவிட்ட துரோகியல்லவா நான். வாத்தியாரின் ஞாபகத்துடன் பின்னிப் பிணைந்தபடி வாத்தியாரின் ஒரே புதல்வி காயத்ரியின் ஞாபகம் பரவுகின்றது.இரட்டைப் பின்னல்களுடன், பொட்டிட்டபடி, தழையத் தழைய புடைவை அசைய,  குத்து விளக்காக வளைய வந்து கொண்டிருந்த காயத்ரி, சிறு உயிரிற்குக் கூட தீங்கே நினைக்காத, கள்ளங்கபடமற்ற அப்பாவி காயத்ரி. பண்பிற்கும் அன்பிற்கும் இலக்கணமாக விளங்கிக் கொண்டிருந்த காயத்ரி.

பழைய திரைப்படப்பாடலான ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி” என்ற பாடலும் "அமுதைப் பொழியும் நிலவே" என்ற பாடலும் அவளிற்கு பிடித்தமானவை. மிக அற்புதமாக, இனிமையாக அப்பாடல்களை அவள் பாடுவது. இப்பொழுது கூட காதில் கேட்பது போலிருக்கின்றது. அந்த தூய உள்ளங்களிற்கு நான் செய்துவிட்ட துரோகத்தனத்துக்கு, பாவத்திற்கு பிராயச்சித்தம் நாடித்தான் , பாவமன்னிப்பு வேண்டித்தான் இன்று நான் வவுனியா நோக்கிய என் பயணத்தை தொடங்கிவிட்டிருந்தேன்.

ஜெயில், கார்ட் ராமலிங்கம் என் மேல் வைத்திருந்த நன்மதிப்பின் காரணமாக, அவன் மூலமாக சுப்பிரமணிய வாத்தியார் வவுனியாவிலிருப்பதாக அறிந்திருந்தேன். அவன் அவர் இருப்பதாகக்  கூறப்படும் வீதியின் முகவரியையும் தந்திருந்தான். கடந்த ஏழு வருடங்களில் நான் சிறை வாழ்க்கையை பிரயோசனமாக்கும் பொருட்டு, சிறையிலிருந்தவாறே பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகளுடன் ஒரு நாவலும் எழுதி என் எழுத்தாற்றலை வளர்த்திருந்தேன். என் மன உணர்வுகளைக்கொண்டு வடித்திருந்த சில சிறுகதைகள், கவிதைகள், பிரபல பத்திரிகைகளான “எமது தாயகம்", 'தினமுழக்கம் முதலியவற்றின் வாரப்பதிப்புகளில் வெளிவந்து பாராட்டுப் பெற்றிருந்தன.

என் எதிர்காலத்தை ஆசிரிய எழுத்துத்துறைகளில் ஈடுபடுத்துவதாக முடிவு செய்திருந்தேன். சுப்பிரமணிய வாத்தியாரிடமும் காயத்ரியிடமும் பாவமன்னிப்பு கிடைக்கும் பட்சத்தில் மனநிறைவுடன் என்னால் எதிர்காலத்தை எதிர்நோக்க முடியும்.இல்லாவிட்டால் காலம் முழுவதும் செய்துவிட்ட குற்றத்திற்காக குமைந்து குமைந்து வாழ்வதையே தண்டனையாக ஏற்றுக்கொண்டு அதற்குப் பிராயச்சித்தமாக இச்சமுதாயத்திற்கு என்னால் செய்யக்கூடிய சேவையைச் செய்தவாறே காலத்தைக் கழிப்பேன்.

சுற்றிவரப் பரந்து தொடர்ந்திருந்த காட்டிற்கிடையில் தனிமையில் பஸ் விரைந்து கொண்டிருந்தது. மாம்பழத்துக் குருவிகள், கொண்டை விரிச்சான், குக்குறுபான்களென்று பல்வேறுபட்ட பறவைகள் ஆங்காங்கே பறந்து மறைந்தன. வானரங்கள் பஸ்ஸின் இரைச்சலைக் கண்டதும் சப்தமிட்டவாறே கொப்புகளில் தாவிக்குதித்தன. பஸ் மாங்குளத்தை கடந்து விட்டிருந்தது.

இன்னும் ஒரு மணிநேரத்தில் வவுனியாவை அடைந்துவிடும்.

மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கிவிட்டிருந்தது. வானம் சிவந்து கிடப்பது இடையிடையே மரங்களினூடு தெரிந்தது. மெல்லிய தென்றலின் தாலாட்டு பஸ்ஜன்னலூடு உடலைத் தொட்டுச் சென்றது. இயற்கையின் மெல்லிய தாலாட்டு மனதிற்கு சற்றே ஆறுதலைத் தந்தது. இயற்கையின் குழந்தையான மனிதன், இயற்கையுடன் அமைதியாக, வாழ்வானென்றால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.அந்த ஆதிகாலத்திலிருந்த அமைதி, எளிமை, எல்லாமே நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக கருதப்படும் இன்றைய காலகட்டத்தில் மறைந்துவிட்டது போல் படுகிறது. நிச்சயமாக அன்றுடன் ஒப்பிடும் போது மனிதனின் அறிவு எத்தனையோ பலமடங்கு விருத்தியடைந்துள்ளது தான்.ஆன்ால் அந்த அறிவை மனிதன் சரியான வழியில் தான்  பாவிக்கின்றானா.என்பதில் தான் சந்தேகமாக இருக்கிறது.

இன்னும் சிறிது நேரத்தில் பஸ் நகரை வந்தடைந்துவிடும். ஜெயிலில் வேலை செய்ததில் கிடைத்த சிறுதொகைப்பணமும் எனது அத்தியாவசிய ஆடைகளும், பாரதியாரின் கவிதை நூலையும் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. பயணத்தைத் தொடங்கிவிட்டேன். ஏதோ ஒரு வழி தென்படுமென்ற நம்பிக்கை மட்டும் நிறையவே இருந்தது. தங்குவதற்கு ஒரு இடம் பார்க்கவேண்டும்.அதிலிருந்தபடி வேலையொன்றைத் தேடவேண்டும். அதற்கிடையில் சுப்பிரமணிய வாத்தியாரைச் சந்திக்கவேண்டும்.அதன்பிறகு மற்றெல்லாம்.


பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியாயம் இரண்டு: வள்ளி

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)பஸ் வவுனியாவை அடைந்தபோது இரவு நன்கு இருட்டி விட்டிருந்தது. மணி ஏழைத் தாண்டியிருந்தது. அருகிலிருந்த 'சாப்பாட்டுக் கடை யொன்றில் தேநீர் அருந்தி விட்டு, மீண்டும் பஸ்நிலையம் வந்தேன். இந்தச் சமயத்தில் சுப்பிரமணிய வாத்தியாரிடம் போவதென்பது முடியாத காரியம். விடிந்ததும் தான் பார்க்கவேண்டும். அதுவரையும் சினிமா இரண்டாம் காட்சி முடியும் வரையில் நகரில் சுற்றிப் பார்க்கலாம். அதன்பிறகு விடியும்வரை பஸ் நிலையத்தில் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் மற்றவற்றைக் கவனிக்கலாம்.

இரவில் நகர் அமைதியாகவிருந்தது. நகரில் கடைகள் மூடப்பட்டு, சாப்பாட்டுக் கடைகள், தவறணைகள் தவிர, அமைதி குடிகொண்டிருந்தது. பஸ்நிலையத்தில் ஒரு சில பிரயாணிகள் தவிர, சினிமாத் தியேட்டர்களிற்கு முன்னால் சுண்டல் வடை விற்பவர்கள் தவிர மனித நடமாட்டம் பெரிதும் குறைந்து காணப்பட்டது. சாப்பாட்டுக் கடையொன்றிலிருந்து சவுந்தரராஜனின் புதிய "வானம் புதிய பூமி திரைப்படப்பாடல் கேட்டபடியிருந்தது. ஒருவிதத்தில் எனக்கும் இந்நகரில் புதிய அனுபவம்தானே.

புதிய வாழ்வை நாடிய, புதியதொரு பயணம்தானே. சந்தியில் சினிமா விளம்பர பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. வானில் முழுமதி பவனி வரத் தொடங்கிவிட்டிருந்தான். மெல்லிய தென்றலில் கலந்து கிடக்கும் இருளும், சனசந்தடி குறைந்து அமைதியில் துயிலும் நகரும், ஓரிரு வாகனங்களும், பறவைகளும் அங்குமிங்கும் அலைகையில், மனதில் இனம் புரியாததொரு நிறைவு ஏற்பட்டது.

அங்குமிங்குமாக அலைந்து திரிந்து விட்டு தியேட்டர் முன்னால் சுண்டல், வடை விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் வந்தேன். வயது இருபது மதிக்கும்படியான உருவம், கட்டான உடல், காந்தம் போன்ற ஆனால் துறுதுறுப்பான கண்கள்.  இருபத்தி ஐந்து காசிற்கு சுண்டல் வாங்கி மென்றபடியே பேச்சுக் கொடுத்தேன்.

'வியாபாரமெல்லாம் எப்படி.

"என்ன பொல்லாத வியாபாரம்' என்று சலித்துக் கொண்டவள், என்னை ஒருமுறை கூர்ந்து வியப்புடனே பார்த்தபடியே,

'ஐயா ஊரிற்குப் புதுசோ' என்றாள்.

"ஆமாம். இங்கு எனக்குத் தெரிந்த ஒருவரைச் சந்திக்க வந்தனான். நன்கு இருட்டிவிட்டது. விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்"

"இந்த இருட்டிலை.வானமிருண்டு கிடக்கிறதைப்பார்த்தால் மழை வேறு வரும் போலையிருக்கே.வேண்டுமானால் ஐயா நீங்க என் குடிசையிலை விடியும்வரை தங்கலாமே."

இவள் மட்டும் எந்த காரணத்திற்காக, எங்கிருந்து நான் வந்திருக்கிறேனென்பதை மட்டும் அறிந்திருப்பாளென்றால். இவ்விதம் கேட்டிருப்பாளா. இவ்விதம் எண்ணினேன். மறுகணம் அவ்வெண்ணத்தை விலக்கியபடியே அவள் யோசனையும் சரியாகத்தான் படுவதாக எண்ணினேன்.

'உனக்கெதற்கு வீண் சிரமம்' என்று நான் இழுப்பதைப் பார்த்தபடியே இலேசாகச் சிரித்தாள்.

ஆனால் எனக்குப் பெரிதும் ஆச்சர்யமாகவிருந்தது என்னவென்றால் எடுத்த எடுப்பிலேயே அவள் என்னைத் தன் வீட்டிற்கு அழைத்த விதம் தான்.

