மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: 'கணங்களும், குணங்களும்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்'. 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. இந்நான்கு நாவல்களும் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும். முதலில் 'வன்னி மண்' நாவல் பிரசுரமாகும்.  அதனைத்தொடர்ந்து ஏனைய நாவல்கள் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். 'வன்னி மண்' நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.


'மண்ணின் குரல்' தொகுப்புக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய அறிமுகக் குறிப்பு:

அறிமுகம்: திரு கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத் தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக்கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம். அவரது எழுத்துக்களில் இயற்கையின் ஈடுபாட்டையும் வர்ணனையையும் பரந்து காணலாம். கவிஞர்களால் என்றும் இயற்கையின் அழகையும் எழிலையும் மறந்து விடமுடியாது என்றே கூறத்தோன்றுகிறது. 'வன்னி மண் வெறும் காடுகளின்,  பறவைகளின் வர்ணனை மட்டுமல்ல. அந்த மண்மேல், ஈழத்து மண்மேல் அவர்கொண்ட பற்றையும் கூறும். வன்னி மண் நாவலில் மட்டும் இப்போக்கு என்று கூறுவதற்கில்லை. மற்றைய மூன்று நாவல்களிலும் கூட அவரது கவித்துவப் பார்வையைக் காணலாம். அடுத்தது, மனிதாபினமானமும், செய் நன்றி உணர்வும், தவறு நடந்தபோதும் அவரது கதை மாந்தர்களின் பச்சாதாப உணர்வு முதன்மை பெற்று நிற்பதையும் நான்குகதைகளிலும். 'வன்னி மண் சுமணதாஸ் பாஸ், "அர்ச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலிலும் வரும் சிறுவன், டீச்சர், கணங்களும் குணங்களில் வரும் கருணாகரன் மண்ணின் குரலில் வரும் கமலா யாவரிலும் தரிசிக்கலாம்.

யுத்த வேளையில் சட்ட விதிகள், ஒழுக்கங்கள் செத்துவிடுகின்றன என்பர். அங்கு நடைபெறுவது கொலைத்தொழில். மனித இனத்தின் மிக இழிந்த ஈனத் தொழில். அங்கு மனிதாபிமானம், நீதி, நேர்மை, நாணயம் எல்லாம் மறைந்துவிடுகின்றன.  இதுவே உண்மை நிலை. பகவத்கீதை யுத்தகள நீதியைப் புகட்டும் சயம நூல்; நீதி நூல்; ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று கூறுவதாகக் கொள்வர். கடமை என்பது யுத்தக் களத்து கொலை, கட்டளையிடப்படுகிறது. பலன்  வென்றவருக்கா? இறந்தவருக்கா? யுத்த வேளையிலும் சமூக வாழ்விலும் நடைபெறும் தவறுகள் மனித மனச்சாட்சியை உறுத்தவே செய்தும். அதுவும் எழுத்தாளரின் விழிப்பு நிலையை எழச்செய்துவிடுகிறது. தவறு நடந்தது கண்முன்னே  நண்பர்கள், பழகியவர்களிடை என்றால் மனச்சாட்சியை தொடர்ந்து குத்தவே செய்யும். குற்ற உணர்வு, நீதி விசாரணை தேடலை நோக்கி புற்றெழுப்பவே செய்யும். கிரிதரனின் நாவல்கள் யாவிலும் இத்தேடல் ஊடுருவி நிற்கிறது. நீதியை தேடுவதற்கு இதை ஒரு உத்தியாகவே கிரிதரன் கொண்டார்போலும். அதுவே அவரின் நாவல்களில் இழையோடி நிற்கும் தனிச்சிறப்பாகவும் உள்ளது. டெஸ்காவஸ்கியின் சில நாவல்கள் குற்ற உணர்வின் குறுகுறுப்பாகவே உள்ளதே உலக விமர்சகரின் மதிப்புப் பெற்றன. மன ஓட்டங்களையும் புரியாத விதமாக எழுதுபவர்களும் உளர். ஒரு சிறுபான்மையினரைப் புரிய வைத்து புகழ் சேர்ப்பர். அவ்வாறில்லாது கிரிதரன் எளிய சொற்கள்; சிறிய வசனங்களில் அம் மன உணர்வுகளை வெளிக்கொணர முயன்றுள்ளார். சில இடங்களில் காண்டேகரின் அழகு, அணியும் புலப்படும். பாலியலும் உளவியல் சார்ந்தது, எவ்வேளையும் அதன் உந்து சக்தி கட்டுப்பாடுகளை மீறக்கூடியது என்ற கருத்தையும் இரண்டு நாவல்களில் கதை மாந்தர் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். இந்திரன் அகல்கை; கருணாகரன் காயத்திரி; டீச்சர் நண்பர் கணவர் மூலம் கூற முயன்றுள்ளார்.

"மண்ணின் குரல்’ சிறிதானது. மண்ணின் போராட்ட உணர்வைக் கற்பனையாகச் சித்தரிக்கும். புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள அமைதியற்ற வாழ்வையும் மண்ணின் விடுதலையை நோக்கிய குரலையும் கூட கிரிதரன் கூறத் தவறவில்லை.
படைப்பாற்றல் மிக்கவர் எங்கு எந்தத் தொழில் புரிந்த போதும் தமது ஆத்மீகக் குரலை வெளிப்படுத்தவே செய்வர் என்பதற்கும் கிரிதரனின் எழுந்துப்பணி சான்று பகரும்.

செ. கணேசலிங்கன் சென்னை
1.O. 12.98


முன்னுரை
ஏற்கனவே தமிழகத்தில் என் இரு நூல்கள் வெளிவந்துள்ளன. 'அமெரிக்கா (சிறுகதைகளும் குறுநாவலும்) 'நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு'. ஸ்நேகா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. இந்நான்கு நாவல் தொகுப்பு தமிழகத்திலிருந்து வெளிவரும் என் மூன்றாவது நூல். இத்தொகுப்பு சம்பந்தமாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்ததோடல்லாமல் வெளிவரவும் ஊக்குவித்த எமது மூத்த எழுத்தாளர் திரு.செ.கணேசலிங்கனிற்கு எனது மனம் நிறைந்த நன்றிகள். அன்றிலிருந்து இன்றுவரையில், நாட்டு நிலைமை காரணமாக நாட்டு விட்டு நாடு வந்த சூழலிலும் களைக்காது இலக்கியப்பணியாற்றிவரும் செ. கணேசலிங்கன், எஸ். பொன்னுத்துரை போன்றவர்கள் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியம் பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை அவ்வப்போது வைப்பதோடு மட்டுமல்லாமல் படைப்புக்களை வெளிக்கொணர ஊக்கமும் தருபவர்கள். அதற்காக இன்றைய இளைய தலைமுறைப் படைப்பாளிகள் சார்பில் என் நன்றி. இத்தொகுப்பிலுள்ள நான்கு நாவல்களும் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டவை.

‘மண்ணின் குரல்" கனடா "புரட்சிப்பாதையில் வெளிவந்து, ஏற்கனவே நூலாகவும் வந்தது. கனடாவின் முதலாவது தமிழ் நாவல் இது. தாயகத்தைப் பொறுத்தவரையில் 'மறுமலர்ச்சிக் காலம் 'மணிக்கொடிக் காலம் என்பது போல் 'தாயகக் காலம் என்று கூறும்படி, கனடாத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர் இலக்கியத்தில் தனது கால்களை உறுதியாகப் பதித்த காத்திரமான சஞ்சிகை. அதன் அரசியல் கருத்தை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் புலம் பெயர் இலக்கியத்திற்கு அது ஆற்றிய பங்களிப்பைக் கண்டு கொள்ளலாம். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு, ஆய்வு இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் ஆழமான விடயங்களை வெளியிட்ட சஞ்சிகை இது. அத்தோடு நமது மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் பலரையும் இன்றைய இளைய தலைமுறைப் படைப்பாளிகளிற்கு அறிமுகம் செய்து வைக்கவும் இது தவறவில்லை. எனது படைப்புக்கள் பலவற்றைப் பிரசுரித்த தாயகத்திற்கு என் நன்றிகள். இதே சமயம் தமிழகத்தில் என்னை அறிமுகம் செய்து வைத்த 'கணையாழி' 'சுபமங்களா? குறிப்பாக ஸ்நேகா பதிப்பக உரிமையாளர் பாலாஜிக்கும் என் இதயபூர்வமான நன்றி.

