அமரர் ராஜசிங்கம் 'மாஸ்ட்டர்'நண்பர் எம்.பெளசரின் முகநூல் பதிவு மூலம் ராஜசிங்கம் மாஸ்ட்டர் மறைந்த செய்தி அறிந்தேன். இவர் ஈழத்தின் முக்கிய பெண் ஆளுமைகளின் (நிர்மலா இராஜசிங்கம், ராஜனி திரணகம,  சுமதி சிவமோகன், வாசுகி இராஜசிங்கம்)  தந்தை. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரின் உப அதிபராக நீண்ட காலம் பணி புரிந்தவர். இவருடன் எனக்கு நேர்முக அறிமுகம் கிடையாது. ஆனால் முதன் முதலாக இவரை நான் கண்ட போது இவரது  புதல்விகளின் பெயர்களை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அது எழுபதுகளின் ஆரம்பக் காலகட்டம். பதின்ம வயதில், நண்பர்களுடன் கும்மாளமடித்துச்சிட்டுக் குருவிகளாகச் சிறகடித்துப் பறந்து திரிந்த காலகட்டம். அப்பொழுதெல்லாம் யாழ் கே.கே.எஸ் வீதியிலே  எப்பொழுதும் பல்வேறு காரணங்களுகாகத் திரிந்துகொண்டிருப்போம். அப்பொழுதுதான் இவரை முதல் முதலாக அறிந்து கொண்டேன்.

அப்பொழுது இவர் யாழ்ப்பாணக்கல்லூரிக்குச் செல்வதும், சென்று திரும்புவதும் கே.கே.எஸ் வீதி வழியாகத்தான். ஸ்கூட்டரில் சென்று திரும்புவார். ஸ்கூட்டரில் சென்று திரும்பும் இவர் மாணவர்களான எம் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணமொன்றிருந்தது. இவர் தனது மகள்களில் ஒருவரான சுமதி சிவமோகன் (அப்பொழுது அவர் சுமதி ராஜசிங்கம், மாணவி) ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்க, ஒரு பக்கமும் பார்வையைத் திருப்பாமல், செல்லும் பாதையிலேயே கவனத்தை வைத்தவராக விரைந்து கொண்டிருப்பார். பின்னால் அமர்ந்திருக்கும் மகளின் சுருண்ட தலைமுடி காற்றில் அலைந்து பறக்கும். தந்தைக்குத் தெரியும் பின்னால் அமர்ந்திருக்கும் தன் மகளை மாணவர்கள் பார்ப்பது. ஆனால் அதனைக் காட்டிக்கொள்ளாது ஸ்கூட்டரின் ஆர்முடுகலை அதிகரித்துச்செல்வார். மகளோ வீதியெங்கும் தன்னை நோட்டமிடும் இளவட்டங்களை இலேசாகப்பார்த்துப் புன்னகைத்தபடி செல்வார். இவர்கள் இருவரும் அவ்விதம் காலையும், மாலையும் செல்லும் காட்சிகள் அக்காலகட்டத்தில் பதின்ம வயதில் திரிந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு மறக்க முடியாத அழியாத கோலங்கள்.

பின்னர் ஒருமுறை சந்தித்து ஓரிரு வார்த்தை பேசியிருக்கிறேன். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகை சம்பந்தமாக விரிவுரையாளராக அக்காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த திரு.மு.நித்தியானந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றபோது வைமன்ட் வீதியிலிருந்த அவரது வீட்டுக்குச் சென்றபோது என்று நினைவு. அப்பொழுது பிரதான வீட்டில் ராஜசிங்கம் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். வளவிலிருந்த இன்னுமொரு வீட்டில்  நித்தியானந்தனும், நிர்மலா நித்தியானந்தனும் வசித்து வந்தனர். முதலில் பிரதான வீட்டுக்குச் சென்றபொழுது, அங்கிருந்த ராஜசிங்கம் அவர்கள் அருகிலிருந்த வீட்டைக்காட்டி அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் அவ்வப்போது அவரைப்பற்றியும், அவர்களது குடும்பத்தைப்பற்றியும் நண்பர்கள் மூலம், ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டிருந்தேன்.

இவரது மரணச்செய்தி மேலும் சில நினைவுகளை அசை போட வைக்கின்றது. அவரது புதல்வியான ராஜனி திரணகமவை ஒருமுறை சந்தித்திருக்கின்றேன். நுட்பம் சஞ்சிகையைக்கொடுப்பதற்காகக் கைதடியில் அமைந்திருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிக்குச்சென்றபொழுது அவரைச் சந்தித்திருக்கின்றேன். ஒரு வயது முதிர்ந்தவரின் உடலை அறுத்துக் கூறுபோட்டபடியிருந்த மாணவர்களுக்கு நுட்பம் சஞ்சிகையைப்பெற்று விநியோகித்தார். அதுவே அவரை முதலும், கடைசியுமாகச் சந்தித்தது.

ஆனால் மொறட்டுவைப்பல்கலைகழகத்துத்தமிழ்ச்சங்கத்துக்கும், க.பாலேந்திராவின் அவைக்காற்றுக்கழகத்துக்கும், ராஜசிங்கம் மாஸ்ட்டர் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு அக்காலகட்டத்திலிருந்தது. அவரது 'முகமில்லாத மனிதர்கள்', 'யுகதர்மம்' போன்ற நாடகங்களில் பல மொறட்டுவைப்பல்கலைக்கழகத்துத் தமிழ் மாணவர்கள் நடித்திருந்தார்கள். அவர்கள் ராஜசிங்கம் மாஸ்ட்டர் வீட்டில் பலமுறை நாடகங்கள் சம்பந்தமாக சந்தித்திருக்கின்றார்கள். நான் நாடகங்கள் எதிலும் நடிக்காத காரணத்தால் நான் அவை எவற்றிலும் ஈடுபட்டிருக்கவில்லை. அவ்விதமான சந்திப்புகள் காரணமாகத்தான் அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த சிவமோகனும், சுமதி ராஜசிங்கமும் காதல்கொண்டு திருமணம் செய்தார்கள் என்று மாணவர்களின் உரையாடல்கள் வாயிலாக அறிந்திருக்கின்றேன்.

ராஜசிங்கம் மாஸ்ட்டரைப்பற்றி இன்னுமொரு விடயமும் ஞாபகத்துக்கு வருவதுண்டு. யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்த மாணவர்கள் பலரை எனக்குத்தெரியும். அவர்கள் அனைவரும் இவரைப்பற்றிக் கூறுமொரு விடயம் இவர் கணக்கில் புலி என்பதுதான். இவர் ஒரு கணக்கைத்தீர்க்க வெளிக்கிட்டாரென்றால் கரும்பலகை முழுவதும் எழுதி எப்படியாவது கணக்கைத்தீர்த்து விடுவார் என்பதுதான் அது.

இவை எல்லாவற்றையும் விட இவரைப் பற்றிப்பெருமையாக நான் எண்ணுமொரு விடயம் தன் நான்கு புதல்விகளையும் ஈழத்தமிழர்கள் கலை, இலக்கிய மற்றும் அரசியல் துறைகளில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளாக வளர்த்தெடுத்ததைத்தான். இவரது குழந்தை வளர்ப்பு பாராட்டுதற்குரியது. தொண்ணூறு வயதில் மறைந்திருக்கின்றார். முழுமையான வாழ்வு வாழ்ந்திருக்கின்றார். கொண்டாடப்பட வேண்டிய வாழ்வு, வருத்தமடைய வேண்டியதொன்றல்ல.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.