யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் புதிய தணைவேந்தர் கலாநிதி இரத்தினம் விக்கினேஸ்வரன்!இன்று காலை நண்பர் கனகவரதா (கட்டடக்கலைஞர்)  அலைபேசியில் அழைத்திருந்தார். அதனை நான் தவற விட்டு விட்டேன். ஞாயிற்றுக்கிழலைக் காலைப்பொழுதில் யாருடைய அலைபேசி அழைப்பையும் எதிர்பார்த்திராததே அவ்வழைப்பினைத் தவற விட்டதற்குக் காரணம். 'என்ன காரணமாகவிருக்கலாம்? என்றொரு சிந்தனையோட அவரை அலைபேசியில் அழைத்தேன்.

கன்கவரதா (மறுமுனையில்):  "என்ன் விசயமென்றால்... உமக்கு எங்களோடை 'ஹின்டு கொலிஜ்'ஜில் படித்த விக்கியை ஞாபகமிருக்குதா?"

நினைவுக்குருவி காலவெளியில் சிறகடித்துப் பின்னோக்கிச் சிற்கடித்துப் பறந்தது. மெல்ல மெல்ல ஞாபகத்தில் அந்தவுருவம் புலப்பட ஆரம்பித்தது. சராசரி உயரம். எப்பொழுதும் சிரிப்பு பூத்திருக்கும் முகம். நெற்றியில் புரளும் தலை முடி. விக்கினேஸ்வரனின் உருவம் ஞாபகத்தில் அன்றைய கோலத்தில் மலர்ந்து சிரித்தது.

நான் கேட்டேன்: "கனகவரதா, யார் அந்த இணுவில் விக்கியையாச் சொல்லுறீர்?"

கனகவரதா: "பார்த்தீரா நீர் சொன்ன உடனேயே பிடித்து விட்டீர்?"

எப்படி மறகக முடியும்? பாடசாலைக் காலத்து நண்பர்களைப் பல வகைகளில் பிரிக்கலாம். ஆனால் அப்பிரவுகளில் இரு பிரிவுகள் முக்கியமானவை.  ஒரு பிரிவு ந்ண்பர்களின் சகவாசம் பாடசாலையுடன் நின்று விடும். பாடசாலையில் அவர்களுடனான நட்பு கொடிகட்டிப் பறக்கும். பெரும்பாலும் இவ்விதமான நண்பர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வருவதால், பாடசாலைக்கு வெளியில் அதிகம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருக்கும். மேலும் இவர்கள் படிப்பதில் அதிக ஆர்வமாகவிருப்பவர்கள். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்கள் போன்ற சமூகச்செயற்பாடுகளில் வீணாக நேரத்தைச் செலவிட விரும்பாதவர்கள். அடுத்த வகையினருடனான நண்பர்களுடனான நட்பு பாடசாலையிலும், வெளியிலும் தொடரும். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்களில் கும்மாளமடிப்பதில் வல்லவர்கள் இவ்விதமான நண்பர்கள். இவர்களில் இணுவில் விக்கினேஸ்வரன் முதற் பிரிவைச்சேர்ந்தவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அமைதியானவர். இவர் ஆத்திரமடைந்து நான் பார்த்ததில்லை.

இவரை இன்னுமொரு காரணத்துக்காகவும் மறக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பிலிருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கு விண்ணப்பப்படிவங்கள் அனுப்பப்பட்டபோது , நானும் தெரிவாகியிருந்த் விடயத்தை ஆச்சி வீட்டில் அச்சமயம் தங்கியிருந்த என்னைத் தேடி வந்து தெரிவித்து , பாடசாலை அழைத்துச் சென்று அன்றே விண்ணப்படிவத்தை நிரப்பி அனுப்பிட உதவியவர் இவர். அதன் பிறகு நாம் அனைவரும் திக்குக்கொன்றாகச் சிதறி விட்டொம். உண்மையில் அதன்பிறகு இவரை மீண்டும் சந்திக்கவேயில்லை.