புலம் பெயர்ந்த போதும் புலன் பெயராதவர்கள் நாங்கள். இத்தொகுப்பிலுள்ள நாவல்களில் அதனை நன்கு காணலாம். ஈழத் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தின் தீர்வு தேசியவர்க்க விடுதலையிலேயே சாத்தியமென்பதை "மண்ணின் குரல்" வலியுறுத்தும். விடுதலைப் பாதையில் நிகழ்ந்துவிட்ட தவறுகளைக் குறிப்பாக உட்கட்சி சகோதரத்துவம், மற்றும் அப்பாவிகள் மீது நிகழ்ந்து விட்ட கொலைகள் போன்றவற்றை விமர்சிக்கும் நாவல்கள் 'அர்ச்சுனனின் தேடலும்', 'வன்னிமண்' ஆகியன. கணங்களும் குணங்களும் மனித பலங்கள், பலவீனங்களை, நன்மை தீமையிற்கிடையிலான போராட்டங்களை, ஆண் பெண்களிற் கிடையிலான முரண்பாடுகளை ஆராயும் திரு. செ. கணேசலிங்கன் கடிதமொன்றில் இந்நாவல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது 'குற்ற உணர்வு, தண்டனை பற்றிய மன ஓட்டம் நாவல்களில் மிளிர்கிறது. அதுவே தனித்துவமாகவும் சிறப்பாகவும் கூட அமைகின்றது" என்று குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். அத்தோடு நாவல்கள் முழுவதிலுமே மனித வாழ்க்கை, பிரபஞ்சத்தில் நமது நிலை, சமுதாய முரண்பாடுகள் பற்றிய தேடல் மிக்க நெஞ்சங்களின் உணர்வுகள் இழையோடிக் கிடப்பதையும் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். நாவல்களில் புலம் பெயர்ந்த நம்மவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மன உளைச்சல்கள் ஆகியனவும் கோடிட்டுக் காட்ட முயன்றேன். புதிய பழைய சூழல்களிலிருந்து விடுபடமுடியாத ஒரு வித திரிசங்கு வாழ்க்கை வாழவேண்டுமென்பது எளிதான தொன்றல்ல. அந்த திரிசங்கு வாழ்க்கையினை, அது ஏற்படுத்துகின்ற மன ஓட்டங்களை பாதிப்புக்களை வெளிப்படுத்துவதென்பது  கூட புலம்பெயர்ந்த நம்மவர் படைக்கும் இலக்கியங்களில் ஒரு தவிர்க்க முடியாத பண்பாகத்தான் இருந்து வருகின்றது. இருக்கப் போகின்றது. அதற்கு இந்நாவல் தொகுப்பும் விதிவிலக்கல்ல. இத்தொகுப்பிலுள்ள 'வன்னிமண்' நாவலைப் பொறுத்தவரையில் குறிப்பிடும்படியான ஒரு விடயமுண்டு. இதில் வரும் சுமணதாசைப் போன்றதொரு சிங்களபாஸ் என் வாழ்விலும் எதிர்ப்பட்டுள்ளார். சுமணதாசிற்கேற்பட்ட முடிவே அவரிற்கும்  ஏற்பட்டது. ஒருமுறை குளத்தில் மூழ்கவிருந்த என்னைக் காப்பாற்றியவர் அந்த பாஸ். அவரோடு கூடவே அவரது முழுக்குடும்பமுமே அழிக்கப்பட்டதாகக் கேள்விப் பட்டபோது உண்மையிலேயே வேதனையாகத்தானிருந்தது. ஒரு மனிதனாக நின்று என்னைக் காப்பாற்றிய அந்த பாஸின் மனிதாபிமானத்தை எண்ணித் தலைவணங்குகின்றேன். காலப்போக்கில் அந்த பாஸ் எவ்விதம் மாறினாரோ எனக்குத் தெரியாது. ஆனால் என் பார்வையில், என் மன ஓட்டங்களை நாவலில் பதிவு செய்திருக்கின்றேன். அதே சமயம் இத்தொகுப்பு ஈழத் தமிழ் மக்களின் நீதியான, நியாயமான போராட்டத்தினையும், அவர்களது உணர்வுகளையும் மிகவும் உறுதியாகவே எடுத்துரைக்கும். அதற்காக போராட்டத்தில் ஏற்பட்ட சில தவறான போக்குகளை விமர்சிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையிலிருந்தும் இத்தொகுப்பு பின் வாங்கி விடவில்லை என்பதையும் படிப்பவர் புரிந்து கொள்வர்.
வ.ந. கிரிதரன்
ரொரன்டோ
3O. 11998


தொடர் நாவல்: வன்னி மண்

அத்தியாயம் ஒன்று: வன்னி மண் நினைவுகள்.


மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்இரவு முழுக்க 'வெஸ்டன், செப்பாட்'  சந்தியிலுள்ள வூல்கோ வெயர் ஹவுஸில் பாதுகாப்பு அலுவலராக வேலை செய்துவிட்டு பஸ்ஸிற்காக காத்து நின்றபொழுதுதான் தற்செயலாக அவனை, என் பால்யகாலத்து நண்பன் நகுலேஸ்வரனைச் சந்தித்தேன். எதிர்பாராத சந்திப்பு இரவு முழுக்க, 'கிரேவ்யார்ட் சிப்ட்' என்று கூறப்படும் 'மிட்நைட் சிப்ட்'  செய்துவிட்டு வீடு செல்வதற்காகக் காத்து நின்றேன். இவனோ வேலைக்குப் போவதற்காக நாளை ஆரம்பித்திருக்கிறான். எத்தனை வருடங்களுக்குப் பின்னால் இவனைச் சந்தித்திருக்கிறேன். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாவதிருக்கும். நகுலேஸ்வரனின் சந்திப்பு எனக்கு வன்னி ஞாபகங்களை ஏற்படுத்தி விட்டது. மழைக்காலமென்றால் குளங்கள் பொங்கிப் பாயும் வன்னி மண், மூலைக்கு மூலை குளங்களும் காடுகளும், பட்சிகளும் மலிந்த செழிப்பு மண், பால்யகாலத்து நினைவுகள் எப்பொழுதுமே அழியாத கோலங்கள்தான், இனிமையானவை. நெஞ்சில் பூரிப்பை ஏற்படுத்தி விடுவன.

என் பால்ய காலம், வன்னியிலேயே கழிந்து விட்டதால் என் நெஞ்சில் வன்னி வாழ்வும் மண்ணும் பசுமையாகப் பதிந்து போய்விட்டன. அதுவும் குறிப்பாக மாரி வந்து விட்டாலோ, வன்னி மண்ணின் அழகைச் சொல்லவே வேண்டாம். மழைக்காலம் என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வைரம் பாய்ந்த பாலைகள், கருங்காலிகள், முதிரைகள், மரந்தாவும் மந்திகள், மர அணில்கள், மணிப்புறாக்கள், குக்குறுப்பான்கள், தேன் சிட்டுக்கள், மாம்பழத்திகள், காடைகள் கவுதாரிகள், காட்டுக் கோழிகள், மயில்கள், கொக்குகள், நாரைகள், நீர்க் காகங்கள், ஆலாக்கள், ஊர்லாத்திகள். அப்பப்பா பறவைகள்தான் எத்தனை எத்தனை வகைகள்! மாரியென்றால் பொங்கி வழியும் குளங்களில் வெங்கணாந்திப் பாம்புகளுடன் போட்டி போடும் மீனவர்கள். உண்மைதான் மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே ஒரு தனிதான். "சொத சொத" வென்று சகதியும் இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப் பிரதேசங்களில் மெல்லப் பதுங்கிப் பாயும் முயல்கள், அசைவு ற்று நிற்கும் உடும்புகள், கொப்புக்களோடு கொப்புகளாக ஆகும் கண்ணாடி விரியன்கள். நகுலேஸ்வரனின் சந்திப்பு எனக்கு வன்னியின் ஞாபகத்தை ஏற்படுத்திவிட்டது.

"என்னடா நகுலேஸ் எப்ப நீ வந்தனி"

"நான் வந்து மூன்று வருஷமாச்சு. நீ”

"நான் போன வருஷம்தான் வந்தனான். நீயென்ன தனியவே"

"ஒமடா அந்தா தெரியுது பார் செப்பர்ட் வெஸ்டன் சந்தியிலிருக்கிற அபார்ட்மெண்ட்', அங்கைதான் இருக்கிறன். மனுஷி பிள்ளைகள் ஊரிலைதான்! உன்ர பாடு எப்பிடி குழந்தை குட்டிகள் ஏதாவது"

"நானின்னும் கலியாணமே செய்யலே. குழந்தை குடும்பமென்று எனக்கு அந்தப் பிரச்சனை இதுவரை இல்லை.”

எனக்கு மனோரஞ்சிதத்தின் ஞாபம் வந்தது. இவளும் பெயரிற்கேற்ற ஒரு பூ தான்! ஒரு காலத்தில் என்னைத் தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்றாள். இன்று புருஷன் பிள்ளையென்று ஸ்கார்பரோவில் தான் வசிக்கிறாள். தற்செயலாக ஒரு நாள் நொப்ஹில் பார்மிலை சந்தித்திருந்தேன்.