"அது சரி, உன் பெயர் என்னம்மா!"

பெயரும் பொருத்தமாகத்தானிருக்கிறது. இவ்விதம் மனதினுள் எண்ணிக்கொண்டேன்.

'சரி வள்ளி நானோ வேற்று மனுஷன்.அப்படியிருக்க இந்த இருட்டிலை.என்னைப்பற்றிய எதுவுமே தெரியாமல் வீட்டிற்கழைக்கிறாயே..எப்படி"

இவ்விதம் என் சந்தேகத்தைக் கேட்டும் வைத்தேன். அதற்கும் அவள் சிரித்தபடியே கூறினாள்.

"ஐயா..ஏழைகளிற்கு பயப்பட என்ன இருக்கு.மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயப்பட."

இவ்விதம் கூறியவள் இலேசாக மீண்டுமொருமுறை சிரித்தாள்.

நான் சிந்தனையில் ஆழ்ந்து விட்டதைப் பார்த்து அவள் கேலியாகச் சிரித்தாள்.

'ஏன் ஐயா.பயந்துவிட்டீர்களா.உங்களிற்கு எந்தவிதப் பயமே வேண்டாம். தாராளமாக நீங்கள் வீட்டிற்கு வரலாம்"

என் சுயகெளரவத்தை அவளது பதில் உலுக்கி எழுப்பியது.  உன் வீட்டிற்கு வருவதில் எனக்கென்ன வள்ளி .பார்க்கப்போனால் உன்னைவிட வாழ்வில் அடிபட்டுப்போன பாவாத்மா நான்' என்றேன்.

இரவு இரண்டாம் காட்சி முடியும் வரை அவளுடனேயே கதைத்தபடி இருந்தேன். நகரில் வீடு ஏதாவது வாடகைக்கு எடுக்க முடியுமா என்பது பற்றியும் விசாரித்து வைத்தேன்.

ஆனால் வேலையெதுவுமில்லாமல் வாடகையைப்பற்றி யோசிக்க மலைப்பாகவிருந்தது. சிறிது நேரத்திற்குள்ளேயே என் பொருளாதார நிலைமையினை நன்கு புரிந்துகொண்டவளாக வள்ளி கூறினாள்.

"ஏன் ஐயா...இப்படிச் செய்தாலென்ன.இந்த வன்னி மண்ணில் காட்டிற்கா பஞ்சம். காடழித்துத் தான் நானும் குடிசை போட்டேன். நீங்களும் சிறிதுகாலம் என் கூடவேயிருந்து கொண்டு காடழித்து குடிசையொன்றைப்போட்டு கமம் செய்தாலென்ன".

அவ்விதமாக சூழல்கள் சில சில உறவுகளைச் சில கணங்களில் நிர்ணயித்து விடுகின்றன. புதிய இடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுவிட்டு இப்புதிய உறவு பற்றி எண்ணிப் பார்த்தேன். முதலாவதாக என் வாழ்வின் எதிர்காலத்தைச் செப்பனிட பேசவேண்டியிருந்தது. அதற்கிடையில் உடனடியாக என்னை நிலைநிறுத்த வேண்டியிருந்தது.

‘என்ன ஐயா, யோசிக்கிறே.அறுபத்தி ஐந்திலை வீசிய புயலோட ஆயிரக்கணக்கிலை இங்கு வந்து காடழித்து குடிசை போட்டு கமம் செய்தவங்க எத்தனை பேர் இன்றைக்கு லட்சாதிபதி தெரியுமா? நானும் என் பாட்டியும் அப்படி வந்து சேர்ந்தவங்க தான். இதற்கு முன்னால் நீர்க்கொழும்பில் இருந்தோம்."

"அப்ப நீயும் இங்கே வந்து மூன்று வருசம் ஆச்சுதுன்னு சொல்லு."

'..நீ சொல்வதைத்தான் யோசிக்கிறேன். எதற்கும் நாளைக்கு நான் வந்த முக்கியமான விசயத்தைக் கவனித்துவிட்டுத்தான் என்னால் சரியாக முடிவு செய்யமுடியும் வள்ளி

வள்ளியின் குடிசை நகரிற்கு அண்மையில், கொழும்பு செல்லும் பாதையில் புத்த விகாரைக்கு அண்மையாக பரந்து கிடந்த காட்டுப்பகுதியிலிருந்தது. ஏறத்தாழ நூறு நூற்றைம்பது குடிசைகள் வரையில் அப்பகுதியில் அமைந்திருந்தன. எல்லோருமே கூலி வேலையும் வள்ளியைப்போல் எதாவது சிறுதொழில் செய்து வாழும் ஏழை மக்கள் தான். அப்பகுதி மக்களில் அனேகமானவர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் பகுதிகளில் இருந்து வந்து குடியேறியிருந்தார்கள். கள்ளங்கபடமற்றவர்கள், ஏழ்மையின் அரவணைப்பில் அயர்ந்து கிடந்தார்கள். வாழ்வின் போக்குகளை என்னவென்பது? ஒரு பயணத்தை முடித்துவிட்டு இன்னுமொரு பயணத்தை தொடங்க அடியெடுத்து வைத்திருந்த என்னை, இக்காலம் இன்னுமொரு பயணத்துடன் எவ்வளவு இலகுவாகப் பிணைத்துவிட்டது.

‘என்ன ஐயா, எதைப்பற்றி யோசனை." வள்ளிதான் கேட்டாள்.

எப்போதோ படித்திருந்த புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து பொன்னகரத்தில் வரும் அம்மாளுவின் ஞாபகம் தான் ஏனோ எனக்கு வள்ளியைப் பார்க்கையில் ஏற்பட்டது. அதில் வரும் அம்மாளுவுக்கும் வள்ளிக்கும் எந்த விதத்திலும் எதுவிதமான ஒற்றுமைகளும் குணாம்சத்தில் இருந்ததோ இல்லையோ, அவர்களைச் சுற்றிப் படர்ந்து கிடந்த ஏழ்மையிலும் அதன் விளைவாக ஏற்பட்டிருந்த உறுதி கலந்த துணிச்சலிலும் நிரம்பவும் ஒற்றுமை இருந்தது. காலத்தின் போக்குகளை ஒரு முறை எண்ணிப் பார்த்தேன். அவ்வளவுதான் வள்ளி சற்றுமுன்னால் தான் இவளை நான் என் வாழ்வில் சந்தித்திருந்தேன். அதற்குள்ளாக, எவ்வளவு இயல்பாக, என்னால் இவளுடன் பழக முடிகின்றது. பேசமுடிகின்றது.

பிரயாண அலுப்பினால் தூக்கம் கண்களைச் சுழட்டியபடி வந்தது. வள்ளி தந்தவற்றை அத்தூக்கக் கலக்கத்திலேயே சாப்பிட்டுவிட்டு அப்படியே அயர்ந்து தூங்கிப்போனேன். எவ்விதம் எப்போ தூங்கினேன் என்பதே தெரியாத நிலை. .அவ்வளவு பிரயாணக் களைப்பு.அலுப்பு.


பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியாயம் மூன்று:  "இன்று புதிதாய்ப் பிறந்தோம்”

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)வாழ்வுதான் எத்தனை விசித்திரமானது. என் வாழ்வின் ஒரு கட்ட பயணத்தை முடித்துவிட்டு, புதிய பயணத்தை ஆரம்பித்தவனாக வந்த என்னை எவ்விதம் இச்சூழல் இன்னுமொரு பயணத்தில் இலாவகமாகப் பிணைத்துவிட்டது வாழ்வை இன்னுமொரு கோணத்தில் பார்க்கும்படி எவ்விதம் என்னைக்கொண்டு வந்து நிறுத்திவிட்டது. அன்றாட வாழ்வே பிரச்சனையாக ஒவ்வொரு நாளுமே போராட்டமாக வாழும் இந்த மக்கள்.இவ்வளவு நெருக்கமாக விரிவாக நான் இதுவரை உலகை இன்னுமொரு கோணத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இதுவரையில் நான் எவ்விதம் வெறும் சுயநலக்காரனாக மட்டுமே, என் உணர்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்தி வாழ்ந்து விட்டிருந்தேன். சாதாரண ஒரு மத்திய வர்க்கத்து வாழ்க்கை வட்டத்துடனான பரிச்சயமே கொண்டிருந்த என்னை, முதன்முதலாக ஏழ்மையின் அவலங்களைப்பற்றி ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டி விட்டிருந்தது எனது இந்தப் புதிய அனுபவமும் சூழலும்.வாழ்வையே பிரச்சனைகளின் போர்க்களமாக எதிர்நோக்கும் இம்மக்களுடன் ஒப்பிடுகையில் என்னைப் போன்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவ்வளவோ அற்பத்தனமானவையாக, அர்த்தமற்றவையாக அல்லவா தென்படுகின்றன. சாதாரண குடும்ப உறவுகளே, நிலவும் பொருளாதாரச் சூழலினால் சிதைந்துவிட, வாழ்வையே அதன் பயங்கரங்களையே தனித்து எதிர்நோக்கி நிற்கும் இந்த மக்களைப் பார்க்கையில் என்னையறியாமலேயே என் நெஞ்சில் ஒருவித பரிவு கலந்த வேதனை இழையோடியது. பெரும்பாலானவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கின்றார்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்கின்றார்கள்.