என்னுடன் இன்று வரை தொடர்பிலிருக்கும் நண்பர்களைப்பற்றிய விபரங்களை அறிந்திருந்த எனக்கு இவரைப்பற்றி எவ்வித விபரங்களும் கிடைத்திருக்கவில்லை. இருந்தாலும் அவ்வப்போது இவரைப்பற்றிய நினைவுகள் தோன்றும்போது எங்காவது பட்டம் பெற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுவதுண்டு. எங்களைப்போல் பிறதேசமொன்றில் அலைந்து திரிந்துகொண்டிருக்கலாம் என்றும் எண்ணுவதுண்டு.  அத்துடன் அவரைப்பற்றிய நினைவுகளும் நின்று விடுவது வழக்கம்.

நான்: "அது சரி விக்கிக்கெனன் ? ஏன் விக்கியைப்ற்றி விசாரிக்கின்றீர்?"

கனகவரதா: " ஆஸ்திரேலியாவிலிருந்து திருநந்தகுமார் என்ற நண்பர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேநதராக எம் காலகட்டத்தில் அங்கு படித்த விக்கினேஸ்வன் என்பவரைப்பற்றி வாழ்த்தி இணையத்தில் எழுதியிருந்தார். நீர் சொன்னதைப்போல் இணுவிலைச்சேர்ந்த விக்கினேஸ்வரன் என்றுதான் அவரும் குறிப்பிட்டிருந்தார்.  இதைப்பார்த்தால் எங்களுடன் படித்த அதே விக்கிதான் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரென்று தெரிகின்றது."

அதன் பின்னரே இணையத்தில் இவரது முழுப்பெயர் மூலம் தேடிப்பார்த்தேன். புகைப்படங்கள் சிலவற்றையும் காண முடிந்தது. புகைப்படத்தைப் பார்தததும் நூறு வீதம் தெளிவாகியது. அதே இணுவில் விக்கிதானென்று.

எனக்கு உண்மையில் வியப்பும், மகிழ்ச்சியும் ஒருங்கே தோன்றின. எத்தனை பெரிய சாதனை?  ஆர்ப்பாட்டமில்லாமல் இவ்வளவு வருடங்களாகப் படிப்படியாகத் தன்னை உயர்த்திக்கொண்டு வந்து இன்று இந்த இடத்தை அடைந்திருக்கும் இந்தப்பால்ய காலத்து நண்பனைப்பற்றி இதுவரை எவ்வித விபரங்களும் தெரியாமல் இருந்திருக்கின்றோம். உலகத்தமிழினத்தின் முக்கியமான கல்வி நிலையங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடாதிபதியாகப் பணியாற்றி, இன்று  உபவேந்தராகக் கலாநிதி இரத்தினம் விக்கினேஸ்வரன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இப்பதவிக்குப் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவரது நிர்வாகத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெயர் உலகத்தமிழ் இனத்தின் மத்தியில் ஓங்கி ஒலிக்கட்டும். கல்வி ஒன்றையே மூலதனமாக்கிப் படிப்படியாக இந்நிலைக்கு வந்திருக்கும் கலாநிதி இரத்தினம் விக்கினேஸ்வரனின் வாழ்க்கை கல்வியின் சிறப்பை, கல்வியின் பயனை மாணவர்களுக்குப் போதிக்குமொரு பாடப்புத்தகாக இனி இருக்கும். இவரது இன்றைய வளர்ச்சிககு அடித்தளமிட்ட யாழ் இந்துக்கல்லூரி நிச்சயம் பெருமைப்படலாம் தன் மாணவனான கலாநிதி இரத்தினம் விக்கினேஸ்வ்ரனின் இன்றைய சிறப்பு நிலையையிட்டு.

மேன்மேலும் வாழ்வில், கல்வியில் சிறப்புற்று விளங்கிட, பணியில் சிறந்திட, உயர்ந்திட  பால்ய காலத்து நண்பர்கள் அனைவரும் ஒனறிணைந்து உளமார வாழ்த்துகின்றோம். இதுவரையிலான் சாதனைகளை விட இன்னும் பல சாதனைகளை நீ நிச்சயம் செய்வாய் நண்பா! இதுவரையிலான உன் வாழ்வே அதற்கான சாட்சி. மீண்டும் வாழ்த்துகின்றொம் வாழ்க, வளர்க என்று.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.