கவிஞர் புதுவை இரத்தினதுரைஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது கவிதைகள் ஈட்டி போல் நெஞ்சினைக் குற்றுபவை. உணர்ச்சிமிக்க உரிமைக் குரலாக ஒலிப்பவை. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுக் கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் அவருமொருவர். அவரது அரசியற் கருத்துகளுக்கு அப்பால் ஈழத்துத தமிழ்க் கவிதையுலகில் தடம் பதித்த முக்கியமான கவிஞர்களில் அவருமொருவர். முக்கியமான கவிஞர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார். அவரைப்பற்றிய எவ்விதத்தகவல்களும் இதுவரை இல்லை. இலங்கை அரசாங்கம் இறுதியில் காணாமல் போனவர்கள் பற்றி வாய் திறப்பதற்கு இறுதியில் புதுவை இரத்தினதுரையின் காணாமல் போதல் வழி வகுக்கலாம். புதுவை இரத்தினதுரையை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகம் அவ்வளவு இலேசாக மறந்து விடப்போவதில்லை. தேசிய அரசியலுக்கு அப்பால் ஈழத்தின் வர்க்க விடுதலைக்காகப்போர்க்குரலாக ஒலித்த அவரது குரலை ஈழத்து முற்போக்கு இலக்கியம் அவ்வளவு இலேசில் மறந்து விடாது.

எழுபதுகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட 'குமரன்' இதழில் நிறைய கவிதைகளை வரதபாக்கியான் என்னும் பெயரில் எழுதியிருக்கின்றார். அவரது அக்காலகட்டத்துக் கவிதைகளினூடாக அவரை அணுகுவது அவரது கவிதைகள் பற்றிய திறனாய்வுக்கு , அவரது போர்ச்சுவாலைகளாகத் திகழ்ந்த கவிதைகளை அறிந்து கொள்வதற்குரிய நல்லதோர் அணுகுமுறை.

குமரன் சஞ்சிகையின் பல இதழ்களை, புதுவை இரத்தினதுரை வரதபாக்கியான் என்னும் பெயரில் எழுதிய கவிதைகள் பலவற்றை நூலகம் இணையத்தளத்தில் காணலாம். வர்க்கப்புரட்சியை ஆக்ரோசமாக வெளிப்படுத்தும் கவிதை வரிகள் அவை. அவற்றிலொன்று 'குமரன்' சஞ்சிகையின் 28ஆவது இதழில் வெளியான 'புலிகள் ஆவோம்' என்னும் கவிதையாகும்.

இக்கவிதை எழுதப்பட்ட காலகட்டம் 1973. புலிகள் அமைப்பு உருவாகாத காலகட்டம். பின்னர் அவர் புலிகள் அமைப்புடன் இணைந்ததை இக்கவிதையுடன் ஒப்புநோக்குவதும் பொருத்தமானதே. அக்கவிதையின் தலைப்பு: புலிகள் ஆவோம். அக்கவிதையில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:

பெற்றதாய் எதிராய் வந்து
புரட்சியின் போது ஏதும்
குற்றங்கள் செய்தா லெங்கள்
குண்டுகள் அவளின் நெஞ்சைப்
புற்றுகள் ஆக்கும், ஆமாம்
புரட்சியின் போது நாங்கள்
சுற்றமும் துணையும் பாரோம்.
சூடு காண் புலிகள் ஆவோம்.

நேற்று நாம் பேசா வூமை
நோயர்கள், ஆனாலின்று
காற்றைப்போற் கிளர்ந்தெழுந்து
காரியம் முடிக்க வல்ல
கூற்றுவர், சுரண்டி வாழும்
கும்பலை அரைத்துத் தின்னும்
மாற்றத்தை விரும்பி வந்த
மாபெரும் உழைப்பாளர்கள்.

புலிகள்' ஆவோம்' என்ற இக்கவிதையில் அவர் எழுதியுள்ள,

"பெற்றதாய் எதிராய் வந்து
புரட்சியின் போது ஏதும்
குற்றங்கள் செய்தா லெங்கள்
குண்டுகள் அவளின் நெஞ்சைப்
புற்றுகள் ஆக்கும், ஆமாம்
புரட்சியின் போது நாங்கள்
சுற்றமும் துணையும் பாரோம்.
சூடு காண் புலிகள் ஆவோம்."

என்னும் வரிகள் புலிகள் என்னும் அமைப்பு உருப்பெறுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். ஆனால் புதுவையாரின் மனப்போக்கினை வெளிப்படுத்தும் மேலுள்ள வரிகள் பின்னாளில் உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் நிலைப்பாடாகவும் இருந்ததைப் பார்க்கும்போது ஏன் புலிகள் அமைப்பில் புதுவை இரத்தினதுரௌ இணைந்துகொண்டார் என்பதற்கான காரணங்களிலொன்றாக இம்மனப்போக்கும் இருக்கலாமோ என்னும் ஐயத்தினையும் ஏற்படுத்துகின்றது.

ஒரு விதத்தில் இக்கவிதையினைப் புதுவையின் தீர்க்கதரிசனம் மிக்க கவிதையாகவும் கூறலாம். இக்கவிதையை எழுதிய கால கட்டத்தில் அவர் வர்க்க விடுதலைப்புரட்சிக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரே நினைத்திருக்க மாட்டார் பின்னாளில் தேசிய விடுதலைக்கவியாக அவர் உருமாறுவாரென்பதை. அதுவும் புலிகள் அமைப்பில் சேர்ந்து போராடப்போகின்றாரென்பதை.

புலிகள் அமைப்பில் அவர் இருந்தபோது அவர் எழுதிய உணர்ச்சிக் கவிதைகளைப்பார்த்து ஒருவேளை அவர் புலிகளில் இருப்பதால்தான் அவ்விதம் எழுதுகின்றாரோ என நான் எண்ணியதுண்டு. ஆனால் அவரது ஆரம்பக்காலத்து வர்க்கவிடுதலை எழுச்சிக் கவிதைகளைப்பார்த்தபோது ஒன்று புரிந்தது; புரிகின்றது. அது: போர்க்குணமென்பது புதுவையாரின் இயற்கையான உண்மையான அவரது உணர்வுகளின் வெளிப்பாடு. அதனைத்தான் வரதபாக்கியான என்று அவர் எழுதிய கவிதைகள் புலப்படுத்துகின்றன.

இது போல் பல புதுவை இரத்தினதுரையின் ஆரம்பகாலத்து  வர்க்கப்போராட்டப்புரட்சிக்குரலாக ஒலிக்கும் கவிதைகளைக் குமரன் இதழ்களில் காணலாம். இக்கவிதை வெளியான குமரன் இதழுக்கான இணைய இணைப்பு: http://noolaham.net/project/32/3150/3150.pdf

மேலும் பல குமரன் இதழ்களில் இவரது கவிதைகளைக் காணலாம். அதற்கான இணைய முகவரி: http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D