எனக்கு என்னை நினைக்கையிலேயே ஒரு கணம் வெறுப்பாக வந்தது. இவ்வளவு காலமும் எவ்விதம் நான் என் தனிமனித உணர்வுகளையே பூதாகாரமாக்கி, அதற்காகவே வாழ்ந்து விட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக நான் இழைத்துவிட்ட அந்தத் தவறும், தண்டனையும். இதுவரை காலமும் வாழ்ந்து வந்த எனக்காக, இந்தக் கருணாகரனிற்காக, இனியும் நான் தொடர்ந்தும் மனதினை அலட்டிக் கொள்ளப்போவதில்லை. சென்றதினி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்! தீமையெல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா ஆம்.நானும் இன்றுமுதல் புதிய மனிதன். எனக்கு எல்லாமே தெளிவாக இருக்கிறது. இதுவரை காலமும் சிக்கலாகக் காட்சியளித்த வாழ்வு, இக்கணத்தில் சிக்கல்கள் அவிழ்ந்து,

ஒழுங்காக எளிதாகப் புரிகின்றது. இதுவரை காலமும் என் வாழ்வில் நிகழ்ந்த விளைவுகள் அனைத்திற்கும் உரிய சகல பொறுப்புகளையும் நான் மனப்பூர்வமாகவே ஏற்றுக் கொள்கிறேன். அவற்றால் ஏற்பட்ட அனுபவங்களைப் பாடமாக்கி, என் புதிய வாழ்வில் இன்றுமுதல் நான் அடியெடுத்து வைக்கின்றேன். மனது முன்னெப்போதையும் விட, மிக மிக லேசாக இன்பமாக தெளிவாக, உறுதியாக விளங்குகின்றது. நான் வாழும் இந்த உலகம், இந்த ஆகாயம் தொலைவுகளில் கோடு கிழிக்கும் பறவைக் கூட்டங்கள், ஒளிக்கதிர்களை வாரி வழங்கும் ஆதவன் தண்ணென்று ஒளிவீசி வரும் முழுநிலா வருடிச் செல்லும் வருணபகவான் இரவுகளில் கண்சிமிட்டிச் சிரிக்கும் நட்சத்திரப் பெண்கள்.இந்த மரம், மக்கள், மண்.எல்லாமே இன்பமாக என்னில் ஒரு பகுதி போன்று அல்லது அவற்றின் ஒரு பகுதி நான் போன்றதொரு பரவசமாகத் தெரிகிறது.

திடீரென்று மனதினில் ஒரு காட்சி தென்படுகின்றது. அடிக்கடி என் கனவுகளில் தோன்றும் ஒரு காட்சி தான் அது.மனித நடமாட்டம் அரிதாகக் காணப்பட்ட ஆதிமானிடன் வாழும் ஒரு காலம் போன்றதொரு சூழல்.ஒங்கும் விருட்சங்கள்.சீறும் காற்று உறுமியோடும் புலி முதல் விலங்குகள்.ஓயாது பொழியும் மழை வெள்ளமாக அருவியாக பேராறாக பெருக்கெடுத்து.அலைக்கரம் கொண்டு சாடும் கடல்.இவற்றிடைய இயற்கையின் குழந்தையாய் நான் இந்தக் காட்சி என் மனதில் தோன்றியதும், அலுப்பாகச் சலிப்பாகக் காணப்பட்ட கணங்கள் அர்த்தம் நிறைந்தவையாக காணப்படுவது வழக்கம். அது ஏன் என்பதற்காக சரியான உளவியல் காரணம் எதுவாக இருக்குமோ எனக்குச் சரியாகத் தெரியாது.
ஆனால் இயற்கையில் குழந்தையான நீ.இயற்கையுடனான உன் வாழ்வை இழந்து இன்றைய செயற்கை முலாம் பூசப்பட்ட இயற்கையினுள் மாய்ந்து கிடக்கின்றாயே..அதுவே உள் பிரச்சனைகளின் உறையுள்.என்கின்ற தெளிவு கலந்த சிந்தனையின் விளைவாக இருக்கலாம்.

சிறை வாழ்க்கை என்னை ஏற்கனவே புடம் போட்டிருந்தது. ஆனால் இன்றைய இம்மக்களுடனான அனுபவமோ, என்னை மேலும் தெளிவுள்ளவனாக, சரியான திசையில் வாழ்வைக்கொண்டு செல்பவனாக மாற்றி வைத்தது. அதே சமயம் முன்னெப்போதையும் விட அதிகமாக இப்பொழுதோ சுப்பிரமணிய வாத்தியாரையும் காயத்ரியையும் சந்தித்து மனப்பூர்வமாகப் பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற உணர்வுகளும் எழுந்தன.
அவர்கள் என்னை மன்னிக்கிறார்களோ இல்லையோ அதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டியது என் கடமை. அதற்கு, மாற்றீடாக என்னால் செய்யக்கூடிய பிராயச்சித்தம் ஏதாவது செய்ய முடியுமென்றால்.பிராயச்சித்தம் செய்யக்கூடிய பாவத்தையா நான் செய்திருந்தேன்.ஆனால் அதற்காக நான் சும்மா குந்திக் கிடக்கப்போவதில்லை. என் புதிய வாழ்க்கைப் பயணத்தை மிக மிக நம்பிக்கையுடன் உற்சாகத்துடன் அனுபவ முத்திரையுடன் உறுதியுடன் தொடங்கப்போகின்றேன். எதிர்கொண்டிடப்போகின்றேன்.

ஆம்.பாரதி சொன்னதுபோல் "இன்று புதிதாய்ப் பிறந்தேன்"

இன்று நான் புதிதாய் பிறந்தேன்.வாழ்க்கை எவ்வளவு இன்பமாக நம்பிக்கை மிகுந்ததாக இருக்கிறது.


பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியாயம் நான்கு: மன்னிப்பா? மரணமா?

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)மாரிகாலம் தொடங்கிவிட்டிருந்தது. வன்னி, மாரியின் எழிலில் பூத்துக்குலுங்கிக் கிடந்தது. பச்சைப் பசேலென்று வயல்கள்.கரைமுட்டிப் பொங்கிக் கிடக்கும் குளங்கள்.அடிக்கடி வானம் இருண்டுவிடும். விண்ணைக்கீறிக்கொண்டு கொட்டும் மழைத்தாரைகள். மழையில் நனைந்தபடி உடலை ஒரு கணம் சிலிர்த்துவிட்டபடி, மரங்களிற்கு அடியில் ஒதுங்கும் மாடுகள், அசை போட்டபடி நிற்கும். இரட்டை வாற் குருவிகள் அடிக்கடி பறந்து வட்டமிட்டபடி, உடலை ஒருமுறை உசுப்பிவிட்டபடி கிளைகளிலோ, தந்திக்கம்பிகளிலோ வந்து நிற்கும். கொவ்வைப்பழங்களைப் போட்டி போட்டபடி சுவைத்து நிற்கும் கிளிகள் கூட்டம் கூட்டமாக எழும்பிப் பறந்து வந்து மீண்டும் இறங்கும்.

மழைத்தாரை பட்டு முற்றாக நனைந்தபடி நிற்கும் ஓங்கிய விருட்சங்கள். அடர்ந்த காடுகள் இலைகளில் பட்டுச் சொட்டுச் சொட்டாக சிந்திக்கொண்டிருக்கும் மழைநீர் பட்டு, அமைதியாக ஊறிக்கிடக்கும் இலைகளும் குழைகளுமாய் காட்டுமண். வழக்கமாக கொப்புகளில் குதித்தாட்டம் போட்டபடியிருக்கும் கருங்குரங்குகளையோ அல்லது பாப்பாசி மரங்களை நாடி வளைய வரும் செங்குரங்குகளையோ காண்பதென்பதே அரிதாகிவிடும். பாலைகளில் வீரைகளில், பாய்ந்து திரியும் பெரிய குஞ்சம் போன்ற வாலுடைய மரஅணில்களையோ அல்லது சிறிய அணில்களையோ கூடக்காண்பது அபூர்வம்தான்.

கேட்பாரற்றுக் கிடக்கும் வெளிகளில் ஆங்காங்கே காணப்படும் குட்டைகளெல்லாம் நிறைந்து வாற்பேத்தைகள், சிறுமீன்கள் பெருகிக் காணப்படும். குளங்கள் தாமரைகள் படர்ந்து பூரித்துக் கிடக்கும். குட்டைகளில் விளையாடியபடி சிறுவர்கள், சிறுமியர்கள் கும்மாளமிட்டபடியிருப்பார்கள். சேறும் சகதியுமாய் காணப்படும் செம்பாட்டு மண் வீதியெல்லாம் மழை நீரும், மண்மணமும் கலந்து வியாபித்துக்கிடக்கும்.

அன்று நான் சுப்பிரமணிய வாத்தியார் வீடு தேடிச் சென்று கொண்டிருந்தபோதும் வானம் விட்டு விட்டு உறுமியபடி துமித்தபடியும் தானிருந்தது. போதாதற்கு ஊளையிட்டபடி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த பேய்க்காற்று வேறு. மழைக்காலமாதலால் நேரத்துடனேயே இருண்டு கொண்டிருந்தது. கனத்து இருண்டு கொண்டிருந்த மாரி வானுடன் சேர்ந்து இரவின் கருமையும் சேர்ந்து விட. சாதாரண சமயமென்றால் சிவந்து அந்திச் சூரியனுடன் சல்லாபித்தபடி கிடக்கும் மேற்கு வானம் கூட அந்தச் சுவடே தெரியாமல் இருண்டு கிடந்தது. ஆனால் அதே சமயம் வாத்தியார் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த என் மனதிலோ. புயல்கள் வீசியபடியிருந்தன. என்னைக் கண்டால் வாத்தியார் நெஞ்சம் எரிமலை போல வெடிக்கத்தான் செய்யும். இதனை நான் உணர்ந்துதானிருந்தேன். ஆனால் அடிக்கடி வாத்தியார் கூறும் அந்த வசனங்கள் தான் என்னை அவ்வளவு துணிவாக அவரை நாடிப்போகும்படி உற்சாகப்படுத்தின. நடைமுறைக்கும் தத்துவத்திற்கும் இடையில் நிகழும் போராட்டச் சிக்கல்களையும் நான் உணர்ந்து தானிருந்தேன். எல்லா விளைவுகளையும் எதிர்பார்த்துத்தான் நான் இந்தப் பயணத்தையே தொடங்கியிருந்தேன்.

ஜெயில்காட் ராமலிங்கம் கூறிய குறிப்பின்படி, வாத்தியார் வீட்டை நெருங்க நெருங்க நெஞ்சின் படபடப்பும் வேகமாக அடித்துக்கொள்ளத் தொடங்கியது. எவ்வளவு முயன்றும் என்னால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பளிரென்று அடிவானைக் கிழித்தபடி கோடிட்ட மின்னல் கூட பகீரென்று அடிவயிற்றைக் கலக்கித்தான் விட்டது.