பஸ் வந்தது 'செப்பார்ட் சப்வே' (செப்பார்ட் பாதாள இரயில் நிலையம்)  மட்டும் இருவரும் ஒன்றாகவே சென்றோம். அங்கிருந்து நகுலேஸ் 'ஸ்டீல்'ஸிற்குப் போக வேண்டும். நான் 'சென்கிளயர்' வந்து, 'ஈஸ்ட்டி'ற்கு பஸ் எடுக்க வேண்டும்.

"சர்ட்டடே, சண்டே பிரியாயிருப்பேன் வாவென். எனக்கு 'சண்டே வேலையில்லை"

"சண்டே எனக்கும் வேலையில்லை சந்திக்கலாம்.”

எனக்கு ஞாபகம் வரும் இன்னுமொரு விடயம் சுமண தாஸ் பாஸ் உயரமும், கம்பீரமும், வாய்ந்த சுமணதாஸ் பாஸின் அகன்ற பெல்ட்டும் சறமும் கூடிய தோற்றமும் உடனே ஞாபகத்திற்கு வந்தது. நாங்களிருந்த பகுதியில் அருகிலிருந்த ஒரே ஒரு சிங்களக் குடும்பம் சுமண தாஸ் பாஸின் குடும்பம் தான்! சுமண தாஸ் பாஸ் மரவேலை செய்பவர். நல்ல மனுசன்.

"அது சரி நகுலேஸ். சுமணதாஸ் பாஸ் குடும்பம் எப்படி?. இன்னமும் அங்கை தானா."

நகுலேஸ்வரன் என்னை ஒரு வித வியப்புடன் பார்த்தான்.

"என்னடா உனக்கு விஷயமே தெரியாதே"

"என்ன விஷயம்”

"சுமணதாஸ் பாஸின்ற குடும்பத்தையே ஆமிக்கு உளவு சொன்னதென்று சுட்டுப் போட்டாங்கள்".

என்ன. எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாகத் தானிருந்தது. நான் எதிர்பாராத கனவில் கூட கற்பனை செய்திருக்க முடியாத தகவல்,

"என்ன நகுலேஸ், நீ சொல்றது உண்மையா. எப்ப இது நடந்தது?

"இது நடந்து இப்ப எட்டு வருஷமாச்சுது. எண்பத்தி ஐந்திலை என்று நினைக்கிறேன்."

மீண்டும் நெஞ்சில் சுமணதாஸ் பாஸின் நினைப்பு. அவரின் குடும்ப நினைவும் எழுகின்றன. இன்றைக்கு நான் உயிரோடு இருப்பதற்குக் காரணமே அந்த சுமணதாஸ் பாஸ் தான். நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன. வன்னி மண்ணும், அந்த மண்ணில் ஒன்றிக் கலந்துவிட்ட என் பால்யகாலத்து நாட்களும் மறக்கக் கூடிய விடயங்களா என்ன? வன்னி மண்ணின் மேல் எனக்கு எப்பொழுதுமே ஒரு வித அன்பும், பரிவும், மதிப்பும் உண்டு. ஒரு விதத்தில் வீரம் விளைந்த மண் என்றுகூடச் சொல்லலாம். வடக்கில் சங்கிலியன் போல், ஒரு காலத்தில் அந்நியர்களிற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய பண்டாரவன்னியன், கைலைவன்னியன் போன்ற வீரர்களையும், நல்லநாச்சியார் போன்ற வீராங்கனைகளையும் தந்த மண்ணல்லவா. அந்த வன்னி மண்ணில் கலந்து விட்ட என் பால்யகாலத்து நினைவுகளில் மனது மூழ்கிவிடுகிறது.


அத்தியாயம் இரண்டு! சுமணதாஸ பாஸ்

இரவின் அமைதியில் அப்பிரதேசம் மூழ்கிப்போய்க் கிடக்கின்றது. "வெயர்ஹவுஸ்" கேட் ஹவுஸ்ஸில் தனிமையில் கடமையில் மூழ்கிக் கிடக்கின்றேன். எனக்கு வேலை 'கேட் ஹவுஸ்'ஸில் தான். 'ட்ரெயிலர்'களுடன் வருவதும் போவது மாயிருக்கும். 'ட்ரக் டிரைவர்'களின் 'இன்வொயிஸ்"களைச் 'செக்' பண்ணுவதும், 'ட்ரெயிலர்கள்' முறையாக 'சீல்' பண்ணியுள்ளனவா என்பதைச் சரிபார்ப்பதும், மணித்தியாலத்திற்கு ஒரு முறை வெயார்ஹவுஸ்ஸின் வெளிப்புறம் முழுவதையும் சுற்றிப் பார்த்துப் 'பட்ரோல் செய்வதும் இவைதான் எனது முக்கியமான கடமைகள். நான் செய்வது 'மிட்நைட் சிப்ட்", அவ்வளவு பிஸியாக இருக்காது. பெரும்பாலும் ஏதாவது புத்தகமொன்றை வாசிப்பதும், அருகில் அடிக்கொருதரம் விரைந்து கொண்டிருக்கும், பொருட்கள் ஏற்றிச் செல்லும் புகையிரதத்தின் பெட்டிகளை எண்ணிக் களைப்பதும், அடிக்கடி விண்ணைக் கிழித்து, விரையும் விமானங்களைப் பார்த்து ஊர் நினைவுகளில் மூழ்கி விடுவதும் இவ்விதமாகத்தான் பெரும்பாலும் பொழுது கழியும்.

நகரிற்குள்ளிருந்து பார்த்தால் அவ்வளவாகத் தெரியாத நட்சத்திரப் பெண்கள் என் தனிமையைக் கண்டு தொலைவில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். புகையிரதமொன்று நூற்றுக் கணக்கில் பெட்டிகளை இழுத்துக்கொண்டு கவிந்திருக்கும் தனிமையைக் கிழித்துக் கொண்டு செல்கின்றது. சிந்தனை பின்னோக்கி விரைகின்றது. அண்மைக் காலமாகவே என் கடந்தகால நினைவுகளை மீட்டெடுக்கும் படியான சம்பவங்கள் தான் நடந்து வருகின்றன. முதலில் மனோரஞ்சிதம், அடுத்தது நகுலேஸ்வரன். ஒரு காலத்தில் என் நெஞ்சிற்கினியவளாய்ச் சிறகடித்த மனோரஞ்சிதம், இன்று இன்னொருத்தன் மனைவி, அவளிற்கென அவளைச் சுற்றிப் படர்ந்து புதிய உறவுகள். இன்று அவளைப்பற்றி எண்ணுவதால் எந்தவிதப் பயனுமில்லை. ஏன் முறையுமில்லை. ஆனால் நெஞ்சின் ஆழத்தே தூங்கிக் கிடக்கும் நினைவுகளை மறப்பதும் அவ்வளவு சுலபமாகவில்லை. இரை மீட்டுவதையும் என்னால் தடுக்க முடியவில்லை. மனோரஞ்சிதத்தைப் பொறுத்தவரையில், என் வாழ்வில் முதன் முறையாக நெஞ்சத்துணர்வுகளைச் சுண்டியிழுத்துவிளையாடிய ஒரேயொரு பெண் அவள்தான். எங்களிலிருவரிற்கிடையில் ஒரு காலத்தில் நிலவிய நட்பில் எந்தவித முறைகேடுமிருந்ததில்லை. தூய்மையான உணர்வுகளைத் தவிர இயலுமானமட்டும் அவள் நினைவுகளை என் நெஞ்சிலிருந்து ஒதுக்குவதில் படிப்படியாக வெற்றிதான் கண்டு வருகின்றேன். இந்தச் சமயத்தில் தான் நான் எவ்வளவு ஒரு சாதாரண மனிதன் என்பதும் எனக்கு விளங்குகின்றது. மனித வாழ்க்கையில் இத்தகைய உணர்வுகளும், மோதல்களும் எவ்வளவு தூரம் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பதும் தெரியவருகின்றது. ஆனால் நல்லவேளை, தனிமனித உணர்வுகளையே பெரிதுபடுத்தி மாயும் கூட்டத்தைச் சேர்ந்தவனல்ல நான். என் மண்ணில் தலைவிரித்தாடும் பயங்கரச் சூழலின் கோரத்தில் சிக்கி உருக்குலைந்து கொண்டிருக்கும் மனிதத்துவம், முறிந்த உறவுகள். உணர்வுகள். ஊரில் என்னையே எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கும் என் குடும்பம். நிச்சயமற்ற எதிர்காலம். இத்தகைய சூழலில் சில வேளைகளில் என் நெஞ்சில் தோன்றும் அற்பத்தனமான உணர்வுகளையிட்டு நான் என்னையே வெறுப்பதுண்டு. ஆனால் மனித வாழ்க்கையில் இவையெல்லாம் வெகு சாதாரணமான விடயங்கள். பலமும் பலவீனங்களும் படர்ந்தது தானே மனித வாழ்வு என்று மறுகணமே என்னை நானே தேற்றிக் கொள்வதுண்டு. சிந்தனை மனோரஞ்சிதத்திலிருந்து நகுலேஸ்வரன் மேல், நகுலேஸின் சந்திப்பு ஞாகப்படுத்திவிட்ட வன்னி மண்மேல் படர்கின்றது. தனிமையான, இரவு கவிந்திருக்கும் சூழலில், தொலைவில் கண்ணடிக்கும் நட்சத்திரக் கன்னியரின் துணையுடன், சிந்தனையில் மூழ்கிவிடும் போதுதான் எவ்வளவு இனிமையாக, இதமாக விருக்கின்றது. மெல்ல இலேசாகப் பறப்பதுபோல் ஒரு வித சுகமாகக் கூடவிருக்கின்றது. எனக்கு இன்னமும் சரியாக ஞாபகமிருக்கின்றது. 1963ம். ஆண்டு மாரிகாலம் தொடங்கி விட்டிருந்தது. என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அப்பா ஆங்கில வாத்தி, அம்மா தமிழ் டீச்சர். இருவரிற்குமே வவுனியாவிற்கு மாற்றலாகியிருந்தது. அம்மாவிற்கு வவுனியா மகாவித்தியாலயத்திற்கும் அப்பாவிற்கு நகரிலிருந்த இன்னுமொரு பாடசாலைக்கும் மாற்றல் உத்தரவு கிடைத்ததுமே அப்பா முன்னதாக வவுனியா சென்று, வாடகைக்கு வீடு அமர்த்திவிட்டு வந்திருந்தார். வீட்டுச் சாமான்களையெல்லாம் ஏற்றி வர ஒரு லொறியை ஏற்பாடு செய்துவிட்டு அப்பா லொறியுடன் வர, நானும் அம்மாவும் அக்காவும் தம்பியும் மாமாவுடன் சோமர் செட் காரொன்றில் வன்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது ஐந்துதான். அந்தப் பயண அனுபவம் இன்னமும் பசுமையாக நெஞ்சில் பதிந்து கிடக்கின்றது. முதன் முதலாக பிறந்த இடத்தை விட்டு இன்னுமொரு இடத்திற்கான பயணம். நெஞ்சில் ஒருவித மகிழ்ச்சி, ஆர்வம் செறிந்து கிடந்தது. கார் பரந்தன் தாண்டியதுமே வெளியும், வானுமாகத் தெரிந்த காட்சி மாறிவிட்டது. சுற்றிவரப் படர்ந்திருந்த கானகத்தின் மத்தியில் பயணம் தொடங்கியது.

