அண்மையத் தாக்குதற் காட்சியொன்றுஅண்மையில் இலங்கையில்  'இஸ்லாமிய அரசின்' (ஐஎஸ் அல்லது இஸ்) அனுசரணையுடன், வஹாபிஸத்தை நம்பும் தீவிரவாத முஸ்லிம் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு கிறிஸ்தவ ஆலயங்களில், நட்சத்திர ஹொட்டல்களில் நடாத்திய குண்டுத்தாக்குதல்கள் 9-11 தாக்குதலையொத்தது. மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட தாக்குதல்கள். வசதியான, படித்த இளைஞர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள். இந்த இஸ்லாமிய அமைப்பினை நடாத்தி வந்தவர் ஜஹ்ரான் ஹாசிம்.

ஒரு நாட்டில் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கிளர்ந்தெழுவார்கள். தற்கொலைத்தாக்குதல்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறைகள் , இனக்கலவரங்கள் நடைபெற்றிருந்தாலும் அவை இலங்கைத்தமிழர்கள் கடந்த காலங்களில் அனுபவித்தவை போன்றவையல்ல. இருந்தாலும் எதற்காக இவ்வளவு மூர்க்கமாகக் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், வெளிநாட்டவர்கள் அதிகமாகத் தங்கியிருந்த நட்சத்திர ஹொட்டல்களிலும் தம் உயிரைத் துச்சமாக மதித்து இம்முஸ்லிம் அமைப்பினர் தற்கொலைத்தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.

உண்மையில் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் வஹாபிசத்தை நம்புபவர்கள் அல்லர். அவர்கள் பிற இனங்களுடன் இணைந்து வாழ்பவர்கள். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருபவர்கள். இலங்கையின் முஸ்லிம் மக்களைப்பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகள் எல்லாம் கடந்த காலங்களில் தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு பற்றியும், அதன் போதனைகளின் அபாயம் பற்றியெல்லாம் காவல் துறையினருக்கு அறியத்தந்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றையெல்லாம் காவல் துறையினர் உரிய முறையில் கவனத்துக்கெடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அண்மைய தாக்குதல்கள் பற்றிய அபாய முன்னறிவிப்புகளை, தகவல்களைக்கூட அவர்கள் அவ்விதம் கவனத்தில் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் கூட அறிவித்திருக்கவில்லை.

இவ்விதமான சூழலில் எதற்காக இவ்விதம்  தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு தாக்குதல்களை நடாத்தியுள்ளது? இதற்கு முக்கிய காரணம் அவர்கள் இஸ்லாமிய அரசு அமைப்பின் கொள்கைகளை உள்வாங்கி அதனை இலங்கையில் செயற்படுத்தியதுதான்.  'இஸ்லாமிய அரசு' அவ்விதமானதொரு  அரசினை ஈராக்கிலிருந்து சிரியா வரை நடாத்தியிருந்தது. அதனை அது இழந்து விட்டாலும் அவ்வமைப்பு செயலிழந்து போகவில்லை. அவ்வமைப்பில் மேற்கு நாடுகளிலிருந்தெல்லாம் பலர் இணைந்து கொண்டார்கள். அவ்விதம் இணைந்து கொண்டவர்களெல்லாரும் தாம் வாழ்ந்த நாடுகளில் தமக்கேற்பட்ட அடக்குமுறைகளால் இணைந்துகொண்டவர்கள் அல்லர். அவர்கள் உலகளாவியரீதியில் இஸ்லாமிய அரசொன்றைனை ஸ்தாப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசின் போதனைகளை, தத்துவங்களை ஏற்றுக்கொண்டு இணைந்தவர்கள்.

இன்று சிரியாவில், ஈராக்கில் இஸ்லாமிய அரசு தன் ஆதிக்கத்தை இழந்திருக்கும் சூழலில் அது தன்னைப்பின்பற்றும் ஏனைய நாடுகளிலுள்ள வஹாபிச அமைப்புகளையெல்லாம் தாம் வாழும் நாடுகளிலெல்லாம் தமக்காதரவான  தாக்குதல்களை நடாத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்விதம் நடக்கும் தாக்குதல்களுக்கு உரிமை கோரி வருகின்றது. இவ்விதமான அமைப்புகளில் முக்கியமான அமைப்புகளிலொன்று நைஜீரியாவின் போஹோ ஹராம்  அமைப்பு. அவ்விதமான இன்னுமோர் அமைப்பே தேசிய தவ்ஹீத் ஜமா அத். இலங்கையில் நடாத்திய தாக்குதல்களின் திட்ட நேர்த்தி, கொடூரம், பேரழிவு ஆகிவற்றால் இன்று இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பின் பெயர் பெற்றுள்ள கவனத்தை தேசிய தவ்ஹீத் ஜமா அத் பெற்றுள்ளது. இவ்விதமான அமைப்புகளுக்குத் தேவையே இதுபோன்ற பிரபல்யமே. ஏனெனில் மேலும் பலரை இணைத்துக்கொள்வதற்கு இவ்வகையான தாக்குதல்கள், பிரபல்யம் உதவுகின்றன என்பதால்.

 தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு கிறிஸ்தவ ஆலயங்களில், நட்சத்திர ஹொட்டல்களில் நடாத்திய குண்டுத்தாக்குதல்கள் 9-11 தாக்குதலையொத்தது. மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட தாக்குதல்கள். வசதியான, படித்த இளைஞர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள். இந்த இஸ்லாமிய அமைப்பினை நடாத்தி வந்தவர் ஜஹ்ரான் ஹாசிம்.இவ்வகையான அமைப்புகளைக்கட்டுப்படுத்துவதிலுள்ள பிரதானமான சிரமம் என்னவென்றால் இவை நடைபெறும் நாடுகளில் நிலவும் அடக்குமுறைகளின் தன்மை காரணமாக இவ்வமைப்புகள் உருவாகுபவை அல்ல. உலகரீதியில் இஸ்லாமிய அரசு உருவாக வேண்டுமென்பதற்காக உருவாகுபவை. இவற்றின் செயற்பாடுகளுக்கு அவை இயங்கும் நாடுகளில் நிலவும் அடக்குமுறைச் சூழல்கள் உதவும் நிலையிருப்பதால், அவ்வடக்குமுறைகளைக் காரணமாக வைத்து மேலும் பலரை தம் அமைப்புகளில் அவை இணைத்துக்கொண்டாலும் இவற்றின் செயற்பாடுகளை முற்றாகத் தடை செய்ய முடியுமா? மிகவும் சிரமமானதொன்று. ஏனெனில் இவற்றின் செயற்பாடுகள் எல்லைகளைக் கடந்தவை என்பதால். உலகளாவியரீதியிலேயே இவை இயங்கும் நாடுகளின் அரசுகள் ஒன்றிணைந்து  இவற்றுக்கெதிராகச் செயற்படுவதன் மூலமே அது சாத்தியம். அது நீண்ட கால நடவடிக்கை. அதே சமயம் இவ்வகையான அமைப்புகளையும், ஏனைய சாதாரண , இவ்வமைப்புகளின் போதனைகளை ஏற்றுக்கொள்ளாத முஸ்லிம் மக்களையும் இனங்கண்டுகொண்டு அரசுகள் செயற்படவேண்டியது இவ்வமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியம். இவ்வமைப்பினர் முஸ்லிம்கள் என்னும் காரணத்தால், ஏனைய பெரும்பான்மையான, நீதிக்குக் கட்டுபடும் முஸ்லிம் பொதுமக்களையும் தீவிரவாதிகளாக எண்ணி அரசுகளும், அவற்றின் ஆயுதப்படையினரும் செயற்பட்டால் அவற்றின் விளைவுகள் இவ்வகையான அமைப்புகள் இன்னும் பலமாக வளர்வதற்கே வழி வகுக்கும். ஏனெனில் அரச அடக்குமுறைகள் காரணமாகப் பலர் இவ்வகையான அமைப்புகளில் இணைந்துகொள்ளும் சந்தர்ப்பங்களை அவ்வகையான அடக்குமுறைகள் உருவாக்கும்.