வீட்டை நெருங்கிவிட்டேன். அது ஒரு விறாந்தையுடன் கூடிய சுமாரான, ஒடு வேய்ந்தகல்வீடு, விறாந்தையில் கூடை போன்று முதுகிற்கு ஆறுதலாக அமைந்திருந்த பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி மாரியின் விளையாட்டுக் கோலங்களை ரசித்தபடியிருப்பது. சுப்பிரமணிய வாத்தியாரா அது.எந்நேரமும் சந்தனப்பொட்டும் திருநீறும் சிரித்த முகமும் கம்பீரநடையுமாக.அடிக்கடி பாரதியின்"அச்சமில்லை அச்சமில்லை" பாடலையும் பாடியபடியே வரும் சுப்பிரமணிய வாத்தியாரின் அந்த நாளைய தோற்றம் தான் ஞாபகம் வந்தது. ஆனால் இந்த ஏழு வருடங்களில் சுப்பிரமணிய வாத்தியார் நிரம்பவும் மாறித்தான் போய்விட்டார். வயதுக்கு மீறி முதுமையுற்ற உடல்வாகு. கலகலப்பாக துடிதுடிப்பாக எந்நேரமும் காணப்படும் அந்த முகம் ஒடுங்கிச் சோர்ந்து சுருங்கி. அந்த ஒளி மிகுந்த கண்கள் சோபையிழந்து அச்சமும் அவநம்பிக்கையும் கூடிகலந்து.தலைமுற்றாக நரைத்து விட்டிருந்தது. பளிச்சென்றிருக்கும் முகமோ.நரைத்த தாடியும் மீசையாக.துமித்துக்கொண்டிருந்த மழை சிறிது பெருக்கத் தொடங்கவும் நான் விறாந்தையை அடையவும் சரியாகவிருந்தது. யாரோ மனித நடமாட்டம் கேட்கவே ஒருவித ஆச்சர்யத்துடன் கூடிய பார்வையுடன் சுப்பிரமணிய வாத்தியார் என்னை நோக்கினார். இந்த ஏழு வருடங்களில் நானும் மாறித்தான் விட்டேன். பதினெட்டு வயது காளையாயிருந்த நான் இன்று திடகாத்திரமான இருபத்தி ஐந்து வயது இளைஞன். சிறைவாழ்க்கை என்மனதை மட்டுமல்ல உடம்பினையும் திடகாத்திரமானதாக முதிர்ச்சியடைய வைத்திருந்தது. தாடியும் மீசையுமாக மண்டிக் கிடந்த முகம்.

'யாரது"

"யாரது வாத்தியார்தான் கேட்டார். வாத்தியாரின் கண்களும் பார்க்கும் சக்தியை வெகுவாக இழந்துவிட்டிருந்தன.

"மாஸ்டர் மாஸ்டர்" என்று அவர் காலில் விழுந்து கதறவேண்டும் போலிருக்கின்றது. தாய்க்குத் தாயாக, தந்தைக்குத் தந்தையாக, தன் சொந்தப் பிள்ளையைப்போல், பாசத்தைக் கொட்டி வளர்த்த அந்தத் தூய உள்ளத்திற்கு. நான் இழைத்துவிட்ட துரோகம். செய்த கைமாறு. மாஸ்டர் என்னை மன்னிப்பாரா. என் தவறுகளை மன்னித்து. என்னைப் புடமிடுவாரா. இது சாத்தியமானதொன்றா. அலைமோதிக்கொண்டிருந்த மனதை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துவிட்டு,

"மாஸ்டர், நான். நான். கருணாகரன்...."

வார்த்தையை நான் முடிக்கவில்லை. அடிபட்ட புலியாக சுப்பிரமணிய மாஸ்டர் துள்ளி எழுந்தார். இந்த உடம்பு எப்படித்தான் அந்தக் கணத்தில் அந்த வலிமையைப் பெற்றதோ.

"நன்றி கெட்ட நாயே.. எதற்கடா இந்த வாசற்படியில் மீண்டும் வந்து மிதிக்கிறாய்.அவ்வளவு திமிர் தானே உனக்கு"

இவ்விதம் வார்த்தைகளைக் கொட்டியவர், விரைந்து உள்ளே ஓடினார். ஓடியவர் ஓடிய வேகத்திலேயே வெளியே வந்தார். வந்தவரின் கைகளில்.தேங்காய் உடைக்கப் பாவிக்கும் பெரிய 'கொடுவா'க் கத்தி, கண்களிலோ ஒரு வித வெறியும் ஆவேசமும் கலந்த போக்கு. "நாயே, உன்னை உயிரோட விட்டு வைப்பதே பாவம்.சட்டம் செய்யாததை நான் இப்ப செய்யப்போறண்டா'

இவ்விதம் வார்த்தைகளைப் பொழிந்தவர் ஆவேசத்துடன் என்னை நெருங்கினார். என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவ்விதம் மாஸ்டர் வார்த்தைகளைக் கொட்டியதை நான் என்வாழ்வில் முதல்முறையாக இன்று தான் பார்க்கிறேன். ஆனால் பாவமன்னிப்புக் கேட்கத்தானே இங்கு வந்தேன். என்னைக் கொலைசெய்வது தான் அதற்கான தண்டனை என்றால். அதுவும் என் மதிப்புக்குரிய மாஸ்டரின் கைகளினால் தான் என்றால்.இதைவிட எனக்குப் பிராயச்சித்தம் வேறு என்ன இருக்கமுடியும்? கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு வினாடியும் உள்ளேயே வெந்து புழுங்கி அவிந்து கொண்டிருந்த எனக்கு. இப்படி ஒரு விடுதலை கிடைக்குமென்றால். அது என் புண்ணியமாகத்தான் இருக்கவேண்டும்.

"மாஸ்டர், மாஸ்டர்" நான் செய்த துரோகத்துக்கு என்னை நீங்கள் வெட்டியே போடுங்கள். அது தான் எனக்குச் சரியான தண்டனை"

இவ்விதம் கூறியபடி மாஸ்டரின் கால்களில் விழுந்து அவர் பாதங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டேன்.

கால்களால் எட்டி உதறியபடி "டேய், இந்தப் பசப்புக்கெல்லாம் மசிந்து போவனல்லடா நான்" இவ்விதம் கூறியவர் பயங்கரமாகச் சிரித்தபடியே சிலவேளைகளில் சித்தப்பிரமை பிடித்தவர்கள் சிரிப்பார்களே அவ்விதம் சிரித்தபடியே கத்தியை ஓங்குவதை என்னால் உணர முடிந்தது. அடுத்த கணமே என் கதை முடிந்துவிடும்.எனக்கும் பூரண விடுதலை கிடைத்துவிடும். ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப்போலே" என்ற பாரதியின் கவிதையின் வரிகள் கூட அந்தச் சமயத்தில் என் ஞாபகத்தில் வந்தன. ஒருவித சிரிப்பும் கூட ஏற்பட்டது. சாவை மகிழ்ச்சிகரமாக ஏற்கத் துணிந்துவிட்டேன். கவலைப்பட என்ன உண்டு?

திடீரென அந்தச் சூழலையே கிழித்தபடி என் நெஞ்சினையும் தான், அந்தக் குரல் கேட்டது.

"அப்பா, என்ன காரியம் செய்தீர்கள்?" மெல்ல தலையை உயர்த்திப் பார்த்தேன். இந்த ஏழு வருடங்களாக எந்தக் குரலிலிருந்து மன்னிப்பை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தேனோ. அந்தக் குரலிற்குரியவள், காயத்ரீ, எதிரே நின்றிருந்தாள். ஒரு கணம் புழுவை விட கேவலமாக என்னைப் பார்த்தவள். திகைத்து நின்றிருந்த மாஸ்டரிடம் இருந்து கத்தியை மெல்ல வாங்கியபடி, தந்தையை அனைத்தபடியே வீட்டினுள் சென்றவள் கதவைப் படீரென்று அடித்துச் சாத்தினாள்.

வீட்டிற்குள் நுழைவதற்குள் ஒரு முறை திரும்பிப் பார்த்த மாஸ்ட்டர் " டேய்.நாசகாரப்பேயே. இன்னுமொரு முறை இந்த வீட்டு வாசற்படியிலை காலை வைத்தாயோ கொலை தான் விழுமடா" என்று கூறிவிட்டுத்தான் சென்றார். நெடுநேரம் மழையில் நனைந்தபடியே அவ்விடத்தில் நின்றிருந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தேனோ தெரியவில்லை. கொட்டிக் கொண்டிருந்த மழையில் என் உடலில், உள்ளத்தில் படர்ந்து கிடந்த மாசுக்களெல்லாம் ஒவ்வொன்றாக களைந்து போவது போல் ஒருவித உணர்வில்..அப்படியே நனைந்தபடி நின்றிருந்தேன். நெடுநேரம் நின்றிருந்தேன். இந்த உலகில் நான் எதற்காக வந்து பிறந்தேன்? எதற்காக? பிறந்தவன் நாளைக்கு எப்பவோ ஒரு கணத்தில் வந்தது போலவே போகவும் தான் போகப்போகின்றேன். அதற்குள். எதற்கு இத்தனை குழப்பங்கள்.திருப்பங்கள்.என் வாழ்வில். இம்மனிதர்கள் வாழ்வில் அர்த்தம் ஒன்றுண்டா. இவ்வாழ்விற்கு அர்த்தம் ஒன்றுண்டா. பிளேட்டோ தொடக்கம் மார்க்ஸ், கெகல், சாத்ரே, பிராய்ட் என்று ஒவ்வொருவரும் உலகை மனிதனைப் பற்றி விளக்கிக் கொண்டு தான் போனார்கள். போகின்றார்கள். ஆனால் நான் இந்த இரவின். இந்தக் கணத்தில்.நான் யார்? என் வாழ்வின் போக்குகளின் அர்த்தம் என்ன என்பதற்கான கேள்விகளில் கொட்டும் மழையினில் நனைந்தபடி மூழ்கிக் கிடக்கின்றேன். அர்த்தமற்றுக் காணப்படும் வாழ்வின் அர்த்தத்தை அறிய முயன்று கொண்டிருந்தேன். மழையோ கொட்டிக் கொண்டிருந்தது. வானமிருண்டு இடியும் மின்னலுமாக. காற்றுச் சீறியபடி.

"தம்பி, என்ன இது, சின்னப்பிள்ளைமாதிரி மழையில் நனைந்துகொண்டு.”

எதிரில் குடையுடன் வயது ஐம்பதைத் தாண்டிய தோற்றமுடைய ஆசிரியரைப்போன்ற ஒரு கம்பீரமான மனிதர் நின்றிருந்தார்.

"தம்பி, இங்கு நடந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் வந்தேன். அமைதியான சாதுவான சுப்பிரமணிய மாஸ்டரின் நடத்தைதான் அதிக ஆச்சரியத்தைத் தருகிறது."

அம்மனிதரே தொடர்ந்தார்.

