தேடலில் வ.ந.கிரிதரன் சிறுகதைதேடல் சஞ்சிகைதேடல் (கனடா) சஞ்சிகை 'தேடகம்' என்று அறியப்பட்ட கனடாத் தமிழர் வகைதுறை வள நிலையத்தாரால் வெளியிடப்பட்ட சஞ்சிகை. கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் 'தேடல்' மிகவும் முக்கியமான சஞ்சிகைகளிலொன்று. பதினாறு இதழ்கள் வெளியாகியுள்ளன. இதழ் 14 என்று இரு இதழ்கள் (1994 மற்றும் 1996) வெளியாகியுள்ளன. வடிவமைப்புச் செய்தவரின் தவறாக இருக்க வேண்டும். வெளிவந்த இதழ்களில் முதலிரண்டையும் தவிர ஏனையவற்றை 'படிப்பகம்' இணையத்தளத்தில் ஆவணப்படுத்தி வைத்துள்ளார்கள்.

'தேடல்' சஞ்சிகையில் கவிதைகள், மனித உரிமை சார்ந்த கட்டுரைகள் , அறிவியற் கட்டுரைகள், சினிமா பற்றிய கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் எனப் பல்வகையான காத்திரமான ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. செழியன், விதுரன், பா.அ.ஜயகரன், வ.ஐ.ச.ஜெயபாலன், அமுதன், பாமதி, சகாப்தன், ஆனந்தபிரசாத், சிவம், கிறிசாந் பாக்கியதத்தா என்று பலர் கவிதைகள் எழுதியிருக்கின்றார்கள். மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவும் பிரசுரமாகியுள்ளன. சபா வசந்தன், விதுரன், சகாப்தன், வ.ந.கிரிதரன், ஜோர்ஜ்.இ.குருஷேவ் , கோவை றைதன் (ரதன் ஆக இருக்க வேண்டும். றைதன் என்று பிரசுரமாகியுள்ளது), அருள்தாஸ் என்று பலர் சிறுகதைகளை எழுதியுள்ளார்கள். கட்டுரைகளை செழியன் (இவரது 'ஒரு போராளியின் நாட்குறிப்பு' தொடராக வெளிவந்துகொண்டிருந்தது), பேராசிரியர் சி.சிவசேகரம், வ.ஐ.ச.ஜெயபாலன், பா.அ.ஜயகரன், வ.ந.கிரிதரன், நேசன், ரதன் , ஆரூரான், எஸ்.வி.ராஜதுரை.. .. என்று பலர் எழுதியிருக்கின்றார்கள். இவை தேடலில் எழுதியவர்களின் முழுமையான பட்டியல் அல்ல. ஓருதாரணத்துக்காகக் குறிப்பிட்டுள்ளேன்.

தேடல் சஞ்சிகையில் எனது பின்வரும் படைப்புகள் வெளியாகியுள்ளன:

சிறுகதைகள்:
1.'மான் ஹோல்',
2. 'கட்டடக்கூட்டு முயல்கள்'

கட்டுரைகள்:
1. ஆய்வுக்கட்டுரை: 'இட, வெளிக் கோட்பாடும் இப்பிரபஞ்சமும்'(ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடு பற்றிய விரிவான கட்டுரை. சஞ்சிகையில் கட்டுரைத் தலைப்பை இடவெளி என்பதற்குப் பதிலாக இடைவெளி என்று பிழையாகத் தட்டச்சு செய்து விட்டிருந்தார்கள்)
2.ஆய்வுக் கட்டுரை: 'சிந்தனையும், மனமும், சூழலும்' (சிக்மண்ட் பிராய்டின் உளவியற் கோட்பாடுகள் பற்றிய கட்டுரை) ,
3. ஆய்வுக்கட்டுரை: பாரதி ஒரு மார்க்சியவாதியா?
4. இன்னுமொரு கட்டுரை தேடலின் இதழ் இரண்டில் அல்லது ஒன்றில் வந்திருக்க வேண்டும். அதன் தலைப்பு உடனடியாக ஞாபகத்துக்கு வரவில்லை)

நேர்காணல்:
1. நந்தலாலா ஆசிரியர் குழுவைச்சேர்ந்த எழுத்தாளார் ஜோதிகுமார் கனடா வருகை தந்திருந்தபோது அவருடன் நடாத்திய நேர்காணல். நீண்டதொரு விரிவான நேர்காணல்.

'தேடல்' சஞ்சிகையின் இதழ்களைப் 'படிப்பகம்' தளத்தில் வாசிக்கலாம்: http://padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=14&Itemid=54#catid153