சண்முகம் முத்துலிங்கம்சண்முகம் முத்துலிங்கம்நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது முகநூல் பதிவொன்றில் சண்முகம் முத்துலிங்கம் (Sanmugam Muttulingam) அவர்களின் மறைவு பற்றிய செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அறிந்தபோது உண்மையிலேயே அதிர்ச்சியாகவிருந்தது. இரு நாட்களுக்கு முன்புகூடத் தனது முகநூலில் பதிவுகள் பலவற்றை இட்டிருந்தாரே. மிகவும் துயர் தருவது. அண்மையில்கூட எழுத்தாளரும் இவரது நண்பருமான நந்தினி சேவியர் அவர்களின் இவரது உடல் நலம் பற்றிய குறிப்பொன்றுக்கான தனது பதிலினைத் தனது முகநூலில் பின்வருமாறு பகிர்ந்துகொண்டிருந்தார்.

"//விரைந்து குணமடைக முத்தரே. (நந்தினி)// அப்பனே நந்தினி, 52 வருடத்தோழனே, உன் அன்புக்கு ... நன்றி ... மூன்றாவது மார்படைப்பிலிருந்து மீண்டுள்ளேன். உடல், மனம், இரண்டுக்கும் போதிய ஓய்வு கொடுக்கிறேன். முகநூல் -- எனது மூளைக்குத் தேவையான உயிர்ப்பைத் தருகிறது ... எனது உடல் யாழ் மருத்துவ பீடத்துக்குத் தானம் என்றும், மரணச்சடங்கு என எதுவிதமான கேலிக்கூத்தும் இருக்கக்கூடாது எனவும், வீட்டில் உறுதியாகச் சொல்லி வைத்துள்ளேன். உடல் இயங்கும் போதே உனக்கும், என்மீது அன்புள்ள யாவர்க்கும், உங்கள் அன்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் ! இறுதி மூச்சு வரை -- "மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் ..." வாழ்வேன் ! :-) 'கிழட்டுக்கிளி' சண்முகம் முத்துலிங்கம்."

அதற்கு நான் இவ்விதம் அவருக்கு ஆறுதலளித்து எனது கருத்தினைப்பதிவிட்டிருந்தேன்.

"நீங்கள் பூரணசுகமடைந்து பல்லாண்டுகள் வாழ்வீர்கள். ஏனென்றால் நீங்கள் மிகுந்த மன உறுதியுடையவர். அந்த மன உறுதியே உங்களை நிச்சயம் நீண்ட காலம் வாழ வைக்கும். எனக்குத்தெரிந்து எண்பதுகளில் மூன்று தடவைகள் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் இன்னும் வாழ்கின்றார். உணவு வகைகளை மட்டும் கவனித்துக்கொள்ளுங்கள். உடல் பூரண சுகம் பெற்றதும் போதிய உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாகிக்கொள்ளுங்கள்"

அதற்கு அவர் தான் முறையாகத் தேகப்பயிற்சி செய்வதாகப்பதிலளித்திருந்தார். உண்மையில் இவரது மறைவுச்செய்தி மனதுக்குத் துயரினை அளிக்கின்றது. இவரை எனக்கு முன்பே தெரியாது. முகநூல் மூலம்தான் அறிமுகமானார். அவரே எனக்கு நட்புக்கான அழைப்பினை அனுப்பியிருந்தார். இவரது முகநூல் பதிவுகள் மூலம் இவர் தனக்குச்சரியென்று பட்டதை ஆணித்தரமாகச் சொல்லத்தயங்காதவர் என்பதை உணர்ந்திருக்கின்றேன். முனைவர் சி.மெளனகுரு, எழுத்தாளர் நந்தினி சேவியர் ஆகியோரின் நீண்ட கால நண்பர் என்பதையும் அப்பதிவுகள் மூலம் அறிந்திருக்கின்றேன். ஆனால் அண்மையில்தான் இவரது மாரடைப்பு பற்றிய முகநூல் செய்தியினை அறிந்து என் கருத்தினையும் பதிவு செய்திருந்தேன். இவரது மறைவு பற்றிய செய்தி நன்கு நெருங்கிப்பழகிய ஒருவரை இழந்து விட்ட துயர உணர்வினைத்தருவது எனக்கு ஒருவிதத்தில் வியப்பினையும் தருகின்றது. அதே சமயம் முகநூல் எவ்வளவு தூரம் மானுட உணர்வுகளைப்பாதிப்பதில், நட்பு உறவுகளை உணர்வுபூர்வமாக இணைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது என்பதை இவரது மறைவு பற்றிய செய்தி உணர்த்தி வைக்கின்றது. இவரது மறைவினையொட்டிய இவரது மாணவர்கள் பலரின் பதிவுகளிலிருந்து இவர் திறமையான , மாணவர்களின் உள்ளங்களைக் கவர்ந்த ஆங்கில ஆசிரியராகவும் விளங்கியிருக்கின்றார் என்பதையும் அறிய முடிகிறது. கூடவே இவர் சிறந்த மார்க்சியர் என்பதையும் எழுத்தாளர்கள் நந்தினி சேவியர் போன்றோரின் பதிவுகளிலிருந்து அறிய முடிகின்றது. இவர் எனது நட்பு வட்டத்தில் இருந்ததை எண்ணி உண்மையிலேயே பெருமையுறுகின்றேன்.