"என் பெயர் கந்தசாமி மாஸ்டரென்றால் இங்கு தெரியும். சுப்பிரமணிய மாஸ்டர் எனது நண்பர் தான். தம்பிக்கு பரவாயில்லை என்றால் என் வீட்டிற்குப்போய் ஆறுதலாகப் பேசுவோம்"

அச்சந்தர்ப்பத்தில் எனக்கும் அவரின் ஆலோசனை சரியாகப்படவே, அவருடன் அவர் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். கந்தசாமி மாஸ்டரின் வீடும் இரு தெருக்கள் தாண்டி. அமைந்திருந்த பிள்ளையார் கோவிலிற்கு அண்மையில் தான் அமைந்திருந்தது. மழையோ இன்னமும் கொட்டிக்கொண்டுதான் இருந்தது.

ஒட்டைக்கூரையில் சடசடவென்று பட்டுத் தெறித்த மழையும், சூய்ங் கென்று வீசும் காற்றும் இடைக்கிடை கடகடத்துருண்டோடும் இடியும் மின்னலும் எனக்கு பர்ல்ய கால நினைவுகளை ஞாபகத்தில் கொண்டு வந்தன. இயற்கையின் விளைவுகளை, குறிப்பாக மழையை ரசிப்பதைப் போல் இன்பம் தரக்கூடியது வேறு எதுவுமேயில்லை. என்னவோ தெரியவில்லை. மழையும் அதன் விளைவுகளும் என் நெஞ்சினில் இனம் புரியாத ஒரு ஆனந்த உணர்வினை ஏற்படுத்திவிடுகின்றன.

கந்தசாமி மாஸ்டரின் வீடு ஓடுவேய்ந்த ஏறத்தாழ சுப்பிரமணிய மாஸ்டரின் வீட்டைப்போலவே முன்னால் விறாந்தையுடன் கூடிய ஒரு வீடுதான். இன்னமும் அப்பகுதிக்கு மின்சாரம் வந்திருக்கவில்லை. முன் விறாந்தையில் ஒரு அரிக்கன் லாந்தர் தொங்கிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தவர்.

"அகிலா. அகிலா." என்று குரல் கொடுத்தார்.

"என்னப்பா” என்று பதிலிற்கு குரல் கொடுத்தபடியே, மான்துள்ளலுடன் ஒரு பெண் ஓடி வந்தாள். வயது இருபதைத் தாண்டி விட்டிருக்கலாம். கூந்தலை அழகாக முடிந்து கொண்டை, சரித்திரக்கதைகளில் வரும் ராஜகுமாரிகளைப்போல் உச்சியில் வைத்திருந்தாள். கூர்மையான கண்கள். சிவந்த வதனம். கச்சிதமான சிறிய ஆனால் எழிலான உடலமைப்பு.சாதாரண புள்ளியிட்ட நீலமும் வெள்ளையும் கலந்த நூற்சேலையை அணிந்திருந்தாள்.

மான் துள்ளலுடன் வந்தவள் தந்தையுடன் வந்த இந்தப் புத்தம் புதியவனை ஒரு கணம் வியப்புடன் நோக்கினாள்.

"அகிலா.தம்பிக்கு ஒரு துவாயைக் கொண்டு வந்து குடும்மா” என்றவர் என் பக்கம் திரும்பி,

"தம்பி, இது என் பொண்ணு அகிலா. அட்வான்ஸ்லெவல் படித்து விட்டு டீச்சராக வேலை பார்க்கிறா.இவவும் சுப்பிரமணிய மாஸ்டரின் மகளும் ஒன்றாகத்தான் ஒரே இடத்தில் படிப்பிக்கினம்”

அகிலா துவாயைக் கொண்டு வந்து தந்தாள். அதற்கிடையில் மாஸ்டர் சறமும் சேட்டும் கொண்டு வந்து தந்தார். அவர் காட்டிய அறையொன்றினுள் சென்று என் ஆடைகளை மாற்றிவிட்டு, நனைந்த என் ஆடைகளை வீட்டின் பின்புறமிருந்த விறாந்தையில் கட்டப்பட்டிருந்த கயிற்றினில் காயப்போட்டேன்.  பின் நானும் கந்தசாமி மாஸ்டரும் முன்விறாந்தைக்கு வந்து அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். இருப்பதற்கு வசதியாக பிரம்பினால் அமைந்திருந்த கூடை நாற்காலிகள் அவை.அதற்கிடையில் அவர் மகளிடம்,

"அகிலா இருவருக்கும் கோப்பி போடம்மா" என்று கூறினார்.

கொட்டிக்கொண்டிருந்த மழை சற்றுத் தணிந்துகொண்டு வருவது போல் பட்டது. வெளியில் எங்கும் ஒரே இருளாகக் கிடந்தது. தவளைகளின் கத்தல்கள் வயற்புறங்களிலிருந்து பலமாகக் கேட்கத் தொடங்கின.
சிறிதுநேரம் வெளியே பெய்து கொண்டிருந்த மழையையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு கனகலிங்கம் சுருட்டொன்றை எடுத்துப் பற்றவைத்தார்.

"தம்பிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உண்டோ?” என்றார்.

'இல்லை."தலையசைத்தேன்.

நல்லபழக்கம்' என்று பாராட்டினார்.

"தம்பி நான் பெரிய உளவியல் அறிவு பெற்ற மேதையல்ல.இருந்தாலும் நான் என் மனதை அதிகமாக நம்புபவன். தம்பியைப் பார்த்தவுடன் எனக்கு மனதுக்குப் பிடித்துவிட்டது. எனக்குப் பிடித்து விட்டால் காணும். பிறகு நான் யாரைப் பற்றியுமே கவலைப்படமாட்டேன்”

மெளனமாக அவர் கூறுவதையே கேட்டபடியிருந்தேன். மாஸ்டரே தொடர்ந்தார்.

"தம்பி, வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய சிக்கலில் மாட்டியிருப்பதாகப்படுகிறது. ஆனால் தம்பியின் முகத்தைப் பார்க்கையில் தெளிந்த அறிவின் களைதான் தெரிகிறது"

இச்சமயம் உள்ளிருந்த அகிலா கோப்பி போட்டுக்கொண்டு வந்தாள். சுடச்சுட நிறையப் பால் விட்டு, தயாரிக்கப்பட்ட அந்தக்கோப்பி, அந்த மழைச் சூழலுக்கு சூடாக இதமாக இருந்தது. தந்தவள் மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள். சுவரில் பல்லியொன்று பூச்சியைப் பிடிப்பதற்காக ஓடியது. பூச்சியும் பல்லி பிடித்து உண்ணவேண்டும் என்று விரும்பியதுபோல அதற்கு ஏற்ற இடத்தில் வாகாக அமர்ந்தது. ஆனந்தமாக இரையை குதப்பிவிட்டு பல்லி வேறொரு திசையை நாடி ஒடத்தொடங்கியது. என் மனம் சிந்தனையில் மூழ்கி விட்டது. என் வாழ்வின் முடிந்துவிட்ட பயணத்தைத் தொடங்கிவிட்டிருந்த என் வாழ்வின் புதிய கணங்களில் சில திருப்பங்கள்.முதலில் வள்ளி.இன்று கந்தசாமி மாஸ்டர்.மாஸ்டர் சொன்னதும் உண்மைதான்.

சில பேரைப் பார்த்ததும் சிலபேருக்கு எதுவித காரணங்களுமில்லாமல் பிடித்துவிடுகிறது. இது ஏன்? உளவியல் ரீதியாக இதற்கொரு காரணம் இருக்கலாம். என்னுடைய மனதின் உணர்விற்கப்பாற்பட்ட ஆழ்மனதினில் கந்தசாமி மாஸ்டரைப் போன்ற தோற்றமுள்ளவர்களின் பால் மதிப்பு இருக்கலாம். அல்லது மனதின் சக்தி பற்றி இன்னும் முற்றாக அறிந்துகொள்ளமுடியாத நிலையில் எம் அறிவிற்கு அப்பாற்பட்ட காரணங்களில் ஒன்றாகவும் இருக்கலாம். அதே சமயம் இன்னுமொரு கேள்வியும் எழுந்தது. ஒரு நிமிடங்களின் முன்னால்தான் கந்தசாமி மாஸ்டரைச் சந்தித்திருந்தேன். அதற்குள் என் வாழ்வின் அந்தரங்கங்களை எப்படிப் பகிர்ந்து கொள்வது? அப்படி உடனடியாகப் பகிர்ந்துகொள்வது என் ஆளுமைக்குப் பாதகம் செய்வதுபோல் தோன்றியது.

“என்ன தம்பி பலமான யோசனை.தம்பி விரும்பினால் பிரச்சனையைக் கூறினால் என்னால் முடிந்தவற்றைச் செய்யத் தயாராய் உள்ளேன்."

'நான் யோசித்துக்கொண்டிருப்பதே அதைப்பற்றித்தான் மாஸ்டர் கூற நினைத்தேன். ஆனால் கூறவில்லை. மெளனமாக அரிக்கன் லாந்தரைச் சுற்றிப் சுற்றிப் பறந்து வந்து, செத்துக்கொண்டிருந்த பூச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"தம்பி, விருப்பமில்லையென்றால் பரவாயில்லை. எப்பவேண்டுமானாலும் கூற விரும்பினால் கூறலாம். என்னால் முடிந்ததைச் செய்யத் தயாராக இருக்கிறேன்."

மாஸ்டர் சொல்வதும் சரியாகத்தான் பட்டது. உடனடியாக என் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ள என் மனமும் விரும்பவில்லை.

இன்னுமொரு சமயம் பார்க்கலாம்.

"மாஸ்டர், இன்னுமொரு சமயத்தில் ஆறுதலாக என் கதையைக் கூறுவேன். ஆனால்." நான் முடிக்காமல் நிறுத்தினேன்.

"ஆனால்.என்ன தம்பி.மேலே பயப்படாமல் சொல்லும்"

"இல்லை. மாஸ்டர். என் வாழ்வின் அந்தரங்கத்தை இப்பொழுது கூற விரும்பாவிட்டாலும் ஒன்றை மட்டும் கூறத்தான்வேண்டும். அதனைக் கட்டாயம் கூறத்தான் வேண்டும். அதனைக் கூறாமல் இருந்தால் உங்கள் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தவன் ஆவேன்.”

மாஸ்டர் மெளனமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் தொடர்ந்தேன்.

"மாஸ்டர், சமுதாயத்தில் குற்றம் புரிபவர்களைப்பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?"

"தம்பி.குற்றம் புரிவது. தவறு செய்வது மனித சுபாவம். தவறுகள் பேசித் திருத்தப்படவேண்டுபவை. சில தண்டிக்கப்பட்டுத் திருத்தப்படவேண்டியவை. தவறு செய்பவர்கள் திருந்தவேண்டும். செய்த தவறுகளிலிருந்து பாடம் படிக்கவேண்டும். புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். மீண்டும் மீண்டும் செய்த தவறுகளைச் செய்வது தான் கூடாது."