வன்னி மண்ணின் அழகு மெல்ல மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிட்டது. மரங்களிலிருந்து செங்குரங்குகளும், கறுத்த முகமுடைய மந்திகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டன. பல்வேறு விதமான பட்சிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கி புதிய சூழலும், காட்சியும் என நெஞ்சில் கிளர்ச்சியை ஒருவித ஆவலை ஏற்படுத்தின. பயணத்தை ஆரம்பித்த பொழுது இருண்டு கொண்டிருந்த வானம், இடையிடையே உறுமிக் கொண்டிருந்த வானம், நாங்கள் மாங்குளத்தைத் தாண்டியபொழுது கொட்டத் தொடங்கிவிட்டது. பேய் மழை அடை மழை என்பார்களே அப்படியொரு மழை, சூழல் எங்கும் இருண்டு, 'சோ' வென்று கொட்டிக்கொண்டிருந்த மழையில் பயணம் செய்வதே பெரும் களிப்பைத் தந்தது. அன்றிலிருந்து கொட்டும் மழையும் அடர்ந்த கானகமும் பட்சிகளும் எனக்குப் பிடித்த விடயங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறை மழை பொத்துக் கொண்டு பெய்யும் போது, விரிந்திருக்கும் கானகத்தைப் பார்க்கும்போதும், அன்று முதன்முறையாக வன்னி நோக்கிப் பயணம் செய்த பொழுது ஏற்பட்ட அதேவிதமான கிளர்ச்சி, களிப்பு கலந்த உணர்வு நெஞ்சு முழுக்கப் படர்ந்து வருகின்றது. பேரானந்தத்தைத் தந்து விடுகின்றது.

நாங்கள் வவுனியாவை அடைந்த பொழுது பேயாட்டம் போட்டுக் கொட்டிக் கொண்டிருந்த வானத்தின் கோரம் குறைந்து விட்டிருந்தது. நாங்கள் செல்லவேண்டிய பகுதிக்கு பெயர் 'குருமண் காடு'. வவுனியா நகரிலிருந்து, ஒன்றரை மைல் தொலைவில் மன்னார் வீதியில் அமைந்திருந்தது. இன்று அபிவிருத்தியடைந்துவிட்ட பகுதி ஆனால் அன்றோ நாலைந்து வீடுகளையும், ஒரு பெரிய 'பண்ணையையும் கொண்ட காடு. படர்ந்த பகுதி. கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாகவிருந்தது. காரை மன்னார் றோட்டின் கரையோரம் நிறுத்திவிட்டு, யாரும் தென்படுகின்றார்களா என்று பார்ப்பதற்காக மாமா காரை விட்டிறங்கினார். சிறிது நேரம் ஒருவரையுமே காணவில்லை.

"இந்தப் பேய்க்காட்டுக்குள்ளை போய் உன்ர புருஷன் வீட்டைப் பார்த்தாரே" என்று சலித்தபடி காரை நோக்கி மாமா திரும்பத் தொடங்கியபோதுதான் அந்த மனுஷனைக் கண்டோம். குடும்பி, சறம், இடுப்பில் அகன்ற பெல்ட் சிரித்த செந்தளிப்பான முகம். எனக்கு அந்த மனிதனின் தோற்றம் வித்தியாசமாக விருந்தது. ஆச்சரியமாகவிருந்தது. முதல் பார்வையிலேயே பிடித்தும் விட்டது. அவர்தான் சுமணதாஸ பாஸ்.

மாமா தான் முதன்முதலில் வீட்டிற்குள் நுழையச் சென்றார். சென்றவர் "அக்கா இங்கை பாரணை" என்றபடி துள்ளிக்குதித்தபடி ஓடிவந்தார். எல்லோரும் ஏதோ ஒன்று பதறி விட்டோம். வேறு ஒன்றுமில்லை புடையனொன்று உண்ட மயக்கத்தில் கதவருகில் மயங்கிக் கிடந்திருந்தது. சுமணதாஸ் பாஸிற்குச் சிரிப்பாக விருந்தது. அருகிலிருந்த மரக்கட்டையொன்றை எடுத்து அடித்துப்போட்டு, ஒருபுறத்தில் போட்டுக் கொளுத்தினார். வன்னி மண்ணில் இந்தப் பாம்புகளிற்கு மட்டும் குறைவேயில்லை. இரத்தப் புடையன், கண்ணாடிப்புடையன், நாகம், பச்சைப்பாம்பு, தண்ணிப்பாம்பு, வெங்கணாந்தி, மலைப்பாம்பு என்று பல்வேறு வகையான பாம்புகள்! பறநாகம் பற்றிக்கூட அவ்வூர் மக்கள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள்.


அத்தியாயம் மூன்று: குருமண் காடு.

அன்று தொடங்கிய சுமணதாஸ் பாசுடனான நட்பு நாங்கள் வவுனியாவைவிட்டு மாற்றலாகி மீண்டும் யாழ்ப்பாணம் செல்லும் வரையில் பத்து வருடங்களாக நீடித்தது. சுமணதாஸ் பாஸ் 1953லிருந்தே அப்பகுதியில் வசித்து வருவதால் நன்றாகத் தமிழ் பேசுவார். இருந்தாலும் எம்.எஸ்.பெர்னாண்டோவின் குரலின் ஓரத்தில் இடையிடையே ஒலிக்கும் அந்த மழலைத்தமிழ் சுமணதாஸ் பாஸின் குரலிலும் ஒலிக்கத்தான் செய்தது. அந்தக் காலக்கட்டத்திலேயே சுமணதாஸ் பாஸ் ஒரு முற்போக்குவாதியாகத்தான் காட்சியளித்தார். அவரது மனைவி நந்தாவதிக்கு ஏற்கனவே முறை தவறிய தொடர்பொன்றினால் உருவான பெண் குழந்தையொன்று இருந்தது. சுமணதாஸ் பாஸ் அந்த பெண்குழந்தைக்கு எந்தவிதக் குறையும் தெரியாமல் தான் பார்த்து வந்தார். அந்தக் குழந்தை மல்லிகாவிற்கு எங்கள் வயதுதான். மனைவி நந்தாவதி கூட ஒரு நிரந்தரத் தொய்வு நோயாளிதான். சுமணதாஸ் பாஸ் மனைவி நந்தாவதியின் மேலும் குழந்தை மல்லிகா மேலும் அளவு கடந்த அன்பையே வைத்திருந்தார்.