அத்துடன், அமரர் சண்முகம் முத்துலிங்கம் அவர்கள் தனது முகநூலில் இட்டிருந்த, பகிர்ந்திருந்த பதிவுகள் சிலவற்றையும் இத்தருணத்தில் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது பதிவில் 'இந்தக் கிழட்டுக்கிளி எப்போதுமே, மனுஷத்திற்காக குரல் கொடுக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது முகநூல் பதிவுகள் பலவற்றை வாசிக்கும்போது அக்கூற்று எவ்வளவு நியாயமானது, உண்மையானது என்பதை உணர முடிகின்றது.

"இறுதி மூச்சு வரை -- மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் ... வாழ்வேன் ! :-) 'கிழட்டுக்கிளி' சண்முகம் முத்துலிங்கம்." - என்று தனது முகநூற் பதிவொன்றில் கூறியது போலவே இறுதிவரை மிடுக்குடன் வாழ்ந்து சென்றிருக்கின்றார். அந்த மிடுக்கு, அந்தக் கம்பீரம் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கின்றது. இவரைப்போன்றே இருக்கும்வரை இருப்பை எதிர்கொண்டு வாழ்ந்திட வேண்டுமென்ற அவாவினை ஏற்படுத்துகின்றது.

அத்துடன் இவரது மறைவால் வருந்தும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரது துயரத்திலும் உளப்பூர்வமாகப் பங்குகொள்கின்றேன்.

Sanmugam Muttulingam Yesterday at 10:40pm ·
கிரிசாந்த் : கேப்பாபுலவு மக்கள் இந்த போராட்டத்தின் போது காட்டும் உறுதி மெய்ச்சத் தக்கது. அங்கு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று வீதியில் படுத்து பனியில் நனைத்து வெயிலில் வறண்டு இராணுவத்தின் அச்சுறுத்தல்களை புறந்தள்ளி இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளனர். பலர் இந்தப் போராட்டத்திற்கு உரிமை கோரவும் இதனூடாக தமது இருப்பினை உறுதிப் படுத்தவும் அரசியல் லாபம் தேடியும் அந்தக் கொட்டகைக்கு வந்து செல்கிறார்கள்.ஆனால் எந்த அரசியல் வாதியினதும் குரலிலும் சுரத்தில்லை, அந்தப் பெண்களின் குரலில் ஒரு உக்கிரமிருக்கிறது. கண்ணியமிருக்கிறது. போராட்டத்தின் குணமிருக்கிறது. இப்பொழுது அங்கு நடந்த சில சம்பவங்களினூடாக போராட்டத்தின் நிலைமையையும் அதன் பல்பரிமாணத் தன்மையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

Sanmugam Muttulingam February 11 at 11:41pm ·
"மனிதம்" மனித குலத்துக்கு மிகவும் தேவையானது ! ஆனால் ... மொழி வெறி + இன வெறி + மத வெறி >>> "தேசியம்" என்னும் 'சாத்தானிய' வெறி / பிரதேசவாத வெறி / ஆணாதிக்க வெறி / சாதி வெறி / சுயநல வெறி / ஆணவ வெறி -- என்பவை தனிமனிதரிலும், மனிதக் குழுக்களிலும், முழு மானுட சமுதாயத்திலும் -- இருக்க வேண்டிய மனிதத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன ...

Sanmugam Muttulingam Yesterday at 8:17pm ·
சிந்துசமவெளியின் முத்திரை தொடர்பான தமது சுமார் 50 ஆண்டுகால ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார். ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிட தொடர்புக்கான ஆதாரம் (Dravidian Proof of the Indus Script via Rig Veda) என்கிற தலைப்பிலான அவரது ஆய்வுக்கட்டுரையில் சிந்துசமவெளிக் குறியீடுகள் தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்பது உறுதியாகத் தெரியவந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
சிந்துவெளி மொழி, திராவிட மொழியின் முற்கால வடிவமே

சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தென்னகம் நோக்கி இடம்பெயர்ந்ததால் தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம் நடந்திருக்கலாம் எனவும் இதன் காரணமாகவே சிந்து திராவிடத்தின் நீட்சி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட மொழிகளில் காணப்படுவதாகவும் ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார். இதற்குச் சான்றாக, சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு சொற்கள் உள்ளதாக தெரிவித்த ஐ. மகாதேவன், பாண்டிய குடிபெயர்களாகிய மாறன், செழியன், வழுதி, பாண்டியன் என்ற சொற்களின் மூலவடிவங்கள் சிந்துவெளி இலச்சினைகளில் ஒருங்கிணைந்த சொற்றொடதொடராக இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார். வடஇந்தியாவில் ஆரியர்களும், திராவிடர்களும் கலந்து இந்திய சமுதாயம் தோன்றிய பின்னரே ரிக் வேதம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கும் ஐராவதம் மகாதேவன், இதற்கான பல சான்றுகளை ரிக் வேதத்தில் தாம் கண்டதாகவும் கூறினார். சிந்துவெளி நாகரிகத்தின் பெயர்களும், பட்டங்களும் ரிக் வேதத்தில் மொழிபெயர்ப்புகளாகக் காணப்படுவதாக ஐ மகாதேவன் தெரிவித்தார்.

குறிப்பாக பாண்டியர்களின் மூதாதையர்களின் பெயர்களும் சிந்து சமவெளியின் குறியீடுகள் குறிப்புணர்த்தும் சொற்களும் ஒத்துப்போவதாக ஐராவதம் மகாதேவன் கூறினார். ரிக் வேதத்தில் வரும், “பூசன்” என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து பெறப்பட்டதாக தாம் அறிந்து கொண்டதாக தெரிவித்த அவர், இதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகம் என்பது முன் வேத பண்பாட்டை விட, காலத்தால் மிக முந்தையது என்று விளங்குவதாகவும் தெரிவித்தார். மேலும், சிந்துச்சமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத்தமிழ் சொற்களுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்ககால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம் என்றும் சிந்துசமவெளிக் குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளதாகவும் தெரிவித்தார்

Sanmugam Muttulingam Yesterday at 7:56pm · Colombo, Sri Lanka ·
பழமையில் நன்மைகள் மட்டுமா உள்ளன ? தீமைகள் இல்லையா ? புதுமையில் தீமைகள் மட்டுமா உள்ளன ? நன்மைகள் இல்லையா ? பழமை, புதுமை -- இரண்டிலும் "மனிதம்" வேண்டும் ! தீயவை வேண்டாம். அவ்வளவுதான். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல, கால வகையினானே !" /// நல்லன கழியாமல் அல்லன புகாமல், கல்வியிற் பெரியோர் காப்பாற்ற வேண்டும் !

Sanmugam Muttulingam Yesterday at 7:11pm · Colombo, Sri Lanka ·
பிள்ளைகளின் உரிமைகள், சுதந்திரம், மகிழ்ச்சி, ஆளுமை -- திட்டமிடப்பட்டு நசுக்கப்பட்டு வருகின்றன ...யார் பிள்ளைகளின் பகைவர் ? (1) கல்வி அமைச்சு. (2) அமைச்சை மீறமுடியாத பாடசாலைகள். (3) கழுத்தறுப்புப் போட்டிச் சமூகத்தை நிலை நிறுத்தும், பேராசை பிடித்த பெற்றோர். (4) தனியார் கல்வி நிலையங்கள்.

முகநூலில் சண்முகம் முத்துலிங்கம் பற்றிய பதிவுக்கான பின்னூட்டங்களில் சில:

எழுத்தாளர் நந்தினி சேவியர்: Nanthiny Xavier மௌனித்துள்ளேன்!

எழுத்தாளர் வதிரி.சி.ரவீந்திரன் Vathiri C Raveendran பேசமுடியவில்லை. மானிடத்தை மதித்த. மனிதன்.

எழுத்தாளர் வடகோவை வரதராஜன்: Vadakovy Varatha Rajan Rip

சிவா ஏரம்பு: Siva Erambu கண்ணீர் அஞ்சலிகள்.!!!

எழுத்தாளர் மேமன்கவி: Memon Kavi உண்மைதான் கிரி நானும் அவரை சந்தித்தில்லை. ஆனாலும் முகநூலில் நண்பர் ஆகியதும், அதிலான அவரது ஊடாட்டம் அதில் இட்ட பதிவுகள் அவற்றில் வெளிப்பட்ட அவருடைய கருத்துகள் ஊடாக ரொம்பவும் அருகாமையில் இருந்த, ரொம்பவும் எம்மை நேசித்த ஒரு மூத்த ஆளுமையை, நண்பரை இழந்து விட்ட சோகம் எமக்கு. அவரை நேரில் சந்திக்க முடியவில்லையே ஏக்கம் சதாகாலம் எனக்குள் இருக்கும்.வதிரியும் நந்தினியும் கூறியது போல் அவரது இழப்பு எம்மை மௌனத்தில் உறைய வைத்திருக்கிறது.

எழுத்தாளர் சிதம்பரநாதன் ரமேஷ் Sithaparanathan Ramesh உங்கள் பதிவகள் அவரின் நினைவுகளை மீட்டெடுக்க உதவுகின்றன.

* இங்குள்ள சண்முகம் முத்துலிங்கம் அவர்களின் ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் செளந்தர் அவர்கள்.