"மாஸ்டர்.நீங்கள் மனப்பூர்வமாகத்தான் கூறுகிறீர்களா? அல்லது வெறும் தத்துவம் மட்டுமா? தத்துவமும் நடைமுறையும் ஒத்துவருவதென்பது தான் மிகவும் கஷ்டமான காரியம்."

"தம்பி சொல்வது சரிதான்.இருந்தாலும் என் அனுபவங்கள். முக்கியமாக என் ஆசிரிய அனுபவம் என்னை முதிர்ச்சியடைய வைத்துள்ளது.அதற்காக நான் ஏதோ பெரிய மேதையென்று எண்ணிவிடவேண்டாம். இன்னமும் பல்வேறுபட்ட பலவீனங்கள் உள்ள ஒரு மனிதப் புழுதான் நான்."

மாஸ்டரின் சொற்கள் உண்மையான வார்த்தைகளாகத்தான் பட்டன. எனக்கு அவர் மேல் முழுதாகவே நம்பிக்கை ஏற்பட்டது.

"மாஸ்டர் நான் உங்களை நம்புகிறேன். ” என்று தொடர்ந்தேன். "மாஸ்டர்.நான் ஒரு குற்றவாளி. ஏழுவருட ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டு அண்மையில் தான் விடுதலையான ஒரு பயங்கரமான குற்றவாளி." நான் முடிக்கவில்லை.

"ஆ....'

நான் கூறிய சொற்களின் யதார்த்தத்தைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியடைந்தது, "அப்பா" என்று அழைத்தபடி விறாந்தைக்கு வந்த அகிலாதான். எதிர்பாராத அவள் வருகையைக் கண்ட நானும் தான், ஏன் மாஸ்டரும் தான்.


பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியயம் ஐந்து: பாதை தெரிந்தது


தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)இத்தனைக்கும் மாஸ்டர் முகத்தில் எந்தவிதப் பதட்டமோ சலனமோ தென்படவில்லை. எனக்கு வியப்பாக இருந்தது. நானென்ன சாதாரண விசயத்தையாக கூறியிருந்தேன்? ஏழு வருட கடுங்காவல் தண்டனை அடைந்துவிட்டு அண்மையில் தான் வெளிவந்த பயங்கரக் குற்றவாளி நான்" என்கின்ற விசயம் அவ்வளவு என்ன சாதாரண விசயமா? எப்படி இவரால் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டால் இருக்க முடிகின்றது? நான் கூறிய விடயத்தைக்கேட்டு அதிர்ச்சியுற்ற அகிலா கூட வெகுவிரைவாகவே தன்னைச் சகஜ நிலைக்குக் கொண்டுவந்துவிட்டாள். அப்பாவிற்கேற்ற பொண்ணு. மாஸ்டர் தான் முதலில் மெளனத்தைக் கலைத்தார்.

"என்னம்மா விசயம்"

"இல்லை அப்பா, இரவுச் சாப்பாட்டுக்கு என்ன செய்யலாமென்று தான்." அகிலா இழுத்தாள்.

இச்சமயம் என்னை நோக்கி கந்தசாமி மாஸ்டர் "தம்பி கட்டாயம் இரவு சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும்" என்றவர் அகிலா பக்கம் திரும்பி, "அகிலா, தம்பிக்கும் சேர்த்து சமைத்துவிடு" என்றார். அகிலா உள்ளே சென்று விட்டாள்.
எனக்கு கந்தசாமி மாஸ்டர் புதிராகத்தான் தென்பட்டார். எதுவித கஷ்டங்களுமே ஏற்படாதவர் போல் என்னுடனான சம்பாஷணையைத் தொடங்கிவிட்டார்.

"தம்பி, குற்றவாளிகளிலும் எத்தனையோ வடிவமானவர்கள். சிலர் குற்றங்கள் புரிவதிலேயே ஊறிவிட்டவர்கள். இன்னும் சிலரோ சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் தவறுகின்றார்கள். நீ அதில் இரண்டாவது வகை. செய்த தவற்றிற்காக தண்டனை பெற்றதும் கூட, பாவமன்னிப்பை நாடி வந்திருக்கின்றாய். அதுதான் பெரிய விடயம். செய்த தவறுகளை மனப்பூர்வமாக உணர்ந்து திருந்தி வாழ்வது தான் ஒருவனை உயர்த்தும். உண்மையில் நான் உன்னைப் பாராட்டுகிறேன்."

மாஸ்டர் கூறிக்கொண்டே போனார். மாஸ்டரிற்கு மட்டும் நான் செய்த குற்றம் தெரிந்திருக்குமென்றால் இவ்விதம் பேச முடியுமா? என்றொரு எண்ணமும் என் நெஞ்சினில் அதற்குள் ஓடி மறையத் தான் செய்தது. ஆனால்.மாஸ்டரைப் போன்ற ஒருவரைத் தான் எதிர்பார்த்திருக்கிறேன். என் அனுபவங்களை சரியான முறையில் விளங்கி, என் வாழ்க்கையில் சரியான பாதையினை, இலக்கினைக் காட்டுவதற்கு இப்படிப்பட்ட ஒரு உறவு, நட்பு அவசியம் தான். எதிர்பாராத கணங்களில் வள்ளியையும் மாஸ்டரையும் சந்தித்திருந்தேன். ஆனால் இருவரின் சந்திப்புகளுமே என் எதிர்கால வாழ்விற்கான பயணத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தி விட்டிருந்தன போல்பட்டது. வறுமையில் வாடும் மக்கள்.மனிதத்துவத்தையே இழந்து வாடும் அம்மக்கள்.மக்களிற்காக வாழ்வதாக முடிவு செய்திருந்த எனக்குத் துணையாக கந்தசாமி மாஸ்டரின் நட்பும் கிடைக்குமென்றால்..எவ்வளவு நன்றாக அற்புதமாகவிருக்கும்.

"என்ன தம்பி.யோசனை".மாஸ்டர் தான் கேட்டார்.

"மாஸ்டர் உங்களைப்பற்றித்தான் சிந்தித்தேன். எவ்வளவு எளிமையாக தெளிவாக உங்களால் பிரச்சனைகளின் ஆழத்தைத் தொட முடிகிறது." நான் முடிக்கவில்லை. மாஸ்டர் சிரித்தார்.

"தம்பி. பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் போட்டுக் கொட்டிவிடாதே. அது சரி தொடர்ந்து என்ன செய்வதாக எண்ணம்.”

நான் வள்ளியுடனான சந்திப்புப்பற்றியும் அம்மக்களின் பிரச்சனைகள் பற்றியும் சுப்பிரமணிய மாஸ்டரிடமும் பாவமன்னிப்புப் பெறுவது பற்றியும் என் எழுத்து முயற்சி பற்றியும் நான் முடித்திருந்த பட்டப்படிப்பு பற்றியும் கூறினேன். மாஸ்டர் வியந்து போனார். "என்ன அந்த எழுத்தாளன் நீலவண்ணன் நீ தானா?.நான் உன்னுடைய வாசகனப்பா." என்றார். கூடவே கூறினார். "தம்பி.நான் படிப்பிக்கும் பாடசாலையில் பொருளாதார ஆசிரியராக, பாடசாலையில் உதவிப்பணத்தில் படிப்பிக்க முடியுமா என்று முயன்று பார்க்கிறேன். அதே சமயம் மக்களிற்காக உன் வாழ்வை அர்ப்பணிக்க நினைத்திருக்கிறாயே அது பெரிய விசயம். நிச்சயம் என் உதவி அவ்விசயத்தில் உனக்கு உண்டு. சுப்பிரமணிய மாஸ்டரிடமிருந்தும் நிச்சயம் உனக்கு மன்னிப்புக்கிட்கும். அவ்விடயத்திலும் நான் நிச்சயம் உதவ முடியும்."

எனக்கு ஆறுதலாக இருந்தது. இதயத்திலிருந்து பெரியதொரு பாரம் குறைந்ததுபோலப் பட்டது. எதிர்கால வாழ்க்கை பிரகாசம் மிக்கதாக விளங்கியது. அலைகடல் நடுவே தத்தளித்துக்கொண்டிருந்தவனுக்கு பற்றிக்கொள்ள ஒரு சிறு கட்டையாவது அகப்பட்டதுபோன்றிருந்தது. வெளியிலோ தூறிக்கொண்டிருந்த மழை முற்றாக நின்று விட்டிருந்தது. இருண்டிருந்த வானம் வெளித்து.ஆங்காங்கே நட்சத்திரக் கன்னியர்கள் கண்களைச் சிமிட்டியபடி. உலகம் தான் எவ்வளவு இன்பமயமானதாக, நம்பிக்கை மிகுந்ததாக விளங்குகிறது. மெல்லிய குளிர் தென்றல் உடலை வருடிச் சென்றது. இரவுப் பட்சிகளின் தாலாட்டில் தான் இரவு எவ்வளவு இனிமையாக, அழகாக நெஞ்சையள்ளுவதாக இருக்கின்றது.


பகுதி ஒன்று: கருணாகரன் கதை

அத்தியாயம் ஆறு:  வெறி மிருகம்

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)ஏறத்தாழ ஒரு மாதம் ஓடி மறைந்தது. இதற்குள் சில குறிப்பிடும்படியான சம்பவங்கள் நடந்து முடிந்திருந்தன. முதலாவதாக வள்ளி வாழும் பகுதி மக்களிற்கிடையில் சிறு மக்கள் முன்னேற்ற அமைப்பொன்று கட்டப்பட்டது. அம்மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைக் கையாளுவது சம்பந்தமான திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டது. வள்ளி இவ்விடயங்களில் முழுமூச்சாக உழைத்தாள். அவளது ஆர்வம் எனக்கு அவள் மேல் பெரும் மதிப்பையும் அனுதாபத்தினையும் ஒருவிதமான பரிவினையும் ஏற்படுத்தியது. அதேசமயம் அம்மக்களின் ஒன்றுபட்டபோக்கு, உறுதியான தீர்மான நோக்கு, இவையெல்லாம் பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின. அதே சமயம் கந்தசாமி மாஸ்டரும் இதுசம்பந்தமாக நன்கு ஒத்துழைப்புத் தந்தாரென்றே சொல்ல வேண்டும். அகிலா கூட தன் பங்கிற்கு உதவினாள். அம்மக்களின், அவர்களின் பிள்ளைகளின் அறிவாற்றலை உயர்த்தும் பொருட்டு, படிப்பிக்கும் ஆசிரியை வேலையை அவள் பொறுப்பேற்றாள். அதற்காக ஒரு சிறுகுடிசை. உண்மையில் குடிசை என்று சொல்ல முடியாது, ஆனால் ஓலையினால் வேயப்பட்ட அரைச்சுவருடன் கூடிய சிறு குடிசையொன்று கட்டப்பட்டது. அங்கு அகிலா மாலை நேரங்களில் அப்பகுதி மக்களிற்கு கற்பிக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினாள்.