இவர்கள் தவிர ரஞ்சிற் என்ற ஒரு இளைஞனும் சுமணதாஸ் பாசுடன் சேர்ந்து வேலை செய்து வந்தான். அவன் வசித்தது அவர்களுடன்தான். சுமணதாஸ் பாஸ் வீட்டிலேயே மரவேலை செய்வதற்கான சகல வசதிகளையும் வைத்திருந்தார். அப்பகுதியில் இருந்தவர்களுக்கு மலிவான விலையில் தேவையான மரத் தளபாடங்களையெல்லாம் சுமணதாஸ் பாஸ் தான் செய்து கொடுத்து வந்தார். ஒய்வான நேரங்களிலெல்லாம் சுமனதாஸ் பாஸ் எங்களுடன் குழந்தைகளைப் போல் ஆடிப்பாடி விளையாடவும் தயங்குவதில்லை. இன்னமும் என் காதுகளில் அவர் ஒருமுறை சொல்லித்தந்த பாடலொன்றின் வரிகள் ஒலிக்கின்றன.

"தவளைக்குஞ்சுகள் என்ன விநோதம்
ஆடிப்பாடி ஓடி என்ன விநோதம்”

இப்படியொரு தமிழ் பாட்டு ஏற்கனவேயிருந்ததா எனக்குத் தெரியாது. ஆனால் சுமணதாஸ் பாஸ் இந்தப்பாட்டை ஒரு வித மழலைத் தமிழில் பாடிச் சொல்லித் தரும்போது கேட்பதற்கே ஆசையாகயிருக்கும். இனிமையாயிருக்கும்.

ட்ரெயிலரொன்றை இழுத்துக்கொண்டு ட்ரக்கொன்று வரவும் சிந்தனை சிறிதே கலைகின்றது. இன்வொயிஸ்சை சரிபார்த்து, சீல் முறையாக இடப்பட்டிருக்கிறதா, சீல் நம்பரும் இன்வொயிசிலுள்ள நம்பரும் ஒன்றுதானா என்பதைப் பார்த்துவிட்டு உள்ளே அனுப்புகின்றேன். கொண்டு வந்த ட்ரெயிலரை விட்டுவிட்டு, பொருட்களுடன் தயாராகியிருந்த இன்னுமொரு ட்ரெயிலரை இழுத்துக்கொண்டு வந்த ட்ரக் சென்றுவிடவும் பழையபடி தனிமையில் மூழ்கிப்போய் விடுகின்றேன். எந்தவித ஆரவாரங்களுமற்று ஒருவித ஆழ்ந்த அமைதியில் நகரம் மூழ்கிக் கிடக்கின்றது. வெகு தொலைவில் எங்கோ விண்ணைக் கிழித்துக் கொண்டு ஜெட்டொன்று விரைவது இலேசாகக் கேட்கின்றது.

வந்த ட்ரக் டிரைவரின் தோற்றம் திடீரென ஞாபகத்திற்கு வருகின்றது. ஆஜானுபாகுவான என்பார்களே! அப்படியொரு வளர்த்தி அகன்ற கைகளில் பச்சை குத்தி, மொட்டைத் தலையுடன் காட்சியளித்த அவனது தோற்றம் தோற் தலையர்களில் ஒருவனாகயிருப்பானோ? அண்மைக்காலமாகவே அதிகரித்து வரும் தோற் தலையர்களின் அப்பாவி வந்தேறு குடிகள் மீதான வன்முறைகள். பார்க்கப்போனால் உலகம் முழுவதையுமே சிறுபான்மை வெள்ளையினத்தவர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள். மொழியை, மதத்தைப் பரப்புவதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்கள் இந்நிலையில் வெள்ளையினத்திற்கே ஆபத்து என்று சொல்லி இப்படியொரு கூட்டம்.

பிரதேசத்தின் அமைதியை மீண்டும் ஒரு நீண்ட புகையிரதத்தொடர் கிழித்துச் செல்கிறது. நினைவுகள் மீண்டும் பின்னோக்கிப் பாய்கின்றன.

நாங்கள் முதன் முதல் சென்றபொழுது குருமண்காடு அபிவிருத்தி குன்றியதொரு பிரதேசமாக இருந்தது. அண்மையில் பட்டாணிச்சுப் புளியங்குளமென்று ஒரு குளம், மாரியில் தாமரைகள் பூத்துக்குலுங்கி அழகாகத் தெரியும். குளக்கட்டில் பாலைகள், வீரைகள் நிழல் தந்துகொண்டிருந்தன. குளத்தின் மறுபுறத்தே வயல்வெளி விரிந்து கிடந்தது. நீர்க்காகங்கள், மீன்கொத்திகள், ஆலாக்களென்று எந்த நேரமும் பல்வேறு வகையான பறவைகளின் வாசஸ்தலமாக அக்குளப்பகுதி காட்சியளித்தது. குளத்தின் இரு பகுதிகளில் படிக்கட்டுக்கள் கட்டி வைத்திருந்தார்கள். மாரியில் குளம் பொங்கினால் வழிவதற்கேற்ற வகையிலான அணை மாதிரிக் கட்டி வைத்திருந்தார்கள். ஜப்பான் மீன், விரால்மீன் என்று பல்வேறு வகையான மீன்களோடு தண்ணிர்ப்பாம்புகளும் அடிக்கடி காணப்பட்டன.

குளத்திற்கு முன்பக்கம் குருமண் காட்டிற்குச் செல்லும் பாதையை அண்டியதாக ஒரு மயானம். முஸ்லிம்களிற்குச் சொந்தமானதொரு மயானம். அந்த மயானத்தைச் சுற்றியும் காடு பரந்து கிடந்தது. முதன்முதலாக அப்பகுதிக்கு வந்தபோது அம்மாவிற்கு மனது சிறிது சரியில்லாததாக யிருந்ததை உணர்ந்தேன். போதாதற்கு இது  வேறு அவவின் கலக்கத்தை அதிகப்படுத்திவிட்டது. அதுவும் பெளர்ணமி நாட்களில் இந்தச் சுடலையிலிருந்து நரிகள் ஊளையிடும்போது, நள்ளிரவில் படுக்கையில் புரளும்போது கூட ஓரளவு நெஞ்சு கலங்கத்தான் செய்யும். எனக்கோ முதற் பார்வையிலேயே அப்பகுதி பிடித்துப் போய்விட்டது. மரங்களிலிருந்து ஆங்காங்கே 'தாட்டன் குரங்குகள்" என்று அப்பகுதி மக்களால் வர்ணிக்கப்படும் கருமூஞ்சிக் குரங்குகளை தெரிந்தன. அவை அடிக்கடி கொப்புகளில் தாவிக்கொண்டன. அவற்றை ஆர்வத்துடன் பார்த்தேன்.

பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த கருங்காலி மரங்கள், பாலை மரங்கள், முதிரை மரங்கள் எனக்குப் பிரமிப்பைத்தந்தன. ஆரம்பத்தில் கலக்கத்தைத் தந்தாலும் போகப்போக அம்மாவிற்கும் அப்பகுதி பிடித்துப்போனது. முதன் முதலாக சுமணதாஸ் பாஸ் வழிகாட்ட நாங்கள் வாடகைக்கு அமர்த்தியிருந்த வீட்டை அடைந்தபோது நான் அடைந்த அனுபவங்கள் இன்னமும் என் நெஞ்சின் ஆழத்தே பசுமையாகப் பதிந்து போய்க்கிடக்கின்றன. மன்னார் ரோட்டிலிருந்து காட்டினுாடு சென்ற மண் பாதை முடியும் இடத்தில் நான்கு வீடுகள் மட்டுமேயிருந்தன. அதில் நாங்கள் பார்த்திருந்தது முதலாவது வீடு.

பெரிய வளவின் நடுவில் அமைந்திருந்த ஒடு வேய்ந்த வீடு. வளவில் கோவைப் பழ மரமொன்றும், முருங்கைகள் சிலவும், முள் முருக்கையொன்றும் காணப்பட்டன. அதைத்தவிர 'தகரை என அழைக்கப்படுகின்ற ஒருவிதமான பற்றையாக வளரும் செடி, முழுவளவையும் மூடிப் படர்ந்து கிடந்தது. வீட்டிற்கு முன்பாக, அடர்ந்த காடு படர்ந்து கிடந்தது. புதியவர்களான எங்களைக் குரங்குகள் சில ஆவலுடன் பார்த்துவிட்டு கொப்புகளில் குதித்துக்கொண்டன. மரஅணிலொன்று துள்ளிப் பாய்ந்தது.


அத்தியாயம் நான்கு: இயற்கையின் தாலாட்டில் தூங்கும் மண்ணில்..

மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் ஒன்றரை மைல் தொலைவிலிருந்தது. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் 'நடராஜா'தான். அப்பா படிப்பித்த பாடசாலை நகரின் இன்னுமொரு பகுதியிலிருந்தது. நானும் அக்காவும் தம்பியும் அம்மா படிப்பித்த பாடசாலையில் தான் படிக்கத் தொடங்கினோம். தாய்க்கோழி குஞ்சுகளைக் கூட்டித் திரியிற மாதிரி, அம்மாவைச் சுற்றி பள்ளிக்கூடம் சென்று வருவது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். பாடசாலை செல்லும் வழியில் குளங்கள் வயல்களென்று பசுமை செழித்துக் கிடந்தது. அதிகாலை நேரத்தில், மெல்லிய கதிரொளியின் தண்மையில் நடந்து செல்வதே சுகமானதொரு அனுபவம்.

எங்கள் வீட்டின் முன்புறத்தில் றோசா, மல்லிகை, காசித்தும்பை, கனகாம்பரம், செவ்வந்தி யென்று அக்கா ஒரு பூந்தோட்டமே போட்டு விட்டிருந்தார், பின்வளவில் கிணற்றிற் கண்மையில் பாகல், கத்திரி, பூசணி, மிளகாய், புடலங்காய் தக்காளி, அவரை என்று சின்னதொரு காய்கறித்தோட்டம் அம்மா போட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் விடிய பள்ளிக்கூடம் போவதற்கு முன்பு நான் தான் தண்ணிர் வார்ப்பது வழக்கம். தண்ணிர் வார்க்கும் போது தேன் குடிக்க வரும் சிறிய கரிய தேன் சிட்டுக்களிரண்டை விடுப்புப் பார்ப்பது, வாசல் அருகிலுள்ள மரத்தில் வந்து அடிக்கொருதரம் வாலையாட்டும் கொண்டை விரிச்சான் குருவிகளைப் பார்த்து வியப்பது.இந்தக் கொண்டை விரிச்சான் குருவிகளிற்கு நீண்ட கரிய வால்கள் வாலின் அடிப்புறத்தில் வால் இரண்டாகப் பிளந்து கிடக்கும். ஒவ்வொரு முறை மெல்லியதாக சப்தமிடும்போது வாலை ஒருமுறை அசைக்கத் தவறாத குருவி. அழகான மஞ்சளில் கருப்புக்கோடுகள் இடையிடையே படர்ந்த மாம்பழத்திக் குருவிகளிற்கும் பஞ்சமில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் அதிகமாகக் காணப்பட்ட காகங்களிற்கும் குயில்களிற்கும் தான் பஞ்சம், காகங்கள் இல்லாதபடியால் தான் குயில்களிற்கும். பஞ்சம், குயில்கள் தானே காகக்கூடுகளில் களவாக முட்டையிடும் பட்சிகள். ஆனால் செண்பகங்கள், குக்குறுபான்கள் நிறையவேயிருந்தன. பருந்துகளிற்கும் குறைவில்லை. கொவ்வை மரமிருந்ததால் கிளிகளிற்கும் பஞ்சமில்லை. பருந்தினத்தைச் சேர்ந்த இன்னுமொரு பறவை ஆலா. ஆனால் இவை பருந்தைப்போல் கோழிக்குஞ்சு அதிகம் பிடிப்பதில்லை. கூடுதலாக குளத்தைச் சுற்றியே மீன் பிடிப்பதற்காகத் திரிவதைக் கண்டிருக்கின்றேன். நீர்க்காகங்கள் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் குளங்களை நோக்கி, விண்ணில் நிரைநிரையாகப் பறப்பதைப் பார்க்கவேண்டும். மிக நேர்த்தியாக அல்லது V வடிவில் அல்லது நேர்கோட்டில் பறப்பதற்கு எங்கு தான் பழகினவோ? குளம்நோக்கி கொக்குகள், நாரைகள், மீன்கொத்திகள் என்று படையெடுக்கும் பறவைகள் பலவிதம்.

இவை தவிர இன்னுமிருவகையான பறவைகள்  சுவாரஸ்யமானவை ஒன்று ஆட்காட்டிப் பறவை இவை காடுகளில் வேட்டைக்குப்போகும் மனிதர்களை மிருகங்களிற்குக் காட்டிக் கொடுத்துவிடுமாம். ஆட்களைக் காட்டி விடுவதால் வந்த பெயர்தான் ஆட்காட்டியாம். இவைபற்றி ஒரு கதைகூடச் சொல்வார்கள். இவை சதா சந்தேகத்துடன் வாழும் பறவைகளாம். மரங்களில் தூங்குவதில்லையாம். தூங்கும்போது மரம் அவற்றின் பாரம் தாங்காமல் முறிந்துவிட்டாலென்ற தற்பாதுகாப்பு நடவடிக்கை தான். தரையில்தான் படுப்பினமாம் அப்படிப் படுக்கும்போது வானை நோக்கிக் கால்களை விரித்தபடி மல்லாக்காகத்தான் படுப்பினமாம். தற்செயலாக, நித்திரையாயிருக்கும்போது வானம் இடிந்துவிட்டால் தாங்கிப் பிடித்து விடலாமல்லவா? சரியான சந்தேகராமன்தான் போங்கள். மற்றது ஊர்லாத்திப் பறவைகள். இவை மரத்தில் தங்கி நிற்பது வெகு அபூர்வம். எந்நேரமும் ஊரை உலாத்தியபடி திரிவதால் வந்தபெயர்தான் ஊர்லாத்தி. இவை தவிர காடை, கவுதாரி, காட்டுக்கோழி, மணிப்புறா என்று பல்வேறு பிரிவுகள். தோட்டம் தவிர கோழிகளும் வளர்க்கத் தொடங்கினோம். கோழிக்குஞ்சுகளை பருந்திடமிருந்தும் மரநாய்கள், கீரிகள், நரிகளிடமிருந்து பாதுகாப்பாதுதான் பெரிய சிரமம். ஒரு முறை பெரிய வைற்லெக்கோன் சேவலொன்றை கழுத்தைப்பிடித்து இரத்தம் முழுவதையும் உறிஞ்சிவிட்டு மரநாயொன்று போட்டுவிட்டிருந்தது. மரநாயைப் பொறுத்தவரையில் இரத்ததைக் குடிப்பதோடு சரி. ஆனால் இந்த நரிகளை எனக்கு கொஞ்சம்கூடப் பிடிப்பதேயில்லை. அடிக்கடி சந்திக்கருகிலிருந்து சுடலையைக் கடந்து செல்லும்போது நாலைந்து ஒரு குழுவாகக் கடந்து காட்டினுள் செல்லும்போது சிலவேளை எங்களை ஒருவித பார்வை பார்க்கும். அவற்றின் அந்தப் பார்வை எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காது. நயவஞ்சகமான பார்வை, நடுநிசியில் சுடலையிலிருந்து ஊளையிடுவதாலும் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை. எங்கள் வீட்டு வளவில் முயல்வளைகளும் நிறைய இருந்தன. ஆனால் முயல்களைப் பகலில் காண முடியாது. அவை இரவில்தான் வெளியில் வரும்போலும். ஆனால் சில வேளை அவற்றைக் கண்டிருக்கின்றேன். மண்ணிறம் கலந்த சிறிய குழி முயல்கள், இலேசாக இருட்டத் தொடங்கியதுமே வெளவால்கள் பறக்கத் தொடங்கிவிடும். ஆந்தைகள் நத்துகளும் நிறையயிருந்தன. ஒவ்வொரு நாளும் பள்ளிக்குப்போகும்போது வீதியிலுள்ள மின்சார வயர்களில் அகப்பட்டுக் கருகிக் கிடக்கும் வெளவால்களை அடிக்கடி காணலாம். அவற்றின் சிறிய கால்கள் பெரிய உடலைத் தாங்கும். பலமற்றவை மேற்கம்பியில் கால்களைப் பற்றித் தலைகீழாகத் தொங்க முயலும்போது அடுத்த கம்பியில் உடம்பு பட்டுவிட்டால் அதோகதிதான். பார்க்கப் பாவமாயிருக்கும். இவை தவிர வீட்டுவளவில் தும்பிகள், வண்ணத்துப் பூச்சிகள் நிறையவேயிருந்தன. வண்ணத்துப் பூச்சிகள் எத்தனையோ வகைகள், இரவில் விண்னெல்லாம் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும். மரங்களைச்சுற்றி மின்மினிகள் செயற்கை வெளிச்சம் தந்தபடி படந்து கிடக்கும்.

இரவென்றால் எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. ஈஸிசேரில் படுத்திருக்கும் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் வானத்தைப் பார்த்து மயங்கிக் கிடப்பது. அப்பா நட்சத்திரங்களைப்பற்றி, செயற்கைக் கோள்களைப்பற்றி, சிலவேளைகளில் வானைக் கீறிச்செல்லும் எரிகற்களைப் பற்றியெல்லாம் அலுக்காமல் சலிக்காமல் விளக்கம் தருவார்.