இன்னுமொரு விடயம். தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் ஸ்தாபகரின் காணொளி  உரைகள் சிலவற்றைக் கேட்டேன். அப்பொழுதுதான் அவர் எவ்வளவுதூரம் தான் நம்பும் மார்க்கத்தில் ஈடுபாடுள்ளவாறிருக்கின்றார் என்பதை உணர முடிந்தது. அவர் நம்பும் மார்க்கத்தின் போதனைகளிலொன்று. காபீர்களுடன் (முஸ்லீம் அல்லாதவர்களுடன்)  ஆண்டுக்கொருமுறையாவது போரிட்டு அவர்களைக் கொல்ல வேண்டும். இதனை மார்க்கக் கடமையாக அவர் நம்பும் வஹாபிச போதனை வலியுறுத்துகின்றது. முஸ்லீம் அல்லாதவர்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறும்படி அவர் நம்பும் மார்க்கம் வலியுறுத்துகின்றது. இவ்விதமான மார்க்கக் கடமையினையே , அதற்கான போரினையே ஜிகாத் என்கின்றார்கள். இவ்விதமான மார்க்கக் கடமையினைச் செய்பவர் சொர்க்கத்துக்குச் செல்கின்றார். எனவே விளைவுகளைக் கவனிக்காது இவ்விதமான மார்க்கக்கடமைகளைச் செய்யுமாறு அவர் நம்பும் மார்க்கம் போதிக்கின்றது. இப்போதனைகளை மார்க்கக் கடமைகளாக ஏற்றுக்கொண்டு செயற்படுவதால்தான் இவ்விதமான தற்கொலைப்போராளிகள் உருவாகின்றார்கள். இவர்கள் வெடித்துச் சாவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றார்கள். இவ்விதமாக மார்க்கக் கடமையினைச் செய்கையில் உயிர் நீக்கும்போது உண்மையிலேயே சொர்க்கத்துக்குத் தாம் செல்வதாக நம்புகின்றார்கள். இப்போதனைகளை இம்மார்க்கத்தை நம்பும் அனைவரும் எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றார்கள். இவ்விதமானதொரு சூழலில் இவ்விதமான அமைப்புகளை வெற்றிகொள்ள வேண்டுமானால் இவ்விதமான அமைப்புகளின் போதனைகள் இஸ்லாமின் போதனைகள் அல்ல என்பதை இஸ்லாமிய மத மதகுருமார்கள் தர்க்கரீதியாக எடுத்துரைக்க வேண்டும். முஸ்லீம் மக்கள் மத்தியில் உண்மையான இஸ்லாமியக் கோட்பாடுகளை எடுத்துக்கூறும் அதே சமயம் வஹாபிச இஸ்லாமியக் கோட்பாடுகள் உண்மையான இஸ்லாமியக் கோட்பாடுகள் அல்ல என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

இவ்விதமாச் சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் எழுத்தாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவின் இக்கவிதையினை  எழுத்தாளர் தமயந்தி தன் முகநூலில் பதிந்திருந்தார். தற்போது நடைபெற்ற தாக்குதல்களையிட்டு அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள கவிதை இது. இது போன்று ஏனைய முஸ்லீம் எழுத்தாளர்கள், பொதுமக்களும் தம் உணர்வுகளை எவ்வித அச்சமுமற்று எடுத்துரைக்க வேண்டும். முஸ்லீம் மக்களைப்பற்றித் தவறாகச் சித்திரிக்கும் இனவாதிகள், ஊடகங்கள் சித்திரத்தை உடைப்பதற்கு இவ்வகையான செயற்பாடுகள் மிகவும் அவசியம். தமயந்தி பதிவு செய்திருந்த ஹனீபா அவர்களின் கவிதையினை  நன்றியுடன் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

கவிதை: என்னையும் அவர்கள் சிலுவையில் அறைந்தார்

-எஸ்.எல்.எம்.ஹனீபா-

உயிர்த்த ஞாயிறில்
ஓடிய குருதியில்- நானும்
கலந்தேன் - நானும்
கரைந்தேன்.
ஒவ்வொரு உயிரிலும்...
உயிரின் அணுவிலும் ....
ஓடிப்பதறி ஒழிந்து
மாய்ந்தேன்.
கருகிய உடலாக
சாரா என்றொரு
தங்கக் கட்டியைக்கண்டு...
நெஞ்சம் பதைக்க
நினைவை இழந்தேன்
எனது பேத்தியும்- அவன் தன்
மகளும், நாமம் ஒன்றே!
உயிரும் ஒன்றே!
ஊனும் குருதியும் ஒன்றே மானிடா!
எங்கள் மூஸாவே!
எங்கள் யேசுவே!
எங்கள் முஹம்மதே!
புத்தன் வழியின் புண்ணிய பூமியே!
இந்தப் பழியை எந்தக் கடலில்
கழுவித்துடைப்போம்
யா அல்லாஹ்!

கவிதை: என்னையும் அவர்கள் சிலுவையில் அறைந்தார்