விரைவிலேயே அக்குடிசையில் சனசமூக நிலையமொன்றையும் தொடங்குவதாக மக்கள் முன்னேற்ற அமைப்பினால் முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் நிரந்தரமாகவே ஒரு ஆசிரியையை நியமிக்க முயல்வதாகவும் முடிவு செய்யப்பட்டது. இதே சமயம் இளைஞர்கள், குழந்தைகளின் விளையாட்டிற்காக விளையாட்டு மைதானம் ஒன்றை சிறிய அளவில் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டு சிரமதான அடிப்படையில் வேலையும் ஆரம்பித்துவிட்டது. மக்கள் முன்னேற்ற அமைப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் சனசமூக நிலையம் அமையவுள்ள குடிசையில் கூடி நிலைமைகளை ஆராய்ந்து முடிவு எடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. எல்லா விடயங்களிலும் நான் பங்காற்றி முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அதே நேரம், முடிவுகள் எடுப்பது முதலானவற்றை அவர்களது மக்கள் முன்னேற்ற அமைப்பின் பொறுப்பிலேயே விட்டுவிட்டேன். இவ்விதம் பிரச்சனைகளிற்கு அவர்களையே முகங் கொடுக்க வைப்பது, அவர்களது ஆற்றலை மேலும் மேலும் கூட்டுமென நான் எண்ணினேன்.

இதுவரை காலமும் சரியான திசையற்று, ஒடிக்கொண்டிருந்த கப்பலைப்போல அவர்கள் வாழ்க்கை இருந்தது. ஆனால் இன்று. அவர்கள் பயணத்தின் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

அவர்களது சகலவிதமான பிரச்சனைகளிற்கும் நான் அல்லது கந்தசாமி மாஸ்டர் ஆலோசனைகள் கூறினோம். கந்தசாமி மாஸ்டரின் வீடு இப்பகுதியில் இருந்து ஏறத்தாள ஒரு மைல் தொலைவில் இருந்தபோதும் அவர் ஒவ்வொரு நாளும் மாலை நேரம் அங்கு நடந்துவருவார். அகிலாவும் அவருடன் கூடவே வருவாள். இதே சமயம் என் எழுத்து முயற்சிகளும் தொடராமல் இல்லை. தினமுழக்கம் பத்திரிக்கையின் வாரப்பதிப்பிற்காக ஆசிரியர் தொடர் நாவல் ஒன்றை எழுதும்படி வற்புறுத்தியிருந்தார். இதற்காக நாவலொன்றை எழுதத் தொடங்கியிருந்தேன்.

இதே சமயம்.நான் எதற்காக வவுனியா வந்தேனோ, அது மட்டும் நிறைவேறவேயில்லை. அன்றைய சந்திப்பிற்குப் பின் சுப்பிரமணியம் மாஸ்டரையோ, காயத்ரியையோ சந்திக்கவே யில்லை. அவர்களை நான் சந்திக்காமலிருந்த போதும் நாளும் பொழுதும் என் எண்ணமெல்லாம் அவர்களையே நாடி வந்தது. நான் செய்து விட்ட துரோகத்தை எண்ணி எண்ணி மனம் வெம்பிக் கொண்டிருந்தது.

யாரிடமாவது என் நெஞ்சைக் கொட்டி அழுதால் தான் மனப்பாரம் குறையும் போலவும் பட்டது. என் முகத்தில் அடிக்கடி படர்ந்து விடும் வாட்டத்தைக் கண்டு வள்ளி கூட அடிக்கடி கேட்பாள்.

"என்ன ஐயா, உங்கட மனசில ஏதாவது பிரச்சனையோ?”

அப்போதெல்லாம் பதிலிற்காகப் பலமாகச் சிரித்தபடி "பிரச்சனையாவது. மண்ணாங்கட்டியாவது" என்று கேட்பதே என் வழக்கமாகவும் ஆனது. அதே சமயம் அகிலாவும் என்னுடன் நெருங்கிப் பழகத்தொடங்கினாள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இலக்கியம் பற்றியும் தத்துவம் பற்றியும் என்னுடன் விவாதிக்கவும் தொடங்கினாள்.

இவ்விதம் என் வாழ்வோட்டம் சீராக ஓடிக்கொண்டிருந்த சமயம் கந்தசாமி மாஸ்டர் படிப்பிக்கும் பாடசாலையில் எனக்கு வேலையும் கிடைத்தது. இதே சமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கந்தசாமி மாஸ்டரும் நானும் அரசியல் தொடக்கம் உளவியல், தத்துவம், இலக்கியம் முதலான சகல விடயங்கள் பற்றியெல்லாம் பேசினோம். கந்தசாமி மாஸ்டரின் ஆங்கில அறிவு என்னைப் பிரமிக்கவே வைத்தது. எவ்வளவு தெளிவாக அறிவுபூர்வமாக சிந்திக்கிறார்? எவ்வளவு விடயங்களை அறிந்து வைத்திருக்கிறார். கந்தசாமி மாஸ்டர் வீட்டில் சிறிய நூலகமே வைத்திருந்தார். பிரபல தமிழ்நாட்டு மேல்நாட்டு எழுத்தாளர்களின் ஆக்கங்களையெல்லாம் சேகரித்து வைத்திருந்தார். இவ்விதமாக நாட்களோ வேகமாகச் சென்று கொண்டிருந்தன. புதிய சூழலுக்கேற்ப என் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் வெற்றியும் கண்டிருந்தேன். இதேசமயம் ஓய்வு கிடைக்கும் மாலை நேரங்களில் கந்தசாமி மாஸ்டர் வீட்டிற்கு அண்மையில் உள்ள குளக்கரை செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அமைதியான சூழ்நிலையில் சுற்றி வரப்படர்ந்திருந்த கானகத்தின் தனிமையிலிருந்த அந்தக் குளம்.படர்ந்திருந்த தாமரைகள்.பாடிப்பறக்கும் பறவையினம்.மெல்லென வீசும் தென்றல்.அந்தியின் சிவப்பில் தண்ணென்று பரவிக்கிடக்கும் பொழுதில். என்னையே மெய்மறந்து நிற்பேன். சிறுவயதிலிருந்தே இயற்கையை ரசிப்பதைப் போன்று என் மனதிற்குப் பிடித்தபொழுது போக்கு வேறெதுவுமேயில்லை. ஒவ்வொரு கணத்திலும் இயற்கை பொதித்து வைத்துள்ள அழகில் நான் என்னையே இழந்து விடுவேன். அச்சமயம் என் மனம் இலேசாகி, எவ்விதக் கவலைகளுமற்ற தன்மையில் சிலிர்த்துப் பூரித்துக் கிடக்கும் கற்பனை ஊற்றெனப் பெருகும். அச்சமயங்களில் எல்லாம் பாரதியின் சிட்டுக்குருவியைப் போல் விட்டு விடுதலையாகி நிற்பேன்.

அன்றும் இது போன்றதொரு மாலை நேரம்.வழக்கம்போல் குளக்கட்டில் அமர்ந்தவாறு அப்பொழுதின் அழகில் என்னையே மெய்மறந்திருந்தேன். கீழ்வானமோ அந்திச்சிவப்பில் பூரித்துக் கிடந்தது. குளத்தின் மறுகோடியில், நாரைகள், கொக்குகள் சில மீன் பிடித்தபடியிருந்தன. இரவு நெருங்கிவிட்டதால் நீர்க்காகங்கள் உட்பட பல்வேறு விதமான பட்சியினங்கள் எல்லாம் தத்தமது உறைவிடம் நாடிப் பறந்தபடியிருந்தன. குளக்கட்டின் அருகிலிருந்த மரமொன்றில் மீன்கொத்தியொன்று நின்றிருந்தது. ஏனைய பட்சியினங்கள் தத்தமது உறைவிடங்கள் நாடிப் பறந்து கொண்டிருக்கையில் அம்மீன் கொத்தி மட்டும் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தது. அருகிலிருந்த பாலையில் ஒரு மர அணில் ஒன்று பாய்ந்தோடி மறைந்தது.

குளம் ஒரு சிறு நீரலைகள் தவிர பொதுவில் அமைதியாகவே இருந்தது. இடைக்கிடை மீன்கள் சில துள்ளி மீண்டும் மறைவதால் ஏற்பட்ட களங்’ சத்தங்களும், பல்வேறு வகைப்பறவைகளின் சத்தங்களும் தவிர பொதுவில் அக்குளமும் அதனைச்சார்ந்த பகுதியும் ஒருவித அமைதி கலந்த சூழலில் மனித நடமாற்றம் அற்றுக் காணப்பட்டன.

இத்தகைய பொழுதுகளில் தான் நான் நானாகவிருக்கிறேன். வேறுவித பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட என்னைப்பற்றி, என் உணர்வுகளைப்பற்றி சிந்திப்பது இத்தகைய பொழுதுகளில் தான். இத்தகைய சந்தர்ப்பங்களில் என் மனதை முழுதாகவே ஆட்கொண்டு விடுவது சுப்பிரமணிய மாஸ்டரின் குறிப்பாக காயத்ரியின் நினைவுகள் தான். காயத்ரியைப்பற்றி எண்ணினால் நெஞ்சம் பொங்கிவிடுகின்றது. என் வாழ்வில் முதலும் கடைசியுமாக என் நெஞ்சில் காதல் மலர் பூப்பதற்கு காரணமாயிருந்தவள், இருப்பவள் இந்தக் காயத்ரி. அந்தச் சிவந்த முகம்.கூரிய மூக்கு. சுருண்ட அலைஅலையான கூந்தல்.அந்த அமைதியான குடம் போன்ற அழகான உடல்வாகு.அவள் நடக்கையில் என் நெஞ்சையே வருடிச்செல்லும் அந்த உடலசைவு. என் நெஞ்சில் அந்த நாட்கள் நிழலாடின. எவ்விதக் கவலைகளும் பொறுப்புகளுமேயற்ற..கட்டுக்கணக்கற்ற வாழ்வின் போக்கில்.இன்று நினைக்கையில் அந்த நாட்களின் ஞாபகம் தான் எவ்வளவு இன்பமாக இருக்கிறது. காயத்ரியும் நானும் சிட்டுக்குருவிகளைப்போல் பறந்து திரிந்த நேரம். ஆனால்.ஆனால்.எல்லாவற்றையும் பாழடித்து வீணாக்கி விட்ட கணங்கள்.காலத்தின் கோலம்.