இன்னுமொரு விசயம். இந்தப் பல்லிகள், யாழ்ப்பாணத்தில் சிறிய பல்லிகளைத்தான் காணலாம், ஆனால் இங்கு எங்கள் வீட்டில் இரண்டு விதமான பல்லிகளிருந்தன. ஒன்று வழக்கமான சிறிய பல்லி, ஆனால் இன்னுமொன்றோ பெரிய புள்ளிகளிட்ட சிறிது கருமையான பல்லி. காட்டுப்பல்லியென்று கூறுவார்கள். இந்தக் காட்டுப்பல்லி பார்ப்பதற்குச் சிறிது பயங்கரமாக இருக்கும். இவை தவிர வீட்டைச் சுற்றி அடிக்கடி உடும்புகள், அறணைகள், ஓணான்கள், தேரைகள், தவளைகள் என்று பல்வேறுவிதமான உயிரினங்கள்வளைய வந்தன.

எங்கள் வீட்டிற்கு அடுத்த வீடுதான் சுமணதாஸ் பாஸின் வீடு. சுமணதாஸ் வீட்டு வளவில், எங்கள் வளவிற்கருகாக பப்பா மரமொன்றிருந்தது. அந்த மரத்தைச் சுற்றி எந்நேரமும் செங்குரங்குகளைக் காணலாம். குரங்கு வைத்து வித்தை செய்பவர்கள் கொண்டு திரிவது இந்த வகைக் குரங்கைத்தான். குரங்கைப் பற்றி நினைத்ததும் தான் ஞாபகம் வருகிறது பாம்பாட்டிகள். இந்தப் பாம்பாட்டிகள் குறிசொல்லும் குறவர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பொய்க்கால் குதிரைவைத்து ஆட்டங்காட்டும் பொம்மலாட்டக்காரர்கள் இவர்களிற்கெல்லாம் குறையேயிருந்ததில்லை. ஒருவர் மாதிரி ஒருவர் வந்து கொண்டேயிருந்தார்கள். இவர்களெல்லாம் வாழ்விற்கு ஒருவித களையை இனிமையை ஊட்டிக்கொண்டிருந்தார்கள்.
இவ்விதமாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை அந்தப் புயல் தந்தது. அந்தப்புயல்.


அத்தியாயம் ஐந்து: அகோரப் புயல் நடுவில்...

நிமிடத்திற்கு நிமிடம் புயலின் உக்கிரம் கூடிக்கொண்டே யிருந்தது. யன்னலினூடாக வெளியில் இயற்கை நடத்திக் கொண்டிருந்த அனர்த்தங்களைப் பார்த்தவாறு குடங்கிப் போயிருந்தோம். அப்படியோரு புயலை அதற்கு முன்னும் சரி, பின்னும் சரி பார்த்ததேயில்லை. சுழன்றடித்த காற்றில் மரங்கள் தலைவிரி கோலத்துடனாடிக்கொண்டிருந்தன. தொலைவில் மரங்கள் சில சாய்வதைக்கூட அவதானிக்க முடிந்தது. மழையென்றால் பொதுவாக எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வு. ஆனால் இந்த மழையல்ல. வானம் மப்பும் மந்தாரமுமாக இருண்டு, மின்னி முழங்கிக் கொட்டும் மழையை எனக்குப் பிடிக்கும். நனைந்த இறகுகளை ஒடுக்கியபடி பறவைகள் மரங்களில் கூம்பிக் கிடக்கப் பெய்யும் மழையென்றால் எனக்குப் பிடிக்கும். வயற் புறங்களிலிருந்து கேட்கும் தவளைகளின் கச்சேரிகளை இரசித்தபடி, வானம் பொத்துக்கொண்டு பெய்வதை பார்த்துக்கொண்டு படுத்திருப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த மழை.இந்த மழை எனக்கு இன்பத்தைத் தரவில்லை. இந்த மழை எனக்குக் கற்பனையை அமைதியைத் தரவில்லை. அச்சத்தைத் தந்தது. மனிதனின் இயலாமையை உணர்த்தியது. எதிர்காலம் பற்றிய நம்பிக்கை யின்மையைத் தந்தது.

இத்தகைய இயற்கை நிகழ்வுகள் தான் மனிதனின் இயலாமையை வெளிக்காட்டி விடுகின்றன. விஞ்ஞானத்தின் இறுமாப்பை மட்டம் தட்டிவிடும் நிகழ்வுகள் செய்வதற்கொன்று மின்றி வேடிக்கை பார்த்து நிற்பதுதான் செய்யக்கூடிய ஒரேயொரு வழி. அந்த இரவையும் அவ்விதம்தான் கழித்தபடியிருந்தோம். எனக்கு இன்று நினைத்தால் கூட ஆச்சர்யத்தைத் தரும் விஷயம் என்னவென்றால்.அந்தப் புயல் நூற்றுக்கணக்கான வருஷங்களாக உறுதியுடன் கம்பீரமாக நிலைத்திருந்த கருங்காலி, முதிரை, பாலை போன்ற பெரு மரங்களையெல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்து பேயாட்டம் போட்டு விட்டிருந்தது. ஆனால் எங்கள் வீட்டிற்கருகாக, வீட்டிற்கு மேலாகக் கிளை பரப்பி நின்றிருந்த பெரியதொரு கருங்காலி மரத்தை மட்டும் சும்மா விட்டு விட்டிருந்தது. ஆச்சர்யம்தான். இப்போ கூட அம்மாவிடம் கேட்டால் அவ சொல்லும் பதில் தான் நம்புகிற சிவபெருமான் என்பதுதான். அம்மாவிடம் ஒரு பழக்கம். ஏதாவது பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் ஓயாமல் ஜெபித்துக் கொண்டிருப்பது. அன்றும் அப்படித்தான் ஓயாமல் சிவா சிவா என்று நேரம் கிடைத்தபோதெல்லாம் ஜெபித்துக்கொண்டிருந்தா, அவ்விதம் அவ வேண்டியதால் தான் சிவபெருமான் மனமிரங்கி எங்களைக் காப்பாற்றியதாக அவ பலமாக இன்று கூட நம்பிக் கொண்டிருக்கிறார். இந்த விசயத்தில் இன்று அவவின் நம்பிக்கை பற்றி நான் கேலியாக எண்ணுவதில்லை. இருப்பின் ரகசியமே புரியாத நிலையில் எதுபற்றியுமே முடிவு செய்யும் நிலையில் நானில்லை. இந்த பிரபஞ்சம் விரிந்துகொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். பதினைந்து பில்லியன் வருடங்களின் முன்னால் நிகழ்ந்த பெருவெடிப்பில் தோன்றியதாகக் கூறுகின்றார்கள். அப்படியென்றால் அந்தப் பெருவெடிப்பிற்கு முன்னால் என்ன இருந்தது? விடை காண முடியாத கேள்வி? இந்நிலையில் யாருடைய நம்பிக்கையையும் இகழும் துணிவு எனக்கில்லை. அதற்காக மூட நம்பிக்கைகளைப்போற்றிப் பேணும் வழக்கமும் எனக்கில்லை.

