மகா மானுடர்களைப் பெருமையுடன் நினைவு கூர்வோம்! உண்மையிலேயே எனக்குச் சில நேரங்களில் ஈழத்தமிழர்களை நினைத்தால் வியப்பாகத்தானிருக்கும். அவர்களுக்கிடையில் தீர்க்கப்படாத சமூக, அரசியற் பிரிவுகள் இருந்தபோதிலும் உலக அரங்கில் இன்று தமிழர் என்னும் அடையாளமாகத் திகழ்பவர்கள் ஈழத்தமிழர்கள்தாம். இலங்கையில் தமிழர்கள் கொடிய அடக்குமுறைகளுக்குள்ளாகிய போது எதிர்த்துப் போரிட்டார்கள். தம் வரலாற்றுக்கடமையை முன்னெடுத்துச் சென்றார்கள். வரலாற்றில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டார்கள். அது உலகத்தமிழர் வரலாற்றில் நிச்சயம் பெருமையுடன் பொறிக்கப்படும். உலகத்தமிழர்களின் அடையாளமாகத் திகழ்பவர்கள் சின்னஞ்ச்சிறு தீவொன்றில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் என்பது பெருமையுடன் நோக்கப்பட வேண்டியதொன்று.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கைத்தமிழரின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த விடுதலைப்போராளிகள் , பலியாகிய அப்பாவிப்பொதுமக்கள் (அவர்கள் எவ்வினத்தவராக இருந்த போதிலும், எப்பிரிவினராகவுமிருந்தபோதிலும் ) அனைவரையும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம். எதிர்காலத்தில் யுத்தமற்ற , சமூக அரசியற் பிரிவுகளற்ற சமுதாயமொன்றின் தேவையினை நடந்து முடிந்த யுத்தமும், மானுட அழிவுகளும் தொடரும் மானுடத் துயரங்களும் வேண்டி நிற்கின்றன. இத்தருணத்தை வரலாற்றிலிருந்து பாடம் படிப்பதற்குப் பயன்படுத்திக்கொள்வோம். போரற்ற சம உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழுமொரு வாழ்வினை அடைந்திட கற்றுக்கொண்ட பாடங்கள் உதவட்டும்.

விடுதலைப்போராட்டத்தின் ஒரு வடிவமான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும், தொடரும் ஈழத்தமிழர்களின் சம உரிமைக்கான போராட்டம் நல்லதொரு முடிவினை அனைத்து மக்களுக்கும் தரட்டும். இன்று ஈழத்தமிழர்களின் உரிமையைப்பற்றித் தென்னிலங்கை மட்டுமல்ல உலகமே சிந்திக்கின்றது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம்தான். எதிர்கால நன்மைக்காகத் தம்மை அர்ப்பணித்து அனைத்து மகா மானுடர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம். அனைவரினதும் தியாகங்கள் நல்லதொரு யுத்தங்களற்ற அமைதியான தீர்வினைத்தரட்டும்.