"கருணாகரன்"

நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

எதிரில் அகிலா நின்றிருந்தாள். இரட்டைப் பின்னல்கள் பின்னியிருந்தாள். நெற்றியில் பொட்டிட்டிருந்தாள். மெல்லிய நீலநிறப்புள்ளிகளிட்ட வெள்ளைநிற நூற்சேலை கட்டி யிருந்தாள்.

அகிலாவே தொடர்ந்தாள்.\

"வேலை முடிந்து கொண்டிருந்த நான் நீங்கள் முன்னால் போவதைக் கண்டு எங்கள் வீட்டிற்குத்தான் போகின்றீர்களோ என்று எண்ணினேன். ஆனால் நீங்கள் குளக்கரைப்பக்கம் வருவதைப் பார்த்தவுடன் பின் தொடர்ந்தேன். உங்கள் தனிமையைக் கலைத்து விட்டேனோ? மன்னித்துக் கொள்ளுங்கள்."

இவ்விதம் கூறியவள் என்னருகே அமர்ந்தாள்.

"அப்படியொன்றுமில்லை. அது சரி அப்பா எங்கே?" என்றேன். "அப்பா இன்று எனக்குப் பதிலா அங்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்போய்விட்டார். எனக்கு இலேசாக உடம்பு சரியில்லை."

இவ்விதம் கூறிய அகிலா சற்று நேரம் அமைதியான சூழலில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த மீன்களையே நோக்கியபடி நின்றிருந்தாள். பின் தொடர்ந்தாள்.

"கருணாகரன்.நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்களென்றால் நான் ஒன்று கேட்கலாமா?"தயங்கித் தயங்கித்தான் அகிலா கேட்டாள்.

"அப்படியென்ன தப்பாகக் கேட்டுவிடப்போகின்றீர்கள் அகிலா, தாராளமாகக்கேளுங்கள்"

"உங்கள் அந்தரங்க வாழ்க்கையில் நான் குறுக்கிடுவதாக எண்ண மாட்டீர்களே?"

"எண்ணவே மாட்டேன்.மேலே கூறுங்கள்” சிறிதுநேரம் மெளனமாயிருந்தாள். தூரத்து அடிவானையே நோக்கினாள். பின் கூறினாள்.
\
"கருணாகரன்.உங்கள் வாழ்வில் நீங்கள் ஒரு இக்கட்டில் அகப்பட்டிருந்தீர்கள் என்பது தெரிகின்றது. ஆனால் நீங்களொரு குற்றவாளியாக இருப்பீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையில் நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் காரணமாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டவர்தானே" எனக்குச் சிரிப்பாக வந்தது. சிரித்தேன்.

"ஏன் சிரிக்கின்றீர்கள் கருணாகரன்"

"இல்லை அகிலா. நீங்கள் கூறினிகளே.சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்று. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றம் புரிந்த ஒரு பயங்கரக் குற்றவாளி நான்"

"என்னால் நம்பவே முடியவில்லை” "அதற்காக செய்த குற்றம்இல்லையென்று ஆகிவிடுமா அகிலா"

அகிலா இவ்விதம் நான் கூறியதும் மீண்டும் மெளனத்தில் ஆழ்ந்துவிட்டாள். சிறிதுநேரத்தின் பின் தன் இதழ்களைத் திறந்தாள்.

"அது சரி கருணா. நீங்கள்தான் செய்த குற்றத்திற்குத் தண்டனை அடைந்துவிட்டீர்களே. பிறகேன் அதனையே நினைத்து நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு.சென்றவை சென்றவையாயிருக்கட்டும்”
மீண்டும் நான் சிரித்தேன். அகிலாவிற்கு என் சிரிப்பு சிறிது சினத்துடன் கூடிய ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

"என்ன கருணா இது.நான் சீரியஸாக ஏதோ சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என்னடாவென்றால் சிரித்துக்கொண்டு." அகிலாவின் சொற்களிலும் சிறிது காரமிருந்தது.

"அகிலா மன்னித்துக்கொள்ளுங்கள் நான் செய்த குற்றம் என்னவென்று அறிந்தால் நீங்கள் இவ்விதம் கூறமாட்டீர்கள். அதுதான் சிரித்தேன்."

அகிலாவின் சொற்கள் தொடர்ந்து காரமாகவே வெளிவந்தன.

"குற்றம் புரிவது மனித இயல்புதானே..நீங்கள்தான் அதற்காகத் தண்டனையும் அடைந்துவிட்டீர்களே. பிறகேன் இவ்விதம் அலட்டிக் கொள்கின்றீர்கள். அது சரி அப்படியென்ன பெரிய குற்றத்தை, மனிதன் செய்யக்கூடாத குற்றத்தை நீங்கள் புரிந்துவிட்டீர்கள்"

இக்கேள்விக்கு நான் உடனடியாகப் பதிலைக் கூறவில்லை. சிறிதுநேரம் மரங்களில் தாவும் மந்திகளையும் பறக்கும் பறவைகளையுமே பார்த்து நின்றேன். மீண்டும் யாரிடமாவது என் நெஞ்சைக் கொட்டிவிடவேண்டும் போலோரு உணர்வு எழுந்தது.

அகிலாவின் பக்கம் திரும்பினேன். அவள் கண்களையே ஒரு கணம் கூர்ந்து நோக்கினேன். "இவளிடம் கூறுவோமா" பார்வையின் கூர்மை தாங்காமல் அவள் தன் முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். என் மனதினில் ஒரு முடிவெடுத்துக் கொண்டேன்.

"அகிலா..சரி நான் என்ன செய்தேனென்பதை கூறுகின்றேன். அதற்கு முன் உங்கள் நெஞ்சைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள்"

அவள் என்னையே நோக்கியபடியிருந்தாள். நான் தொடர்ந்தேன் "அகிலா.இந்த உலகத்தில் என்னைப்போல் பெரிய பாவி, உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பெரிய துரோகி வேறு யாருமே இருக்க மாட்டார்கள். சுப்பிரமணிய மாஸ்டரிற்கு நான் செய்த கைம்மாறு. என் நெஞ்சிற்கரிய காயத்ரீக்கு நான் செய்த துரோகம்.என் வாழ்வில் முதலும் கடைசியுமாக நான் காதலித்த ஒரே பெண் அவள்தான். அவளிற்கு நான் செய்த அநியாயம்."

இவ்விதம் கூறிய நான் சிறிது நேரம் மெளனமாகயிருந்துவிட்டுத் தொடர்ந்தேன்.

"எந்தக் காதலனுமே தன் காதலிக்குச் செய்யக்கூடாததை அல்லவோ நான் செய்தேன். நீங்கள் அப்படி என்ன குற்றத்தைச் செய்தீர்கள் என்று எளிதாகக்கூறி விட்டீர்கள், ஆனால் நான் செய்த குற்றம் என்னவென்று தெரிந்தால். அகிலா.எந்த உயிரிற்குமே தீங்கு செய்யக்கூடவே எண்ணாத மென்மையான காயத்ரியை..என் தெய்வமான சுப்பிரமணிய மாஸ்டரின் கண்ணிற்குக் கண்ணான மகளை, என் நெஞ்சிற்கேயுரிய காயத்ரியை துடிக்கத் துடிக்க வெறிநாயைப்போல் நான் சீரழித்தேன்."

"என்ன” அகிலாவின் முகம் வெளிறிச் சிவந்தது. அவள் இதனை எதிர்பார்க்கவேயில்லை. இரத்தக் குழம்பாகச் சிவந்த அகிலா புயலாக எழுந்தாள்.

"சீ நீயும் ஒரு மனிசனா.மிருகம்.வெறி மிருகம்.உன்னைப் போய் எவ்வளவு உயர்வாக எண்ணியிருந்தேன். நீ செய்த குற்றத்திற்கு ஏழேழு பிறவியிலும் மன்னிப்பே கிடையாது. இதை நினைத்து நினைத்தே அழுந்திச் சா.அதுதான் உனக்குச் சரியான தண்டனை"

இவ்விதம் வார்த்தைகளைக் கொட்டியவள், மறுகணம் அதேபுயல்வேகத்துடன் அவ்விடத்தை விட்டோடினாள். "அகிலா, அகிலா" நான் அவளைக் கூவி அழைத்தேன். ஆனால் அவளோ, திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அப்படிப் பார்ப்பதே பாவம் என்பது போல், அவ்விடத்தை விட்டே ஓடிக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் கூறிச்சென்ற வார்த்தைகளோ என்னை மேன்மேலும் சுட்டன. "மிருகம்.வெறி மிருகம்.ஆமாம்.அவள் கூறியதில் தான் அப்படியென்ன தப்பு.நான் உண்மையிலேயே வெறிபிடித்த மிருகம்தான். மனித வடிவில் உலாவும் ஒரு மிருகம்தான். எனக்கு நான் செய்த துரோகத்துக்கு தண்டனையோ, மன்னிப்போ நிச்சயம் கிடையாது தான். அப்படி அதை நினைத்தே அழுந்தி அழுந்திச் சாவது தான் எனக்குச் சரியான தண்டனை" அன்று காயத்ரீ எவ்வளவு தூரம் கதறினாள். கால்களைப் பிடித்துக் கெஞ்சினாள். ஆனால் அவள் கதறலை, நெஞ்சலையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, அவள் கதறக் கதற, வெறிபிடித்த மிருகமாக அந்தப் பூவுடலை, அந்தத் தூய மென்மையான உள்ளத்தைப் பிய்த்துப் பிடுங்கிக் கொத்திக் குதறிச் சுவைத்தேனே. அவள் வாழ்க்கை முழுவதையுமே பாழாக்கிவிட்டு ஏழுவருட தண்டனையுடன் நான் மட்டும் வெளியே வந்துவிட்டேன். இது எவ்விதம் நியாயமாகும்.ஆமாம்.அகிலா கூறியதுபோல்.இந்த வெறி பிடித்த மிருகத்திற்கு மன்னிப்பே இல்லை  தான்.மன்னிப்பே இல்லை தான்.

* பகுதி ஒன்று: 'கருணாகரனின் கதை' முடிந்தது. அடுத்து பகுதி இரண்டு 'அகிலாவின் கதை' தொடரும்.