நேரத்திற்கு நேரம் புயலின் கோரம் கூடிக்கொண்டேயிருந்தது. ஒருமுறை வெளியில் நடப்பவற்றை பார்ப்பதற்காக அப்பா பின் விறாந்தைக் கதவைத் திறக்க முற்பட்டார். பலமாக வீசிய காற்று அப்பாவை உள்ளே தள்ளியதுடன் கதவையும் பலமாக அடித்துச் சாத்திவிட்டது. அப்பா அத்துடன் வெளியில் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டார். இந்த நிலையிலும் எனக்கு உள்ளூர ஒரு சந்தோஷமிருந்தது. விடாமல் பெய்துகொண்டிருந்த மழைதான் காரணம். பொங்கி வழியும் குளத்தினழகை எண்ணி மனம் துள்ளியது. புயல் நின்றதும் முதல்வேலையாகக் குளத்துப்பக்கம் செல்லவேண்டும். நிறைந்து வழியும் நீரில் மின்னும் விரால்களைப் பார்க்க வடிவாயிருக்கும். நீரில் ஆடும் செந்தாமரைகள் பார்வைக்குக் குளிர்ச்சியைத் தருவன. நள்ளிரவைத் தாண்டியபொழுது யாரோ விறாந்தைக் கதவைத் தட்டினார்கள். திறந்தால் சுமணதாஸ் பாஸ் குடும்பத்தினர். ரஞ்சிற்றும் கூட வந்திருந்தான். புயல் அவர்கள் வீட்டுக் கூரையைக் கொண்டுபோய்விட்டது. எல்லோருமே மழையில் நனைந்து வெடவெடத்தபடியிருந்தார்கள், சுமணதாஸ் பாஸைத் தவிர எல்லோர் முகத்திலும் பயத்தின் சாயை படர்ந்திருந்தது. சுமணதாஸ் பாஸ் பயந்ததை நான் பார்த்ததேயில்லை. எப்பொழுதும் மலர்ந்த சிரித்த முகத்துடன் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் பக்குவம் அவரிடம் நிறையவே யிருந்தது. எனக்கு அவரிடம் பிடித்த முக்கியமான குணம் இதுதான். எத்தகைய ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இறங்கிவிடுவார். தனக்கு ஏற்படக்கூடிய உயிராபத்தையும் கூட அத்தகைய சமயங்களில் அவர் பொருட்படுத்துவதில்லை. இன்று நான் உயிரோடிருப்பதற்குக் கூட காரணம் அவரது அத்தகைய போக்குத்தானே. சுமணதாஸ் பாஸ் குடும்பம் வந்த சிறிது நேரத்திலேயே எங்கள் வீட்டிற்குப் பின் வீட்டிலிருந்த குடும்பத்தவர்களும் வந்துவிட்டார்கள். மன்னார் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பம். அக்குடும்பத்தைச் சேர்ந்த காஜா, முபாறக், நலிமா.எங்கள்  வயதை ஒத்தவர்கள் எங்களிற்குச் சொல்லவா வேண்டும். அதுவரை சோர்ந்து கிடந்த என்மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடியது. எங்கள் வயதை ஒத்தவர்கள் வந்துவிட்டார்களே. குழந்தைகள் எல்லோரும் படுக்கையறையிலிருந்த ஸ்பிரிங் கட்டிலில் துள்ளி விளையாடத் தொடங்கினோம். அம்மா வந்திருந்தவர்களிற்கு உடுப்புகள் கொடுத்தார், தேநீர் போட்டுக் கொடுத்தார். எல்லோரும் தங்கள் தங்கள் அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். வெளியிலோ புயல் பலமாகவே அடித்தபடிதானிருந்தது. நாங்களோ அதுபற்றியெல்லாம் கவலையேதுமின்றி விளையாடிக்கொண்டிருந்தோம்.

இன்று நினைத்தாலும் என் நெஞ்சைத்தொடுவது.அன்று இயற்கையின் அழிவு பல்வேறு இன, மத, மொழி பேசும் அயலவர்களை ஒன்றாக இணைத்து விட்டிருந்தது. ஆனால் இன்றோ, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் ஒன்றாக வாழ்ந்த மக்களை இன, மத, மொழி ரீதியாகப் பிரித்து விட்டிருக்கின்றது. இனப்பிரச்சினை அன்றும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அப்பிரச்சினை எங்கள் குடும்பத்தவர்க்கும், சுமணதாஸ் பாஸின் குடும்பத்தவர்க்கும், மன்னார் முஸ்லிம் குடும்பத்தவர்க்கு மிடையில் உறவுகள் தழைப்பதற்கு, வளர்வதற்குத் தடையாக இருந்ததில்லை. உண்மையில் அப்படியொரு பிரச்சனை இருப்பதே எனக்கு அந்த வயதில் தெரிந்திருக்கவில்லை.

சிலவேளைகளில் நான் எண்ணுவதுண்டு. மனிதர் எதற்காகப் போர்வெறி கொண்டு அலைகின்றார்? இயற்கையில் போரும் அழிவும் நியதியான விசயங்களா? இல்லாவிட்டால் இயற்கையில் ஏன் ஒவ்வொரு உயிருமே இன்னுமொரு உயிரின் அழிவில் வாழும்படியாகப் படைக்கப்பட்டிருக்கின்றது? வலிமை படைத்தது தப்பிப் பிழைப்பதுதான் இயற்கையின் நியதியான போக்கா? அப்படியென்றால் சகோதரத்துவம், மனிதத்துவம் போன்ற கோட்பாடுகளெல்லாமே கற்பனையான எண்ணங்கள் தானா? சாத்தியமற்றவைதானா! அன்பு, காருண்யம் என்பதெல்லாம் அர்த்தமற்ற விசயங்கள் தானா? சின்னஞ்சிறிய வாழ்க்கையை ஏன் மனிதரால் அமைதியாக இன்பமாக வாழமுடியவில்லை? சின்னஞ்சிறிய தீவு மக்களால் ஏன் ஒற்றுமையாயிருக்கமுடியவில்லை? ஒற்றுமையாயிருக்க வழிகளாயில்லை? ஆனால் ஏன் முடியவில்லை? ஆறாவது அறிவு இருப்பதாகப் பெருமைப்படும் மனிதரின் அந்த ஆறாவது அறிவிற்கு நடந்தது தானென்ன? மிருகங்களை விடக் கேவலமாக ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் மனிதரின் நிலைக்குக் காரணமென்ன?

சிந்தனை மீண்டும் பின்னோக்கிப் பறக்கிறது. அந்தப் புயல் வன்னி மண்ணில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திவிட்டுத்தான் போயிருந்தது. நூற்றுக்கணக்கான வருஷங்களாக நிலைத்திருந்த பெருமரங்களை வேரோடு கிள்ளி எறிந்துவிட்டிருந்தது. சில இடங்களில் பாலை, முதிரை, கருங்காலி போன்ற மரங்களை அப்படியே தூக்கி நூறு யார்களிற்குமப்பால் கொண்டு சென்று போட்டு விட்டிருந்தது. பல வீடுகள் கூரைகளை இழந்திருந்தன. இன்னும் பல முற்றாகவே சிதைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கிடையில் எங்கள் வீடு தப்பியதுதான் பெரிய அதிசயம். படுக்கையறையில் ஒரு ஒடு உடைந்துபோனதைத் தவிர பெரிய சிதைவு எதுவுமில்லை. உடனடியாகவே ரஞ்சிற் விறாந்தைப் பக்கமிருந்த ஓடொன்றைக் கழட்டி படுக்கையறைக் கூரைக்கு மாற்றிவிட்டதால் அந்தப் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது.

மறுநாட் காலையில் புயல் தணிந்துவிட்டிருந்தது. காற்றும் மழையும் அடங்கிவிட்டிருந்தன. அப்பா சுமணதாஸ் பாஸ் எல்லோருமாக வெளியில் புயல் ஏற்படுத்திவிட்ட சேதங்களைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டோம். பார்த்த பக்கமெல்லாம் மரங்கள் வீழ்ந்து செடிகொடிகள் பிடுங்கப்பட்டுக் காணப்பட்டன. குரங்குகள் தான் பாவம், மூலைக்குமூலை செத்துக் கிடந்தன. பறவைகள் எதனையும் செத்த நிலையில் நான் பார்க்கவில்லை. விழுந்திருந்த மரங்கள், கொடிகளிற்கிடையில் கிடக்கலாம். வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகள், கோழிகளில் பெரும்பாலானவற்றைப் புயல் விழுங்கிவிட்டது.

இரவு முழுக்கப் பெய்த மழையில் கிணறுகள் முற்றாகவே நிரம்பி விட்டன. குளங்கள் முட்டி வழியத் தொடங்கிவிட்டன. வயற்புறங்களில் பயிர்கள் முற்றாகவே சேதமாக்கப்பட்டுப் போயின. தங்களுடைய வாழ்க்கையில் இப்படியொரு புயலை இதுவரையில் பார்க்கவில்லையென அப்பாவும், சுமணதாஸ் பாசும் தமக்குள் கதைத்துக்கொண்டனர். எனக்குப் புயல் ஏற்படுத்திய அனர்த்தங்களின் நிலை பயத்தைத் தரவில்லை. ஒருவித மகிழ்ச்சியைத் தந்தது என்று கூடச் சொல்லலாம்.

விழுந்து கிடந்த மரங்கள், பொங்கி வழியும் குளங்கள், நிறைந்து கிடக்கும் கிணறுகள் எல்லாமே ஒருவித இனிமையைத் தந்தன. எனக்குப் பிடிக்காத அந்தச் சுடலை நரிகள், மரநாய்கள், கீரிகளையெல்லாம் அந்தப் புயல் விழுங்க ஏப்பம் விட்டிருக்குமென்ற நினைவு சந்தோஷத்தைத் தந்தது. ஆனால் புயலின் பாதிப்புகள் மறைந்த நிலையில், மீண்டும் நள்ளிரவுகளில் சுடலைகளிலிருந்து நரிகளின் ஊளைச் சப்தங்களைக் கேட்டபோது சிறிது ஏமாற்றமாகவிருந்தது. உயிரினம் எப்படியும் தப்பிப் பிழைப்பதற்கு வழியொன்றைக் கண்டுபிடித்துவிடும் என்று அப்பா சிலசமயம் கூறுவது சரிதான் போல் பட்டது.

[தொடரும்]